Wednesday, May 26, 2021

ஸ்தல தரிசனம்

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

என் சரித்திரம்

76. ஸ்தல தரிசனம்

திருக்குற்றாலத்தில் சில தினங்கள் தங்கிப் பிறகு ஆதீனத்திற்குரிய கிராமங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே சுப்பிரமணிய தேசிகர் யாத்திரை செய்யலானார். வேணுவன லிங்கத் தம்பிரான் ஆட்சியின் கீழிருந்த அந்தக் கிராமங்கள் திருவாவடுதுறை மடத்தின் ஜீவாதாரமாக உள்ளவை. அவற்றில் கம்பனேரி புதுக்குடி என்பது ஒரு கிராமம். அதை விலைக்கு வாங்கிய சுப்பிரமணிய தேசிகர் தம் குருவின் ஞாபகார்த்தமாக அம்பலவாண தேசிகபுரமென்ற புதிய பெயரை வைத்தார். அங்கே தேசிகர் ஒரு நாள் தங்கினார்.

‘வெள்ளி வில்லை தங்க வில்லை’

அக்காலத்தில் திருப்பனந்தாட் காசிமடத்தில் தலைவராக விளங்கிய ஸ்ரீ ராமலிங்கத் தம்பிரானென்பவர் சுப்பிரமணிய தேசிகரிடம் பேரன்பு பூண்டவர். தேசிகர் யாத்திரை செய்வதை அறிந்து தாமும் அவரோடு சேர்ந்து சில நாட்கள் பிரயாணம் செய்ய விரும்பித் தனிப் புகைவண்டி யொன்றை ஏற்பாடு செய்து கொண்டு திருநெல்வேலி மார்க்கமாகச் செவந்திபுரம் வந்து தேசிகரைத் தரிசித்து உடனிருப்பாராயினர். அத்தம்பிரான் கம்பனேரி புதுக்குடியைக் கண்டு மிகவும் மெச்சினார். அந்தக்கிராமம் மிகவும் விசாலமாக இருந்தது. சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் தங்கினமையால் அப்போது அது ஒரு பெரிய நகரம்போல விளங்கிற்று.

மகாவைத்தியநாதையரும் அவர் தமையனாராகிய இராமசாமி ஐயரும அணிந்திருந்த ருத்திராட்ச கண்டிகளை வாங்கி அவற்றிற்குத் தேசிகர் தங்க வில்லை போடச்செய்து அளித்தனர். எனக்கு திருவிடைமருதூரில் அளித்த கண்டியில் தங்க முலாம் பூசிய வெள்ளி வில்லைகளே இருந்தன. அந்தக் கண்டிக்கும் தங்க வில்லைகளை அமைக்கச் செய்து எனக்கு அளித்தார். அப்போது இராமசாமி ஐயர் சிலேடையாக, “வெள்ளி வில்லை தங்க வில்லை” என்றார். யாவரும் கேட்டு மகிழ்ந்தனர்.

சங்கர நயினார் கோயில்

தேசிகர் முன்னரே செய்திருந்த ஏற்பாட்டின்படி சங்கர நயினார் கோயிலில் நடைபெறும் ஆடித் தவசு உத்ஸவத்திற்குச் சென்றனர். சோழ நாட்டில் வைத்தீசுவரன் கோயிலுக்கு எவ்வளவு சிறப்புண்டோ அவ்வளவு சிறப்பு சங்கர நயினார் கோயிலுக்கும் உண்டு. சிவபெருமானும் திருமாலும் பேதமின்றி இயைந்து நிற்கும் சங்கர நாராயண மூர்த்தியைத் தரிசித்து ஆனந்தமடைந்தேன். அவ்வாலயத்திலுள்ள புற்று மண்ணை மருந்தாக உண்டு நோய்கள் தீர்ந்த பக்தர்கள் பலரைப் பார்த்தேன். அங்கே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோமதியம்மையைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தேன். இறைவனைக் குறித்து அத்தேவி தவஞ்செய்த சிறப்பை நினைவுறுத்த ஒவ்வொரு வருஷமும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறும். அத்திருவிழாவைத்தான் ‘ஆடித் தவசு’ உத்ஸவமென்று வழங்குகிறார்கள்.

கரிவலம் வந்த நல்லூர்

சங்கரநயினார் கோயிலில் ஒரு வாரம் இருந்து விட்டுத் திருச்செந்தூர் ஆவணி உத்ஸவ தரிசனத்துக்காகப் புறப்பட்டோம். இடையே ஒரு நாள் கரிவலம் வந்த நல்லூரில் தங்கினோம். தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கும் மாணாக்கர்களுக்கு அந்த ஸ்தலத்தைப் பற்றித் தெரியாமலிராது. வரதுங்கராம பாண்டியர் இயற்றிய கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவைக் கலித்துறை யந்தாதி, வெண்பா அந்தாதி என்ற மூன்று பிரபந்தங்களும் அத்தலத்தைப் பற்றியனவே யாகும். கரிவலம் வந்த நல்லூர் என்பதன் மரூஉவே கருவை என்பது.

அந்த ஸ்தலத்தை அணுகியவுடன் நான் முன்னே கேட்டிருந்த அந்தாதிச் செய்யுட்களெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. என் ஆசிரியரிடம் அவ்வந்தாதி நூல்களைப் படித்த காலத்தில் அவர் கூறிய அர்த்தத்தைக் காதாற் கேட்டிருந்தேன். ஸ்தல சம்பந்தமாக அவர் சொன்ன விஷயங்களைக் கொண்டு அப்போது நான் மனத்திலே ஒரு கோயிலைக் கற்பனை செய்திருந்தேன். கண் முன்னே பின்பு அவ்வாலயத்தைக் கண்டபோது அதுவரையில் விளங்காத விஷயங்கள் விளங்கின. பாடல்களின் அர்த்தத்தைக் காதாற் கேட்டபோது அப்பொருள் குறைவாகவே இருந்தது; பால்வண்ண நாதரைக் கண்ணால் தரிசித்த போதுதான் அப்பொருள் நிறைவெய்தியது. ஸ்வாமிக்கு நிழல் அளித்து நிற்கும் பழைய களாச் செடியையும் பார்த்து விம்மித மடைந்தேன்.

சிறந்த தமிழ்ப் புலவரும் அரசரும் அடியாருமாகிய வரதுங்க ராம பாண்டியர் வாழ்ந்த நகரமாதலின் அதனைச் சுற்றிப் பார்க்கலாமென்று சில நண்பர்களுடன் புறப்பட்டேன். அவ்வரசர் வசித்த இடத்தைப் பார்த்து இன்புற்றேன். இப்படி ஊரைப் பார்த்துக் கொண்டு சென்ற போது நடு வீதியில் என் எதிரே ஒருவர் வந்தார். அவருடன் சில குட்டித் தம்பிரான்களும் வந்தார்கள். வந்தவர் என்னைக் கண்டு அஞ்சலி செய்தார். எனக்கு அவர் இன்னாரென்று அடையாளம் தெரியவில்லை.

அவர் தலையில் ஓர் அழகிய உருமாலை கட்டியிருந்தார். காதிற் கடுக்கனும் கையில் மோதிரமும் அணிந்திருந்தார். இடுப்பில் சரிகை வஸ்திரம் உடுத்திருந்தார். இவற்றையெல்லாம் பார்த்து, “இந்தப் பிரபுவை நாம் பார்த்ததாகக் தெரியவில்லையே” என்று யோசிக்கலானேன். பிறகு, “தங்களைத் தெரியவில்லையே” என்று கேட்டேன். அவர், “அடியேன் அவ்விடத்துச் சிஷ்யன்தான்” என்றார். அப்பொழுதும் எனக்கு விளங்கவில்லை. “பெயர் என்ன” என்று கேட்டேன். “நான்தான் சொக்கலிங்கம்; திருவாவடுதுறையில் தங்களிடம் பாடம் கேட்கவில்லையா?” என்றார்.

“சொக்கலிங்கத் தம்பிரானா? அடையாளமே தெரியவில்லையே!” என்ற ஆச்சரியமடைந்து நின்றேன்.

“இப்போது வேஷம் மாறி விட்டது; நான் சொக்கலிங்கம் பிள்ளையாகி விட்டேன்.”

சௌக்கியமாக இருக்கிறீரா? உமக்கு இரண்டு சாண் நீளம் சடையிருந்ததே! ஏன் இப்படி மாற வேண்டும்?” என்று கேட்டேன்.

“நான் திருவாவடுதுறையில் இருந்த போது துறவிகளின் சகவாசம் இருந்தது. படிப்பில் ஆசை தீவிரமாக இருந்தது. தாங்களும் பாடம் சொல்லித் தந்தீர்கள். ஸந்நிதானம் கருணையுடன் பாதுகாத்து வந்தது. என்னவோ நினைத்து இங்கே வந்தேன். பழைய பாசம் சுற்றிக் கொண்டது. உறவினர்கள் கிருகஸ்தாசிரமத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். எனக்கும் அந்த இச்சை உண்டாயிற்று. நான் மனிதன்தானே? காவி உடை தரித்த மாத்திரத்தில் பெரிய ஞானியாகி விடுவேனா? கலியாணம் செய்து கொண்டேன். இங்கே பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வருகிறேன். ஊரிலுள்ளவர்கள் குறைவில்லாமல் ஆதரித்து வருகிறார்கள். எல்லாம் அவ்விடத்து அனுக்கிரகம்” என்றார்.

பிறகு அவர் விடை பெற்றுச் சென்றார். நாங்கள் தேசிகரிடம் சென்று சொக்கலிங்கம் பிள்ளையைப் பற்றிச் சொன்னோம். அவர், “துறவுக் கோலம் பூண்டு அந்நிலைக்குத் தகாத காரியங்களைச் செய்வதை விட இம்மாதிரி செய்வது எவ்வளவோ உத்தமம்” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார்.

திருச்செந்தூர்

கரிவலம் வந்த நல்லூரிலிருந்து புறப்பட்டு ஆழ்வார் திருநகரி முதலிய ஊர்களின் வழியாகத் திருச்செந்தூரை அடைந்தோம். செந்திலாண்டவனுக்குத் திருவாவடுதுறை யாதீனத்தின் மூலம் நடைபெறும் பணிகள் பல உண்டு. அவற்றிற்குரிய மடங்களும் பல உள்ளன. அங்கே ஆவணி மாதத்தில் நடைபெறும் உற்சவ தரிசனம் ஆயிற்று. தேசிகர், பிராமண போஜனம், மகேசுவர பூஜையாகியவற்றை நடப்பித்தார்.

சமுத்திரக் கரையில் அமைந்துள்ள செந்திற்பெருமான் திருக்கோயில் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆண்டவனுக்குப் பிரார்த்தனை செலுத்துவோர்களுடைய கூட்டம் மிக அதிகம். உலகத்தில் தெய்வபக்தியென்னும் சுடரை அவியாமலே காப்பாற்றி வரும் ஸ்தலங்களுள் திருச்செந்தூர் ஒன்று. கலியுக வரதனாகிய முருகக் கடவுளின் திருவருளைப் பலவிதமான அதிசயச் செயல்களால் காணுவதற்கு இடமாயிருப்பது அந்தத் திவ்ய ஸ்தலம்.

கந்தர் கலிவெண்பா

எங்களுடன் வந்திருந்த இராமலிங்கத் தம்பிரானுடைய ஆட்சியிலுள்ள திருப்பனந்தாள் மடத்தில் ஆதி புருஷராக வணங்கப்படுபவர் குமரகுருபர ஸ்வாமிகள். அப்பெரியார் இளமையில் ஐந்து வருஷம் வரையில் ஊமையாக இருந்து பிறகு செந்திற் பெருமான் திருவருளால் வாக்குப் பெற்றனர். அப்போது அவர் முதல் முதலில் செந்திலாண்டவன் விஷயமாக, ‘கந்தர்கலி வெண்பா’ என்ற பிரபந்தத்தைப் பாடினார். திருவருளால் அமைந்த வாக்கென்ற கருத்தினால் தமிழ் நாட்டில் அந்நூலைப் பயபக்தியோடு பலர் பாராயணம் செய்து வருவார்கள். நான் அதை அடிக்கடி படித்து மகிழ்வதுண்டு. திருச்செந்தூரில் தங்கிய காலத்தில் அதனைப் பல முறை பாராயணம் செய்தேன். இராமலிங்கத் தம்பிரான் தம் ஆதீன முதல்வரால் இயற்றப் பெற்ற தென்ற பெருமையுள்ளத்தோடு படித்தும் கேட்டும் வந்தார். கந்தர் கலிவெண்பாவின் இறுதியில் குமர குருபரர் தமக்கு ஆசு முதல் நாற்கவியும் பாடும் வன்மை வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார். நான் அந்தப் பகுதியை மீட்டும் மீட்டும் படித்துச் செந்திலாண்டவனைத் துதித்தேன். எனக்கும் நல்ல கவித்துவம் வேண்டுமென்ற ஆசை உள்ளிருந்து தூண்டியது.

