காங்க்டாக் – டார்ஜிலிங் போனதைப் பற்றி இந்த பதிவு. ஒரே எபிசோடில் முடிக்க முடியாது.
நான்கைந்து எபிசோடுகள் வரலாம்.
சிங்கார சிக்கிம்
By நந்து சுந்து
உறவினர் ஒருவர் திருமணத்துக்கு நாங்கள் கொல்கத்தா போயிருந்தோம். ஊருக்கு வெளியே Vedic Village என்ற ஒரு அழகிய ரிசார்ட்டில் கல்யாணம். பெரிய ரிசார்ட். ஒரே நேரத்தில் ஆயிரம் எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கலாம்.
திருமணம் முடிந்து அப்படியே காங்க்டாக், டார்ஜிலிங் போவதாக ஏற்பாடு. ஒரு டிராவல் ஏஜண்ட் மூலமாக ஹோட்டல் ரூம், டாக்ஸி ஏற்பாடு செய்து விட்டோம்.
இரண்டு நாள் திருமணம். ஆறு வேளையும் Buffet விருந்து. புது ஐட்டங்கள் எடுக்கும் போது கீழே டிஷ்யூ பேப்பர் வைத்த புது ப்ளேட்டுகள் எடுக்க வேண்டும். நாங்கள் ஏழு டிஷ்யூ பேப்பர்கள் எடுத்தோம்.
மூன்றாம் நாள் காலை விமான நிலயத்துக்கு புறப்பட்டோம். கொல்கத்தாவிலிருந்து பக்டோக்ரா எனும் ஊருக்கு விமானப் பயணம்.
கொல்கத்தா நகர் முழுக்க மம்தா பேனர்ஜி எல்லா பேனரிலும் முகத்தை காட்டிக் கொண்டிருந்தார். பேனர் இல்லாத இடங்களில் கொஞ்சமாக கொல்கத்தா நகரமும் இருந்தது.
மதியம் 12: 55 க்கு இண்டிகோ விமானம்.
போர்டிங் பாஸ் வாங்கும் இடத்துக்குப் போனோம். ஒரு இண்டிகோ நீல தேவதை கவுண்டரில் இருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே டிக்கெட்டை நீட்டினேன்.
“பக்டோக்ரா?” என்று கேட்டாள்.
“படவா ராஸ்கல்” என்று அவள் சொன்ன மாதிரி இருந்தது. பிறகு போர்டிங் பாஸை நீட்டினாள்.
கோவில் சிறப்பு தரிசன க்யூ மாதிரி சிறிய க்யூவில் நின்று விமானம் ஏறினோம்.
விமானத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் தவிர வேறு எதுவும் கொடுக்கவில்லை. ஆறு வேளை Buffet சாப்பாடு சாப்பிட்டதற்கு தண்டனை.
கொல்கத்தாவிலிருந்து பக்டோக்ரா 485 கிலோ மீட்டர் தான். டேக் ஆஃப் செய்து விட்டு குழந்தைகள் விடும் பேப்பர் ஏரோப்ளேன் மாதிரி கொஞ்ச நேரம் பறந்தது. பிறகு லேண்டிங் செய்து விட்டது.
லேண்டிங் ஆகும் முன் விமானி மைக்கில் ஏதோ பேசினார். mutualfundinvestmentsaesubjectedtomarketriskpleasereaddocumentsbeforeinvesting என்று ம்யூச்சுவல் ஃபண்ட் டி.வி விளம்பரம் போல ஏதோ பேசினார். எதுவுமே புரியவில்லை.
பக்டோக்ரா விமான நிலையத்தில் இறங்கினோம்.
பக்டோக்ரா ஒரு குட்டி விமான நிலையம். ஈக்காடுதாங்கல் பஸ் ஸ்டாப் மாதிரி இருந்ததை இப்போது பெரிதுபடுத்தி விமான நிலையம் ஆக்கி விட்டர்கள். காங்க்டாக், டார்ஜிலிங் போக வேண்டியவர்கள் இங்கு தான் இறங்க வேண்டும். எனவே சமீப காலமாக இதற்கு சிறப்பு அந்தஸ்த்து வந்து விட்டது.
ரன்வேயை கொஞ்சம் பெரிதாக்கியிருக்கிறார்கள். முன்னால் கண்ணாடி கதவுகள் போட்டு சத்யம் தியேட்டர் மாதிரி ஆக்கியிருக்கிறார்கள்.
வெளியே வந்தோம். ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த டாக்ஸி டிரைவருக்கு போன் செய்தோம்.
