படித்தை பகிர்கிறேன்.பொன் மனசு (சிறுகதைகள் சீ2 – 12)
#ganeshamarkalam
எல்லாருக்கும் தெரியும் இந்த பொன்மொழி: “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு”. அதாவது தன் குழந்தை தனக்கு உசத்தியாம். மத்தவாளுக்கு அது அசிங்கமா, விகாரமா, கருப்பான நிறத்தோட இருந்தாலும் அது காகத்துக்கு மட்டும் தங்கக்குழந்தையாம். அதே மாதிரி எல்லோருக்கும் கண்ணாடியில் அவா அவா முகத்தை பாக்கிரச்சே, தலை வாரிக்கரச்சே, நெத்திக்கிட்டுண்டு சரி பாத்துக்கரச்சே நாமதான் அதிசுந்தரம்னு தோணும். தோணணும்!
ஆனால் இன்னைக்கு கார்த்தால என் முகத்தை கண்ணாடிலே பாத்துக்கரச்சே அப்படித்தோணலை.
இதுக்கு முன்னாடி பாத்தப்போல்லாம் என்னைப்போல ஹான்ட்ஸம் இல்லைன்னு தோணுமே! இன்னைக்கு ஏன் இப்படி? தெரியலை. புதுசா ஏதோ வருத்தம் இழையோடித்து. அதுமட்டும் இல்லை, இதுநாள் வரைக்கும் கண்ணுக்கு புலப்படாத வரிகள் தெரிஞ்சது.
கவலைக்கோடுகளா? இல்லை வயது விளிம்பைத்தொட்டுவிட அவசரப்படுவதின் அறிகுறியா? அதான் உக்காந்து எழுந்துண்டா முட்டி வலிக்கரதே, மூஞ்சீலே வேர கோடு எதுக்கு?
கண்ணாடியில் பாத்துண்டே இருகச்சே வரிகள் நீண்டு, ஆழமாகப்போக ஆரம்பிச்சது. என்னைக்கும் இல்லாம கண்ணாடியில் தெரியும் என் பிம்பத்தைவிட்டு கண்ணை அகற்றக்கூட முடியல. ஏதோ பிரமைப்பிடிச்சாப்புலே.
கண்ணை மெல்ல பிரயத்தனப்பட்டு மூடிண்டு அங்கேந்து நகர்ந்து வந்தேன். மெல்ல ஏறிப்போய் மாடி வெராண்டாவுலே இருந்த ஈஸிசேரில் சாய்ந்தேன்.
நேத்து ராத்திரி குரோம்பேட்டையில் பெய்த மழையில் வில்வமர இலைகள் நன்னா கழுவப்பட்டு துடைச்சுவிட்டா மாதிரி பச்சைப்பசேல்னு. பாத்துண்டிருக்கச்சேயே அதுலேந்து ஒரு காய் தொப்புன்னு கீழே விழுந்து சிதறிப்போச்சு. நந்தியாவெட்டையில் சில பூக்கள். அரளி இந்த சீசனில் பூக்காது. அதன் கிளைகளை இப்போதான் கழிச்சு விட்டோம், இலையும் இப்போதான் துளிர்த்துண்டு இருக்கு. சூரியன் இன்னும் ஆக்ரோஷமா வெளீயே வரலை, இன்னும் மேகமூட்டம், அதான் காரணம். மாடி ஹாலுக்குள் போனால் ஊஞ்சலில் படுத்துண்டு ஆடலாம். ஆனா வராண்டாவில் இருப்பதுபோல் ஆகாசத்தையும், மரக்கிளைகளையும் இப்படி சாஞ்சுண்டே பாத்துண்டு இருக்கமுடியாது.
மனசு என்னவோ திரும்பவும் என் முகத்தில் பாத்த வரிகளிலும் அதன் காரணங்களிலும் லயிக்க ஆரம்பிச்சது. ஏன் எனக்கு என் மூஞ்சியை பாக்க இப்படி விசனமா இருந்தது? அதை முதலில் கண்டுபிடிக்கணும். சுய சிந்தனை மகிழ்ச்சியை தரணும். இந்தமாதிரி கவலை வந்து சூழக்கூடாது. காரணத்தை கண்டுபிடிச்சு என்னன்னு சரிசெய்யணும். இப்படியே விட்டுடக்கூடாது. சன் டிவி பட்டிமன்றத்துக்கு இன்னும் நாழி இருக்கு. அதுவரைக்கும்?