எனது தீர்மானம்

திருச்செந்தூரில் இருந்தபோது சுப்பிரமணிய தேசிகர் என்னையும் மகாவைத்தியநாதையரையும் அழைத்து, ஊருக்குப் போய்ச் சில தினங்கள் இருந்து விட்டுத் திருப்பெருந்துறைக்கு வந்து விடும் படியும், அதற்குள் தாமும் திருப்பெருந்துறைக்கு வந்துவிடக் கூடுமென்றும் கட்டளையிட்டனுப்பினார். நாங்கள் புறப்பட்டோம். இராமலிங்கத் தம்பிரானும் விடை பெற்றுத் திருப்பனந்தாளுக்குச் சென்றார். செந்திலாண்டவன் திருவருளால் இனிச் செய்யுட்களை மிகுதியாக இயற்றிப் பழக வேண்டுமென்ற தீர்மானத்துடன் நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தேன்.

லோகநாத பெருமாள் திருக்கோவில்-திருக்கண்ணங்குடி..

 ஶ்ரீராமஜெயம்🙏

ஆலயதரிசனம்...

அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோவில்-திருக்கண்ணங்குடி..

தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. தாயார் சன்னதியில் மூலவரும் உற்சவரும் ஒரே முக சாடையில் இருப்பது எங்கும் காணமுடியாத அதிசயம்.

இறைவன்:  லோகநாத பெருமாள்
இறைவி:  லோகநாயகி தாயார்
தீர்த்தம்:  சிரவண புஷ்கரணி தீர்த்தம்

மங்களாசாசனம்..

திருமங்கையாழ்வார்

கோவிலின் சிறப்புகள்...

மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 18வது திருத்தலம். காயாமகிழ், உறங்காப்புளி, தேறா வழக்கு, உறா கிணறு திருக்கண்ணங்குடி என்பது பழமொழி. உறங்காப்புளியும் ஊறா கிணறும் இப்போது இல்லை. காய்ந்து பட்டு போகாத வரம் பெற்ற ஸ்தல விருக்ஷமான மகிழ மரம் கோவிலுக்கு பின்புறம் உள்ளது. தாயார் சன்னதியில் மூலவரும் உற்சவரும் ஒரே முக சாடையில் இருப்பது எங்கும் காணமுடியாத அதிசயம்.

கிருஷ்ண பக்தி நிறைந்த வசிஸ்டர் வெண்ணெய் மயமான கிருஷ்ணரை இளகாமல் விக்ரமாக வழிபட்டுவந்தார். பக்தியை மெய்ச்சிய கண்ணபிரான் குழந்தையாக கோபாலன் அவர் வழிபட்ட கிருஷ்ணனை உண்டுவி ட்டார். கிருஷ்ணனை வசிஸ்டர் விரட்ட மகிஷ மரத்தடியில் தவம் செய்து கொண்டு இருந்த ரிஷிகள் இருந்த பகுதிக்கு வந்தார் இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த ரிஷிகள் கண்ணனை பக்தியாகிய பாச கயிற்றால் கட்டிபோட்டனர்.

ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனின் பாதத்தில்சரண் அடைந்தார். கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் கண்ணங்குடி ஆயிற்று. இங்கு திருநீரணி விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து மூன்றே முக்கால் நாழி மட்டும் காட்சி தருவார். பக்தகோடிகளும் விபூதி அணிந்து வருவார். சிவ வைஷ்ணவ ஒற்றுமை. உபரிசரவசு மன்னனுக்காக நடைபெறும் விழா இது.

பஞ்சகிருஷ்ண தலங்கள்..

தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.

அமைவிடம்...

திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது...

ஓம் நமோ நாராயணாய🙏

யந்திர சனீஸ்வர பகவான்

 யந்திர சனீஸ்வர பகவான்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள திருஏரிகுப்பத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எந்திர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது.

இந்த சனீஸ்வரபகவானை வணங்கினால் ஜாதக ரீதியான தோஷம் உள்ளவர்கள், வியாபாரத்தில் தொழில் சிறக்கவும், நீண்ட ஆயிலுடன் இருக்கவும் இங்குள்ள பாஸ்கரா தீர்த்தத்தில் நீராடி எள்;தீபம் ஏற்றினால் அனைத்து பிரச்சனைகளும் விலகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

நவகிரகங்களில் ஒருவரான சனி பகவானை சிலைவடிவில் தரிசித்திருப்பீர்கள் ஆனால் இத்தலத்தில் சனி பகவான் எந்திரம் பொரித்த சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

இங்கு மூலஸ்தானத்தில் 2 அரை அடி சிவலிங்க வடிவமாக அமைந்துள்ளது சிவனை போலவே சூரியன் சந்திரன் மற்றும் வருனன் நடுவே காகம் உள்ளது.

ஆறுகோன அமைப்பில் உள்ள ஸ்டார் கோனத்தில் உள்ளது

சனீஸ்வரரே இங்கு பிரதான மூலவர் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் படைவீட்டை தலைநகராகக் கொண்டு சம்புவராய மன்னர்கள் அரசு புரிந்து வந்தனர்.

அவர்களின் படை தளபதிகளுள் ஒருவராக விளங்கிய வையாபுரி என்பவர் ஒருசமயம் குதிரையில் செல்லும்போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதற்கு பரிகாரமாக அவர், தான் கீழே விழுந்த இடத்தில் யந்திர வடிவில் சனீஸ்வர பகவானைத் தாபித்து வணங்கி பூரண குணமடைந்தார்.

கால மாற்றத்தால் புதைந்து கிடந்த ஆவ்விக்கிரகத்தைச் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர் என்பது வரலாறு.

இங்குள்ள திறந்த வெளிக்கருவறையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடியாக உள்ளது.

பிராத்தனை

சனிப் பெயர்ச்சியால் உண்டாகும் தோஷம் நீங்கவும், ஜாதக ரீதியாக சனிநீசம் பெற்றவர்கலும், திருமணம் குழந்தைபாக்கியம் கிடைக்கவும், வழக்குகளில் வெற்றிபெறவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

சனிபகவான் மனிதர்களின் ஆயுளை நிர்ணயக்கும் வல்லமைப்பெற்றவர் நீண்ட ஆயுளுடன் இருக்கும் வியாபாரம் செழிக்கவும் எள்தீபம் ஏற்றி பிராத்தனையை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.

திருவண்ணாமலையில் இருந்து 45 கி.மி தூரத்திலும் வேலூரில் இருந்து 30 கி.மி. தூரத்தில் உள்ளது.



காணாமல் போன பையன்

  நினைத்தாலே கிடைக்கும்ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர திருவடிகளே சரணம் 🙏

காருண்ய மூர்த்தியான மகா பெரியவா தன்னை நம்பி வந்தவரை எப்போதும் கைவிடமாட்டார்.

ஆபத்பாண்டவா அனாதரட்ஷகா ஆதிமூலமே சந்திரசேகரா சரணம் அப்பா. மகா பெரியவா பாதமே சரணம். மகா பெரியவா பாதமே கதி. மகா பெரியவா பாதமே துணை. 🙏 🙏 🙏 💐 💐 💐 🌸 🌸 🌸 🌹 🌹 🌹 🌼 🌼 🌼 🌷 🌷 🌷 🌺 🌺 🌺 🙏 🙏 🙏

காணாமல் போன பையன், திரும்பி வந்த அதிசயம்.

(பையன் யார் தெரியுமா? இன்று பிரபல பாடகராக இருக்கும்,திரு நெய்வேலி சந்தான கோபாலன்)

கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.   

நெய்வேலி மகாலிங்கம், மகாபெரியவாளின் அத்யந்த பக்தரில் ஒருவர். அவரிடம் ஒருவர் வருகிறார்.

"தன் மகன் சென்னையில் படித்துக் கொண்டு இருந்தவன், காணாமற் போய்விட்டதாகவும், அவன் திரும்பிவர வேண்டும் என்று காஞ்சி மகானைப் பிரார்த்திக்க வேண்டும் என்றும், மகாலிங்கம் தரிசனத்திற்குப்  போகும்போது, தன்னை  அழைத்துக்  கொண்டு போக வேண்டும்" என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

மகாலிங்கத்திற்கோ, ஒன்றும் புரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் சகாராவில் தரிசனம் செய்துவிட்டு வந்திருக்கும் நிலையில், திரும்பவும் அவ்வளவு தூரம் போக வேண்டுமே என்கிற தயக்கம்.

"பாவம், அவரை அழைத்துக் கொண்டு போய் வாருங்கள்" என்று மகாலிங்கத்தின் மனைவி, அவரை அனுப்பி வைத்தார்.

நெய்வேலியிலிருந்து கிளம்பி சகாராவை அவர்கள் அடைந்தபோது விடியற்காலை மூன்று மணி. அங்கிருந்து சங்கர மடத்திற்கு வந்தவர்கள், அங்கு மூன்று நாட்களாக மகாராஜபுரம் சந்தானம், மகானின் தரிசனத்திற்காக  காத்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.  அவருக்கே, மகானைப் பார்க்க முடியவில்லை என்றால்,தன் நிலை என்னவாகும் என்று மகாலிங்கத்தின் நண்பர் கவலைப்பட, "கவலையை விடுங்கள் காருண்ய  மூர்த்தியான மகா பெரியவா தன்னை நம்பி வந்தவரை எப்போதும் கைவிடமாட்டார்" என்று ஆறுதல் சொன்னார் மகாலிங்கம்.

"கதவு திறக்கும். தரிசனம் கிடைக்கும்" என்று மகாலிங்கம்  சொல்லிக் கொண்டே  இருந்தார். தன் நண்பருக்கு ஆறுதலாக.

மகாலிங்கம் சொன்னதைப் போல, ஜன்னல் திறக்கப்பட, மகான் தரிசனம் தர, பையனின் அப்பா, தன் மகனைக் காணவில்லை யென கதறி அழுதார்.பையனின் புகைப்படம் ஒன்றையும் மகானிடம் காட்டினார்.

அந்த தெய்வம் தனது கருணை பார்வையில், மகாலிங்கத்தின் நண்பரையும், சந்தானத்தையும் மாறி,மாறி நோக்கினார். 

அப்போது விடியற்காலை நான்கரை மணி. தன் பங்குக்கு  மகாலிங்கமும் தனது நண்பரின் வேதனையை மகானிடம் கோடிட்டுக் காட்டினார்.

 புகைப்படத்தை உற்றுப் பார்த்த அந்தக் கிருபாநிதி,தன் திருக்கரத்தை உயர்த்தி அனுக்கிரகம் புரிந்தார்.

மகாலிங்கத்திற்கு நம்பிக்கை வந்துவிட...

"நீங்கள் நெய்வேலிக்குத் திரும்பலாம்.மகானின்  அருளாசியால்  உங்கள் பையன் நிச்சயம் கிடைத்து விடுவான். பையன் கிடைத்தவுடன், இங்கே மடத்திற்கு தந்தியடியுங்கள்" என்று சொல்லி நண்பரை அனுப்பி வைத்தார்.

அவர் போன சில நாட்களில் பையன் திரும்பி விட்டதாகத் தந்தி வந்தது. அவனைப் பற்றி விபரங்களுடன். பையன் பல இடங்களைச் சுற்றி விட்டு,மந்திராலயம் சென்று இருக்கிறான்.அங்கே காலையில் துங்கபத்திரா நதியில் அவன் குளிக்கும்போது அவன் மனதில் ஓர் உள்ளொளி, " நீ உடனே வீட்டிற்குச் செல்" என்று சொல்லியதாம்.

எந்த விடியற்காலையில் மகான், அவன் தந்தைக்கு ஆசி வழங்கினாரோ, அதே நேரத்தில் தான் பையன் மனதிலும் உள்ளொளி.

மகா பெரியவா, சில வினாடிகள் இங்கே புகைப்படத்தை தன் அருட்பார்வையால் நோக்க, எங்கோ மந்திராலயத்தில் பையனுக்கு அது உணரப்பட்டு, அவன் வீட்டிற்குத் திரும்பி விட்டான்.

அன்று பையனாக இருந்த அவன், இன்று நல்ல பாடகராய்த் திகழும்,நெய்வேலி சந்தான கோபாலன் தான் அது. 

அருட்செல்வர்,'நெய்வேலி மகாலிங்கம்' சொன்ன தகவல் இது.

பெரியவா சரணம் !!

விடையேறிடும் நடமாடிடும் பொடிசூடிய பெருமான்

அடியார்களின் வினைபோக்கிடும் அனல்தாங்கிய பெருமான்
மறைநூல்களும் தொழுதேத்திடும்  மடமாதொரு பாகன்
பிறைசூடிய  பெருமான்  சந்திரசேகரேந்திரன்  அடிதொழுவோம்!!

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் - சிங்கப்பூர்

 ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் - சிங்கப்பூர்

நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய வழிபாட்டுத் தலங்களையும், ஆலய உற்சவங்களையும் ஏற்படுத்தினார்கள். நிலங்களைத் தானமாகக் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள்.

அப்படிப்பட்ட பெருமைக்குரிய கோவில்களில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலும் ஒன்று.

1800 - ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்ரீ நிவாச பெருமாள் கோயில் தோற்றம் கண்டது. இந்த ஆலயம் உருவாக்கத்திற்கும், தோற்றத்திற்கும் வழிகோலியவர்கள் சமூக தலைவர்களாக இருந்த அருணாச்சலப் பிள்ளை, கோட்ட பெருமாள்பிள்ளை, இராமசாமி பிள்ளை, அப்பாசாமி பிள்ளை, சொக்கலிங்கப்பிள்ளை, இராமசாமி ஜமீந்தார் ஆகியோர்.

தாய்நாட்டை விட்டு வந்திருந்த போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி, தங்களின் கலாச்சாரம், மதம், மொழி ஆகிவற்றை மறவாது ஒழுகி நிற்கத் துடித்த காலம். தங்களின் சக்திக்கேற்ப ஆங்காங்கே சிறு குடில்களாகக் கோவில்களை அமைத்து வழிப்பட்டார்கள்.

அப்போது வைணவர்களுக்கு ஒரு சிறப்பான கோயில் வேண்டும் என்றபொது நல எண்ண உந்தலில் 1855-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 20-ம் நாள் திரு. நரசிங்கம் என்பவருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி சிராங்கூன் சாலையில் 2 ஏக்கர் 19 போல்ஸ் பரப்புள்ள நிலத்தை இருபத்தொன்று ரூபாய் மூன்று அணாவுக்கு விற்று நிலத்தை அவருக்கு உரிமையாக்கிக்கொடுத்தது.(அப்போது சிங்கப்பூரில் இந்திய நாணயம்தான் உபயோகித்தலில் இருந்து இருக்கிறது)

வாங்கப்பட்ட நிலத்தில் எழும்பிய கோயிலுக்கு ''நரசிம்ம பெருமாள்கோயில்'’ என்று பெயர் வழங்கப்பட்டது. கோவிலுக்குப் பக்கத்தில் ஒருகுளமும் இருந்தது. கோவிலுக்குப் போகும்முன் அக்குளத்தில் குளித்து விட்டுதூய்மையுடன் சன்னதி அடைந்து வழிபட்டு வந்தனர்.

குளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. சிறிய கோவிலாக இருந்த போதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்க, பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கோவில் பெரிதாக இருக்கவேண்டும் என்று அறக்காப்பாளர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டார்கள்.

அம்முறையீட்டிற்கிணங்க, 25,792 ச.அடி நிலம் $ 25.00 வெள்ளி விலையில் 08-05-1894 ம் ஆண்டு சிராங்கூன் சாலையில் இருக்கும் நரசிங்கப் பெருமாள் கோவில் அறக்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

15-08-1912-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து 3,422 ச.அடிநிலம் 999 ஆண்டுக்கு வருடம் ஒரு வெள்ளி வீதம் குத்தகைக்கு வழங்கப்பட்டது.

'நரசிம்ம பெருமாள் கோயில்' என வழங்கப்பட்ட பழைய கோவில் அப்போதே சிராங்கூன் சாலையை முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. 'நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர், மகாலெட்சுமி விக்ரங்களுடன், கோவிலின் வெளியில் அரசமரத்தடியில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள்.

இக்கோயில் 1907-ம் ஆண்டு முதல் முகமதிய இந்து அறக்கட்டளை வாரியத்தினால் மேலாண்மை செய்யப்பட்டு,பின்னர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

1952-ம் ஆண்டு, மிகவும் மோசமான நிலையில் இருந்த கோவிலைத் திருத்தி அமைத்துப் புது கட்டிடம் ஒன்றை எழுப்ப வாரியம்முடிவு செய்தது.

மேலும் கோவிலுக்குள் நுழையும் வழியைத் தவிர சிராங்கூன் சாலையின் முகப்பில் அமைந்திருக்கும் நிலத்தில் கடைகளுடன் கூடிய வீடுகள் கட்டி 99 வருடக்குத்தைக்கு விடவும் வாரியம் எண்ணியது.

அத்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பின், இப்போது இருப்பதைவிடக் கோவில் சிறியதாக அமைந்திருக்கும் என்பதுடன் கோவில் உத்தேசக் கட்டிடங்கள் பின்புறத்தை முகப்பாகவும் கொண்டு அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது பொது மக்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்புக் தெரிவித்ததால், திட்டத்திற்கு அங்கீகாரம் பெறநீதி மன்றத்திற்கு விண்ணப்பம் செய்த மனு விசாரணைத் தேதியின்றி ஒத்திவைக்கபட்டது.

இருப்பினும், 1957-ம் ஆண்டு ஜூன் 30-ம் நாள் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற உபயக்காரர்களின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வாரியம் தயாரித்த புதுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அத்திட்டத்தை 1961-ம் ஆண்டு பிப்ரவரியில் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து உள்நாட்டு குத்தகைகாரர்களைக் கொண்டு கோயில் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டது.

1963-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து வரவழைக்கப் பட்ட சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலை நடைபெற்றது. இராஜ கோபுரம், பிள்ளையார் சந்நிதி, இவற்றைத் தவிர தற்சமயமுள்ள கோவில் 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

நரசிங்கப் பெருமாள் கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலாக பெயர் மாற்றம் பெற்றது. நரசிங்க அவதாரம் எடுத்த விஷ்ணுவின் உருவத்திற்குப் பதிலாகத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஒத்த திருவுருவத்தைக் கோவிலில் மூலவராக வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கருஞ்சிலையும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் வளாகத்திலேயே கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் ஒரு கல்யாண மண்டபம் கட்டப்பட்டு, 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் முதல் அதிபர் இஞ்சே யூசோப் பின் இஸ்ஸாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கல்யாண மண்டபம் திருமணங்கள், கூட்டங்கள் இன்னும் பல்வேறு சமய சமூக நிகழ்ச்சிகளை நடத்து வதற்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.

ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் 1966-ம் ஆண்டு புதிப்பித்து கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் முடிவுற்றவுடன் கோவிலுக்கு இராஜ கோபுரம் கட்டும் திட்டத்தில் நாட்டம் செலுத்தி அதனை நன்கொடை மூலம் கட்டி முடித்தனர்.

1975-ம் ஆண்டு கும்பாபிஷேத்தைச் சிறப்பாக நடத்த வைணவ ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற அலங்கார பட்டர் தமிழகத்திலிருந்து வந்து நடத்தினார். 41 நாட்கள் மண்டலாபிகஷேகத்தில் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருமதி. எம்.எஸ். சுப்புலெட்சுமி, புலவர் கீரன் அவர்களும் வருகை புரிந்தனர்.

1978-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் சிங்கப்பூர் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது. கோவில் கோபுரம், விமானத்தில் உள்ள சுதை சிற்பங்களாகத் தாயார், ஆண்டாள், பெருமாள் பொழியுடன் காட்சியளிக்கிறார்கள்.

சன்னிதானத்தில் மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உற்சவ திருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு அன்றாட பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

கொடி மரம் இழைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள சிறந்த நுட்பவாதிகளைக் கொண்டு இராஜ கோபுரத்திற்கான கதவு செய்யப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். ஏழுமலை வெங்கடாசலபதி இந்த புரட்டாசி மாதத்தில்தான் மக்களை நெறிபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய தினம். அன்று கோயிலில் அதிக கூட்டமிருக்கும். புரட்டாசி சனியில் அன்னதானம் செய்யும் வழக்கம் பெருமாள் கோயிலில் 1900-களின் தொடக்கத்திலிருந்தே உள்ளதாக வாய்மொழி வரலாறு உண்டு. இன்று வரை புரட்டாசி சனியில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.



ஸ்ரீவாலாம்பிகைசமேதஸ்ரீசோழேஸ்வரர்_திருக்கோயில்

 இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் 

#ஸ்ரீவாலாம்பிகைசமேதஸ்ரீசோழேஸ்வரர்_திருக்கோயில்

சோழ மன்னர் ராஜாதி ராஜனால் 850 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பட்டக்காரத்தெருவில் நாராயணன் தங்கை கோயிலுக்கு அருகில் கட்டப்பட்டது ஸ்ரீவாலாம்பிகை சமேத ஸ்ரீசோழேஸ்வரர் திருக்கோயில்.

 இங்கு சித்ர குப்தர் தனி சந்நதியில் எழுந்தருளியுள்ளார். சோழ மன்னர் ராஜதிராஜன்  போரில் பெற்ற  வெற்றியின் நினைவாக மன்னார்குடியில் ஜெயங்கொண்டநாதர் கோயிலை கட்டினர். அக்கோயில் அருகிலேயே அப்போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மடிந்து போனதால் அப்பாவங்களை அகற்றுவதற்காக பாவபுண்ணியங்களை எழுதும் தெய்வமான சித்ரகுப்தனுக்கு ஒரு சிவாலயத்தை எழுப்பி தனி சந்நதியில் சித்ரகுப்த பகவானை எழுந்தருளச்செய்து பூஜைகள் நடத்தியதாக ஆலய தலவரலாறு கூறுகிறது.

சோழ மன்னன் ராஜாதிராஜனால் எழுப்பப்பட்ட இந்த சீர்மிகு ஆலயத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், சோழேஸ்வரர், வாலாம்பிகை, நந்திகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியசாமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சனீஸ்வரர், சூர்யபகவான், சந்திரபகவான் ஆகியோருடன் சித்ரகுப்தர் எழுந்தருளியுள்ளார். ஆலயவிருட்சம் வில்வமரம்.  துளசி வனமாக இவ்வாலயம் விளங்கியதால் இத்தல இறைவன் துளசிவனமுடையார் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயில் ஈசானிய மூலையில், மனிதனின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் எமதர்மராஜாவின் எழுத்தரும், முதன்மந்திரியுமான சித்ரகுப்தர் எழுத்தருளியிருப்பது தனிசிறப்பு. சித்ரகுப்தருக்கு காஞ்சிபுரம், ஸ்ரீவாஞ்சியத்தை அடுத்து மன்னார்குடியில் மட்டும்தான் ஆலயம் உள்ளது.


சித்ரகுப்தர் நான்கு திருக்கரங்களின் மேல் இரு திருக்கரங்களில் தாமரை மலர்கள் ஏந்தியிருப்பது இவர் செல்வ வரம் தருபவர் என்பதைக் குறிக்கிறது. கீழ் இருதிருக்கரங்களிலும் அபயமுத்திரைகாட்டி அருள்கிறார்.  இவரை வணங்குபவர்களுக்கு லட்சுமிகடாட்சம் அருள்வதுடன் அவர்களது  பாவங்களை அழித்து மீண்டும் பாவங்கள் புரியாமல் இருக்க வழிகாட்டுவார் என்பது ஐதீகம். ஆலயத்தின் முக்கியவிழா சித்ரா பவுர்ணமி ஆகும். பிரதோஷ வழிபாடு, சோமவாரவழிபாடு, குருவார வழிபாடு, சங்கடஹரசதுர்த்தி, சஷ்டி வழிபாடு, தேய்பிறை அஷ்டமி வழிபாடு, சனிக்கிழமை சனீஸ்வர பகவான் வழிபாடு, சிவராத்திரி  வழிபாடு, வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பவுர்ணமியன்று சித்ரகுப்தருக்கு நெய்விளக்கு ஏற்றுவதன் மூலம் கேது தோஷம் நிவர்த்தியாகும்.

அவரவர் ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் சித்ரகுப்தருக்கு நெய்விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்வதன் மூலம் பாவகிரகங்களின் போக்கு மறைந்து  சுபகிரகங்களின் அருள்கிட்டும். வியாழக்கிழமைகளில் வழிபட்டால் நல்லறிவும், மேதாவிலாசமும், புகழும் கிட்டும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஏற்றி வழிபட்டால் தடைகள் விலகும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நீதியரசர்கள், புலவர்கள்  ஆகிய எழுத்து தொடர்புடையவர்கள் சித்ரகுப்தரை இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் அமோகப் பலன்கள் ஏற்படும் என்பது நம்பிக்கை.

 தினமும் காலை 9 மணி முதல் 10.30 வரை மாலை 5.30 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். மன்னார்குடி பஸ் ஸ்டாண்டிலிருந்து  மன்னை நகர் வழியாக சென்றால் 2 கி.மீ. தொலைவில் பட்டக்காரத்தெரு நாராயணன்தங்கை கோயிலுக்கு அருகில்  இக்கோயில் உள்ளது.



பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திரு இந்தளூர்

 அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திரு இந்தளூர், நாகப்பட்டினம்

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்நிலைநின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் பொன்னின்வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே!

- திருமங்கையாழ்வார்

திருவிழா

சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு. ஆடி மாதம் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் பத்து நாள். ஆவணியில் ஐந்து நாள் கண்ணன் புறப்பாடு. புரட்டாசி மாதம் தாயாருக்கு நவராத்திரி உற்சவம்.

ஐப்பசியில் பத்துநாள் துலா பிரம்மோற்சவம். மார்கழியில் 20 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம். தை முதல் நாள் சங்கராந்தி உற்சவம். பங்குனி பத்து நாள் பிரம்மோற்சவம்.

தல சிறப்பு

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 26 வது திவ்ய தேசம்.ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக இருந்த தலம்.

பொது தகவல்

இத்தல பெருமாள் வீர சயனத்தில், கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறார். இவரை சந்திரன் தரிசித்துள்ளார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வேத சக்ர விமானம் எனப்படும்.

பிரார்த்தனை

ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. கேட்டதெல்லாம் கொடுக்கும் பெருமாள்

நேர்த்திக்கடன்

பிரார்த்தனை நிறைவேறியதும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

தலபெருமை

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும் 230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயில் இது. வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இதில் நீராடித்தான் சந்திரன் தன் சாபம் நீங்கப்பெற்றான்.

பெருமாளின் முகத்தை சந்திரனும், பாதத்தை சூரியனும், நாபிக்கமலத்தை பிரம்மனும் பூஜிக்கிறார்கள். தலைமாட்டில் காவிரித்தாயாரும், கால்மாட்டில் கங்கை தாயாரும் வழிபடுகிறார்கள். எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கிறார்கள்.

கங்கையை விட காவிரி புனிதமானவள் என்று பெயர் பெற்ற தலம்.

