Friday, October 8, 2021

மிதிவண்டியும் ஞானும்

 மிதிவண்டியும் ஞானும்

#சுவாரஸ்யமான பதிவு 

இன்றைய காலகட்டத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் தெருக்களின் இரு புறங்களிலும் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். ஏன் ?- அவற்றை நிறுத்தி வைக்க இடங்கள் இல்லை. ஒரு சிலர் இந்த கார்களை தங்களுடைய தேவைகளுக்கு தினமும் பயன்படுத்தும்போது பலர், என்றாவது ஒரு நாள் தான் உபயோகிக்கிறார்கள். 

சொல்லப்போனால் இன்று எல்லோருக்கும் ஒரு இடத்தில இருந்து அடுத்த இடத்திற்கு செல்வதற்கு இரு சக்கர வாகனங்கள் தான் பயன்படுகின்றன. 

இந்த இரு சக்கர வாகனங்களுக்கு முன்னோடி தான் மிதி வண்டிகள். 

1960களில் தெருக்களில் கார் என்பது எப்போதாவது தான் பார்க்கலாம். இரு சக்கர வாகனங்கள் என்பதே கிடையாது. அப்போது இருந்தவை ராஜதூத் பைக்குகள் மற்றும் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்களும் தான். அதன் பிறகு தான் சேட்டக் மாடல்கள் வந்தன. 

எனக்கு அப்போது வயது 11. எனது வீட்டிற்கு எனது தாய் மாமன் வந்திருந்து உள்ளே பேசிக்கொண்டு இருந்தார். வெளியில் அவர் கொண்டு வந்த சைக்கிள் காம்பௌண்ட் சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது.. அவரிடம் சாவி வாங்கி, அதை எடுத்துக்கொண்டு உருட்ட ஆரம்பித்தேன். அது தான் என்னுடைய சைக்கிள் சவாரியின் முதல் கட்ட பயிற்சி. எவரும் எனக்கு சொல்லி தரவில்லை. ஏற்கனவே பார்த்த அனுபவத்தில், அந்த சீட்டு பாருக்கு கீழே ஒரு காலை உள்ளே நுழைத்து பெடல் போட ஆரம்பித்தேன். அரை மணி நேரம் ஒரே ஒரு உருட்டல் தான். ஒரு கால் பெடலில் - அடுத்த கால் தரையில் - கால் செருப்பு தேயும் வரை - இன்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டும் ஒரு சிலர் சென்னை அண்ணா சாலையில் 40 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும்போது இரண்டு கால்களையும் தரையில் படுகின்ற அளவுக்கு தொங்கவிட்டுக்கொண்டு செல்லுவார்கள். "இது ஒரு பாதுகாப்பு உணர்வு" என்று தான் சொல்லமுடியும். அவசரத்திற்கு காலை ஊன்றினால், காலுக்கு தான் danger. அதன் பிறகு தைரியமாக பெடல் போட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குள் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். அதற்கு பிறகு, வாடகைக்கு சைக்கிள் எடுத்து, சீட்டில் அமர்ந்து ஓட்டுவதற்கு ஒரு மாதம் ஆகியது. அது அன்றைய வயதிற்கு இமாலய சாதனை. 

ஒரு மணி நேரத்திற்கு வாடகை மூன்று பைசா மட்டுமே. இரண்டு மணி நேரம் ஓட்டினால் போனஸாக ஐந்து பைசா தான் வாங்குவார்கள். 

என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஹார்வி மில்லுக்கு செல்லும் ஒருவர் ஹம்பேர் (Humber) சைக்கிள் வைத்திருந்தார். முன்பக்கம் இரண்டு பம்பர்கள் இருக்கும். இந்த பம்பர்கள் தான் முன் பக்க சக்கரத்தின் அழுத்தத்தை தாங்கும் சக்தி உள்ளது,. அதே கம்பெனியின் தயாரிப்பு தான் ராலே (Raleigh) சைக்கிள். இந்த இரண்டும் விலை அதிகம். அதன் பிறகு தான் ஹெர்குலஸ் வந்தது; பிறகு ஹீரோ வந்தது; பிறகு அட்லஸ் கம்பெனி சைக்கிள்கள் வந்தன. கல்லூரி வீட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரம். அதற்கு உதவியது இந்த மிதிவண்டி தான். காலையில் சென்று விட்டு மதியம் வீட்டிற்கு சாப்பாட்டிற்கு வந்து பிறகு மீண்டும் கல்லூரிக்கு சென்று மாலையில் திரும்பிவர என்று நான்கு முறை மிதி வண்டி பயணம் தான். 

