Wednesday, May 12, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 98 திருப்பரிதி வாசுதேவன் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 98 🌹🌹🌹

நரசிம்மப் பெருமாளே வாசுதேவப் பெருமாளாகக் காட்சி தரும் அற்புதமான திவ்யதேசம். இன்றைய இறைதரிசனம் பெறுவோமா!!!

அருள்மிகு வாசுதேவன் திருக்கோவில் :-

திருப்பரிதி

மூலவர்: பரமபுருஷன், வாசுதேவன்
தாயார்: பரிமளவல்லி நாச்சியார்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: கோவர்த்தன விமானம்
தீர்த்தம்: கோவர்த்தன தீர்த்தம், மானசரஸ், இந்திர தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பரிமளவல்லீ ஸமேத ஸ்ரீ பரமபுருஷாய நமஹ
ஊர்: ஜோஷிமட்

🌺🌺 தலவரலாறு:-

ஈரடியால் உலகம் அனைத்தையும் அளந்த இறைவன் நாராயணன் இமய மலையில் கோவில் கொண்டு அருளும் திருத்தலம். "திருப்பரிதி" என்னும் திருத்தலத்திற்கு பெயர் வந்ததற்கான காரணத்தை அறிய முடியவில்லை.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பரிதி திருத்தலம், இமயமலையின் உட்புறம் இருந்ததாகவும், காலப்போக்கில் அத்தலம் மறைநேது விட்டதாகவும் கூறப்படுகிறது.

திருப்பரிதி தலத்தின் மீது ஆழ்வார் பாடிய பாசுர வரிகள், இதை உறுதி செய்கிறது.

"பணங்களாயிரமுடைய நல்லவரணைப் பள்ளிகொள்பரமா!!!" என்று திருமங்கையாழ்வார் பாசுரம் பாடியுள்ளார்.

இப்பாசுர வரிக்கு உரை செய்த பெரியவாச்சான்பிள்ளை, பள்ளி கொண்டுள்ள பெருமாளைக் குறிப்பதாகக் கூறுகிறார். இருப்பினும் வைணவ அடியார்கள் தற்போது உள்ள சாளக்கிராம நரசிம்மரையே திருப்பரிதி இறைவனாகக் கருதி வழிபடுகிறார்கள்.

🌺🌺 சாளக்கிராம நரசிம்மர் :-

கருவறையில் அருள்மிகு நரசிம்ம சுவாமி சாளக்கிராம வடிவினராக, வீராசனத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தந்து அருள்கிறார். பெருமாளுக்கு அருகில் அருள்மிகு பத்ரி நாராயணர், உத்தவர், குபேரர், சண்டிகாதேவி, இராமர், இலட்சுமணன், சீதாதேவி ஆகியோரும் சேவை சாதிக்கின்றனர்.

இங்கு ஆதிசங்கரால் கட்டப்பட்ட நரசிம்ம கோவிலும், வாசுதேவர் கோவிலும் உள்ளன.

🌺🌺 மங்களாசாசனம் :-

திருமங்கையாழ்வாரால் 12 பாசுரங்களால் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 சிறப்புகள்:-

நரசிம்மர் வாசுதேவப் பெருமாளாக காட்சி தந்து அருளும் திவ்யதேசம்.

திருமகள் பிராட்டி பரிமளவல்லி நாச்சியார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம்:-

இத்தலம் ஹரிதுவாரிளிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் பத்ரிநாத் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. ரிஷிகேஷ் - பத்ரிநாத் பாதையில் பத்ரிநாத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6150 அடி உயரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

இத்தலம் திருப்பரிதி, நந்தப்பிரயாகை, ஜோஷிமடம் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. அழகநந்தா, மந்தாகினி என்ற இரு நதிகள் இங்கு இணைகின்றன.

அருள்மிகு வாசுதேவன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு பரிமளவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு புருடோத்தமன் திருக்கோவில் - திருக்கண்டமென்னும் கடிநகர் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment