திருமதி கமலா கிருஷ்ணமூர்த்தி பதிவு
நான் காசி கயா திரிவேணி சங்கமம் டெல்லி மதுரா சமீபத்தில் போயிட்டு வந்து அதைப்பற்றிய பதிவும் போட்டு விட்டேன்.
இப்போ அமானுஷ்யம்பற்றி டாபிக் ஓடுவதால் இந்த யாத்திரையின்போது எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உங்களுக்கெல்லாம் தெரியும் நானும் முன்பே குறிப்பிட்டுள்ளேன் நான் தனியேத்தான் போனேன் என்று. இந்த முறை கங்கையில் வரலாறு காணாத வெள்ளம். கங்கை ரோடு மேலேயே வந்துவிட்டாள்.
மேலும் இந்த முறை எங்களை தங்கவைத்த இடத்தில் உயரமா உட்காரவோ படுக்கவோ ஒரு இடம் கூட இல்லை. எனக்கோ இந்த தடவை கால் முட்டி வலி அதிகமாக இருந்ததின் காரணமாக தரையில் உட்காரவோ படுக்கவோ இயலாது. நாங்கள் காசிக்கு போனது பாதி ராத்திரியில். லக்கேஜ் எல்லாம் ரயிலில் விட்டுவிட்டு இரண்டு நாள் காசி தங்கல் என்பதால் இரண்டு நாளைக்கு உள்ள புடவை துணிமணி தட்டு டம்ளர் இவை அடங்கிய ஒரு பை மற்றும் கைபை (handbag) இவை மட்டுமே லக்கேஜ். தங்கவைக்கப்பட்ட இடம் நாராயணா கோவில் காய் காட் முதல் மாடி.
ஒவ்வொரு Compartment க்கும் ஒரு ஹால் அப்படி கொடுத் திருந்தார்கள். நான் S8 சீட் நம்பர் 23. எனவே S8 ல் உள்ள அனைவரும் அங்கேதான் தங்கணும். இந்த பையை வைத்துக் கொண்டு என்னால் மாடிப்படி ஏற முடியலை. பக்கத்தில் ஒரு அம்மா மற்றும் மகன் இருவரும் ஏறிக் கொண்டிருந்தார்கள். அந்த மகன் என்னைத்தாண்டி ஏறும்போது என் கையில் உள்ள பையையும் சேர்த்து வாங்கிக்கொண்டு நீங்கள் மெதுவே வாருங்கள் நான் போய் பையை வைத்துவிட்டு வருகிறேன் எனச்சொல்லி பையை கிட்டதட்ட என் கையில் இருந்து பிடுங்கிக்கொண்டே போனான். அவன் S8 தான் ஆனால் சீட் நம்பர் என் அருகேகூட இல்லை அவனை நான் ரயிலில் பார்த்ததில்லை.
அவனுக்கு என் பேத்தியைவிட இரண்டு மூணு வயது கூட இருக்கும் அவ்வளவே. பையை வைத்துவிட்டு திரும்ப வந்து என்னையும் கைபிடித்து கூட்டிப்போனான். இரண்டு மணிநேரம் விடிவதற்கு எனவே நான் மாடிப்படி யிலேயே உட்கார்ந்து விட்டேன். காலையில் அவன் அம்மாவோடு என்னையும் சேர்த்தே கங்கைக்கு குளிக்க அழைத்துக்கொண்டு போனான்.
திரும்ப வந்து காலை டிபன் முடித்து எல்லா கோவிலும் பார்த்துவிட்டு வந்து மதியம் சாப்பாடு முடித்தவுடன் நான் கீழேயே சற்றே உயரமாக ஒரு திண்ணைபோன்ற இடம் இருந்தது நான் அதில் கொஞ்சம் படுத்துக் கொள்கிறேன் என சொல்லி நான் மேலே போகலை. என் தட்டையும் டம்ளரையும் நான் உங்கள் பையில் வைக்கிறேன் கொடுங்கள் என வாங்கிக் கொண்டு போய்விட்டான்.
திரும்ப அந்த பையனும் அம்மாவும் அவர்களுக்கு இதுதான் முதல்தடவை காசி என்பதால் கடைக்கெல்லாம் போனார்கள். நான் போகலை. நான் இரவும் அந்த திண்ணையிலேதான் படுத்துக்கொண்டேன்.
