Wednesday, June 3, 2020

ஆடித்தள்ளுபடி

ஆடித்தள்ளுபடி (மனதை தொட்டுவிடும் கதை – 87) 
#ganeshamarkalam

குழாயில் தண்ணி வரதோ இல்லையோ, இது மட்டும் கரெக்டா வந்துடும். நேத்தே ஆரம்பிச்சாச்சு. விதவிதமா ட்ரெஸ் மாட்டிண்டு பொண்களும் குழந்தைகளும் ஸ்க்ரீனில் வந்து ஆட்டம் போடரா. சினிமா ஸ்டார்ஸ் பத்தலைன்னு கடை சொந்தக்காராளே அவாளோட சேர்ந்து குத்தாட்டம். ஆடித்தள்ளுபடியாம். உடனே வரணுமாம். அள்ளிண்டு போலாமாம்.

எனக்குத் தெரிந்தவர் திநகரில் துணிக்கடையில் இருக்கர். ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே துணிகளில் விலையை அதிகப்படுத்தி ஒட்டரத்துக்கு ஸ்டிக்கர் அனுப்பிச்சுடுவாளாம். ஜூலை 12 வாக்கில் எல்லாத்துலேயும் ஒட்டணுமாம். அதை ராப்பகலா செய்வாளாம். அதில் கொஞ்சம் தள்ளுபடி செஞ்சு ஆடிமாசம் பூரா விப்பாளாம். வாங்கரவன் கேணையன்னு தெரிஞ்சப்புரம் இதெல்லாம் சுலபம். இப்போ நகைக்கடையிலும் ஆடித்தள்ளுபடி. தங்கத்தின் விலை அதிகமாரச்சே என்னத்தை தள்ளுபடி செய்யரா? செய்கூலியில், சேதாரத்தில். அதுக்கும் போய் விழரது. முக்காவாசி நம்ம பிராம்ணாதானாம்.

“கலர் ப்ளஸ்”ஸில் 2 வாங்கினா 2 ஃப்ரீயாம். பிக்பஜாரில் ஆடி மாசம்தான்னு இல்லை, எப்போவுமே 1 வாங்கினா இன்னொண்ணு இனாம். பாக்கரவாளுக்கும் படிக்கரவாளுக்கும் நாக்கில் ஜலம் ஊறுமே! க்ரெடிட் கார்டை எடுத்துண்டு கிளம்பிடுவா!

இன்னைக்கு கார்த்தாலே “நேத்து அரைச்சு வச்ச பீர்க்கங்காய் துவையல் இருக்கு, அடுப்பில் சாதம் வச்சுட்ரேன், மூணு விஸில் வந்ததும் அணைச்சிடுங்கோ. அப்பளம் சம்படத்தில் இருக்கு. கொஞ்சம் நமுத்திருக்கும், பரவாயில்லை சாப்டுக்கோங்கோ, காஞ்சீபூரம் வரைக்கும் வைதேகியோட போயிட்டு வரேன்”னு எங்காத்தில் கிளம்பினா. ஏகாம்பரேஸ்வரரோ, வரதராஜரோ கூப்பிட்டனுப்பிச்சு பக்தி வெள்ளத்தில் அடிச்சிண்டு போரான்னு நினச்சேள்னா உங்களைப்போல அசடு இருக்கமுடியாது. 

அங்கே வரமஹாலக்ஷ்மின்னு ஒரு பட்டு ஜவுளிக்கடையில் ஆடி சேல். உள்ளூரில் 30 கடை இருந்தாலும் பக்கத்தூரில் போய் வாங்கரது தான் ட்ரெண்டிங்க். ஒருதடவை அப்படி போயிட்டு காரில் வந்து இரங்கச்சே “ஏன்னா இங்கே கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணுங்கோ, சும்மாத்தானே இருக்கேள்”னு வாசல்லேந்து கூப்பிட்டா. கேப் ட்ரைவருக்கு தெரிஞ்சுடுத்து நான் சும்மா இருக்கேன்னு. வெளீலே வரச்சே பாவமா பாத்தான். கல்யாணம் ஆயிடுத்து போல இருக்கு. 8 கட்டப்பை கைக்கு நாலா எடுத்துண்டு வந்தேன். “மொத்தமா வாங்கி சீப்பா முடிச்சுட்டோம்”னா. ஓரு கட்டப்பை வைதேகியோடதாம். அப்போத்தான் நின்ன மூச்சில் 12.5% திரும்ப வந்தது.