தல வரலாறு

நினைத்ததை எல்லாம் பெற்றுத்தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தான். இவன் ஏகாதசியில் விரதம் இருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பான்.

இவனது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் தேவலோகத்திலோ அனைவரும் கலக்கமாக இருந்தனர். அம்பரீசன் நூறாவது விரதம் முடித்து விட்டால் தேவலோகப்பதவி கூட கிடைத்து விடும்.

மானிடனுக்கு இப்பதவி கிடைத்து விட்டால் தேவர்களின் மரியாதை குறைந்து விடும் என பயந்தனர். இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் சென்றனர். துர்வாசரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துவிட்டு, மன்னனின் விரதத்தை தடுக்க பூமிக்கு வந்தார்.

அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான். அவன் ஏகாதசி விரதம் முடித்திருந்தாலும் துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும். அப்போது தான் ஏகாதசியின் முழுப்பயனும் அவனுக்கு கிடைக்கும்.

துவாதசி நேரம் முடிந்து விட்டால் பயனில்லை. துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாராக இருந்தான். அதற்குள் துர்வாசர் வந்து விட்டார். தன் விரதத்தை தடுக்கத்தான் இவர் வந்துள்ளார் என்பது மன்னனுக்கு தெரியாது.

முனிவரை வரவேற்ற மன்னன்,""தாங்களும் என்னுடன் உணவருந்தினால், எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும்'என்றான். முனிவரும் சம்மதித்துவிட்டு நதியில் நீராடிவிட்டு வருகிறேன். அதன் பின் உணவருந்தலாம் என கூறி சென்றார்.

முனிவரின் திட்டம் என்னவென்றால், தான் நீராடிவிட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்து விடும். மன்னன் நமக்காக காத்திருந்தால் அவனது விரதம் தடை படும் என்பது தான். துவாதசி முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது.

கோபக்கார துர்வாசர் வருவதற்குள் சாப்பிட்டு விட்டால் விரதத்தின் பலன் கிடைக்காமல் செய்துவிடுவார். இன்னும் சிலநிமிடங்களே இருந்தது. வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தான்.

உடனே தலைமைப்பண்டிதர்,""உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசியின் முழுப்பயனும் கிடைத்துவிடும்,'என்று கூறினர். அதேபோல் பெருமாளை நினைத்து உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன் விரதத்தை பூர்த்தி செய்து விட்டு, முனிவருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக காத்திருந்தான்.

இதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்த துர்வாசர் மிகுந்த கோபமடைந்தார். உடனே துர்வாசர் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்லுமாறு ஆணையிட்டார்.

அம்பரீசன் இதற்கு பயந்து பரிமளரங்கநாதரிடம் சென்று,""பெருமாளே! உனக்காக ஏகாதசி விரதம் இருக்கக்கூடாது என்பதற்காக ஏவப்பட்டுள்ள பூதத்திடம் இருந்து என்னைக்காப்பாற்று'என பெருமாள் பாதத்தில் சரணடைந்தார். பெருமாள் கோபத்துடன் பூதத்தை விரட்டினார்.

இதையெல்லாம் அறிந்த துர்வாசர் பெருமாளிடம் மன்னிப்பு கேட்க, பெருமாளும் மன்னித்து அவரது கர்வத்தை அடக்கினார். நூறு ஏகாதசி விரதம் இருந்து முடித்த மன்னனிடம், ""வேண்டியதைக்கேள்' என்றார்.

அதற்கு மன்னன்,""தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து வரும் பக்தர்களின் குறைகேட்டு அருள்புரிபுரிய வேண்டும்,'என வேண்டினான். பெருமாளும் மன்னனின் விருப்பப்படி இத்தலத்தில் அருள்புரிந்து வருகிறார்.

சாரங்கபாணி திருக்கோயில், திருக்குடந்தை

 அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், திருக்குடந்தை, தஞ்சாவூர்

பாலாலி லையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே கோலால் நிறை மேய்த் தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறி மென்குழல் சூட்டீரே

- ஆண்டாள்

திருவிழா சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.

தல சிறப்பு

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 12 வது திவ்ய தேசம். இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

பொது தகவல்

மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன.

தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும், சுற்றுப்புற சுவர்களில் அழகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன.

11 நிலைகளையுடைய இது, 150 அடி உயரம் கொண்டது. இத்தலத்து தேரும் விசேஷமானது. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், "ரதபந்தம்' என்று அழைக்கப்படுகிறது.

பிரார்த்தனை கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். கும்மாயம்: கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளுக்கு பயத்தம்பருப்பு வெல்லம், நெய் கொண்டு தயாரித்து படைக்கும் நைவேத்தியத்தின் பெயர் கும்மாயம்.

தலபெருமை

உத்தான சயன பெருமாள் : பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு "உத்தான சயன' கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார்.

அப்போது அவர், "நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!' என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், "அப்படியே காட்சி கொடு!' என்றார்.

சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை "உத்தான சயனம்' என்பர்.

திவ்ய பிரபந்தம் தந்த திருமால் : பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார்.ஆம்! நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார்.

அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை "ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, "இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா!' என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை.

அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி - தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார்.

ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தம்' ஆனது.

ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, "ஆராவமுதாழ்வார்' என்ற பெயரும் உண்டானது.

அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் : திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே.

இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன் : திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார்.

திருமால் ஒளிந்த இடம், "பாதாள சீனிவாசர் சன்னதி' என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக' தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரம்மச்சாரிகள், இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெற முடியும் என்ற வாழ்க்கை தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக உள்ளது.

சொர்க்கவாசல் இல்லாதது ஏன்? : திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார்.

எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.

உபய பிரதான திவ்யதேசம் : திவ்யதேசம் தெரியும், அதென்ன உபய பிரதான திவ்யதேசம் என்கிறீர்களா? இதற்கான விளக்கம் இதுதான்! திவ்யதேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே பூஜையின்போது அனைத்து அலங்காரங்களும் செய்யப்படும்.

ஆனால் இக்கோயிலில் உற்சவருக்கு, மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகிறது. அதாவது உற்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து, உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுபவராக இருக்கிறார். எனவே இத்தலம், "உபய பிரதான திவ்யதேசம்' எனப்படுகிறது.

வில்லுடன் பெருமாள் : பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம்.

இதன் பெயராலேயே இவர், "சார்ங்கபாணி' என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.

மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை : இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது.

நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்! லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தைகள் இல்லை.

ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.

இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்க ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார்.

தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க முடியாது.

தல வரலாறு

ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. ""உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே'' என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள்.

தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், ""அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர்.

அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும்,'' என்றார். லட்சுமிதாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள்.

தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார்.

இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "கோமளவல்லி' என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், "சாரங்கபாணி' எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.

கிருஷ்ணசாமி_கோவில்

 இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் 

#கிருஷ்ணசாமி_கோவில்:

கி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இவர் சிறந்த கிருஷ்ண பக்தர் ஆதலால் சர்வாங்கநாதன் என்று அழைக்கப்பட்டவர். இச்செய்தி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வரலாற்றிலும் திருவிதாங்கூர் வைக்கம் கருவூல ஆவணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மன்னர் திருக்குறுங்குடி கோயிலில் புகழ் வாய்ந்த மணி ஒன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.

கி.பி.15-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வைஷ்ணவ யாத்ரீகர்கள் வட இந்தியாவிலிருந்து இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர். கங்கை மற்றும் யமுனா எனும் பகுதிகளின் இடையே இருக்கும் தீர்க்கப்பட்டர் என்னும் வைஷ்ணவ பக்தரால் பல்வேறு பொருள்கள் இத்திருக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியின்படி இச்சம்பவம் கி.பி.1464-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதுர்வேதி மங்கலத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு 2 அந்தண பெண்களையும், சிறிய அளவில் நிலங்களும் மன்னர் ஆதித்ய வர்மாவால் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதை திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் வைஷ்ணவ அடையாளத்துடன் கூடிய செம்பு பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் வடசேரி மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதியே அன்றைய சதுர்வேதி மங்கலம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நாகர்கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது. இக்கோவிலில் வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ண மூர்த்தி தனது இருகரங்களிலும் வெண்ணெய்யை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறார்.

இத்தலத்தை குமரியின் குருவாயூர் என்று சிறப்பாக அழைப்பர். தினந்தோறும் கிருஷ்ண சாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. இது அவரது பக்த கோடிகளுக்கு ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ண சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துடன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் வடசேரியை சார்ந்த கே.கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கமிட்டி மூலமாக சிறப்புற கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



பிக்ஷை எடுத்த குடும்பம்

 பிக்ஷை எடுத்த குடும்பத்தை மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக மாற்றிய மகாபெரியவா...             

ஒரு முறை ஸ்ரீ மகாபெரியவா திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் முகாமிட்டிருந்தார். மகாபெரியவர் பாபநாசத்தில் முகாமிட்டிருக்கும் செய்தியைக் கேட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஸ்ரீ மகாபெரியவாளை தரிசித்து அனுக்ரஹம் பெற்றுச் சென்றனர். மகாபெரியவா முகாமிட்டிருந்த இடத்திற்கருகே ஒரு பார்வையற்ற தம்பதியர் கையில் பார்வையில்லா கைக்குழந்தையுடன் பிக்ஷை எடுத்துக் கொண்டிருந்தனர்.         

சென்னையில் ஒரு மிகப்பெரிய செல்வந்தர் ஸ்ரீ மகாபெரியவா முகாமிட்டிருக்கும் இடத்திற்கெல்லாம் சென்று ஸ்ரீ மகாபெரியவாளின் அனுக்ரஹம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்! பெரியவா பாபநாசத்தில் முகாமிட்டிருப்பதை அறிந்து அந்த செல்வந்தர் பாபநாசத்திற்கு வந்து மகாபெரியவாளின் அனுக்ரஹம் பெற்றுச்செல்ல வந்தார்! அந்த பிக்ஷையெடுக்கும் தம்பதி இந்த செல்வந்தரிடமும் பிக்ஷை கேட்டிருக்கிறது!                                                            

அவ்வளவு தான்.ஆத்திரம் வந்தது அந்த மிகப்பெரிய தனவந்தருக்கு! கோபத்தில் அந்த தம்பதியை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அவர்களை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு முகாமுக்குள் நுழைந்தார் அந்த செல்வந்தர்! ஸர்வமும் அறிந்த சர்வேஸ்வரனுக்கு இவர் செய்த காரியம் தெரியாதா என்ன? முகாமுக்குள் ஸ்ரீ மகாபெரியவர் நிறைய பக்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்! இவரைக் கண்டுக்கவே இல்லை. கடைசியில் எல்லா பக்தர்களிடம் பேசிமுடிந்த பிறகு இவர் கையில் வைத்திருந்த தட்டில் புஷ்பங்கள், பழ வகைகள், மஞ்சள் குங்குமம் முதலிய பொருட்களுடன் ஸ்ரீ மகாபெரியவாளிடம் சென்றார்.        

                                                                                                                                      மகாபெரியவாள் முன்பு எல்லாவற்றையும் சமர்பித்துவிட்டு பெரியவா,நான் சென்னையில் இருந்து உங்கள் தரிசனத்துக்கு வந்திருக்கேன்! நீங்க தான் என்னை ஆசீர்வாதம் பண்ணனும் என்றார்! அடுத்து என்ன நடக்கப்போகிறதென முகாமில் இருக்கும் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஸ்ரீ மகாபெரியவாள் சற்றே அதிபயங்கரமான கோபத்துடன் முகாமுக்கு வெளியே பிக்ஷை எடுத்துக்கொண்டிருந்த தம்பதியை என்ன பண்ணே? அவ்வளவுதான்! ஆடிப்போய்விட்டார் அந்த செல்வந்தர். அடுத்து மகாபெரியவா என்ன சொல்லப்போகிறாரென ஆவலுடன் பக்தர்கள் கூட்டம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது!  

 சாஷ்டாங்கமாக ஸ்ரீ மகாபெரியவா திருவடிகளில் வீழ்ந்து நமஸ்கரித்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் அந்த செல்வந்தார்! ஸ்ரீ மகாபெரியவா கடுமையான கோபத்துடன் திருவாய் மலர்ந்தார்! ஏன்டா உன்னால அந்த பிக்ஷை எடுக்குற தம்பதிக்கு எதுவும் கொடுக்க முடியல்லைன்னா என்னால ஒன்னும் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டு போகவேண்டியது தானே முறை? அத விட்டுட்டு பாவம் அவாளை கண்டபடி திட்டுனது மட்டுமில்லாம அவாள அடிச்சு உதச்சிருக்கே! நீ செஞ்ச பாவத்துக்கு ப்ராயஸ்சித்தம் இல்லைனு சொன்னார் மகாபெரியவர்! அவ்வளவுதான் அரண்டுபோய்விட்டார் அந்த செல்வந்தர்! நா பெரிய பாவம் பண்ணிட்டேன் பெரியவா!செஞ்ச பாவத்துக்கு பரிகாரமே இல்லையா பெரியவானு அழ ஆரம்பித்துவிட்டார்!    

 மகாபெரியவர் மனமிரங்கினார்! இந்த பாபநாசத்துல இருக்குற பாபவிநாசேஷ்வர ஸ்வாமிய இப்போவே போய் வணங்கு! அங்க உன் பாவத்துக்கு பரிகாரம் தேடிக்கோன்னு சொல்லிட்டார்! அடுத்த நொடியே பாபவிநாசேஷ்வர ஸ்வாமி கோவிலுக்குப் பறந்தார்! அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ பாபவிநாசேஷ்வர ஸ்வாமியிடம் தான் செய்த பாவம் தீருவதற்கான பரிகாரத்தை வேண்டி தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்! அன்று இரவில் அந்த செல்வந்தரின் கனவில் ஸ்ரீ பாபவிநாசேஷ்வர ஸ்வாமியின் உருவத்தில் ஸ்ரீ மகாபெரியவாளே தரிசனம் தந்தார்! நீ உன் காலால் எட்டி உதைத்து அடித்த அந்த பார்வற்யற்ற பிக்ஷையெடுக்கும் தம்பதிக்கு எந்த விதத்திலாவது உபகாரம் செய்! அதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாகும் எனக் கூறிவிட்டு மறைந்தார்! அடுத்த நாள் காலையில் அந்த தம்பதியர் பிக்ஷையெடுக்கும் இடத்திற்கு அந்த செல்வந்தர் வந்தார்! 

  பார்வையற்ற தம்பதியரை பார்த்தார்! தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அந்த பார்வையற்ற நபரின் கையைப் பிடித்துக்கொண்டே நான் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்! நான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக உங்களுக்கு கண்பார்வை கிடைக்கும்பொருட்டு நானே உங்கள் மூவரின் கண்சிகிச்சைக்குச் செலவு செய்வேன்! நான் உங்களுக்கு தொழில் ரீதியிலாக உதவி செயயும் பாக்கியத்தை சாக்ஷாத் பாபவிநாசேஷ்வர ஸ்வாமியே எனக்கு அருளியிருக்கிறார் இதை நீங்கள் தயவு செய்து நிராகரித்துவிட வேண்டாம் எனக்கூறிக்கொண்டே தன்பையில் வைத்திருந்த 20லட்சம் ரூபாய்கான காசோலையைக் கொடுத்துவிட்டார்!        

ஒரு மாதம் தன்னுடைய சென்னை வீட்டில் தங்க வைத்து அவர்களுக்குப் பார்வை கிடைப்பதற்கு உண்டான முழு செலவையும் அந்த தனவந்தரே ஏற்றுக்கொண்டார்! தற்போது அந்தத் தம்பதி ஸ்ரீ மகாபெரியவாளின் அருட்கடாக்ஷத்துடன் எந்தவிதமான குறையுமின்றி சகலவிதமான செல்வங்களுடன் எகிப்து நாட்டில் வசித்து கொண்டிருக்கிறார்.    

பிக்ஷையெடுத்த தம்பதியை பெரும் செல்வந்தராக மாற்றிய மகாபெரியவாளின் அற்புதங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதென்பதே நிதர்சனமான உண்மை!

ஆசார்யா சொன்ன சுவாசக் கணக்கு

  "ஆரோக்யமாக இருக்க ஆசார்யா சொன்ன சுவாசக் கணக்கு!”

மகாபெரியவர் வடநாட்டுக்கு யாத்திரை செய்துவிட்டு, திரும்ப வந்து ஸ்ரீமடத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.

பல ஆயிரம் மைல்கள் நடந்தே சென்று யாத்திரை செய்த களைப்பு கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.

அந்த சமயத்தில் அவரை தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர், மகான் முன்னிலையில் வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். அப்படிக் கும்பிட்ட பிறகு எழுந்திருக்கவே முடியாமல் சிரமப்பட்டார். அதோடு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து கொண்டு பெருமூச்சு விட்டார்.

அவர் சிரமப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார், பெரியவர்.

வணங்கி விட்டு எழுந்தவர் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.

“சுவாமி என் உடல் நிலை இப்படித்தான் அடிக்கடி சங்கடப்படுத்துகிறது. கொஞ்சம் வேகமாக நடந்தால் கூட மூச்சு வாங்குகிறது..!” என்றார்.

அவர் சொன்னதற்கு பதில் எதுவும் சொல்லாமல், “நீ என்ன உத்யோகம் பார்க்கிறாய்?” என்று கேட்டார் மகான்.

“கணக்கு வாத்யாராக இருக்கிறேன்.!” சொன்னார், அவர்.

“அப்படியானால் உனக்குப் புரியும்படி கணக்காகத்தான் சொல்ல வேண்டும். அதற்கு முன்னால் கேள்வி.

நீ தேகாப்யாசம் (உடற்பயிற்சி) ஏதாவது செய்கிறாயா? பெருமூச்சு வாங்குகிறது என்கிறாயே, அப்படியென்றால் சாதாரணமாக எப்படி மூச்சு விடுவது என்று உனக்குத் தெரியுமா? மகான் கேட்க, எல்லோருடைய கவனமும் அங்கே திரும்பியது.

வந்தவர் அமைதியாகவே நிற்க, மகான் தொடர்ந்தார்.

“இந்த உலகத்துல எல்லாத்துக்குமே ஒரு கணக்கு உண்டு. அது எப்படின்னா, வரவுக்கும் செலவுக்கும் சமமா இருக்க வேண்டும் என்கிற கணக்கு.

ஒருத்தரிடம் கைமாற்றாக ஒரு தொகையை வாங்கினால், அதைத் திருப்பித் தரும் போது முழுசாகத் திருப்பித் தர வேண்டும். இல்லையென்றால் அந்தக் கணக்கு சரியாகாது. என்ன நான் சொல்கிற கணக்கு சரிதானே? கேட்டு நிறுத்திய மகான், சின்ன இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

இதே கணக்குதான் நாம் உயிரோடு இருக்க அத்தியாவசியமான மூச்சு விடுகிறதில் உள்ள கணக்கும். மூச்சில் எந்த அளவுக்கு காற்றை உள்ளே வாங்குகிறோமோ, அது வரவு. அதே அளவைத் திருப்பி வெளியே விடவேண்டும். இது செலவு. தூங்கிக் கொண்டிருந்தாலும் இதை சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் ஆரோக்யக் கணக்கு.

உள்ளே இழுக்கும் காற்றும், வெளியே விடும் காற்றும் சம அளவாக இருக்கும்படி பழகிக் கொண்டால், பெரும்பாலான உடல் உபாதைகளே வராது.

ஆனால், பொதுவாக எல்லோரும் என்ன செய்கிறோம்? எது நமக்கு நல்லது செய்யக் கூடியதோ.. எது நம்முடைய வாழ்க்கையில் அத்யாவசியமோ அதையெல்லாம் கவனிப்பதில் அலட்சியமாக இருக்கிறோம்.

ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசிக்கணும். அதாவது ஒரு சுவாசத்துக்கு சராசரியாக நாலு செகண்ட் எடுத்துக்கணும். இந்தக் கணக்கை எத்தனை பேர் சரியாகச் செய்கிறோம்?

கோபம் வந்தால், சுவாசம் எகிறுகிறது. கஷ்டம் வந்தால் தாறுமாறாகிறது. கவலை வந்தால் சுவாசிப்பதில் சிரமம். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் எது முக்கியமோ அதை அலட்சியப் படுத்துகிறோம்.

அப்படித் தப்பாகிப் போகிற சுவாசத்தை…சுவாசக் கணக்கை குறிப்பிட்ட நேரம் வரைக்குமாவது சரியாகச் செய்யக் கற்றுக் கொள்ளத்தான், அமைதியாக சுவாமி கும்பிடுவது, தியானம் செய்வது, யோகாப்யாசம் செய்வது, ஸ்லோகங்கள் சொல்வது இப்படிப் பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள். அப்படிக் கொஞ்ச நேரம் பழகினால் அதுவே படிப்படியாக முழு நேரப் பழக்கமாகிவிடும்.

“முதலில் நீ ஒன்று செய். வீணாக உணர்ச்சி வசப்படுவதைத் தவிர். அனாவசிய டென்ஷன், வீண் கோபதாபம், விருப்பு வெறுப்பு போன்றவற்றுக்கு இடம் தராமல், சுவாமி நினைவோடு இரு. அப்படி இருந்தால், சுவாசம் சீராகும். பிறகு ஆரோக்யம் தானாக சீராகும். ஆயுசும் வளரும்!” பெரியவா சொல்லி முடிக்க, பிரசாதம் பெற்றுக் கொண்டு நகர்ந்தார் அந்த பக்தர்.

தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன இந்த சுவாசக் கணக்கு, அந்த பக்தருக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பொருந்தும் என்பது உண்மை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

வாகனத்தில்லிஃப்ட்கொடுத்தால்அதுசட்ட‍விரோதம்

வாகனத்தில்லிஃப்ட்கொடுத்தால்அதுசட்ட‍விரோதம் || #உங்கலைசென்ஸ்பறிபோகும்

இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக உள்ளன. சில விதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை. 

இவ்வகையில் கார் உரிமையாளர் ஒருவர், சட்ட விரோதம் என தெரியாமல் செய்த ‘சிறு உதவியால்”, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இரண்டாவதாக உள்ள‍து மும்பை. மும்பையை சேர்ந்த நிதின் நாயர் என்பவர். கடந்த மாதம் 18ம் தேதி காலை தன்காரில், அலுவலகம் சென்றுகொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. சில பஸ்கள் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. சில பஸ்கள் மிகவும் தாமதமாக வந்தன.

இதனால் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் ‘லிப்ட்’ கேட்டு கொண்டிருந்தனர். அப்படி ஏர்ரோலி சர்க்கிள் என்ற பகுதியில், நிதின் நாயரிடமும் 3 பேர் ‘லிப்ட்’ கேட்டனர். அவர்களில் ஒருவர் 60 வயதை கடந்த முதியவர். 2பேர் புகழ்பெற்ற ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். அவர்கள் காந்தி நகர் என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். காந்தி நகரை கடந்துதான் நிதின் நாயர் தனது அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

இதனால் அவர்களின் சூழ்நிலையை புரிந்துகொண்ட நிதின் நாயர், பெருந்தன்மையுடன் மூவரையும் தன் காரில் ஏற்றி கொண்டார். சிறிது நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். உடன் பயணிப் பவர்கள் யார்? என்ற கேள்வியை போலீஸ் அதிகாரி கேட்க, நடந்தவற்றை நிதின் நாயர் கூறியிருக்கிறார். 

உடனடியாக நிதின் நாயரின் லைசென்ஸை அந்த போலீஸ் அதிகாரி பறிமுதல் செய்ததோடு, அபராதம் விதிப்பதற்கான ரசீது ஒன்றை மளமளவென எழுதி, நிதின் நாயரிடம் ஒப்படைத்து விட்டார். எதற்காக இந்த தண்டனை? என்பதே நிதின் நாயருக்கு புரியவில்லை.

எனவே அதற்கான விளக்கத்தை போலீஸ் அதிகாரியிடமே கேட்க  ”தெரியாத நபர்களுக்கு ‘லிப்ட்’ கொடுப்பது சட்டவிரோதம்” என்ற அதிர்ச்சிகரமான பதிலை, போலீஸ் அதிகாரி வழங்கியுள்ளார்.

நிதின்நாயர் இதனை நம்பவில்லை லஞ்சம்பெறுவதற்காக போலீஸ் அதிகாரி சுற்றி வளைப்பதாகவே நினைத்தார். ஆனால் போலீஸ் அதிகாரி மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷன் வந்து அபராதத்தை கட்டிவிட்டு, லைசென்ஸை வாங்கி கொள்ளும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார். அபராதத்திற்கான ரசீதை மட்டும் நிதின் நாயரிடம் அவர் வழங்கிவிட்டார்.

நிதின் நாயருக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த குழப்பத்துடனே மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். இந்தியமோட்டார்வாகன_சட்டம்_66/1988( Section 66 in The Motor Vehicles Act, 1988 #Necessity_for_permits ) ன்கீழ் தண்டிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் கோர்ட்டிற்கு சென்று அபராதம் கட்டி, தான் லைசென்ஸை ( License ) திரும்ப பெற வேண்டும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

உடனடியாக தனக்குதெரிந்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது தான் தனியார் வாகனத்தில் தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுப்பது தவறு என்ற சட்டம் உண்மையிலேயே இருப்பதவருக்கு தெரியவந்தது.

வேறு வழியின்றி கோர்ட்டிற்கு சென்ற நிதின் நாயன், உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தெரியாத நபர்களுக்கு ‘லிப்ட்’ கொடுத்து தனது தனிப்பட்ட காரை, பயணிகள் கார் ஆக‌ மாற்றிய ‘குற்றத்தை’ அவர் நீதிபதி முன் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கோர்ட் நடைமுறைகளை முடித்து கொண்டு, மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற நிதின் நாயரை, “இனி யாருக்காவது ‘லிப்ட்’ கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்” என எச்சரித்து அனுப்பினர் .

இதனால் மிகவும் மனம் நொந்துபோன நிதின் நாயர், இப்படிப்பட்ட சட்டங்கள் இருந்தால், சாலையில் யாரேனும் இறந்து கிடந்தால் கூட, யாரும் உதவி செய்ய முன்வர மட்டார்கள் என பேஸ்புக் பக்கத்தின் தனது குமுறலை கொட்டியுள்ளார்.

எந்த ஒரு நபரும் தனது தனியார் வாகனத்தை பயணிகள் வாகனமாகவோ அல்லது சரக்கு வாகனமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் ( Indian Motor Vehicle Act ) விதிகள் இருப்பது உண்மைதான். இந்த சட்டத்திற்கு 2 காரணங்கள் உள்ளன.

#முதல்காரணம், வரி கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் T-பெர்மிட் அல்லாத தங்கள் சொந்த வாகனங்களை, டாக்ஸியாக பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் சட்டவிரோதமாக அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர். 

#இரண்டாவது காரணம், வாகன உரிமையாளரின் பாதுகாப்பு. தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுக்கும்பட்சத்தில், ஆள் நடமாட்ட மில்லாத பகுதியில் வரும்போது, முன்பின் தெரியாத அந்நபரால், வாகனத்தின் உரிமையாளருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் தான் இந்த சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

எனவே நண்பர்களே ஒருவருக்கு லிப்ட் கொடுக்கும் முன்பாக ஒரு முறைக்கு இருமுறை நன்றாக யோசித்து கொள்ளுங்கள். இப்படி ஒரு சட்டம் இருப்பதை  உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

#வழக்கறிஞர்Dதங்கத்துரை@#ஹரி

9894888436

Tuesday, May 25, 2021

பாதாளேசுவரர்கோவில்திருஅரதைப்_பெரும்பாழி

 இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் #பாதாளேசுவரர்கோவில்திருஅரதைப்_பெரும்பாழி

சிவஸ்தலம் பெயர் -    திருஅரதைப் பெரும்பாழி (தற்போது அரித்துவார மங்கலம் என்று அழைக்கப்படுகிறது)

இறைவன் பெயர்  - பாதாளேசுவரர்

இறைவி பெயர்  - அலங்கார நாயகி

தல வரலாறு: 

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார்.

தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். முடியவில்லை போக விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்று தலபுராணம் கூறுகிறது.. எனவே தான் இத்தலம் அரித்துவாரமங்கலம் ஆனது. சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள். கோவில் சிவாச்சாரியாரிடம் கேட்டால் அவர் காணபிப்பார்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால் சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜர், காசி விஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் உள்ளனர். மூலவர் சுயம்பு லிங்க மூர்த்தி வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.

சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் "ஹரித்துவார்" தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை வழியில் வெட்டாறு பாலம் தாண்டியவுடன் வலதுபுறம் திரும்பிச் செல்லும் பாதையில் சென்று அரித்துவார மங்கலம் தலத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அரித்துவார மங்கலம் செல்லலாம். திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஆலய முகவரி    

அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில்
அரித்துவார மங்கலம்
அரித்துவார மங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612802

ஜெபத்தை விடாதே செய்

 ஸ்ரீ பெரியவா திருப் பணியே தினப் பணி

 பெரியவா  தான் காமாட்சி.              காமாட்சி தான்  பெரியவா.

காஞ்சி மடம்

ஸ்ரீ பெரியவா தரிசனம்

வைகுண்ட ஐயர், நாகலட்சுமி மாமி தம்பதிகள் புஷ்பங்கள், பழத் தட்டை பெரியவா எதிரில் வைத்து  சேர்ந்து நமஸ்காரம் செய்தார்கள்  .

தம்பதிகளை நோக்கி ஒரு தீட்சண்யமான பார்வை.... தன் பாணியில் விசாரிக்க ஆரம்பித்தார்...

பெயர், பிறந்த ஊர், இப்பொழுது வசிக்குமிடம், வேலை,... என்று ஒவ்வொன்றாக விசாரித்தவர் ஆபீஸ் வேலையை  தவிர வேறு என்ன செய்யறே என்று கேட்டார்..

... இல்ல பெரியவா ஆபிசுக்கு போயிட்டு சாயங்காலமா வீட்டுக்கு வந்துடுவேன், வேற ஒன்னும்  இல்லை..

வைகுண்டம் ஐயர் பயந்துகொண்டே சொன்னார்..

அப்போ 24 மணி நேரமும் ஆபீஸ்வேலை என்று சொல்லு...

பெரியவா இப்படி சொன்னதும் பக்கத்தில் நின்றவர்களும் சிரித்தார்கள்...

இப்பொழுது நாகலக்ஷ்மி மாமி 

என்ன நீயும் நாள்முழுக்க சமையல் செய்துண்டு இருக்கேன் அப்படின்னு சொல்ல போறியா....

மாமிக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டியது.

சமாளித்தபடி.. இல்ல பெரியவா காத்தால காவேரி ஸ்நானம் பண்ணிட்டு ஒரு சொம்பு தண்ணி மலைக்கோட்டையில் கீழே இருக்கிற விநாயகருக்கும், ஒரு குடம் தாயுமானவர் சுவாமிக்கும், உச்சி பிள்ளையாருக்கு ஒரு பாத்திரம் காவேரி ஜலத்தை அபிஷேகத்துக்கு கொடுத்துட்டு தரிசனம் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துடுவேன்...

 அப்புறம் இவருக்கு, பசங்களுக்கு, வீட்டில் பெரியவாளுக்கு   சமையல் சாப்பாடு எல்லாம் செய்து கிடைக்கற ஒரு மணி நேர அவகாசத்தில் எனக்கு தெரிஞ்ச நாலு ஸ்லோகத்தை சொல்லுவேன் பெரியவா.. அவ்ளோதான் எனக்குதெரியும் பெரியவா.. மாமியின் கண்களின் ஓரத்தில் ஜலம் எட்டிப் பார்த்தது.

வீட்டை சம்ரக்ஷனம் பண்றதே பெண்களுக்கு பெரிய புண்ணியம்.

அவாளுக்கு தர்மமே அதுதான்... என்று சொன்ன பெரியவா மீண்டும் வைகுண்டம் ஐயர் பக்கம் திரும்பி இந்த புண்ணியத்தில் உனக்கு பங்கு கிடைக்காது , தெரியுமோ..  பெரியவா ஒரு சிரிப்பை உதிர்த்தார்.

ஐயர் மாமாவுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது..

பெரியவா இன்னும் என்ன சொல்ல போறாரோ..

நீ என்ன செய்யற நாளையிலிருந்து காலையில் உன் சந்தியாவை செய்துட்டு மலைக்கோட்டை கிரிப் பிரதட்சிணம் மௌனமாக தினசரி செய்து கொண்டு வா. என்று சொல்லி விட்டு மீண்டும் மாமியின் பக்கம் திரும்பி நீ அம்பாள் ஜெபம் எடுத்துக்கோ.. என்று சொல்லியவாறு இரண்டு பேருக்கும் பரிபூரண ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.

காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சிக்கு வரும் வரை மாமா வழியில் பேசவே இல்லை.   

மறுநாள் விடியல் காலையில் தன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மலைக்கோட்டை கிரிப் பிரதட்சிணம் செய்ய கிளம்பி விட்டார்.

நாகலட்சுமி மாமி அடுத்த நாள் முதல் மீண்டும் சம்சார சாகரத்தில் மூழ்கி விட்டார்.. பெரியவா சொன்னதெல்லாம் மறந்தும் போயிற்று.

இரண்டு மாதம்  சென்ற நிலையில் குடும்பத்து நெருங்கிய நண்பர் பூஜைகளில், விஷய ஞானம் மிகுந்தவர் நாகலட்சுமி மாமியின் வீட்டுக்கு திடீரென்று வந்தார்.

மாமியைப் பார்த்து உனக்கு பெரியவா அனுக்ரஹம் நிறைய இருக்கு.. நான் குடுக்கிற மந்திர உபதேசத்தை அம்பாள் ஜெபமாக எடுத்துக்கோ

என்று சொல்லி உபதேசித்து விட்டு போய்விட்டார்.

நாகலட்சுமி மாமிக்கு அப்போதுதான் சுரீரென்று உரைத்தது.

பெரியவா சொன்னதை  மறந்து விட்டோமே...

மனதில் ஒரு வைராக்கியத்துடன் மறுநாளிலிருந்து ஜெபம் செய்ய ஆரம்பித்தாள்.. முதலில் மன சோர்வு நீங்கியது.

எப்போதும் மஹாபெரியவாளின் ஸ்மரணை மனதில் இருந்து கொண்டே இருந்தது.

காஞ்சிபுரம் போகவேண்டும் என்று அடிக்கடி மனதில் ஒரு எண்ணம் அழுத்தம் கொடுத்தது.  கணவரை நச்சரிக்க ஆரம்பித்தாள்.. அப்படி அவர் முடியாது என்ற சமயத்தில் நெருங்கிய தோழியான வேலூர் ராஜம் மாமியை அழைத்துக்கொண்டு போக ஆரம்பித்தாள்.

அன்றைக்கு அதிசயமாக மாமாவே காஞ்சிபுரம் போகலாம் என்று சொல்ல இருவருமாக சேர்ந்து பெரியவா தரிசனத்திற்கு சென்றார்கள்.

உலக அதிசியம்.. அன்றைக்கு பெரியவாள் இடத்தில் கூட்டமே இல்லை. பெரியவா மேனாவில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் ஒரு அணுக்கத் தொண்டர் மட்டும் நின்றிருந்தார்.

பெரியவா இவர்களுக்கு பிரசாதம் கொடுத்தவுடன் அணுக்கத் தொண்டர் இவர்களை நகர சொல்லவும், மாமா மட்டும் ஆதிசங்கரர் சன்னிதானத்திற்கு சென்றார். நாகலட்சுமி மாமி சிறிது தள்ளி போய் உட்கார்ந்தார்.  

ஒரு ஐந்து நிமிடத்தில் அந்த அணுக்கத் தொண்டர்  வேகமாக வந்து மாமி உங்களை பெரியவா கூப்பிடுறா என்று  சொல்லிக்கொண்டே எங்கேயோ போனார்.

நம்மை எதுக்கு கூப்பிட போறா என்று மாமி நினைக்க திரும்பிப் பார்த்த அந்த தொண்டர் உங்களைத்தான் சொல்லிட்டே இருக்கேன்  என்று  அதட்டலாக சொல்லிவிட்டு உள்ளே ஓடினார்.

ஓடிவந்த நாகலட்சுமி மாமி மேனாவில் உள்ளே அமர்ந்திருந்த பெரியவாளை ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்தாள்...

அவ்வளவுதான்.....

அண்ட சராசரங்களும் சுழன்றது... தலையிலிருந்து பாதம் வரை மின்சாரம் பாய்ந்தது... சுற்றுப்புற காட்சிகள் கண்ணை விட்டு மறைந்தது...

            தலைக்குப் பின்னால் ஒரு ஒளி வட்டத்துடன் பெரியவா காமாட்சி யாக கழுத்திலும், கைகளிலும் வைர நகைகள் ஜொலிக்க அபய ஹஸ்த முத்திரையுடன் அமர்ந்திருக்க

நாகலட்சுமி மாமி காமாட்சி ..காமாட்சி என்று உரக்கச் சொல்ல ஆனால் வார்த்தைகள் வெளியே வராமல் உள்ளேயே சிறைப்பட்டு போக, உடல் வியர்க்க.. கால்கள் பூமியில் நிற்கமுடியாமல் தள்ளாட கண்களில் தாரையாக கண்ணீர் கொட்ட அப்படியே கீழே விழுந்து  நமஸ்காரம் செய்தாள்..

கண்ணை திறந்து பார்த்த பொழுது பெரியவா ஒரு புன்சிரிப்புடன் ஜெபத்தை விடாதே செய் என்று சொல்லிக்கொண்டே கதவை இழுத்து மூடிக்கொண்டார்.

எங்கேயோ போன அணுக்கத் தொண்டர் வரவில்லை, தன் கணவரும் பக்கத்தில் காணவில்லை, வேறு யாருமில்லை.. மாமி உணர்ச்சிப்பெருக்கில் நிற்க முடியாமல் மீண்டும் ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டாள்.

மாமா வந்தவுடன் நடந்ததை சொல்லி.. அவர் கையைப் பிடித்துக்கொண்டு நான் சொல்றத நீங்க நம்புவீர்களா என்று அடிக்கடி கேட்டு உணர்ச்சிவசப்பட்டாள்.

, நாட்கள் நகர நகர நாகலட்சுமி மாமியின் ஜெப எண்ணிக்கை நிமிடங்களை தாண்டி மணிக்கணக்கில் விஸ்வரூபம் எடுத்தது.

பெரியவாளின் ஸ்மரணையும் அதிகரிக்க, அம்பாள் குதூகலித்து மாமியின் ஜெபத்தில் உள் அமர்ந்து  கொண்டாள்.

பூஜையில் ஜெபம் செய்யும் நேரத்தில் வீட்டிற்குள் மகா பெரியவா குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் சப்தம்  நாகலட்சுமி மாமிக்கு நன்றாக புலப்பட்டது. உன்னிப்பாக கவனித்து, நிதானித்து, யோசித்து மாமி இதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள் .

தன்னுடன் நெருங்கி பழகும் பலரில் உன்னதமான எண்ணம் கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை உட்கார வைத்து. மகா பெரியவா தான் காமாட்சி, காமாட்சி தான் மகா பெரியவா என்று பெரியவாளின் மகத்துவத்தை தாரைதாரையாக கண்ணீர் வழிய சொல்லிக் கொண்டிருப்பாள்.

அம்பாளின் கடாட்சத்துடன் நாகலட்சுமி மாமி மகா பெரியவா என்ற பிரம்மஞானியிடம் ஐக்கியமாகி கொண்டிருக்கிறாள் என்பது மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

காற்று, மழை, இடி, மின்னல், வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் மகாபெரியவா உத்தரவுபடி 20 வருடம் தொடர்ந்து திருச்சி மலைக்கோட்டை கிரிவலம் மேற்கொண்ட வைகுண்டம் ஐயரைப் பற்றியும்....

