முகநூல்்வெங்கட சுபரமணியம் ...
அந்த மாமா தன் வாழ்க்கையில் கூட அவ்வளவு பெரிய சிக்கலைப் பார்த்திருக்கமாட்டர். ”யக்ஞோபவதீம் பரமம் பவித்ரம்...” என்று வாத்யார் மாமா மந்திரம் சொல்ல ஆரம்பித்தபோது இவருடைய பத்து விரல்களுக்கும் பூணூல் மாட்டிக்கொண்டு... இடியாப்பச் சிக்கலில் இருந்தது. மந்திரம் சொல்லி முடிக்கும் போது புனிதநூல் தோளுக்கு போக வேண்டும். எனக்கு க்ளைமாக்ஸ் காட்சியில் சீட்டின் நுனிக்கு வந்தது போலிருந்தது. இரண்டு கை விரல்களுக்கிடையேயும் இரண்யகசிபுவின் குடலைப் பூரி வைத்துக்கொண்ட நரசிம்மர் போல பரபரத்தார்.. சிக்கலை அவிழ்க்கிறேன் பேர்வழி என்று பொம்மலாட்டக்காரன் மாதிரி விரல்களை நுழைத்து வித்தைக் காட்டிக்கொண்டிருந்தார். என் கையிலும் புதுப் பூணுல் இருக்க அவருக்கு உதவி செய்யமுடியாத கையறு நிலை! :-) பூணூலாவது இன்னொன்னு வாங்கி மாட்டிக்கொள்ளலாம்.. விரல்கள் பின்னி சிக்கிக்கொண்டால் என்னாவது? எப்படி சாப்பிடுவார்? எப்படி மத்த காரியம் செய்வார்? என்று விபரீத யோசனையில் மிரண்டேன். :-) நூல்வலையில் சிக்கித் தவிப்பவரின் அவசர உதவிக்கு வாத்யார் மாமாவின் அசிஸ்டெண்ட்ஸ் பாய்ந்தோடி வந்தார்கள். மந்திரம் முடிப்பதற்குள் புதுப் பூணூல் கொடுத்து நேசக்கரம் நீட்டினார்கள்.
”இருக்கா பார்க்கறேன்.. இல்லேன்னா ப்ளீஸ் போய் மாஸ்க் போட்டுண்டு வாங்கோ...” என்று மாஸ்க் இல்லாதோர் திருப்பி அனுப்பப்பட்டு.. “பன்னீர்ல கையை நனைச்சுக்கோங்கோ...” என்று சானிடைஸர் கைகளில் தெளிக்கப்பட்டு “ஈஷிண்டு உட்காரவேண்டாம் மாமா.. இன்னும் கொஞ்சம் தள்ளி... இன்னும் தள்ளி.. ம்ம்... இன்னும்...” என்று தள்ளித் தள்ளி இடைவெளியுடன் உட்கார்த்தி வைக்கப்பட்டு மிகவும் ஜாக்கிரதையாக இந்த வருஷ உபாகர்மா நடைபெற்றது.
“அஞ்சு மணி பேட்ச் முடிஞ்சுடுத்தா?” என்றேன்.
“இல்லேல்லே.. ஆறு மணிக்குதான் மொத பேட்ச். இன்னிக்கி சண்டே. ஆகையால ஆறு மணிக்குதான் ஆரம்பிக்கணும்னு அநேக பேரோட வேண்டுதல்... தூங்கணுமோன்னோ?” சிரித்தார் மாமா.
கூடத்தில் கோஷ்டியினரின் மந்திர கோஷம் அவ்வளவு சப்தமாக இல்லை. விண்ணைப் பிளக்கவேண்டாம். கூடத்தின் மேற்கூரைக்குக்கு கேட்டிருக்குமா என்று சந்தேகம். மாஸ்க் இருப்பதினால் பாதி பேர் சௌகரியமாக வாயைத் திறக்கவில்லையா அல்லது மாஸ்க் மந்திரத்தை முழுங்கிவிட்டதா என்று தெரியவில்லை.
இந்த முறையும் வலதுக்கு இடதும் இடதுக்கு வலதுமாக பூணூலை இஷ்டப்படி மாற்றி மாற்றிப் போட்டார்கள். கண்கள் பரபரக்க இந்த அமர்க்களத்தை சிறிது நேரம் பார்த்த மாமா சிவசிவாவென்று மைக்கைப் பார்த்தே மந்திரம் சொன்னார். இப்படி தப்பான கேம் ஆடின மக்கள் விடலைகள் என்று நினைத்துவிடவேண்டாம். ரிட்டயர் ஆனவர்கள் கூட இந்தக் கும்பலில் இருந்தார்கள். அவ்ளோ சிரத்தை! :-)
“பிரம்மச்சாரிக்குதான் மான் தோல்.. எல்லோரும் கேட்காதீங்கோ” என்று வாத்யார் மாமா கரதலையாக அடித்துக்கொண்டாலும் ஒன்றரை ஜதை போட்டுக்கொள்ளும் சஷ்டியப்தபூர்த்தி ஆன மாமா கூட ஏதோ சாக்லேட் வாங்க கையை நீட்டும் குழந்தை போல நீட்டினார். இதைப் பார்த்து மைக்கில் சிரிப்பதைத் தவிர வேறொன்றும் சொல்ல வாத்தியார் மாமாவுக்குத் தெரியவில்லை.