மறுநாள் கயாவிற்கு போனோம் அங்கேயும் பால்குணிநதியில் அவன் அம்மாவை முதலில் குளிக்க உதவி செய்துவிட்டு என்னையும் கைபிடித்து அழைத்துக் கொண்டு வந்தான். பிறகு விஷ்ணுபாதம் பின்பக்கவழியேதான் போய் பார்த்தேன். அங்கும் படி மிக உயரமாக இருக்கும் போதெல்லாம் நான் கூப்பிடாமலேயே வந்து கைபிடித்து உதவி செய்தான்.மேலும் அங்கங்கே என்னையும் அவன் அம்மாவையும் போட்டோவும் எடுத்தான். என்னையும் அம்மா இங்கே நில்லுங்கள் என்று தனியே கூப்பிட்டு நிற்கவைத்து போட்டோ எடுத்துக்கொடுத்தான்.
பிறகு அங்கேயிருந்து அலஹாபாத் திரிவேணி சங்கமம் அங்கும் வெள்ளம் காரணமாக ரோட்டுமேலேயே கங்கை யமுனை சரஸ்வதி வந்துவிட்டாள் அங்கும் அந்த பையன் அவன் அம்மாவோடு என்னையும் கைபிடித்தே அழைத்துக்கொண்டு போனான். இன்னும் சொல்லப் போனால் நீங்கள் போட்டோவை நன்கு கவனித்தால் தெரியும் அவன் அம்மா கையை நான் பிடித்துக் கொண்டிருப்பேன். இந்த பையன் என் கையை பிடித்துக் கொண்டிருப்பான்.
பிறகு மதுரா போனோம். அங்கும் அப்படியே கைபிடித்துக்கொண்டே எல்லா இடங்களையும் பார்க்க உதவி செய்தான். பிருந்தாவணம் போனோம். அங்கே கடைசியாக ராசலீலா கிருஷ்ணர் பார்க்கணும் ஆனால் அதற்கு ஒரு 50 ல் இருந்து 60 படியேறணும்.
எல்லாஇடங்களும் பார்த்த களைப்பு மேலும் வெறுங்காலோடு வேறு சுற்றியதாலும் எனக்கு Sugar இருப்பதாலும் எனது இரண்டுபாதமும் வீங்கி விட்டது. என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியலை இதில் படிவேறு ஏறணும்னால் என்னால் முடியலை. நான் அங்கேயே அப்படியே கீழ்படியில் உட்கார்ந்துவிட்டேன்.
அந்தப்பையனோ என்னை கையைப்பிடித்து இழுத்து வாருங்கள் அம்மா இந்த 60 படியை கஷ்ட்டப்பட்டு ஏறிட்டால் அவ்வளவுதான் கிருஷ்ணரை பார்த்துவிடலாம் இவ்வளவுதூரம் வந்துவிட்டூ மேலே வரலைன்னா எப்படி என்று கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தான். என்னால் சுத்தமா முடியலை அவன் அம்மாவும் முடியலைன்னா வற்புறுத்தாதே நாம்போகலாம் என சொல்லி என்னிடம் இங்கேயே அமர்ந்திருங்கள் நாங்கள் போய் பார்த்து வருகிறோம் என அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
நான் மட்டும் அமர்ந்து கொண்டிருக்கிறேன் என்னைக்கடந்து மக்கள் எல்லோரும் செல்கிறார்கள். இதில் சிறுவயது ஆண்கள் பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒரே மூச்சில் கீழேயிருந்து மேலேவரை ஏறுகிறார்கள்.
எனக்கோ கால்வலியைவிட மனது அதிகமாக வலிக்கிறது. இவ்வளவுதூரம் வந்து கிருஷ்ணா உன் ராசலீலை கோலத்தை காணமுடியவில்லையே. அப்படி நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு கருணை காட்டமாட்டயா அப்படி இப்படி என்று புலம்பிக்கொண்டே இருக்கிறேன். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அழுது கொண்டே அமர்ந்திருக்கிறேன்.