ஸ்ரீ பெரியவாளின் அற்புதங்களை, பக்தியில் தன்னை உருக்கிக் கொண்டு பலரை அந்த சாகரத்தில் மூழ்கடித்த நாகலட்சுமி மாமி பற்றியும்...

பரந்து, விரிந்து ஓடும் காவிரி நதியும், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமியும் இன்றும் அங்கு வீசும் காற்றோடு பிரஸ்தாபித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாகலட்சுமி மாமி சொல்ல கேட்கும் பாக்கியம் பெற்றவர்

சங்கர் திரிவேதி

944 5319 632.

அம்பாள்,'படி' அளப்பாள்

 பெரியவாள்,"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!

("நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை!.மடத்து ஜாகையிலே எல்லாத்தையும்சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச்சாக்கிலே போட்டுக் கட்டினோம்.--விச்வநாதய்யர்)

கட்டுரையாளர்; ரா.கணபதி.
புத்தகம்-மஹா பெரியவாள் விருந்து.
தட்டச்சு;வரகூரான் நாராயணன். 

பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில்ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது ஸ்ரீஸி.எஸ்,விக்குப் பொத்துக்கொண்டு வந்து விட்டதாம்.

"எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியா கிடக்கிறதுஇந்தத் தரித்திரம் பிடித்த ஊரில்இத்தனை யானையையும், ஒட்டையையும், ஜனங்களையும் கட்டித்தீனி போடுவதென்றால் எப்படி?" என்கிற ரீதியில்பெரியவாள் காதுபடப் பொரிந்து தள்ளி விட்டாராம்.

பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக " நீ ஏன்பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப்பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய  அளப்பா"என்றாராம்.

மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை! அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா, அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை செய்ததா என்று அவருக்குச் சொல்ல தெரியவில்லை. ஆனால் சொல்லத் தெரிந்தது,

 மறுநாள் காலையிலிருந்து அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில் புற்றீசலாகப் பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்து கொண்டேயிருந்ததுதான்.

வந்தது மட்டும் இல்லை.அக்காலத்தில் வெள்ளி நாணயம்வழங்கி வந்ததல்லவா? வந்த பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள்.

"நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா(இதை ஸி.எஸ்,வி.என்னிடம் கூறியது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்) அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை!.மடத்து ஜாகையிலே எல்லாத்தையும்சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச்சாக்கிலே போட்டுக் கட்டினோம்.

பெரியவாள்,"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!.

"பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் 'எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்க

நள்ளிரவிலும் கூட மூடப்படாத கோயில்

 கிரகண நேரத்திலும், நள்ளிரவிலும் கூட மூடப்படாத கோயில்

கேரளாவில் கோட்டயம் அருகில் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மூடப்படுவதே இல்லை 

அதுமட்டுமல்லாமல், எல்லா கோயிலும் மூடப்படும் கிரகண காலத்தில் கூட திறந்திருக்கும் அதிசயம் நிறைந்த கோயிலின் ரகசியம் என்ன ?

எல்லா இந்து கோயில்களும் இரவில் மூடப்படுவது வழக்கம். அதுவும் கிரகணம் என்றால் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டு, கோயிலை சுத்தம் செய்து, சிறப்புப் பூஜை செய்த பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு விடுவது வழக்கம்.

ஆனால் திருப்பதி போன்ற சில கோயில்கள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக வருவதால் நள்ளிரவில் கூட தரிசிக்கலாம். ஆனால் திருப்பதி கோயில் கூட ஒரு குறிப்பிட்ட மணி நேரம் மூடப்பட்டுத் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கேரளாவில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோயில் இந்த விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, எல்லா நாட்களிலும், எல்லா நேரமும் கோயில் திறந்திருக்கக் கூடிய அதிசய கோயிலாக உள்ளது. 

கோயில் பெயர்: திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில்
 இடம்: திருவார்ப்பு, கோட்டயத்திலிருந்து எட்டு கிமீ தொலைவில் உள்ளது.
மூலவர் : கிருஷ்ணன்

கோயில் திறக்கப்படும் நேரம்:

அதிகாலை 2 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது.

3 மணிக்கு சிறப்பு பூஜை அதாவது உஷ பாயசம் எனும் உணவு கிருஷ்ணருக்கு படைக்கப்படுகிறது.

 கோயிலின் சிறப்புகள்

இந்த திருவார்பு கோயில் 1500 வருடங்கள் பழமையான கோயில். இந்த கோயிலில் இருக்கும் கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருப்பதாக ஐதீகம். அதனால் மற்ற கோயில்களைப் போல் இல்லாமல், ஆண்டின் எல்லா நாட்களும், பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

சம்பிரதாயத்திற்காகக் கோயில் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை என வெறும் 2  நிமிடங்கள் மட்டும் மூடப்படுவது வழக்கம்.

பசியை தாங்காத கிருஷ்ணர்

மற்றொரு சிறப்பாக இந்த கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேலையில் கையில் கோடாரி ஏந்திய படி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும். தந்திரியிடம் கோடாரி கொடுக்கப்படுகிறது.

கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என நம்பப்படுவதால், 

ஒரு வேளை இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கோயில் கதவு திறப்பதில் ஏதேனும் தடங்கல் வந்தால் கதவை உடைப்பதற்காக அந்த கோடாரி பயன்படுத்தலாம் என்பதற்காக அந்த கோடாரி கொடுக்கப்படுகிறது.

அரக்கன் கம்சனை கொன்ற கிருஷ்ணன் மிகவும் உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் அந்த கிருஷ்ணரே இந்த கோயிலில் மூலவராக அமர்ந்தார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

அபிஷேகம் முடிந்ததும் நைவேத்தியம்:

தினமும் கிருஷ்ணருக்கு அதிகாலையில் அவரின் உஷ்ணத்தை குறைக்க அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் மூலவரின் தலை துவட்டப்படுகிறது. 

அவர் பசியாக இருப்பார் என்பதால், பின்னர் உடனே நைவேத்தியம் படைக்கப்படும். அதன் பின்னர் தான் அவரின் உடல் உலர்த்தப்படும்.

கிரகணத்தின் போது மூடப்படாத கோயில்:

திருப்பதி, மீனாட்சி அம்மன் கோயில் என இந்து கோயில்கள் அனைத்தும் கிரகண நேரத்தில் மூடப்படுவது வழக்கம். ஆனால் இந்த திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மட்டும் கிரகணத்தின் போது கூட மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என்பது ஐதீகம்.

ஒரு முறை கிரகண நேரத்தில் கோயில் மூடப்பட்டது. அப்போது கிருஷ்ணரின் இடுப்புப் பட்டை கீழே வீழ்ந்திருப்பது கண்டனர். அந்த நேரத்தில் வந்த ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் இப்படி நடந்ததாக கூறியுள்ளார்.

அதன் காரணமாக, அப்போதிலிருந்து, கோயில் நடை தினமும் வெறும் 

2 நிமிடங்கள் மட்டும் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

 பிரசாதம் பெறாமல் போகக் கூடாது

இந்த கோயிலில் நித்தமும் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. 

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பிரசாதம் பெறாமல் வெளியே செல்ல அனுமதி இல்லை.

இரவு 11.58 மணிக்கு கோயில் மூடப்படுவதற்கு முன்னர் அங்குள்ள தந்திரி, இங்கு யாராவது பசியுடன் இருக்கிறீர்களா? என சப்தமாக கேட்பார்.

அதே போல் இந்த கோயிலில் பிரசாதம் வழங்குவதில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம்.

 பசியால் வாட மாட்டீர்கள்

இந்த கோயிலில் வழங்கப்படும் கிருஷ்ணரின் பிரசாதத்தை உண்டால், அதன் பின்னர் நீங்கள் பசியால் எப்போதும் வாட மாட்டீர்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சினை வராது என்பது ஐதீகம்.

திருவிழா, சிறப்பு நாட்கள்

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

கோயில் முகவரி

திருவார்பு கிருஷ்ணன் கோயில், 
திருவார்பு - 686 020
கோட்டயம் மாவட்டம், கேரளா.

கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து வெறும் 8 கிமீ தொலைவில் திருவார்பு கோயில் அமைந்துள்ளது.

விமானம் மூலம் செல்ல வேண்டுமென்றால், கொச்சி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து, கோட்டயம் வந்து கோயிலுக்கு செல்லலாம்.

தமிழ் நாட்டிலிருந்து கோட்டயத்திற்கு பேருந்து வசதிகளும் உள்ளன.

அவர் காப்பாத்துவார்

 நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் பெரியவா திருவடியே

            சரணம். 

அது ஒரு சாதுர்மாஸ்யம். பெரியவா காஞ்சியில் இருந்தார்.ஒரு அம்மா தன்னுடைய இரண்டு பெண்களில் இளையவளோடு பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தாள்.

மூத்தவளுக்கு கல்யாணமாகி நல்லபடிஸெட்டில் ஆகிவிட்டாள்.vளையவள், M.A படித்துவிட்டு வேலை பார்த்து வந்தாள். அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த அம்மா.

பயங்கரமான ஸோதனை அப்போதுதான் ஆரம்பித்தது!

நன்றாக இருந்த அந்தப் பெண், திடீரென்று ஏதோ ஒருமாதிரி பேசவும், சிரிக்கவும் ஆரம்பித்தாள். அந்த சிரிப்பில் ஏனோ ஒருவித அமானுஷ்யம் கலந்திருக்கும்! வயஸுக்கேத்த பேச்சோ, பழக்கமோ எதுவுமே இல்லாமல், ஸம்பந்தா-ஸம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தாள்.

அக்கம் பக்கம் இருப்பவர்கள், பயந்த கோளாறு, காத்து கருப்பு வேலை, மூளைக் கோளாறு என்று சொல்லி, தங்களுக்கு தெரிந்த உபாயங்களை, வைத்யங்களை சொல்ல ஆரம்பித்தனர்.

“வேலூருக்கு கூட்டிகிட்டு போயி மூளையில ஒரு ஆபரேஷன் பண்ணினா எல்லாம் ஸரியாயிரும்” 

டாக்டர்கள், எக்கச்சக்க ஸோதனைகளுக்கு பிறகு சொன்னார்கள்.

அம்மாவுக்கோ ஏகக் கவலை! கல்யாணம் பண்ணப்போற ஸமயத்தில் இப்படி ஒரு கஷ்டமா? திக்கற்றவற்கு கதியான பெரியவாளைத் தேடி, பெண்ணைக் கூட்டிக் கொண்டு காஞ்சிக்கு வந்தாள்.

ஆனால், வந்த அன்று ஸாயங்காலம் பெரியவாளை தர்ஶிக்க முடியவில்லை. இரவு முழுவதும் அவர்கள் தங்கியிருந்த இடத்தில், அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு “ஜய ஜய ஶங்கர, ஹர ஹர ஶங்கர” என்று ஜபித்த வண்ணம் இருந்தாள். 

அந்தப் பெண்ணோ, பயங்கரமாக கத்திக் கத்தி மயக்கம் அடைந்து விட்டாள்.மறுநாள் காலையில் ஶ்ரீமடத்துக்கு சென்று பெரியவாளிடம் கதறி விட்டாள் அந்த அம்மா.

“பெரியவாதான் காப்பாத்தணும்! திடீர்னு புத்தி பேதலிச்ச மாதிரி ஆயிட்டா…! நல்ல கொழந்தை, கல்யாணத்துக்கு பாத்துண்டு இருக்கறச்சே, இப்டி ஆய்டுத்து…. காப்பாத்துங்கோ! “….

பெரியவா முன் பெட்டிப்பாம்பாக அடங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். பெரியவாளுடைய அருட்கடாக்ஷம் அவள் மேல் விழுந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் ஶ்ரீமடத்துக்கு வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார்கள்.

மூன்றாவது நாள், பெரியவா அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே….. உத்தரவிட்டார்!.....“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி!…”“தாரமர்க் கொன்றையும் ஷண்பக மாலையும் சாற்றும், தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே!..”

பெரியவாளுடைய கமலத் திருவடிகளை பார்த்துக் கொண்டே அந்த பெண்ணும், கணீரென்று சொல்ல ஆரம்பித்தாள் !அப்போதுதான் அந்த அதிஸயம் நடந்தது!

வரிஸையாக பாடிக் கொண்டிருக்கும்போதே நடுவில் மயக்கமடைந்தாள். அம்மாவும் பக்கத்திலிருந்த பெண்களும் அவளைத் தொடப் போனார்கள்.

” யாரும் தொட வேணாம்! அவ அப்டியே இருக்கட்டும்”

ஆக்ஞை பிறந்தது! கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவள், முற்றிலும் பூரணமாக குணமடைந்திருந்தாள்! 

பழைய அமானுஷ்ய குரலும், பார்வையும், பேச்சும்…. இருந்த இடம் தெரியாமல் ஓடியது!

“பரமேஶ்வரா! என் அம்மா! பகவதீ!….”

அம்மாவும், பெண்ணும் பெரியவாளின் திருவடிகளில் கண்ணீரைக் காணிக்கையாகினார்கள்.

மஹான்களின் கருணாகடாக்ஷம் ஒரு முறை நம் மேல் விழுந்தாலே போதும்! கோடி கோடி ஜன்ம வினைகளை பொசுக்கிவிடும்! அது நமக்கு ப்ரத்யக்ஷத்தில் தெரியக்கூட தெரியாது.

எந்த பயங்கரமோ, கெட்டதோ எது நடந்தாலும் “அவர் காப்பாத்துவார்” என்று நம்பிவிட்டால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் ஶிஶுவைப் போல், நாம் நிஶ்சிந்தையாக இருக்க, அவர் தாயுமான ஸ்வாமியாக இருந்து நம்மை ரக்ஷிப்பார்! இது ஸத்யம்!

🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காமாட்சி சங்கர காமகோடி சங்கர.. 🙏காஞ்சி பெரியவாள்உங்கள் கருணைக்கு ஈடு கிடையாது

என்ன ஐயரே தங்கக்காசு வேணுமா

 விச்வநாதன்,

கனடா. 

"என்ன ஐயரே தங்கக்காசு வேணுமா" 

பக்தகோடிகளே ஸ்ரீமஹாபெரியவா பல குடும்பங்களில் நடத்திய திருவிளையாடல்கள் பல நம்மிடையே பகிரப்படாமலேயே இருந்திருக்கின்றன. அத்தகையச் சம்பவங்களைச் சேகரித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்த பிறகு சிறிய கட்டுரையாக வடிவமைத்து பக்தகோடிகளுடன் பகிர்வதே அடியேனின் சங்கல்பம். அடியேனது ஆன்மீக குரு பெங்களூர் கிதாமாமி குடும்பத்தில் ஸ்ரீமஹாபெரியவா நடத்திய ஓரிரண்டு சப்பவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். இன்னும் பல நிகழ்வுகளைத் தங்களுடன் பகிற கீதா மாமி அடியேனைப் பணித்துள்ளார்கள். அதை கட்டுரை வடிவமாக்க சிறிது அவகாசமும் தேவைப்படுகிறது. இதற்கிடையே அடியேனின் நெருங்கிய பள்ளித் தோழன் கே.கே. சுப்ரமணியன் வாழ்வில் பரமாசார்யாள் நடத்திய ஒரு திருவிளையாட்டு....... அவன் அனுமதியுடனே இதோ உங்களுக்காக...... 

சில நாட்கள் முன்பு நாங்கள் வாட்ஸ்அப் மூலம் உறையாடிக் கொண்டிந்தபோது என் பள்ளித்தோழன் கே.கே.சுப்ரமணியன் (இனி அவனை கே.கே.எஸ். என்றே சுருக்கமாக அழைப்போம்) அவன் வாழ்வில் நடந்த சம்பவத்தை ஆங்கிலத்தில் என்னிடம் பகிர, அதையே தமிழில் மொழி பெயர்த்து உங்களுடன் பகிர்கிறேன். 

1993ல் கே.கே.எஸ்....... அக்கால கட்டத்தில் சராசரி குடும்பஸ்தனைப்போல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த காலகட்டம்........  தாய், தந்தை ஸ்ரீமஹாபெரியவாளின் பக்தர்கள்.... கே.கே எஸ்ஸுக்கு ஸ்ரீமஹாபெரியவாளின் மகிமை அவ்வளவாகத் தெரியத வயது, சரியான இளம்வயது சம்சாரி, ஸ்ரீமடத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை......... 

26-5-1993ல் ஸ்ரீமஹாபெரியவாளின் கனகாபிஷேகம் நடந்த திருநாளிலிருந்து இரண்டொரு நாட்கள் பிறகு அவனது ஒன்றுவிட்ட சகோதரன் ஜம்ஷட்பூரிலிருந்து தந்தைக்கு போன் செய்து..... ஸ்ரீமடத்திலிருந்து அவர்கள் வீட்டிற்கு ஒரு சிறிய பார்சல் வருமென்றும், அதில் ஸ்ரீமஹாபெரியவாளின் கனகாபிஷேகத்தில் அபிஷேகிக்கப்பட்ட வில்வ உருவம் பதித்த தங்கக் காசு ஒன்று இருக்குமென்றும் தான் அடுத்து அவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது வாங்கிக்கொள்வதாகக் கூறினான். 

அதேபோல் பார்சலும் வந்து அதைத் திறந்து பார்த்த கே.கே.எஸ்ஸின்  தந்தையார்..... நம்மிடமும் இதைப்போல்  வில்வ உருவம் பதித்த ப்ரசாத தங்கக் காசு இருந்தால் பூஜை அறையில் வைக்கலாமே என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். கே.கே.எஸ் ஒன்றும் பேசாமல் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான். அலுவலகம் போய்ச் சேர்ந்த சிறிது நேரத்தில் அலுவலகத் தொடர்புடைய மனோகரன் ஜொஷுவா என்ற கிரிஸ்துவ நண்பன்  "என்ன ஐயரே உங்கள் மடத்து சாமிக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாடி தங்கக் காசால் அபிஷேகம் செய்தார்களாமே.... அதில் ஒன்று உனக்கு வேணுமா ?" என்று கேட்க கே.கே.எஸ்ஸுக்கோ ஏக அதிர்ச்சி. சிறிது நேரத்திற்கு முன்பு தத்தையார் விரும்ப..... இப்பொழுது இவன் முன்னால் வில்வ உருவம் பதித்த ப்ரசாத தங்கக் காசு...... இவனும் "சரி குடுங்கள்" என்று கேட்டுப் பெற்றிருக்கிறான். 

திரு ஜோஷுவாவின் பார்டனர் திரு மூர்த்தி ஸ்ரீமடத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். அவரிடம் வந்து சேர்ந்த 10 அபிஷேகக் காசுகளை  ஜோஷுவாவிடம் கொடுத்து நண்பர்கள் மத்தியில் வினியோகிக்கும்படி கேட்டுள்ளார். பிறகென்ன..... இன்றும் கே.கே.எஸ்ஸின் இல்லத்தில் வில்வம் உருவம் பதித்த  தங்கக் காசின் மூலம் ஸ்ரீமஹாபெரியவா தன் அருளாசிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார். 

இன்றளவும் கே.கே.எஸ்ஸிற்கு, ஏன்.... நமக்கும் புரியாத புதிர்..... ஸ்ரீமஹாபெரியவாளின் பக்தரான தன் தந்தை அபிஷேகக் காசு ஒன்று தங்கள் பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்பியது ஸ்ரீமஹாபெரியவாளுக்கு எப்படித் தெரியும்........ அதுவும் அவன் தந்தை விரும்பிய சிறிது நேரத்திலேயே தங்கக் காசு எப்படி வந்து சேர்ந்தது...... தன் பக்தர்கள் ஆத்மார்தமாக தன்னிடம் வேண்டுவதை அருள்வதுதானே ப்ரத்யக்ஷ சர்வேச்வரனனான  ஸ்ரீமஹாபெரியவாளின் வழக்கம்....... 

ஹர ஹர சங்கர

ஜெய ஜெய சங்கர.

🙏🙏🙏🙏🙏

கஜேந்திரவரதபெருமாள்திருக்கோயில் , அத்தாளநல்லூர்

 இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் மோகினி ஏகாதசி விரதம் 

#கஜேந்திரவரதபெருமாள்திருக்கோயில் தரிசனம் 

#அத்தாளநல்லூர் #திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து திருப்புடைமருதூர், முக்கூடல் செல்லும் வழியில் அமைந்து உள்ளது அத்தாளநல்லூர். 

இங்குள்ள அருள்மிகு கஜேந்திரவரத பெருமாள் கோவில் பழமைவாய்ந்ததாகும். 

#மூலவர்: ஆதிமூலப் பெருமாள்
#உற்சவர்: கஜேந்திர வரதர். 
#தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி. 
#தீர்த்தம்: விஷ்ணுபாத தீர்த்தம், கஜேந்திர மோட்ச தீர்த்தம், தாமிரபரணி ஆறு
#தல_விருட்சம்: நெல்லி மரம்
#புராணப்பெயர்: கரிகாத்தபுரி, பொய்மாம் பூம்பொழில்
#ஊர்: அத்தாள நல்லூர்
#மாவட்டம்: திருநெல்வேலி


பொய்மாம் பூம்பொழில் பொய்கை முதலை சிறைப்பட்டு நின்ற கைம்மாவுக்கருள் செய்த கார்முகில் போல் வண்ணன் கண்ணன் 
எம்மானைப் பாடி தொழுது 
எழுந்தும் பறந்தும் துள்ளாதோர் 
திமில் கருமமென் சொல்லீர் 
தண்கடல் வட்டத்துள்ளீரே!  
கஜேந்திர வரதா ! ஆதிமூலமே!

#தலவரலாறு:

இந்திரத்துய்மன் என்னும் மன்னன், அகத்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். அந்த யானை கஜேந்திரன் என பெயர் பெற்று யானைகளுக்கெல்லாம் தலைமை தாங்கியது. 

இந்த யானை, பொதிகை மலைக்கு சென்று அங்கு தீர்த்தத்தில் நீராடி, சூரியனை வணங்கி, திருக்குற்றாலத்திற்கு சென்று சிவமது கங்கையில் நீராடி, திருக்குற்றாலநாதரை வணங்கியது. 

பின்னர் மகாவிஷ்ணுவை வணங்குவதற்காக அத்தாளநல்லூருக்கு வந்தது. அத்தாளநல்லூரில் உள்ள தாமரை குளத்தில் நீராடி, தாமரை பூக்களை பறித்து திருமாலுக்கு சூட்ட எண்ணியது.

குளத்தில் இறங்கி தாமரையை பறிக்கும்போது நாரத முனிவரின் சாபத்தால் முதலையான ஊர்த்துவன் என்கிற கந்தர்வன், கஜேந்திர யானையின் காலை பிடித்துக்கொண்டான். 

யானை தன்னை விடுவிக்க முயற்சியில் ஈடுபட்டும் முதலை தனது பிடியை விடவில்லை. உடனே யானை தனது துதிக்கையில் தாமரை மலரை வைத்து ‘ஆதிமூலமே’ என்று அழைத்தது.

யானையின் அழைப்பை ஏற்று மகாவிஷ்ணு கருட வாகனத்தில் அங்கு வந்து, தனது சக்ராயுதத்தால் முதலையை கொன்று யானைக்கு அருள்பாலித்தார். 

எனவே இந்த தலத்தை ஆனைக்கு அருள் செய்த தலம் என்றும், ஆனையை காத்த தலம் என்றும் சொல்வார்கள். அத்தி என்றால் யானை என்று பொருள். 

யானையை ஆட்கொண்டதால் அத்தாள நல்லூர் என்று இவ்வூர் பெயர் பெற்றது. 

கல்வெட்டுக்களில் இவ்வூரை அத்தாணி நல்லூர், கரிகாத்தபுரி, பொய்மாம் பூம்பொழில் எனவும், இத்தலத்து இறைவனை ஆனைகாத்தருளிய பிரான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருமாள், யானைக்கருள் செய்த திரு விளையாடல் நடந்த வரலாற்றுடன் தொடர்புடையதாக இந்தியா முழுவதும் 24 தலங்கள் குறிப்பிடப்பட்டாலும், ஸ்ரீமத் பாகவத்தில் கஜேந்திர மோட்ச திருவிளையாடல் பொதிகை மலையடிவாரத்தில் நடந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே இதுவே கஜேந்திர மோட்ச தலமாகும்.

#ஸ்தலசிறப்பு:

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த திருத்தலம் பரிகார தலம் என்ற புனிதம் பெற்றது. 

திருக்கோவிலின் மேற்கே தாமிர பரணி தெற்கு-வடக்காக பாய்கிறது. இதனால் இந்த தீர்த்த கட்டம் கங்கைக்கு நிகரானது. 

நின்ற கோலத்தில் காட்சி தரும் இப்பெருமானை வழிபடுவதால் திருப்பதியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. 

இத்திருக்கோவிலின் பின்பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்பட்டு அந்த தூணே நரசிம்மராக கருதி வழிபடப் படுகிறது. 

இந்த தூணிற்கு சந்தனம் மற்றும் மல்லிகை மலர் களால் ஆன சட்டை சாற்றுதல் என்கிற நேர்த்திக்கடன் பக் தர்களால் செய்யப்படுகிறது.

#தரிசன_நேரம்:

நாள்தோறும் இத்திருக்கோவில் நடை காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7;30 மணி வரையிலும் திறந்து இருக்கும். 

தினசரி நான்கு கால பூஜைகள் இக்கோவிலில் நடைபெறுகிறது. 

#திருவிழாக்கள்:

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையும், ஆவணி மாத கிருஷ்ண ஜெயந்தியும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியும், தைப்பூசமும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படு கிறது.

#அமைவிடம்:

இத்தலத்திற்கு செல்வதற்கு வீரவநல்லூர் மற்றும் முக்கூடலில் இருந்து பஸ் வசதி உள்ளது. அருகில் உள்ள வீரவநல்லூரில் ரெயில் நிலையம் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து வீரவநல்லூருக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

திருப்புடைமருதூர் சரிதானுங்க...  வீரவநல்லூரிலிருந்து முக்கூடல்    இந்த வழியாகயும் செல்லலாம்

ஹரிகேசவநல்லூர் வழியாகவும் செல்லலாம்.. அல்லது அத்தாள நல்லூர், திருப்புடைமருதூர் இருக்கோவிலையும் தரிசித்து செல்லலாம்.