கொஞ்ச நேரத்தில் ஒல்லியாக ஒருவன் வந்தான். முருகன் இட்லிக் கடையில் மூன்று சட்னி வைக்கும் பையன் மாதிரி இருந்தான். பெங்காலியில் பேசினான். நாங்கள் திருப்பி தமிழில் பேசினோம். ‘பே’ என முழித்தான். பே ஆஃப் பெங்கால்.
எங்களை கார் நிறுத்தி வைத்திருக்கும் இடத்துக்குக் கூட்டிப் போனான். அங்கு ஏகப்பட்ட டாக்ஸிகள் நின்று கொண்டிருந்தன. அந்த ஊரில் வீட்டுக்கொரு டாக்ஸி வளர்ப்பார்கள் போல் இருந்தது.
டாக்ஸி இளம் சிவப்பு நிறத்தில் இருந்தது.
டாக்ஸியை ஸ்டார்ட் செய்தவுடன் அதிர்வில் டாக்ஸி மேல் இருந்த மண் தூசு பறந்தது. உள்ளே வெள்ளை நிறம் தெரிந்தது. வெள்ளையின் நிறம் சிவப்பு என்று புரிந்தது.
விமானத்தில் எதுவும் சாப்பிடாததால் எங்களுக்கு கொலைப் பசி. பெங்காலி திருமணத்தில் புளியோதரையும் அரிசி வடாமும் கட்டிக் கொடுக்கும் பழக்கம் இல்லை.
“பூக்....பூக்” என்றோம். பூக் என்றால் பசி.
“அச்சா” என்றான். எங்களுக்கு வயிறெரிந்தது.
போகும் வழியில் ஏதாவது பழங்களாவது வாங்கி சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம்.
“கேலா கரீத்னா சாக்தே ஹை” என்றோம். (கேலா – வாழைப்பழம்)
கரீத்னா என்றால் வாங்குவது. கத்ரீனா கைஃப் இல்லை.
ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே வந்தோம். பழக்கடைகளே தென்படவில்லை. ஏதாவது ஒரு கங்கூலி கோவை பழமுதிர் நிலையம் வைத்திருக்கிறாரா என்று பார்த்தோம். இல்லை.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு பழ வண்டி இருந்தது. வாழைப்பழம் இருந்தது.
“பையா..ருகோ..கேலா..கேலா” என்று கத்தினோம். அவன் நிறுத்தாமல் போய்க் கொண்டே இருந்தான். ரூர்கேலா போய் விடுவான் போல் இருந்தது.
“டேய்..கேளுடா..கேலாடா” என்று மறுபடியும் கத்தினோம். அடுத்த கேலா கடை வந்ததும் நிறுத்தினான்.
ஓடிப் போய் வாழைப்பழமும் ஆரஞ்சு பழமும் வாங்கிக் கொண்டோம். மதுரை அழகர் கோவில் குரங்கு மாதிரி வாழைப்பழங்களாக சாப்பிட்டோம். Buffet சாப்பிட்டவர்கள் Banana ரேஞ்சுக்கு வந்து விட்டோம்.
கொஞ்ச தூரம் போனதும் சிலுகுரி என்று போர்ட் வந்தது. அதை அவசரத்தில் நான் சிலுக்குகுரி என்று படித்து விட்டேன்.
சிலுகுரி மேற்கு வங்கத்தில் மூன்றாவது பெரிய நகரம். சீனா, வங்கதேசம், நேபாள், பூட்டான் என நான்கு நாட்டு எல்லைகளும் அருகிலேயே உள்ளன.
சிலுகுரியில் ஏதாவது சாப்பிடலாம் என டிரைவர் பையனிடம் சொன்ன போது அவனே ஒரு நல்ல ரெஸ்டாரண்டுக்கு கூட்டிப் போவதாக சொன்னான். ஆனால் வண்டியை நிறுத்தவில்லை.
சிலுகுரி தாண்டியவுடன் சாலை வெறிச்சோடியது. வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. நாங்கள் போக வேண்டிய காங்க்டாக் நகரம் பற்றி இரண்டு மார்க் கேள்வி அளவுக்கு ஒரு சிறு குறிப்பு வரைந்து விடுவோம்.
காங்க்டாக் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம். சிக்கிம் வட கிழக்கே சீனாவுக்கு அருகே இருக்கும் ஒரு சிறிய மாநிலம். ஒரு தனி நாடாக இருந்து 1975 ல் இந்தியாவுடன் இணைந்து ஒரே ஒரு எம்.பியை லோக் சபாவுக்கு அனுப்புகிறது.
இந்தியாவின் உயரமான மலைச்சிகரமான கஞ்சன்ஜங்கா சிக்கிம் மாநிலத்தில் தான் உள்ளது. இந்தியாவின் மிகக் குறைந்த ஜனத்தொகை உள்ள மாநிலம் இது தான்.
காங்க்டாக் நகரத்தின் ஜனத்தொகையே ஒரு லட்சம் தான். இந்தியாவின் மிகவும் சுத்தமான நகரம் இது.
இப்போதைக்கு இது போதும். மேலும் விபரங்கள் தேவையான இடத்தில் கொடுக்கப்படும்.
வண்டி லேசான காட்டுப் பகுதியில் போய்க் கொண்டிருந்தது. எதுவும் ரெஸ்டாரண்ட் இருப்பதாகத் தெரியவில்லை.
“பையா..ஹமாரா கானா ஹை” என்றோம்.
“ஜீ” என்று சொல்லி விட்டு போய்க் கொண்டே இருந்தான்.
கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் கானா என்றோம். மறுபடியும் ஜீ. இப்படியே 4 ஜீ 5 ஜீ என்று போய்க் கொண்டே இருந்தான்.
எங்களுக்கு மட்டும் கானா இன்பம் கிடைக்கவே இல்லை.
இரண்டு மணி நேரம் போயிருக்கும்.
மலைப்பாதையில் ஒரு கடை வாசலில் நிறுத்தினான்.
“இதர் கானா அச்சா ஹை” என்றான்.
கடையைப் பார்த்தோம். ரங்கநாதன் தெருவில் ஹேண்ட் பேக் விற்கும் கடை மாதிரி குறுகலாக ஒரு கடை இருந்தது. உள்ளே நான்கு டேபிள்கள். யாருமே இல்லை. நான் வெஜிடேரியன் வாசனை குப்பென்று தாக்கியது.
அவன் சாவகாசமாக ஒரு டேபிளில் உட்கார்ந்தான். ஏதோ ஒரு சிறகொடிந்த பறவையை சாப்பிட ஆரம்பித்தான்.
நாங்கள் வெளியே வந்து விட்டோம்.
டிரைவர் உள்ளிருந்து கூப்பிட்டான்.
“ஆயியே. கானா அச்சா ஹை” என்றான் வாயில் அந்த கானாக் கருங்குயிலை அடக்கிக் கொண்டே.
“போடாட்டேய்ய்” என்று பல்லைக் கடித்தோம்.
நிதானமாக அரை மணி நேரம் சாப்பிட்டான்.
பிறகு வண்டியில் ஏறினான். ஏற்கனவே அவன் டிரைவிங் காட்டுத் தனமாக இருந்தது. வயிற்றுக்குள் பறவை புகுந்ததால் பறக்க ஆரம்பித்தான்.
இரவு ஏழு மணிக்கு காங்க்டாக்கை நெருங்கும் போது பலத்த மழை பிடித்துக் கொண்டது. அந்த மழையிலும் வேகமாக ஓட்டினான்.
மழையில் அரை மணி நேரம் ஓட்டிய பிறகு காங்க்டாக் நகரம் கண்ணில் பட்டது.
ஹோட்டல் பெயர் கேட்டான். Royal Residency என்றோம். மாலும் ஹை என்றான். ஆனால் நகரத்துக்குள் போனதும் அந்த மாலுமி தடுமாறினான். ஒரு வழியாக விசாரித்து ஒரு சிறிய சாலைக்குள் கூட்டிப் போனான்.
Royal Residency என்றவுடன் Meridian ஹோட்டல் மாதிரி ஒரு முகப்புக் கட்டிடம் எதிர்பார்த்தோம். அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகே இருக்கும் Working Women Hostel போல ஒரு கட்டிடம் தெரிந்தது. மேலே Royal Residency என்று போர்ட் இருந்தது.
உள்ளே போனால் ஹோட்டல் பெரிதாகவே இருந்தது. பக்கவாட்டில் அறைகள் இருந்தன. கீழ் தளத்திலும் அறைகள் இருந்தன.
ரூம் சர்வீஸில் உணவு ஆர்டர் செய்தோம். சாப்பாடு நன்றாகவே இருந்தது. சொந்தக் காசில் சாப்பிடுவது தான் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
படுக்கையில் சாய்ந்தவுடன் டிராவல் ஏஜெண்ட் போன் செய்தார். அடுத்த நாள் காலை நாங்கள் போக வேண்டிய நாதெல்லா பாஸ் எனும் இடத்துக்கு மிலிட்டரி பாஸ் கிடைத்து விட்டதாகக் கூறினார்.
நீங்கள் Snow ல் விளயாடி மகிழலாம் என்றார்.
(தொடரும்)
No comments:
Post a Comment