Tuesday, May 11, 2021

ஶ்ரீராம யாத்திரை - 3

 

ஸ்ரீ                                பக்கம் –இருபத்து ஒன்று

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமான் உ.வே. வேளுக்குடி ஸ்வாமி  தலைமையில் நடந்த ஸ்ரீராம அநுயாத்திரை யில்அடியேன் பெற்ற பங்கும் அனுபவங்களும்   பகிர்பவர் எஸ். விஜயராகவன்

               மூன்றாம் பாகம்  

23-௦8-2௦௦6 ஐந்தரைமணிக்கு கண்விழித்ததும் பல்விளக்கி அடியேனும் மாப்பிளையும் (அன்று இருவருமே பித்ருகளுக்கு அமாவாசையை முன்னிட்டு தர்ப்பானாதிகள் செய்ய வேண்டிமையினால் ஒருபையில் டவல்   மடி வேஷ்டி உத்திரியங்களையும் தர்ப்பை, எள் சொம்பு ஆகியவைகளையும்  எடுத்துக்கொண்டு சரயு நதி பக்கம் சென்றோம் மணி 6-௦௦ சூரியோதயமாகி  கொஞ்சம் இருள் பிரிந்து வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. .. அந்த சமயம் சரயு நதி படித்  துறை படிக்கட்டுகளில் ஒட்டி  தண்ணீர் ஓடவில்லை. கொஞ்சம் தள்ளி ஓடிக் கொண்டிருந்தது.  புனித சரயு நதி..இங்கே தான் நாங்கள் அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்த துறை. நதி நல்ல அகலம்.எதிர்பக்க துறை வெகுதூரத்தில் தெரிகிறதை பார்க்கலாம்.

          பக்கம் இருபத்திரண்டு

ஆகையால் நதியில் சென்று ஒவ்வொருவராக குளித்துவிட்டு டவலை நனைத்து பிழிந்து உடம்பை துடைத்துக்கொண்டு நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு  . யாரவது ஒருவர் பைகளை பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது குரங்குகள் நிறைய மரத்தில் அமர்ந்து வருபவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. . முதலில் அடியேன் சொம்பில் தீர்த்தம் கொண்டுவந்து படிக்கட்டிலேயே உட்கார்ந்து தர்ப்பணத்தை முடித்துவிட்டு பின் இன்னொரு சொம்பு தீர்த்தம் கொண்டுவரச் சொல்லி மாப்பிள்ளைக்கு பண்ணி வைத்தேன். இன்னும்பலரும் தர்ப்பணம்  பண்ணிக் கொண்டிருந்தார்கள்.அதில் பெங்களூருலிருந்து எங்கள் கோஷ்டியில் சென்னையில் கலந்து கொண்டிருந்த  ஸ்ரீ வேனுகோபாலஸ்வாமி கோயில் அர்ச்சகரும் ஒருவர் அதுசமயம் பொழுது விடிந்து சூரியன் உதயமாகி நல்ல வெளிச்சமும் வந்து விட்டது. மணி 7-௦௦ இருக்கும். தர்மசலையை அடைந்து எங்கள் அறைக்கு செல்கையில் சூடான காபி ரெடியாக இருந்தது..பலர் காபி சாப்பிட்டுவிட்டு தர்ப்பனாதிகளை சத்திரத்திலேயே முடித்தனர்.  எல்லாருக்குமே . எட்டு ஒன்பது  மணிக்குள் இட்லி பலகாரமாயிற்று.  ஸ்ரீ ராம ஜன்ம பூமியை சேவித்துவர பலகாரம்  ஆனதும் சத்திரத்து வாசலில் தொடங்கிய நீண்ட பெரிய க்யூவில் சேர்ந்து நின்றோம்.வரிசை சந்து பொந்தெல்லாம் சுற்றி சுற்றி  வேகமாகவே நகர்ந்து    போய்க் கொண்டிருந்தது. நாங்கள் சேவித்து விட்டு திரும்பி வருகையில்  மணி ஒன்பதாகி இருந்தது. அங்கெ நிறைய அகழ்வாராய்ச்சி பண்ணி கொண்டிருந்ததால் பள்ளமும் மேடும் அந்த டெண்டுகளுக்குள் நடக்கவே சிரமப்பட்டோம்.வெகு  தூரத்தில் இருந்துதான் சேவிக்க வேண்டும். பெரிய  விக்ரகங்கள் எதுவும் சேவையாகவில்லை. திருவிளக்குகள் நிறைய எரிந்து கொண்டிருந்தன.புஷ்பம் நிறைய சாத்தியிருந்தார்கள். மொத்த ஏரியாவும் மிலிடரி கண்ட்ரோலில் துப்பாக்கிகள், AK-47 ரக மெஷின் GUN-கள் என்று அஞ்சும்படியான சூழ்நிலை.ஒரு கோவில் சூழ்நிலையே இல்லை. வெறுமே அந்த ஜன்ம பூமியை பாதுகாத்துக் கொண்டிருந்ததாகவே தோன்றியது.போடோக்கள் ஒன்றும் எடுக்க முடியாதநிலை.செல் போன்கள் உள்ளே நுழையும் வாயிலில் பிடுங்கப்பட்டன,திருப்பி கேட்டவர்களின் கைகளில் மொபைல் போனை  கொடுத்து அவர்கள் வெளியே தள்ளப்பட்டனர். இதுதான் நிலைமை. ஸ்ரீ ராமர் பிறந்த பூமியை பார்த்தோம் என்ற ஒரு திருப்திதான். இங்கே அந்த இடத்தின் புகைப்படத்தை காட்டியுள்ளேன். அடியேன் சேவிக்கும்போதும் இதே நிலைதான்

யாராவது தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து விடக் கூடாது என்ற பலத்த பாதுகாப்புடன் சூழ்நிலை இருந்தது. ராமன் பிறந்த இடத்தை சேவித்தோம் என்ற திருப்திகூட  இல்லாமல் திரும்பினோம்.அவ்வளவே. மணி 9-3௦ .இன்று காலை மட்டும் எங்களிடையே  

            பக்கம் இருபத்துமூன்று

ஒரு ஒழுங்கு இல்லை. காரணம் பலருக்கு தர்ப்பணம் உண்டு. பலருக்கு இல்லை அதனால் ஒரே நேரத்தில் காபி இல்லை. அதேபோல் பலகாரமும் அவரவர் காரியங்களை முடித்து குழு குழுவாக வந்து சாப்பிட்டனர். பலர் ஜன்மபூமியை சேவித்து விட்டு வந்து பலகாரம் பண்ணினார்கள்..சிலர் தர்ப்பணம் முடித்துக்கொண்டு வந்து பலகாரம் பண்ணினார்கள். சிலர் காலையிலேயே குளித்து காபி மட்டும் அருந்தி ஸ்ரீ ராமஜென்ம பூமியை (தர்ப்பன நிர்பந்தம் இல்லாதவர்கள்) சேவித்துவிட்டு வந்து  TIFFIN-ஐ உட்கொண்டனர்.. சிலர் ரூமிலேயே காபி பலகாரங்களை முடித்துக் கொண்டனர்  ஆனால்  எல்லோரும் பத்து மணிக்கு சுவாமியுடன் அயோத்தி அரண்மனை மாளிகைகளை காணவும் பாராயணம் செய்யவும், உபன்யாசங்கள் கேட்கவும் தயாராகவே இருந்தனர்., . . .இந்த நிலையில் வாசற்பக்கம் வாலண்டியர்களை அழைக்கும் ஒலிபெருக்கி அழைப்பு  சுவாமியிடமிருந்து வரவே எல்லோருமே கீழிறங்கியும் ரூம்களை விட்டும் வெளியே வந்து அரை வட்டமாக கூடி நின்றனர் வாசல் முகப்பில் பெரிய மரங்களுடன் கூடிய மைதானம்.ஐநூறு பேர்கள் கூட நின்று கேட்க வசதி இருந்தது.

இனி சுவாமியின் பேச்சு விவரம் : நீங்கள் எல்லோரும் நேற்று சொல்லியபடி அவரவர் காரியங்களையும், ,காபி,பலகாரங்கள முடித்துக்கொண்டு அயோத்தியை சுற்றிப் பார்க்க தயாராக சரியாக சொன்னபடி பத்து மணிக்குள் சித்தமாகி உள்ளது தெரிகிறது. ரொம்ப சந்தோசம்.இனி இதே ரீதியில் நம்முடைய திட்டங்கள் நடக்கவேண்டும். என்று கூறி மேலும் பேசினது.நாம் பார்க்கவேண்டிய ஸ்தலங்கள் நிறைய இங்கே உள்ளது. ஆகையால் இப்போது ஸ்ரீ ராமாயண ஸர்கங்கள்- இரண்டையும் 2-ம்  ,இலக்கத்தையும் 18-ம் இலக்கம்,  இங்கே பாராயணம் செய்வோம்.இங்கே நிறைய திண்ணைகள் உள்ளது நிற்க முடியாதவர்கள் அமர்ந்தும் பாராயணம் செய்யலாம்.என்று கூறினார்.  நான்கு  உபன்யாசக சுவாமிகளும் ஓரு நீண்ட திண்ணையில் வரிசையாக அமர்ந்து இரண்டு ஸர்க்கங்களை பாராயணம் செய்தனர். எதிர்பக்கம் அரை வட்டமாக சூழ்ந்திருந்த யாத்ரீகர்கள்  நின்றுகொண்டும், அமர்ந்துகொண்டும்  அவரவர் சௌகரியப்படி  புஸ்தகங்களை பிரித்து மடியில் வைத்துக்கொண்டு கூடவே சொல்லி வந்தனர்.  அது முடிந்ததும் அந்த இரண்டு ஸர்க்கங்களில் பேசப்பட்டுள்ள விஷயங்களை சுருக்கமாக ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமி உபன்யசித்தார்.

பிரம்மாவிடம் இராவணன் மனுஷ்யர்களைத்தவிர யாராலும் தனக்கு மரணம் நேரக் கூடாது என்று வரம் பெற்றுள்ளான். எனவே விஷ்ணுவான தேவரீர் மனுஷ்யனாக அவதரித்து அவனைக் கொல்ல வேணும் என்று தேவர்கள் பகவானிடம் பிரார்த்தித்தார்கள். பகவானும் அப்படியே செய்வதாக கூறி மறைந்து போனார் .தசரத சக்கிரவர்த்தி அயோத்தியில் தனக்கு குமாரர்கள் பிறக்க வேண்டி  புத்திரகாமேஷ்டி யாகம் பண்ணினான்.யாகாக்னியில் இருந்து ஒரு புருஷன் தோன்றி ஒரு பாத்திரத்தில் பாயசத்தை தயரதனிடம் கொடுத்து மனைவிகளுக்கு கொடுக்குமாறு கூறினான்.தசரதனும் அதை நான்கு கூறுகளாக்கி தன் பத்தினிகளான கௌசல்யா கைகேயி ஆகிய இருவருக்கும்  முறையே இரண்டு கூறுகளையும்,சுமித்திரைக்கு இரண்டு கூறுகளையும்

         பக்கம் இருபத்து நான்கு

கொடுத்தான்..அதனால் பத்தினிகள் கர்ப்பமடைந்தார்கள் ஒருவருடம் கழித்து. சித்திரை மாதம் சுக்லபக்ஷம் நவமி திதியில் புனர்வஸு திருநக்ஷத்திரத்தில் ஸ்ரீ ராமபிரான் அவதரித்தார். அதற்கு மறுநாள் கைகேயினிடத்தில் பரதன் அவதரித்தார்..அதே நாளில் ஸுமத்திரை யினிடத்தில் லக்ஷ்மணனும்,சத்ருக்னனும் அவதரித்தார்கள்.அவர்கள் பணிரண்டு வயதுவரை வளர்ந்து அந்தந்தக் காலங்களுக்குரிய ஸம்ஸ்காரங்களை (சடங்குகளை) வஸிஷ்டாதிகளிடமிருந்து பெற்றார்கள்.விஷ்வாமித்திரர் தஸரதனுடைய சபைக்கு வந்து தம்முடைய யாகரக்ஷணத்துக்காக ராமபிரானைத் தம்மோடு அனுப்புமாறு கேட்டார். தயரதன் முதலில் தயங்கினாலும்  வஸிஷ்டருடைய வசனத்தால் லக்ஷ்மணனையும் ராமனுடன் சேர்த்து விஷ்வாமித்திரருடன் அனுப்பி வைத்தான். பாராயணமும் உபன்யாசமும் முடிய மணி பதினொன்று ஆயிற்று..

ஸ்வாமி மேலும் பேசியது. இனி நாம் சேவிக்கப்போவது ஸ்ரீ தசரதன் அரண்மனை. அடுத்து கௌசல்யா அரண்மனை. அடுத்து கைகேயி அரண்மனை. அதையடுத்து கனக பவன்.ஸ்ரீராம் சீதையின் அரண்மனை.அதன் வாசலிலே ஸ்ரீ ராமன் சீதையுடனம் இளையோன் கூடவும் காட்டுக்கு செல்ல தேரில் ஏறி புறப்பட்ட ஸ்தலம்.அதன்பின் ஹனுமன் 6௦ படிகள் கொண்ட ஒரு சிறிய குன்றின்மீல் அமர்ந்திருக்கும் ஹனுமான் கோயில். அதன்பின் லக்ஷ்மணன்காட்...இவைகளை முடிக்கவே நமக்கு மணி பணிரண்டக்கு மேல் ஆகி  விடும். அதன்பின் திரும்பி மதிய உணவு. இன்று அமாவாசையாகையால் வாழை இலையில் பருப்பு, கறியமுது, வடை, மோர்க்குழம்பு, சாற்றமுது, திருக்கண்ணமுது மோருடன் பரிமாறப்படும்.இன்று ஒருவேளை தட்டு வேண்டாம். மூன்று மணிக்கு பக்கத்தில் உள்ள குப்தார் (கோ ப்ரதார் காட் என்கிற இடம் செல்கிறோம்.இந்த இடம் அயோத்தியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது  இங்குள்ள சரயு நதியில் தான் இராமன் அயோத்தியில் வாழும் சராசரங்களை வைகுந்தத்திற்கு அழைத்துப் போன இடம். இங்கே ஒரு சிறிய ராமார் கோயிலும் உள்ளது. எண்பது ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஒரு ஆட்டோவில் நாலைந்து பேர்களாக அங்கே சென்று அந்தத் தீரத்தை சிரசில் புரோட்சித்துக் கொண்டு நாலரை மணிக்குள் திரும்பி காபி ஆனவுடன்  ஐந்து  மணிக்கு வால்மீகி பவன்(மஹால்) ஒரு கூட்டம் நம்மை வரவேற்பதற்காக  நடக்கிறது. புதியதாக சலவைகல்லில் கட்டியுள்ள பெரிய கூடம்.சுமார் ஆயிரம் பேர் அமரலாம். அங்கே பகவான் வால்மீகி லவ குசலர்களின் சிலை உள்ளது. ஸ்ரீ ராமாயணம் 24,௦௦௦ ஸ்லோகங்களும் நான்கு பக்க சுவர்களிலும் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.பல உத்திராதி ஸ்ரீ வைஷ்ணவ மஹந்துகள்  நம் யாத்திரை முழு வெற்றி பெற வாழ்த்த நம்மை  உள்ளார்கள். நம் உபன்யாஸகர்களின் பேச்சும் நடைபெறும். அது முடிய எழுமணியாகும். பிறகு தர்மசாலை திரும்புகிறோம்.எல்லாம் நடக்கும் தூரம் தான் பஸ் இல்லை. இரவு எல்லோருக்கும் அரிசிஉப்புமா,தேங்காய் துவையலுடன்  பலகாரம். அதுமுடிந்து இரவு 8-௦௦ மணிக்கு  நாளைய புரோகிராம் சொல்லுவேன். சரி இப்போது அயோத்தியை சுற்றிப் பார்ப்போம். என்று கூறி முடித்தார்.

அதன்படி சேவித்த  இடங்கள்: முதலில் தசரதன் கௌசல்யா அரண்மனைகள்.

பக்கம் இருபத்து ஐந்து         

.இதுவே தசரதன் அரண்மணை.கம்பீரமாகவே இருந்தது. உள்ளே சென்று சேவித்தோம்.தசரதன்  கௌசல்யாவுடனும், ஸ்ரீராம பிரான் (குழந்தை    வடிவிலும்) மடியில் வைத்து கொஞ்சும் வண்ண சலவைக்கல் சிலைகள் கண்ணை. கவரும் பட்டாடைகள், திருவாபரனங்கள் நல்முத்துகளுடன் சேவை தந்தனர்.

 கனக் பவன் ஸ்ரீ ராம சீதா அரண்மனை. உள்ளே ஸ்வர்ண மயமான பெரிய மஞ்சத்தில் பட்டாடைகளுடனம் திருவாபரங்களுடனும், பெரிய  ஸ்வர்ண சீதா ராம திருமேனிகள் எழுந்தருளப் பட்டுள்ளன.. இரண்டு சிறிய விக்கிரகங்களும் சேவை யாகிறது. ஒருவாறு ஜன்ம பூமியில் சேவையாகாத குறை இங்கு தீர்ந்தது. கீழே கனக பவனத்தின் மற்றொரு புறம் போட்டோ காண்பித்துள்ளேன். அதன் காரணத்தை அங்கே விளக்கியும் உள்ளேன்.

 அதன் பக்கத்திலேயே கைகேயி அரண்மனை மற்றும் கோபக் கிருஹம் காட்டப் பட்டுள்ளது.

           பக்கம் இருபத்து ஆறு.

 இதுவும் கனக் பவன் தான் வேறொரு பக்கம். இங்கே முன்புறம்  ஒரு சிறிய நான்கு கால் மண்டபம் தெரிகிறது அதன் மத்தியில் ஒரு தொட்டியில் ஸ்ரீ ராமனுடைய திருவடிகளை சேவிக்கிறோம் இந்த இடத்தில் தான் ஸ்ரீ ராமன், சீதை லக்ஷ்மனனுடன் தேரில் ஏறி அமர்ந்து வனவாசம் புறப்பட்ட இடம்.இங்கே நிறைய சேவார்த்திகள் உள்ளே ஸ்ரீ ராமனாதிகளை சேவித்து விட்டு வந்து இந்த மண்டபத்தில் புஷ்பத்தை சேர்த்து மண்டியிட்டு வணங்கிச் செல்கிறார்கள். அவதாரம் முடிந்து பல யுகங்களாகியும்  இங்கே  நம் உள்ளம் பக்தியினால் நெகிழ்கிறது

 

ஒரு முதாட்டி   ராமர் வனவாசம் செல்ல தேரில் ஏறிய மண்டபத்தில் உள்ள  ஸ்ரீ ராமர் திருவடி களுக்கு மலர்கள் தூவி வணங்கும் காட்சி . .                                        மேலே உள்ளது கைகேயி அரண்மனை           

      பக்கம் இருபத்து ஏழு

.     

இந்த சந்நிதி ஹனுமான் குடி என்று பெயர்,இங்கே  ஒரு சிறிய குன்றின் அறுபது படிகள் ஏறி  இந்த ஸ்ரீஹனுமன் சந்நிதி யைசேவிக்க  வேணும்.. இங்கே எப்போதும் சேவார்த்திகள் கூட்டம் அலை மோது கிறது. இந்தக் கோயிலில் கல்கண்டு,திராக்ஷை, முந்திரி பாக்கெட்ஒன்றை தர்மசாலயிலிருந்து பையில் போட்டுகுரங்குகள் கண்களில் படாதவாறு  மறைத்து கொண்டு வந்ததை இந்தக்கோவில் அனுமாருக்கு அமுது செய்வித்து பிரசாதமாக கொண்டு போகவேணும் என்று நினைத்தேன்.  அதை வெளியே எடுத்தபோது மிகப் பெரிய குரங்கு ஒன்று  என் கையில் இருந்த பொட்டனத்தை பிடுங்கி சென்று விட்டது. ஆகா என் முதல் பிரசாத பொட்டணத்தை ஸ்ரீ ஹனுமானே நேரில் வந்து ஸ்வீகரித்துக் கொண்டதாகவே என்னுடன் வந்தவர்கள் சொல்லிச் சிரித்தபோது உண்மை அதுவேயாகட்டும் என்று கை குவித்தேன்.

. இந்த சந்நிதியின் கீழ் படிக்கட்டில் காலை மடக்கிக் கொண்டு இந்த அநு யாத்திரை கோஷ்டியுடன் எழுந்தருளி இருந்த ஸ்ரீமான் ஸ்ரீதரன் சுவாமியை சேவித்தேன். இவர் தாம்பரம் ஏரியாவின் கிஞ்சிட்காரம் வாலண்டியர். நிறைய எல்லா உபன்யாஸகர்களின் காலக்ஷேபங்களையும் அடிக்கடி தாம்பரம் பகுதியில் நடத்தி வருபவர். மாப்பிள்ளையுடன் தென்னக ரயில்வே ஆபிசில் பணியாற்றும் பரம வைதிகர்.அடியேன் தமயனாருக்கும் ஆப்தர். இரண்டு  நாளாக அடியேன் கண்ணில் படாதவர் இன்று இந்த இடத்தில் தென்பட்டார்.சேவித்து “என்ன இங்கே உட்கார்ந்து விட்டீர்” என்று கேட்க சுற்றி சுற்றி வந்து  கால்கள் வலிக்கிறது.மேலே சேவித்துவிட்டேன். நான் இங்கே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் நீங்கள் போய் சேவித்துவிட்டு வாருங்கள் என்று என்னையும் மாப்பிள்ளையையும் பார்த்து  படிக்கட்டு பக்கம் கை காட்டினார். ரொம்ப ஆசார அனுஷ்டானம் மிக்கவர். நித்யமும் பன்னிரு திருநாமத்துடன் காட்சி அளிப்பவர். அவரை இந்த கோஷ்டியில் சேவித்தது மனசுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. கீழே உள்ள ஸ்தலம் :ஸ்ரீ லக்ஷ்மன் காட்

     பக்கம் இருபத்து எட்டு.                                         

 இங்கே தான் ஸ்ரீ லக்ஷ்மணன் தன் அவதாரம் முடிந்து பரமபதத்துக்கு திரும்பிய  ஸ்தலம். ஸ்ரீ ராமன் கட்டளைப்படி இங்கே சரயு நதியில் இறங்கி நடந்து  வைகுண்டம் சேர்ந்தார்.இதுவரை முன்னூற்றி ஐம்பது யாத்ரிகர்களும், முப்பதுக்கு மேற்பட்ட வாலண்டியர்களும், நான்கு உபன்யாசகர்களும் ஒவ்வொரு இடமாக எல்லா அரண்மனைகளையும் சுற்றி வந்து சேவித்து அதன் விசேஷங்களை கூற அதை செவியில் ஏற்றியபடி ஹனுமான் சந்நிதியில் முடித்துக்கொண்டு தர்மசாலைக்கு திரும்பினோம். மணி ஒன்று.ஆகாரம் ரெடியாக இருந்தது.. வாழை இலை சேர்த்து (இங்கே தட்டு இல்லை-அமாவாசை ஆனபடியால் ) சுடச்சுட மணக்க மணக்க பருப்பு, வடை கறியமுது, மோர்க்குழம்பு, சாற்றமுது, திருகண்ணமுது மோர் இத்யாதிகளுடன் எல்லோரும் ஒரே ஹாலில் தரையில் அமர்ந்து அறுசுவை உண்டியை .பசியெடுத்து ருசியுடன் உண்டு அதன்பின் சற்று ஒய்வு எடுத்தோம். 

      மூன்றாம் பாகம் முற்றியது.

No comments:

Post a Comment