குழந்தைகளுக்கு 1 வயசார வரைக்கும் கண்ணாடியே காண்பிக்க மாட்டா. பலபேர் ஆத்துலெ பாத்திருக்கேன். போடோவும் எடுக்க மாட்டா, ஆண்டுநிறைவு வரவரைக்கும். ஆயிசு குறைஞ்சுடுமாம். அதேமாதிரி 60 வயசுக்கப்புரம் கண்ணாடியில் பாத்துக்கபிடாதுன்னு வைக்கணும். அடிக்கடி சுவர்கண்ணாடிக்கு முன்னாடி போய் நிக்கப்பிடாது. அப்படியே நின்னாலும் தெரியரதை கூர்ந்து சிந்திச்சு பாக்கப்பிடாது. செல்ஃபீயும் எடுத்துக்கபிடாது. அப்போதான் சந்தோஷமா இருக்கலாம். ஆனா இன்னைக்கு கண்ணாடியில் பாத்துண்டுட்டேனே! என்ன பண்றது?
கொஞ்ச நாழியில் சின்ன வயசுலேந்து இப்போவரைக்கும் நான் செஞ்சது, எனக்கு நடந்தது எல்லாம் மனத்திரையில் ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பாணியில் ஓடித்து. எத்தனை விவகாரம் நடந்திருக்கு? நல்லது, கெட்டது. நானா பண்ணிண்டது, மத்தவா ஏர்படுத்திக்கொடுத்ததுன்னு. அதான் இத்தனை வரிகளோ? இப்போ நினெச்சதும் ஞாபகத்துக்கு வந்து திரும்பவும் சங்கடப்படுத்தறதே அதான் வரிகளின் ஆழத்துக்கு காரணமோ?
கண்ணுக்கடியில் இருக்கும் தொங்குசதை எப்பப்பாத்தாலும் இந்த போனை நோண்டிண்டே இருக்கரதுனாலையோ? இல்லை இவ்வளவு வாழ்க்கையை வாழ்ந்த அழற்சியோ? அப்படி என்ன வெட்டி முறிச்சுட்டோம்? என்னையும் என் குடும்பத்தையும் தவிர வேர யாருக்கு நான் பெரீய உபகாரமான வாழ்க்கை வாழ்ந்துடலையே? பீத்திக்கரா மாதிரி ஒண்ணும் செய்யலையே? இந்த முகத்தில் தெரியற வரிகளை விழுப்புண் மாதிரி எடுத்துண்டு சந்தோஷப்பட்டுக்க ஒண்ணும் இல்லை.
பின்னே மனசை கவ்வும் கவலை எதுக்கு?
இதே மூஞ்சியைத்தான் 39 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெண்ணுக்கு பிடிச்சது! இப்பவும் பிடிக்கிரதுன்னுதான் சொல்லணும். கன்ஃபெர்ம் பண்ரேன் பேர்வழின்னு அவகிட்டே போய் கேக்கப்பிடாது. கேட்டுட்டு அவள் வேர ஏதாவது சொல்லிட்டால், என்னால தாங்கிக்கமுடியுமா? பிடிச்சிருக்குன்னே வச்சுக்கலாம். அப்புரம் ஏன் வருத்தப்படணும்? அப்போதான் ஒரு உண்மை விளங்கித்து.
நம்ம மூஞ்சி நமக்கே பிடிக்காம இப்படி சந்தேகங்களை எழுப்பித்துன்னா அதுக்கு காரணம் நாமதான். நாம மட்டும்தான். நாம எதையோ மனசாக்ஷிக்கு புறம்பா செஞ்சிருக்கோம் அதான். யோசிச்சுப்பாக்கிரேன் என்னவா இருக்கும்னு. இல்லை, ஏதொ ஒரு நல்ல காரியம்னு பட்டதை மனமுவந்து செய்யத்தோணாம விட்டுட்டேனா? வறட்டு கவுரவம் தடுத்திருக்கு. அதான் கண்ணாடியில் வந்து என் கண் மூலமா மனசு சுட்டிக்காட்டியிருக்கு. இல்லை யாராவாது மனம் புண்படும்படி நடந்துண்டேனா? ஞாபகத்துக்கு வரலை.
ஈஸிசேரில் சாஞ்சுண்டே இப்படியெல்லாம் மனசு அலைபாஞ்சது. கண்ணை மூடிண்டா உள்ளுக்குள்ளே கண் விழிகள் நர்த்தனம் ஆடறதை கிட்டெக்கே உக்காந்திருக்கிரவா பாக்கலாம். அதான் யாரும் வேண்டாம்னு தனியா வந்து இங்கே உக்காந்துட்டேன்.
ரொம்பநாள் ஆச்சு ஒரு கோவிலுக்குப்போய். கிட்டக்கே இருக்கிர ராஜவிநாயகர் கோவிலுக்கே போய் ரெண்டு மாசம் ஆச்சு. நேத்து ஆடிப்பூரத்துக்கு நெய்வேத்யம் பண்ண காசு கட்டிட்டு வரேன்னு போன ஆம்படையாள் கோபமா திரும்பி வந்தா. என்னன்னு வீசாரிச்சா நிறைய டொனேஷன் வந்தாச்சு, இனிமேல் வாங்கிக்கம்மாட்டோம்னு சொல்லிட்டாளாம். அதுவும் இல்லாம சிலபேர் கிட்டேதான் வாங்கிக்கறதுன்னு அங்கே சில பாலிடிக்ஸ் ஓடறதாம். நாராயணீயம் வகுப்பும் கோவிலுக்குள் நாங்கதான் அதில் வித்வம், நாங்கதான் நடத்துவோம்னு ஒரு தம்பதி ஆர்ப்பாட்டம் செய்யராளாம். “இனிமேல் நானும் அங்கே விசேஷம், கார்த்தின்னாத்தான் போவேன், இல்லைன்னா தள்ளி இருக்கப்போரேன்”னு ஆத்துக்காரி சொல்லிண்டிருந்தாள். இப்படி கோவிலிலேயும் பாலிடிக்ஸா இருக்கச்சே அங்கே போய் என்னத்தை சாந்தியை தேடரது?
மனச்சாந்தியை சொன்னேன். குச்சியா தளுக்கு மினுக்கிண்டு என் ஆத்துக்காரியோட வாக்கிங்க் போர சாந்தியை சொல்லலை.
என் அண்ணா அவர் போய்சேர்ந்த சில வருஷங்களுக்கு முன்னாடிலேந்து என்னோட பேசரதை நிருத்திட்டார். ஏன்னு காரணம் சொல்லலை. போக்குவரத்து இல்லாம போச்சு. அவர் நினைப்பு அடிக்கடி வந்து சூழ்ந்துக்கும். நேத்து ராத்திரி தூக்கம் வராம அவரை நினெச்சுண்டே கழிஞ்சது. அவர் போனப்புரம் அவராத்துலேந்து யாரும் பெசரதில்லை. நாம வேணும்னா மன்னிக்கு போன் போட்டு எப்படி இருக்கேள்னு கேக்கலாமா?
அதே மாதிரி என் நெறுங்கிய நண்பன் ஒருத்தன் காலிஃபோர்னியாவில், என் கூடவே பலவருஷம் படிச்சவன், அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புவான். வருஷம் தவறாம புத்தாண்டு வாழ்த்துக்கள் போனில் கூப்பிட்டு சொல்லுவான். நான் சரியா ரெஸ்பாண்ட் செய்யமாட்டேன். ஏனோ தானோன்னு இருப்பேன். அவனுக்கு இங்கேந்து ஆர்டர் செஞ்சு ஒரு பூங்கொத்து அனுப்பினா என்ன? இப்போ எங்கே இருக்கானோ, அதைக்கண்டுபிடிக்கணும்.
இப்படி எத்தனை தேடிவந்த, கூடவே இருந்த உறவுகளை உதாசீனப்படுத்தியிருக்கேன். கணக்கு வச்சுக்கலை. என்னத்தை சாதிச்சுட்டேன்? ஒண்ணுமில்லை. இப்போ என்ன செய்யறது? செஞ்சுதான் என்ன ஆகப்போரது? பல பேருக்கு இந்த வயசில் நட்பு வட்டம், சொந்தக்காரா பங்காளி தாயாதீன்னு ஒரு மஹாமகக்கூட்டமே இருக்கு. எனக்குமட்டும் ஒரேடியா சுறுங்கிப்போய். போனில்கூட பிளம்பர், எலெக்ட்ரீஷியன், கால் டாக்ஸி டிரைவர், கோவில் குருக்கள், ஜோசியர்னு இருக்கரவாளை எடுத்துட்டா மிஞ்சரது ஒரு 10பேர்தான். அவா போனில் என் பேர் சேவ் பண்ணியிருக்காளான்னா டவுட்தான். இப்படி இருக்கச்சே மூஞ்சியில் கோடு வருமா வராதா?