என் அப்பா இல்லாத மூன்றாவது வருஷ பூணூல். மனதில் நினைத்துக்கொண்டேன். ராமமூர்த்தி ஐயர் மனக்கண்ணில் பிரசன்னமானார்.
ஸ்ரீ அலமேலுமங்கா சமேத வேங்கடேஸ்வர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ அபிதகுஜாம்பா சமேத அருணாசலேஸ்வர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தீஸ்வர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ ஞான ப்ரசூன்னிகா சமேத காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பா சமேத ஹரிஹரபுத்ர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ ப்ரஹன்நாயகி சமேதே பிரஹதீஸ்வர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ காந்திமதி சமேத நெல்லையப்பர் ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ மங்களாம்பிகா சமேத கும்பேஸ்வர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ கற்பகாம்பா சமேத கபாலீஸ்வர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ அபயாம்பிகா சமேத மயூரநாதர் ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ பெரியநாயகி சமேத நாகநாதர் ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத மருந்தீஸ்வர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகா சமேத மாத்ருபூதேஸ்வர ஸ்வாமி சன்னிதௌ
ஸ்ரீ மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர ஸவாமி சன்னிதௌ
ஸ்ரீ ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர ஸ்வாமி சன்னிதௌ.......................
ஸ்ரீருக்மிணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சன்னிதௌ என்று வாத்யார் மாமா சொன்ன போது ஸ்ரீவேணுகோபாலனை ஸ்ரீராஜகோபாலனாக மாற்றிச் சொல்லிக்கொண்டேன். அருணாசலேஸ்வரர் சொல்லும் போது திருவண்ணாமலையும் வேங்கடேசுவர ஸ்வாமி என்று சொன்னபோது திருப்பதியும் நெஞ்சுக்குள் தெரிந்தது. மற்ற விஜயம் செய்த ஸ்வாமி சன்னிதிகளும் மனக்கண்ணில் உதிக்க திருப்தி உண்டாயிற்று.
வேதாரம்பம் இருக்கு என்று சொன்ன பின்னாலும் ஒன்றிரண்டு பேர் தக்ஷிணைக் கொடுக்க எழுந்து நின்று, ஸ்கூல் பெல் அடித்ததும் வீட்டுக்கு ஓடும் வாண்டுகளைப் போல தயாராக நின்றார்கள்.
“இன்னும் பத்து நிமிஷம்.. வேதாரம்பரம் பூர்த்தியானதும் போகலாம்...” என்று வாத்யார் மாமா கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
ஊர் அரட்டையிலும் வெட்டிப் பொழுதுபோக்குகளிலும் இருக்கும் ஆர்வத்தில் கொஞ்சம் பங்குபோட்டு நமது சம்பிரதாயங்களை லவலேசமேனும் தெரிந்துகொள்ள ஈந்து.... தினமும் சந்தியாவந்தனம் செய்ய இன்று சங்கல்பம் செய்துகொள்வோம்.
“பிராம்மணன் காயத்ரி சொல்ற ஊர்ல சாயபு வீட்டுக்குக்கூட எந்தக் கெடுதியும் வராது. மந்திர பலம் அப்படி! அந்தக்கால ராஜாக்கள் இதைத் தெரிஞ்சுண்டுதான் பிராம்மணாளோட நித்யானுஷ்டானங்கள் கெட்டுப்போகாம இருக்க நிறைய உதவி பண்ணினா.. பிராம்மணாளும் லோகக்ஷேமார்த்தம் சந்தி, ஜபம் தபம்னு சிரத்தையா பண்ணிண்டிருந்தா... மழை பேஞ்சு வறட்சி இல்லாமல் லோகம் க்ஷேமமா இருந்தது...” என்பார் பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்.
உலக நன்மைக்காக நாம் அனுதினமும் த்ரிகால சந்தியாவந்தனம் செய்வோம்.
உபாகர்மா கொண்டாடும் அனைவருக்கும் ஆவணி அவிட்ட நல்வாழ்த்துகள்! <3
#உபாகர்மா ஆவணி_அவிட்டம்
No comments:
Post a Comment