கிட்டத்தட்ட 10 வருடங்கள் தான் வைத்திருந்தேன். மூன்று சைக்கிள்கள் மாற்றி மாற்றி வைத்திருந்தேன். அதன் பிறகு வெளியூர் மாறுதல் (Transfer) என்று வரும்போது, அதை பற்றிய சிந்தனையே மறந்து விட்டது. உள்ளூரில் இருக்கும்போது, சைக்கிள் இல்லாமல் எங்கும் சென்றது கிடையாது. இணைபிரியாத தோழன் மாதிரி என் கூடவே வைத்திருப்பேன். 

திடீர் என்று பங்சர் ஆகிவிட்டது என்று தெரிந்து விட்டால், அப்படியே மனது துவண்டு விடும். அதை தள்ளிக்கொண்டு எனக்கு தெரிந்த ரிப்பேர் கடைக்கு கொண்டு செல்வேன். நமது அவசரம் அவருக்கு தெரியாது. ஏற்கனவே அவரிடம் காத்திருப்பு முறையில் நான்கு நபர்கள் நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் தொட்டு விட்டால், விறு விறுவென்று, அரை மணி நேரத்தில் காரியம் முடிந்து விடும். 

மிகவும் லாவகமாக ஸ்டாண்ட் போட்டு விட்டு, சக்கரத்தின் உள்ளே, நெம்புகோல் வைத்து உள்ளே இருக்கும் டியூபை வெளியே எடுப்பார். பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். பார்த்தால் எளிதாக தோன்றும். ஆனால் எளிதல்ல. அதை வெளியில் எடுத்து காற்றை பம்ப் மூலம் அடித்து பெரிதாக்குவார். இதற்கென்றே ஒரு வாளியில் தண்ணீர் நிறைத்து வைத்திருப்பார்கள். அவருடைய உதவியாளர் “பிஸி” என்றால், அந்த வேலை நமக்கு வந்து விடும். அப்படியே உருட்டி உருட்டி, பார்க்கவேண்டும். 

எங்கு ஓட்டை இருக்கிறதோ அங்கு தண்ணீர் கொப்புளித்துக்கொண்டு வரும். அதை பென்சிலால் மார்க் செய்து கொள்ளவேண்டும். 

காற்றை வெளியில் எடுத்து விட்டு, அந்த ஓட்டை உள்ள இடத்தை எமெரி காகிதம் வைத்து சுரண்டுவார். அதாவது ஒட்டுவதற்கு தோதான மேற்பரப்பை உருவாக்குவார். சிறிய டியூபை பிதுக்கி அதில் இருக்கும் அரக்கு நிறத்தில் இருக்கும் சொல்யூஷனை ஓட்டையின் மேல் பிதுக்கி, பக்குவமாக தடவி தடவி அப்படியே விட்டு விடுவார். நமக்கு கடுப்பாக வரும். (என்னமோ குட்டி நாய்க்குட்டியை தடவுற மாதிரியில்ல தடவுறாரு)

இதற்கிடையில் அடுத்த டியூபை கவனிக்க போய் விடுவார். அதாவது ஒருவருக்கு தலையில் இடது பக்கம் மொடையடித்துவிட்டு, அவரை காத்திருப்பு பட்டியலில் வைத்து விட்டு, அடுத்தவருக்கு மொட்டையடிக்க போவது போல. 

இதற்கிடையில் பத்து நிமிடங்கள் கழிந்து விடும். ஒருமுறை அவரிடம் கேட்ட போது சொன்னார் - “அப்படி நேரம் கொடுத்தால் தான் ஒட்டுவதற்கு தோதாக இருக்கும்” என்று. 

பிறகு ஒரு பழைய டியூபை எடுத்து அதில் இருந்து அவருக்கு பிடித்த வட்டம்/டைமோண்ட்(Diamond)/கிலாவேர் (Clover)/சதுரம்/செவ்வகம் என்று ஒரு பகுதியை அழகாக கத்தரித்து வைத்துக்கொள்ளுவார். பொறுமையாக அவர் கத்திரிப்பதை பார்க்கும்போது, "எனக்கு இதை தவிர வேறு வேலையில்லை" என்று சொல்வது போல இருக்கும். அதன் தாத்பரியம் நான் எனது வேலையை செய்யும்போது தான் தெரிந்தது. "உன்னுடைய வேலையை நேசி" என்ற தாத்பரியம். ஒட்டிய பகுதியை அந்த ஓட்டையின் மேல் அமுக்கி வைத்து, நன்றாக ஒரு கனமான கட்டையால் அழுத்தம் கொடுப்பார். இரண்டு நிமிடங்கள் கழிந்த பின்னர், அதை மீண்டும் “தண்ணீர் செக்” பண்ணுவார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று confirm ஆனவுடன், காற்றை வெளியில் எடுத்து விட்டு, சக்கரத்தில் பொருத்தி, காற்றடித்து, தந்து விடுவார். கூட்டம் இல்லையென்றால், வேலை சீக்கிரம் முடிந்து விடும். 

அந்த நேரத்தில் அவர் ஒரு மருத்துவர் மாதிரி. அதாவது சைக்கிள் மருத்துவர். அந்த சைக்கிள் இல்லையென்றால் எங்கும் போக முடியாது. அப்போது உள்ளூர் பேருந்து வசதிகளும் அவ்வளவாக கிடையாது. 

பஞ்சர் பாப்பதற்கு பத்து பைசா வாங்குவார். அதாவது ஒரு ரூபாயில் பத்தில் ஒரு பங்கு. தற்போது இரு சக்கரவாகனம் பஞ்சர் பார்ப்பதற்கு ரூபாய் 150 வரை வாங்குகிறார்கள். 

வேறு வேலை இருக்கிறது என்றால், நம்முடைய வண்டியை அவரிடம் விட்டு விட்டு, வாடகை சைக்கிள் எடுத்துக்கொள்ளலாம். இதிலும் நமக்கு பிடித்த சைக்கிள் கிடைப்பது கடினம். சில சைக்கிள் இடது புறமாக சாய்ந்து கொண்டு செல்லும்; சிலவற்றில் இருக்கை சரியாக இருக்காது. ஆடிக்கொண்டு இருக்கும். கடை முதலாளி தெரிந்தவர் என்பதால். சில சமயம் அவருடைய சொந்த வண்டியையே தந்து விடுவார். 

மிதி வண்டி என்பது ஒரு சுகம். எந்த சந்துக்குள்ளும் கொண்டு செல்லலாம். வேண்டும் என்றால் அப்படியே தூக்கிக்கொண்டு மொட்டை மாடிக்கு படிகளில் கொண்டு சென்று விடலாம். 

திருட்டு பயம் என்பதால், பல வீடுகளில் இந்த மிதி வண்டிகள் வீட்டிற்குள் வந்து விடும். அதாவது தரையில் நாம் படுத்திருப்போம். வண்டி நமக்கு அருகில் ஸ்டாண்ட் போடப்பட்டு நின்று கொண்டிருக்கும். உறக்கத்தில் நம் மேல் விழுந்து விடாமல் இருப்பதற்கு, பக்கத்து தூணில் செயின் போட்டு கட்டிவிடுவோம். 

ஒருவேளை அந்த வண்டிக்கு உணர்வு இருக்குமானால் நினைத்திருக்கும் - "பரவாயில்லை, நம்ம முதலாளி தூங்கும்போது கூட, நம்மை பத்திரமாக பார்த்துக்கொள்ளுகிறார் என்று."

சமீபத்தில் எனது ஹோண்டா activa பங்ச்சர் பார்ப்பதற்கு ஒருவர் வந்தார். இந்த பங்க்சர் சமாச்சாரங்கள் எல்லாவற்றிற்கும் ஓன்று தான். இங்கு என்ன விசேஷம் என்னவென்றால், அந்த பழைய டியூபை எடுத்து கட்டிங்க்-வெட்டிங்க் எதுவும் கிடையாது.  அதற்கு பதிலாக ஒரு ஸ்டிக்கர் ஒன்றை எடுத்தார். அதில் உள்ள மெல்லிய தாளை உருவி வீசினார். அப்படியே அதை ஓட்டையின் மேல் பகுதியில் வைத்து ஒட்டிவிட்டார். அதாவது technological improvement. 

பட்டென்று பார்த்த போது அதில் ஒரு நடிகர் படம் இருந்தது. 

"என்னப்பா ஸ்டிக்கரில் ஒரு படம் இருக்குதே?" 

"ஆமாங்க நம்ம தலைவரு படம் தானுங்க"

"சரி- அது உள்ளே போயிடுமே" 

"ஆமாமாமுங்க - இனிமே உங்ககூட தான் அவரு இருப்பாருங்க உங்க கூட வந்துட்டார்னா, நீங்க எங்கேயோ போயிடுவீங்க. "

முகநூல் பதிவுகளுக்கு எனது உதவிக்கு வரும் எனது commentator அவதாரம் தலை தூக்கவும், அதை அப்படியே ஒரே அமுக்காக அமுக்கி சில நொடிகளுக்கு disable செய்தவன், பொசுக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு சென்று விட்டேன்.

அவன் விக்கித்து பார்ப்பதை எனது முதுகு எனக்கு உணர்த்தியது.

---:::   :::---

No comments:

Post a Comment