🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 93 🌹🌹🌹
இறைவனுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் முதன் முதலில் மங்களாசாசனம் செய்த அற்புதத் திவ்யதேசம். நாமும் இன்று இந்த அற்புதத் திவ்யதேசத்தைத் தரிசிக்க இருக்கிறோம்.
திருக்கோட்டியூர்.
மூலவர்: உரக மெல்லணையான்
தாயார்: திருமாமகள் நாச்சியார்
உற்சவர்: சௌமிய நாராயணன்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: அட்டாங்க விமானம்
தீர்த்தம்: தேவ புட்கரணி
மங்களாசாசனம்: பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ சௌம்யநாராயணாய நமஹ
ஊர்: திருக்கோஷ்டியூர்
🌺🌺 திருக்கோஷ்டியூர்:-
அற்புதங்கள் செய்த இறைவன் நாராயணன், சகல சௌபாக்கியங்களையும் அருளும் நாதனாக "சௌமிய நாராயணர்" என்ற திருநாமத்தில் காட்சி தந்து அருளும் திருத்தலம். இந்தீராதி தேவர்கள் முதல் விருத்தமா முனிவர்கள் வரை அனைவருக்கும், பாவம் தீர்த்த தலம் என்பதால் "திருக்கோட்டியூர்" எனப் பெயர் பெற்றது. "கோட்டி" என்பதற்கு பாவம் என்ற ஒரு பொருள் உண்டு. இறைவனுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் முதன்முதலில் மங்களாசாசனம் செய்த திருத்தலம் இதுவாகும்.
🌺🌺 அட்டாங்க விமானம் :-
108 திவ்யதேசங்களில் இரண்டு தலங்களின் மூர்த்திகள் மட்டுமே "அட்டாங்க விமானத்தில்" காட்சி தருகின்றனர். ஒருவர் கூடலழகர். மற்றொருவர் "சௌமிய நாராயணர்" . இத்தலம் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது.
முதல் தளத்தில் பெருமாள் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் பாற்கடல் வண்ணனாகக் காட்சி தருகிறார்.
இரண்டாம் தளத்தில் நின்ற திருக்கோலத்தில் நாராயணனாகக் காட்சி அளிக்கிறார்.
மூன்றாவது தளத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பரமபதநாதனாகவும் சேவை சாதிக்கிறார்.
🌺🌺 தலவரலாறு:-
பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். கலங்கிய தேவர்கள் தங்களைக் காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர் இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் முனிவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் "கதம்ப மகரிஷி" விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவம் இருந்தார்.
அவர் தான் தவம் இருக்கும் இடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக் கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே, இத்தலத்தை தேவர்களுடன் ஆலோசிக்கத் தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிப்பதாகக் கூறினார்.
மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தைத் தங்களுக்குக் காட்டும்படி வேண்டினார். எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இத்தலத்தில் பெருமாள் நரசிம்ம அவதாரத்தை முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் காட்டி அருளினார். இதனால் மகிழ்ந்த தேவர்கள் மற்றும் கதம்ப மகரிஷி பெருமாளின் மற்ற திருக்கோலங்களையும் காட்டும் படி வேண்டினர்.
எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணரும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு திருக்கோலங்களையும் அவர்களுக்குக் காட்டியதோடு அதன்படி இங்கே எழுந்தருளினார்.
தேவர்கள் துன்பம் ஓட்டிய தலம் என்பதால் "திருக்கோட்டியூர்" என்றும் பெயர் பெற்றது.
🌺🌺 நாராயணா நாமம் பெற்ற இராமனுஜர்:-
ஒருமுறை நம்பியின் தாசன், இராமானுஜர் என்னை ஆசிர்வசித்து மந்திர உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இராமானுஜரின் பணிவு நம்பியைக் கவர்ந்தது. அவரைத் தனியாக அழைத்துச் சென்ற நம்பி, இந்த எட்டெழுத்து மந்திரம் உபதேசம் பெற்ற பின் யாரிடமும் அறிவிக்கவோ, உபதேசிக்க கூடாது என்பது என் கட்டளை. மீறினால் நீ நரகம் செல்வாய்! என்ற கட்டளையுடன் மந்திரத்தை உபதேசித்தார். "நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை உபதேசித்த பின் இராமானுஜரை ஆசிர்வதித்த நம்பி, என் கட்டளையை மீறாதே!! இந்த நாமம் உன்னை வைகுண்டம் செல்ல வழிவகுக்கும். இது மிக இரகசியமானது என்று அறிவுரை கூறி விடையளித்தார்.
மந்திர உபதேசம் பெற்ற இராமானுஜரிடம் புதிய ஒளி ஒன்று தென்பட்டது. அந்த "நமோ நாராயணாய" மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே வந்தவர் தன் சீடர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.
அப்போது இந்த திருத்தலம் அருகில் இருப்பதைக் கண்டார். அங்கு சென்று இறைவனையும், சன்னதிகளையும் வழிபட்டார். பின் அங்கு இருக்கும் சிம்மக் கிணற்றைக் கண்டுபிடித்தார். அந்த கிணற்றில் மகாவிஷ்ணு இராமானுஜருக்குக் காட்சி கொடுத்தார். மகாவிஷ்ணுவைப் பார்த்து கை கூப்பி வணங்கினார் இராமானுஜர். அவருடன் இருந்த சீடர்களான கூரத்தாழ்வான், முதலியாண்டான் ஆகியோர்க்கு இராமானுஜரின் செயல் வியப்பைத் தந்தது.
அங்கிருந்து புறப்பட்ட இராமானுஜர் கோவிலின் கோபுரத்தின் மேல் ஏறி ஊர் மக்களைக் கூவி அழைத்தார். அனைவரும் அங்கே கூடினார்கள். அவர்கள் முகத்தில் ஒரு விதமான அச்சம் தெரிந்தது. இந்த முறையும் நம்பி இராமானுஜருக்கு உபதேசம் செய்ய வில்லையோ என்று கிசுகிசுத்தனர்.
🌺🌺 அகந்தையை ஒழித்தல்:-
ஏன் "இந்த முறையும் நம்பி இராமானுஜருக்கு உபதேசிக்கவில்லை" என்று கிசுகித்தனர்?
திருக்கோஷ்டியூரில் வசிக்கும் நம்பியிடம் உபதேசம் பெற வந்த இராமானுஜர் வெளியே நின்று அழைத்தார். நம்பி யார் என்று கேட்க!!! "நான் இராமானுஜர் வந்திருக்கிறேன்" என்றார்.
நம்பி வீட்டிற்குள் இருந்தே "நான் செத்து வா!!" என்றார். இராமானுஜர் ஒன்றும் புரியாமல் சென்று விட்டார். பின் 17 முறை இராமானுஜர் நம்பி வீட்டிற்குச் சென்ற போதும் இதே பதிலைத்தான் சொன்னார். அடுத்த முறை நம்பி கேட்ட போது "அடியேன் வந்திருக்கிறேன்" என்றார் இராமானுஜர்.
இராமாமானுஜரின் பணிவைக் கண்டு வியந்த நம்பி அப்போது தான் "நமோ நாராயணாய" மந்திரத்தை உபதேசித்தார்.
அதனால் தான் கோபுரம் மீது இராமானுஜர் ஏறி மக்களை அழைத்த போது மக்கள் இந்த முறையும் நம்பி மந்திரத்தை இராமானுஜருக்கு உபதேசிக்க வில்லை போலும் என்று கிசுகிசுகித்தனர்.
இராமானுஜர் பேசும் போது உலக உயிர்களும் நாராயணா மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இக்கோவிலின் விமானத்தின் மீது ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து "நமோ நாராயணாய" மந்திரத்தை உபததேசித்ததாக தலவரலாறு கூறுகிறது.
இதனால் கோபம் கொண்ட நம்பி நான் "உனக்கு நரகம் கிடைக்கும்" என்று கூறியும் ஏன் இவ்வாறு நடந்து கொண்டாய்? என்று கடிந்து கொண்டார்.
இராமானுஜர் நம்பியிடம் "எனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை!! மக்கள் நன்றாக வாழ்வார்களே" என்று பணிவுடன் கூறினார்.
அவரது பணிவைக் கண்டு மகிழ்ந்த நம்பி "நீ என்னிலும் பெரியவர் எம்பெருமனார்" என்று கூறி இராமானுஜரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
இராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இது "கல் திருமாளிகை" என்றழைக்கப்படுகிறது.
இத்திருக்கோவிலில் நம்பி, இராமானுஜர் இருவருக்குமே தனிச்சன்னதி இருக்கிறது.
🌺🌺 பிரகாரம்:-
அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவிலின் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது. சைவ - வைணவ ஒற்றுமைக்கு இத்தலமும் ஒன்று.
🌺🌺 உற்சவ மூர்த்தி:-
மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும் வரையில் இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்குக் கொடுத்தார். இந்த மூர்த்தியே திருக்கோவிலின் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே இத்தலமும் அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
🌺🌺 மங்களாசாசனம் :-
இத்திருத்தலத்தை பூதத்தாழ்வார் - 2, பேயாழ்வார் - 1, திருமழிசை ஆழ்வார் - 1, பெரியாழ்வார் - 22, திருமங்கையாழ்வார் - 13 என மொத்தம் 39 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
"கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம்பாடு சீர்
நரசிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால் எம்பிரான்தன்
சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே"
- பெரியாழ்வார்.
🌺🌺 வழித்தடம் :-
மதுரையிலிருந்து திருப்பத்தூரை அடைந்து அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் இத்திருக்கோவிலை அடையலாம். திருப்பத்தூர் - சிவகங்கை சாலையின் வழியாகச் செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியாகவே செல்கின்றன. காரைக்குடியிலிருந்து ஏராளமான பேருந்துகள் திருக்கோஷ்டியூர் செல்கின்றன.
அருள்மிகு திருமாமகள் தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு ஆதி ஜகந்நாதர் திருக்கோவில் - திருப்புல்லாணி திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment