🌹🌹🌹108 திவ்யதேசங்கள் - பதிவு 99 🌹🌹🌹
பிரம்மதேவரே நடத்திய யாகத்திற்கு மனமிறங்கிய எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணர் அவருக்கு காட்சி கொடுத்த திருத்தலம். பரத்துவாச முனிவர் சப்தரிஷிகளில் ஒருவராகும் பெரும்பேறு பெற்ற அற்புதமான திவ்யதேசம். இந்த திவ்யதேசத்தை நாம் இன்று தரிசிக்க இருக்கிறோம்.
திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்பிரயாகை)
மூலவர்: நீலமேக பெருமாள், புருடோத்தமன்
தாயார்: புண்டரீகவல்லி
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: மங்கள விமானம்
தீர்த்தம்: மங்கள தீர்த்தம், கங்கை நதி
மங்களாசாசனம்: பெரியாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ புண்டரீகவல்லி ஸமேத ஸ்ரீ நீலமேகாய நமஹ
ஊர்: தேவப்ரயாக்
🌺🌺 தலவரலாறு:-
காவல் தெய்வமாகிய இறைவன் நாராயணர் இவ்வையகத்தைக் காக்க பத்து அவதாரங்களை மேற்கொண்டார். அதில் தர்மத்தை நிலை நாட்ட வந்த ஓர் ஒப்பற்ற அவதாரம் "இராம அவதாரம்". அத்தகைய இராமாவதார மூர்த்தி "புருடோத்தமன்" என்ற திருநாமத்தில் காட்சி தந்து அருள்கிறார்.
இத்திருத்தலத்தைப் பற்றி கூர்ம புராணம், மச்ச புராணம் ஆகியவற்றில் பெருமையுடன் பேசப்படுகிறது. அக்காலத்தில் இவ்வூர் "கண்டங்குடி" எனப் பெயர் பெற்றதாகத் தெரிகிறது.
இதன் காரணமாகவே பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள் அனைத்திலும், இத்தலத்தை "கண்டமென்னும் கடிநகரே" எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரம்ம தேவர் இத்தலத்தில் இறைவனான எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணரை குறித்து மிகச் சிறந்ததொரு யாகம் ஒன்றைச் செய்ததாகவும், அதற்கு மனமிறங்கிய பரந்தாமன் ஸ்ரீ நாராயணர் பிரம்ம தேவருக்குக் காட்சி தந்ததாகவும் கூறப்படுகிறது.
🌺🌺 தேவப்பிரயாகை:-
பிரம்ம தேவர் இங்கு யாகத்தைத் துவங்கியதால் "பிரயாகை" என்னும் பெயராயிற்று. திருமாலையே தேவனாகக் கருதி இவ்விடத்தில் யாகம் செய்ததால் "தேவப்பிரயாகை" ஆகிற்று. தேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் ஊழிக்காலத்தில் அழியாமல் இருக்கும் என்றும் அதன் இலையில் தான் பெருமாள் குழந்தையாகப் பள்ளி கொள்வார் என்றும் "மத்ஸய புராணம்" கூறுகிறது.
மேலும், "பரத்துவாச முனிவர்" இத்தலத்தில் தவமிருந்து சப்தரிஷிகளில் ஒருவராகும் பேற்றினைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பெரியாழ்வார் இத்தலத்தை 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
🌺🌺 நீலமேகப் பெருமாள்:-
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் "நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்)" எனவும், "வேணி மாதவன்" எனவும் அழைக்கப்படுகிறார்.
🌺🌺 ரகுநாத்ஜி:-
இந்த தேவப்பிரயாகை திருத்தலத்தில் தான் கங்கை ஆறும், யமுனை ஆறும் கலக்கின்றன. அளகநந்தா ஆறும், பாகிரதி ஆறும் சங்கமிக்கின்றன. மேலும், சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது "பஞ்சப் பிரயாகை" என்றழைக்கப்படுகிறது.
பிரம்மா, தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமரும் இங்கு தவமியற்றினார்கள். பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பெருமாளை இங்கு "ரகுநாத்ஜி" என்றழைக்கிறார்கள்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய இம்மூன்றும் கூடும் இடமான திருவேணியாகும் இந்த திவ்யதேசம்.
🌺🌺 சிறப்புகள்:-
தேவப்பிரயாகை தீர்த்தத்தில் அமைந்துள்ள புண்ணிய திவ்யதேசம்.
திருமகள் பிராட்டி புண்டரீகவல்லி என்ற திருநாமத்தில் காட்சி கொடுக்கும் திவ்யதேசம்.
பெரியாழ்வார் பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 மங்களாசாசனம்:-
இந்த திருத்தலத்தை பெரியாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடியருளியுள்ளார்.
🌺🌺 வழித்தடம்:-
தற்போது தேவப்பிரயாகை என்று வழங்கப்படும் இடமே புராண காலத்தின் கண்டமென்னும் கடிநகர் ஆகும். இத்தலம் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
மேலும், இத்தலம் வதரியாச்சரமத்திற்கு செல்லும் வழியில் ஹரித்துவாரிலிருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
அங்கு சென்று இத்தலத்தை ரகுநாத்ஜீ மந்திர் என்றால் மட்டுமே அனைவருக்கும் தெரிகிறது.
அருள்மிகு புண்டரீகவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
நாளைய பதிவில் அருள்மிகு பத்ரி நாராயணன் திருக்கோவில் - திருவதரியாச்சரமம் திவ்யதேசத்தைத் தரிசிக்க இருக்கிறோம். அந்த திருத்தலத்தில் அப்படி என்ன விசேஷம்? ஒன்றல்ல, இரண்டல்ல நிறைய இருக்கு பதிவிற்கு நாளை வரை காத்திருங்கள்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment