மிஸ்ட் கால் - சிறுகதை
விழியன்
சமைத்து முடித்துவிட்டு போனை எடுத்தபோது தான் நான்கு மிஸ்ட் கால்கள் இருந்ததை கவனித்தேன். தாரா தான் அழைத்திருக்கின்றாள். ஒரு மாதமாக அவளை தொடர்புகொள்ள முயற்சி செய்துகொண்டு இருக்கின்றேன். தாரா. ஒரு குட்டி தேவதை. அவளை சந்தித்த நாளினை மறக்கவே முடியாது. ஒன்பதாம் வகுப்பில் நான் பணியாற்றும் பள்ளிக்கு வந்து சேர்ந்தாள். முதல் நாளே அவள் என்னிடம் வந்து “மிஸ் எனக்கு தமிழ்னா ரொம்ப பிடிக்கும் மிஸ்” என்று கூறினாள். அவளுக்கு எப்படி சிரமப்பட்டு அட்மிஷன் போட்டார்கள் என்று தலைமை ஆசிரியர் என்னிடம் கூறினார். காலம் கடந்து இருந்தது. படிப்பு வேண்டாம் என நிறுத்தி இருந்தார் அப்பா. எட்டாம் வகுப்பு வரையில் விடுதியில் தங்கி படித்தாள். இப்பவும் தங்கி படிக்கும் வசதி இருக்கின்றது ஆனால் அருகில் உயர்நிலைப்பள்ளி இல்லை. நான் பணியாற்றும் பள்ளியும் அவள் வீட்டில் இருந்து இரண்டு பேருந்து பிடித்து தான் வரவேண்டும். வீட்டில் இருந்து படிக்க முடியாததற்கு அவளிடம் நிறைய காரணம் இருந்தது, ஆனால் அவள் எதையும் வெளியே காட்டிக் கொள்ளமாட்டாள்.
தாராவிற்கு திரும்ப அழைக்கலாம் என்று முற்பட்டபோது வாசலில் அழைப்பு மணி. பக்கத்து தெருவில் இருந்து மணி அண்ணனின் கடைக்கார பையன் கையில் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களுடன் நின்று கொண்டிருந்தான். இதோ இந்த லாக்டவுன் ஆரம்பித்த பின்னர் தான் அறிமுகமானான் இந்த பையன். ஆரம்பத்தில் கொரோணா தொற்று பயம் அளவிற்கதிகமாக இருந்ததால் அவனிடம் பேசக்கூடவில்லை. பொருட்களை வாங்கி வெளியில் வெயிலில் கொஞ்ச நேரம் வைத்துவிட்டு பின்னரே எடுத்துவருவேன். அவனை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. அவனுக்கு தாராவின் வயது தான் இருக்க வேண்டும். அல்லது 2-3 வயது கூடுதலாக இருக்கலாம். முகத்தில் பெரும்பாலும் முகக்கவசம் கட்டி இருந்ததால் வயதினை கணிக்க இயலவில்லை. “டீச்சர், நீங்க அந்த ஆலமரத்து ஸ்கூல்ல தான வேலை செய்யறீங்க?” என்று அவனாக கேட்டான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதே பள்ளியில் படித்து இருக்கின்றான். ஆனால் வறுமை காரணமாக படிப்பை விட்டுவிட்டு இருக்கான். அப்படித்தான் அவன் ஆரம்பத்தில் கூறினான் ஆனால் பேசிப்பார்த்தபோது தான் அவன் படிக்க பயந்து வேலைக்கு போயிருக்கின்றான். அவனுடைய உபயத்தால் வீட்டைவிட்டு கீழே இறங்காமல் இரண்டு மாதம் கழித்துவிட்டேன். தேவையான மற்ற பொருட்களையும் வாங்கி வந்துவிட்டான்.
”சாப்பிட்டீங்களா டீச்சர்”
“ம்ம்”
அவன் போன பின்னர் தான் அவன் சாப்பிட்டானா என்று கேட்கவில்லை என்று தோன்றியது. தாராவிற்கு அழைக்க வேண்டும். தாராவும் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டீங்களா மிஸ் என்று தான் ஆரம்பிப்பாள். சாப்பிட்டு கை கழுவும்போதும் சரி, காலை பள்ளிக்குள் நுழையும்போதும் சரி, எப்போது பார்த்தாலும் அது தான் முதல் விசாரிப்பு. போனில் அழைப்பு சென்றாலும் மறுமுனையில் எடுக்கவில்லை. இரண்டாவது அழைப்பில் “ஹலோ மிஸ்” என்றாள். அந்த இரண்டு வார்த்தைகளிலேயே அவளின் ஒட்டுமொத்தமான அன்பினை புரிந்துகொள்ளலாம். கடுமையான வெயில் வெளியே காய்ந்துகொண்டு தான் இருந்தாலும் பனிமழை பொழிவது போன்று இருந்தது. “தாரா”. தாராவை நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஆயிஷாவின் நினைவு வராமல் இருக்காது. இரா.நடராசன் எழுதிய ஆயிஷாவினைப் படித்தபின்னர் தான் ஆசிரியராக இன்னும் ஏதேதோ செய்ய வேண்டுமே என்று எண்ணத் தோன்றியது. தாராவைப் பார்த்த பின்னர் தான் என் புலம்பல்களை குறைத்துக் கொண்டேன். தனியாக வசிக்கின்றேன், உடல் சிக்கல், பள்ளியில் அரசியல், குடும்பத்திற்குள் அரசியல், பெண் என்ற அரசியல், ஆனால் தாரா அனைத்தையும் கடக்க சொல்லாமல் சொல்லிக்கொடுத்தாள்.
“தாரா. பத்திரமா இருக்கியா தாரா..”
“ஓ..”
லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே பிரச்சனைகள் அவள் வாழ்வில் ருத்திர தாண்டவம் ஆடி இருக்கு. கேட்டுக்கேட்டு புளித்துப்போனாலும் உண்மை என்னவோ ஒன்று தானே. அப்பா குடிமகன். மாற்றிச் சொல்லவேண்டுமோ! மதுப்பிரியர். கடைகள் தான் மூடியாச்சே என்று சந்தோஷமாக இருந்த குடும்பத்திற்கு வந்தது இடி, மாற்றுச்சந்தையில் பாட்டில்கள் கிடைத்தனவாம். வருமானமும் இல்லை வீட்டிற்குள்ளவே முடங்கி இருக்க வேண்டிய சூழல். அப்பா எப்போதும் வசை. அம்மாவும் பாவம். வேலை செய்த அப்பார்ட்மெண்ட்டிற்குள் நுழையக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். ரேஷனில் கிடைத்த பொருட்களையும் காசினையும் பாதுகாக்கவே படாதபாடு பட்டார்களாம் அம்மாவும் மகளும்.
டிவி திரையில் பொதுத்தேர்வுகள் ஒட்டி ப்ரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டு இருந்தது. அச்சோ தாரா இந்த வருடம் பத்தாம் வகுப்பு. அதை கேட்கவே இல்லையா?
“தாரா, எக்ஸாமுக்கு நல்லா படிக்கிற இல்லையா? இன்னும் இருபது நாளில் எக்ஸாம். தெரியுமா?”
“மிஸ்.. புஸ்தகம் எல்லாம்..”
ஆமாம் இதை மறந்தே போய்விட்டேன். தாராவும் சரி அவள் தோழிகளும் சரி புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்செல்லும் பழக்கமே இல்லை. ஒருமுறை ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இரவு நேரம் ஒன்றில் படித்துக் கொண்டிருக்கும்போது குடிபோதையில் வந்த அவள் அப்பா ஏதோ எரிச்சல் அடைந்து தாராவின் எல்லா புத்தகங்களையும் கிழித்து எரித்துவிட்டார். மறுநாள் தாராவின் அப்பா தலைமை ஆசிரியரின் காலில் விழிந்தே விட்டார். “அம்மா, பொண்ணுக்கு பெஸ்தகம் ஏற்பாடு பண்ணுங்கம்மா. என் தப்புத்தான்”. இதே பிரச்சனை இன்னும் சில மாணவிகளுக்கும் உண்டு. அவர்கள் எல்லோருமே பள்ளியிலேயே புத்தகத்தினை வைத்துவிட்டு சென்றிடுவார்கள். படிப்பது பள்ளியில் மட்டும் தான். வீட்டிற்கு போனதும் சமைப்பது. வீட்டுவேலைகள் செய்வது, பூக்கடையில் அமர்வது என குடும்ப பாரத்தினை பகிரமட்டுமே முடியும். பேப்பர் செலவாகிடும் என்று இன்றும்கூட ஸ்லெட்டில் தான் எழுதிப்பழகுவாள். வகுப்பில் கீழே விழும் சின்னச்சின்ன துண்டு சாக்பீஸ்களையே பயன்படுத்துவாள். நோட்டு வாங்கிக்கொடுத்தாலும் மறுத்துவிடுவாள். கட்டாயப்படுத்தி சாக்பீஸ் பெட்டி ஒன்றினைக் கொடுத்தேன். “மிஸ் மிஸ் இவ்ளோ பெரிய சாக்பீஸில் எல்லாம் எழுத வராது” என்றாள்.
இவ்வளவு இருந்தாலும் படிக்கணும் படிக்கணும் படிக்கணும் என்று சதா சொல்லிக்கொண்டே இருப்பாள். பள்ளிக்கு வரும் வழியில் பார்ப்பதற்கு எல்லாம் என்னிடம் விளக்கம் கேட்பாள். “மிஸ், அவங்களை மாதிரி ஆக என்ன படிக்கணும்?”. அவள் சிந்தனை முழுக்க மேலே மேலே படிக்கவேண்டும் என்றே இருந்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இரண்டு வாரம் வரவில்லை. அம்மாவிற்கு உடல்நிலை மோசமாகி அவரை பார்த்துக் கொள்ள நின்றுவிட்டாள். அப்போது தான் முதல்முறையாக அவள் வீட்டிற்குச் சென்றேன். மூவர் படுத்தால் வீடு நிரம்பிவிடும். பிழியப்பிழிய வறுமை. “என்ன ஆனாலும் பொண்ணை படிப்பை நிறுத்திடாதீங்க” என்று அவள் அம்மாவிடம் சொன்ன போது அவள் கை என் உள்ளங்கையில் இருந்தது. “மிஸ்..” என்று ஒரு சொட்டு கண்ணீர் விட்டாள். அவ்வளவு இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். தாரா என் பல கண்களை திறந்துகொண்டே இருந்தாள். வகுப்பிற்கு முன்னால் இருந்து குழந்தைகளை பார்த்துக்கொண்டிருந்த நான், குழந்தைகள் பார்வையில் குழந்தைகளிடம் இருந்து பார்க்கத் துவங்கினேன்.
“அப்ப ரெண்டு மாசம் படிக்கலையா தாரா?”
“மிஸ்..”
அவள் ஒரு நாளைக்கு ஒருமுறை சாப்பிடுவதே குதிரைக்கொம்பு என்ற போது தொண்டை அடைத்துக்கொண்டது. மூன்று வீடு தள்ளி இருக்கும் ஒன்பதாம் வகுப்பு தம்பி ஒருவரின் ஒன்பதாம் வகுப்பு புத்தகங்களை வாங்கி படித்திருக்கின்றாள். அவளுக்கு ஏதாவது படிக்க வேண்டும். ஒரு நாள் பள்ளியை நோக்கி நடந்து வர ஆரம்பித்து இருக்கின்றாள் தனியாக. உச்சி வெயில். அவளிடம் செருப்பு இல்லை. வழியிலேயே ஒரு போலிஸ்காரர் தடுத்து இருக்கின்றார். என்ன ஏது என விசாரித்ததும், ஸ்கூலுக்கு போய் புஸ்தகம் எடுக்கணும்னு சொல்லி இருக்கின்றாள். “நான் விட்டாலும் இன்னும் 5-6 செக்போஸ்ட் இருக்கு கண்ணு. வீட்டுக்கு போ” ”அண்ணா, ஸ்கூல்ல சத்துணவு போடுவாங்களா?” என விசாரித்ததும் , இந்தா என்று 100 ரூபாயை கொடுத்து இருக்கின்றார். “மிஸ், நான் நல்லா படிச்சா நிறைய பேருக்கு ஹெல்ப் செய்ய முடியுமா மிஸ்..”
கால் துண்டித்தது. வெறுமையாக இருந்தது. மூன்று நிமிடத்தில் ஒரு மிஸ்ட் கால். “மிஸ், பேலன்ஸ் இல்ல மிஸ். தப்பா நெனச்சிக்காதீங்க. போன் இவ்ளோ நாள் ரிப்பேர்ல இருந்துச்சு”. பெற்றோர்களின் எண்களைக் கொண்டு வாட்ஸப் குழு ஆரம்பிக்கவேண்டும் என்ற செய்தி மனத்திரையில் ஓடியது. “மிஸ் எங்களை எக்ஸாம் எழுத விடுவாங்களா, நாம் ப்ளஸ் ஒன் எல்லாம் படிக்கலாம் இல்லையா? காலேஜ் போவேனா?” என்றாள்.
எதுவும் பதில் இல்லை. தங்கமே நீ நல்லா படிப்படின்னு மனசு நூறு முறை சொல்லிகிச்சு.
“மிஸ், ஸ்கூல் எப்ப தொறக்கும். புக்ஸ் எல்லாம் வந்து எடுத்துக்க முடியுமா?”
உண்மையில் என்னிடம் கூட எந்த தகவலும் இல்லை தான். நிலைமை ஒன்றும் புரியவில்லை ஆனால் அவளை படிக்க வைக்க வேண்டும் என்று உறுதி கொண்டேன். வீட்டிற்கு வரவழைத்து அடுத்து எப்போது தேர்வு வந்தாலும் அதுவரையில் என்னுடன் வைத்திருந்து படிக்க வைக்க வேண்டும், அப்புறம் கதையை அப்புறம் பார்த்துக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தேன். “மிஸ், அம்மா தனியா அப்பாகிட்ட உதபடும் மிஸ்” என்று இழுத்தாலும் அவளையும் அவள் பெற்றோரையும் சாமாதானம் செய்ய போதும் போதும் என்றாகிவிட்டது. பெரும் நிம்மதி மனதில் குடிகொண்டது. அவளை வீட்டிற்கு அழைத்துவரவும் வேறு ஒரு நண்பர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டேன். எல்லாம் முடிந்த பின்னர் மீண்டும் ஒரு மிஸ்ட் கால். அச்சோ ஏதேணும் சிக்கலா என்று நினைத்தபடி மீண்டும் அழைத்தேன்.
“மிஸ்”
“சொல்லு தாரா”
“சாப்பிட்டீங்களா மிஸ். கேட்கவே மறந்துட்டேன்”
மணி அண்ணன் கடைக்கு போன் செய்த போது அந்த பையன் எடுத்தான். “ரெண்டு ஆளுக்கு மளிகை சாமானா மாத்திக்க தம்பி”
“என்ன டீச்சர் யாரு வராங்க” என்றான் உரிமையாக. என்னவென்று அவனிடம் சொல்ல..
”...”
“டீச்சர்”
“என் பொண்ணு”
- விழியன்
(மே 27, 2020)
No comments:
Post a Comment