ஒரு அரைமணிநேரம் கழித்து அந்த பையன் வந்து என் அருகே அமர்ந்தான். அம்மா ஏன் அழுது கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள் வாருங்கள் நான் கைபிடித்து உங்களை அழைத்துக் கொண்டு போகிறேன். கண்டிப்பா நீங்கள் கிருஷ்ணரை பார்ப்பீர்கள் கவலைப்படாதீர்கள் என சொல்லிவிட்டு அவன் அம்மாவிடம் நீங்கள் இங்கே கடையெல்லாம் சற்றே சுற்றிவிட்டு வாருங்கள் நான் இவர்களுக்கு கிருஷ்ணரை தரிசனம் செய்து அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவன் அம்மாவின் பதிலைகூட எதிர்பார்க்காமல் எனது Handbag ஐ ஒரு கையில் வாங்கிக்கொண்டு மறுகையால் என்னை பிடித்து தூக்க முயற்சி செய்தான்.
அதற்குள் எதிர்தாற்போல் கிருஷ்ணரை பார்த்துவிட்டு கீழேயிறங்கும் கும்பலில் இருந்து ஒருவர் தம்பி யார் இவர் நானும் உதவி செய்கிறேன் என ஒரு கைபிடித்தார்கள்.
அந்த ஐயா ஒரு 55. அல்லது 60 வயது இருக்கலாம் இந்த பையன் இருக்கைக்கு மேல் இருக்கையாம் அப்புறம் விசாரித்து தெரிந்து கொண்டேன். பிறகு அந்த பையன் இவரிடம் என்னைகாட்டி நம்மோடுவந்தவர்தான் கால் பாதம் வீங்கியதால் நடக்க இயலவில்லை நீங்கள் ஒருபக்கம் பிடியுங்கள் நான் ஒருபக்கம் பிடிக்கிறேன். இவ்வளவுதூரம் வந்துவிட்டு இந்த அம்மா மட்டும் கிருஷ்ணரை தரிசிக்கவில்லை என்றால் எப்படி என்றான்.
உடனே அந்த அய்யாவும் இந்தப்பையனும் இருபக்க கைகளையும் பிடித்துக் கொண்டார்கள் நான் ஒவ்வொருபடியாக தத்தி தத்தி ஏறி மெதுவே மேலே போய் ஆளுயர ராசலீலை கிருஷ்ணணை ஆனந்த கண்ணீரோடு தரிசித்தேன்.
பிறகு மற்ற சன்னதிகளையும் பார்த்துவிட்டு கீழே ஒருவழியாக வந்துவிட்டோம். அங்கே சற்றே அமர்ந்த போதுதான் அந்த பையனிடம் உன்பெயர் என்னப்பா என்று கேட்டேன். அதுவரை எனக்கு கேட்கணும்னு தோணலை. நான் அவனை அதுவரை தம்பி என்றே அழைத்தேன் அவனும் என்னை அம்மா என்றே அழைத்தான்.
நான் அவன் பெயரை கேட்டவுடன் அவன் சொன்னது "உன்னி கிருஷ்ணன்" அம்மா என்பெயர் என்றான். எனக்கு தாரை தாரையாக கண்களில் கண்ணீர் இது யாரும் இல்லாத எனக்கு அந்த கிருஷ்ணனை அன்றி வேறுயார் கைபிடித்து அழைத்துபோக இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்தான் உதவிகள் செய்தான்.
திரும்ப நான் சென்னை எக்மோர் வரும்வரை அவனை நான் பார்க்கவில்லை. சென்னை இறங்கியவுடன் ஜன்னல்வழியே கையாட்டினான் அவ்வளவே.
எந்த தடவையுயேய் இல்லாமல் இந்தமுறை எனக்கு ஏற்பட்ட அனுபவம் உண்மையிலேயே உன்னதமானது.
"வெற்றிகள் கிட்டும்போது "இதுவும் கடந்து போகும்" என்று நினையுங்கள் கர்வம் தலைக்கு ஏறாது......
தோல்விகள் தழுவும் போது
""இதுவும் கடந்து போகும்" என்று நினையுங்கள் வாழ்வில் சோர்வுகள் அண்டாது"
"கோபத்திலோ வருத்தத்திலோ மன உளைச்சலிலோ இருப்பவர்களை சிறிது "தனிமையில்" விடலாம் தப்பில்லை ஆனால் அவர்களை கண்டுக்காமல் தனியாகவே விட்டு விடுதல்தான் தவறு....
அன்புடன்
கமலா
No comments:
Post a Comment