என்ன தோணித்தோ தெரியலை. விசுக்குன்னு எழுந்துண்டு கீழே வந்தேன். பீரோவை தொறந்து உள்ளே என்ன சட்டை பேன்ட் இருக்குன்னு பாத்தேன். எதெல்லாம் நான் பழசுன்னு போட்டுக்க விருப்பமில்லையோ அதையெல்லாம் எடுத்து தனியா வச்சேன். எடுத்ததெல்லாம் கொஞ்சம் தொளதொள மட்டும்தான், மத்தபடி புதுக்கருக்கு அழியாம, துவெச்சு அயர்ன் செஞ்சு அடுக்கி வச்சிருக்கு. எடுத்து அழகா ஒரு ஸ்யூட்கேஸில் வச்சா நிறம்பிடுத்து. ஏறி உக்காந்தாத்தான் மூடியை அமுக்கி பூட்டை மாட்டமுடிந்தது.
காரில் எடுத்து வச்சிண்டு செங்கல்பட்டு போர வழீல இருக்கும் சிவானந்த குருகுலத்துக்கு நேர போரேன். நான் பெரீய காரில் வரத்தைப்பாத்துட்டு கூர்க்கா கேட்டை ஓடிவந்து தொறக்கரான். உள்ளே இடதுபக்கம் ஆபீஸ்னு போட்டிருக்கு. அங்கே போய் என்னை அறிமுகப்படுத்திண்டு, வந்த விவரத்தை சொல்லி, துணிமணிகள் இருக்கு, கொடுத்துட்டுப்போலாம்னு வந்தேன்கிரேன். “எடுத்திண்டு வாங்கோ பாத்துட்டு பேசலாம்”கிரா. பெட்டியை எடுத்துண்டு வந்தா, “நீங்களே தொறந்து காட்டுங்க சார்”கிரா. காட்டரேன்.
தொறந்த உடனேயே அவா மூஞ்சி ஒருமாதிரி போகிறதைப் பாக்கமுடிகிறது. கொஞ்சம் பாத்துட்டு, “அப்படியே வைங்க”ன்னுட்டு உள்ளே போய் இன்னொருத்தரை அழைச்சிண்டு வரா. அவர் என்னைப்பாத்துட்டு என்ன நினெச்சாரோ கையை குலுக்கி நன்றி சொன்னார். ஆனால் கூடவே சாரி சார், இந்த மாதிரி நிறைய கொண்டுவந்து தரா, எங்ககிட்டே வைக்க இடமில்லை, இதுமாதிரி விஷயங்கள் எங்களுக்கு உபயோகப்படுவதும் இல்லை, நன்கொடையா கொடுக்கமுடியுமான்னு பாருங்கோ, மன்னிச்சுக்கோங்கோன்னுட்டர்.
கையில் இருந்த 2000₹ காசைக்கொடுத்துட்டு ரசீது வாங்கிக்கரேன். பெட்டியையும் அதில் நிரம்பி இருக்கும் என் பழைய துணிகளை என்ன செய்யறது?
“வச்சுட்டு போங்கோ, நாங்க இதை பழைய துணி எடுத்துக்கரவாகிட்டே போட்டுடுவோம் இல்லைன்னா பேப்பர்மில்லுக்கு”ங்கிரா.
திரும்பி வரச்சே நினெச்சுக்கரேன், நல்லது செய்யறத்துக்கும் கொடுப்பினை வேணும். எப்படி பண்ணணும்னு தெரிஞ்சுண்டு செய்யணும்னு. சொச்ச காலத்தில் முடிந்தால் வாரம் ஒருதடவை, இல்லைன்னா ரெண்டுநாளைக்கு ஒருதடவை ஏதாவது நல்ல காரியம் செய்யணும்னு. நமக்கு வேண்டாம்கிறதை இன்னொருத்தருக்கு தேவைப்படும்னு கொடுப்பது கொடையா, இல்லை மத்தவாளுக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சு அதை செஞ்சுகொடுப்பது கொடையான்னு ஒரு கேள்வி.
பதில் தெரிஞ்சா மாதிரி பட்டது.
காரை ஸ்டார்ட் செய்யரச்சே, ரியர்வ்யூ கண்ணாடியில் என் முகம் தெரிஞ்சது. இடதுபக்கம் அப்போ பாத்த கோடு கொஞ்சமா நீளம் குறைஞ்சா மாதிரி தோணித்து. மூஞ்சியில் கோடு வேண்டாம்னா மனசு பிரகாசமா இருக்கிராப்புலே பாத்துக்கணும்னு தெரிஞ்சுது.
மனசை பொன்னா வச்சு காப்பாத்திக்கரவாளுக்கு முகமும் பிரகாஸமா இருக்கும்னு விளங்கித்து.
No comments:
Post a Comment