நான் கத்தக்கிளம்பிடுவேன்னு அவளுக்கு தெரியும். “உங்களுக்கும் இருக்கு!” ஒரு 75ரூக்கு பருத்திபட்டு அங்கவஸ்திரம். கூர்ந்து பாத்தா ஒரு இழையா ஜரிகை ஒடரது தென்படலாம். இதுக்கு நான் மசிஞ்சுடுவேன்னு கரெக்டா கணக்கு பண்ணி தனக்கு வாங்கிண்டதை காமிக்கரத்துக்கு முன்னாடி இதை எடுத்தா. இப்படி கிடெச்சதை வச்சு திருப்தி பட்டுக்கணும்.

போன வருஷம் ஆடித்தள்ளுபடிக்கு ஃபீனிக்ஸ் மால் போலாமேன்னு ஐடியா. தந்தது என் பொண்ணரசி. சரி, நாமும் ஏதாவது வாங்கிக்கலாம், புதுசு வாங்கி ரெண்டு வருஷம் ஆச்சேன்னு ஜாலியா கிளம்பினேன். நாங்க இங்கேந்து அங்கே போரதாயும், என் பொண்ணும், பேரப்பசங்களும் அவாளாவே அங்கே வந்துடுவா, முடிஞ்சா மாப்பிள்ளையும் அரைநாள் லீவு போட்டுட்டு சேர்ந்துப்பார்னு பிளான். இதுக்கெல்லாம் நன்னாவே பிளான் போட்ரா. லீவுன்னதும் “as I am suffering from fever” ஞாபகம் வரும். இப்போல்லாம் க்ளையன்ட் மீட்டிங்க்னு சொன்னாப் போதுமாம். உலகம் நன்னா அட்வான்ஸ் ஆயிடுத்தே. போட்ட பிளானில் எந்த தடங்கலும் இல்லாம கரேக்டா எல்லாரும் வந்துட்டா.

என்ன பண்ணலாம்னு யோசிக்கரத்துகுள்ளேயே பசங்க தெளிவா, “தாத்தா முதல்ல 4DXலெ “இன்க்ரெடிபிள்ஸ் 2” பாத்துட்டு சாப்பிடணும், அப்புரம் ஷாப்பிங்க், நீ என்ன சொல்ர?” சரிதான், இதில் நான் சொல்ல என்ன இருக்கு? என் பொண்ணை பாத்தேன். அவள் “என்னை ஏன் பாக்கிராய், நீ ஆச்சு உன் பேரன்களாச்சு”ங்கிரா மாதிரி வேரபக்கம் திரும்பிண்டா. கடைசீயா லைஃப்ஸ்டைலில் ஷாப்பிங்க் செய்யரச்சே ஆளுக்கு ஒரு ஏரியாவுக்கு பிரிஞ்சு போய் தங்களுக்கு வேணுங்கிரதை எடுத்து, ட்ரை பண்ணிப்பாத்து கையில் ஒரு வலைப்பையில் ரொப்பிண்டு வந்தா. 

அந்தக்கடையில் எங்கெல்லாம் ட்ரயல் ரூம் இருக்குன்னு இவாளுக்கு தெரிஞ்சிருக்கு. நான்தான் அந்த மாலுக்கே புதுசு. ஆத்துக்காரி “எல்லாத்தையும் ஒரே பையில் வைங்கோ கண்ணுகளா. அப்போதான் தாத்தாவுக்கு பில்லிங்க் கவுன்டரில் சௌரியமா இருக்கும்”னு சொல்லிக்கொடுத்தா. வாங்கிண்டு வந்து சேர்ந்தோம். காரில் ரிடிஸ்ட்ரிபுயூஷன் நடந்தது, அவாத்தில் இறக்கவேண்டிய துணிகள், எங்காத்துக்கு வரவேண்டியவைன்னு. ஆத்துக்கு வந்தால், எனக்குன்னு ஒன்ணுமே வாங்கலைன்னு எனக்குமட்டும் தெரிஞ்சது. தள்ளாடற வயசில் என்னையே தள்ளிவச்சுட்டாளே! இதான் ஆடித்தள்ளுபடியோ!

சரி போகட்டும் இன்னும் கொஞ்சநாள் இருக்கு, இல்லைன்னா அடுத்த வருஷமும் ஆடி வராமலா போயிடும்னு மனசை தேத்திண்டேன். நம்ம மனுஷாளுக்கு கல்யாணம், விசேஷம்னு வாங்கினாத்தான் உண்டு இல்லைன்னா இப்படி தள்ளுபடியில்தான்.

நினெச்சுப்பாத்துக்கரேன். ஹாய்யா எங்கேயாவது போரச்சே கடையில் பாத்துட்டு, “நன்னா இருக்கே”ன்னு பிடிச்சுப்போய் எனக்குன்னு ஒண்ணுமே வாங்கிண்டதில்லை. தீபாவளிக்கு, அப்புரம் தள்ளுபடியில், அப்புரம் எங்காத்து கல்யாணங்களில் வச்சுக்கொடுத்ததுன்னே போன 15 வருஷமும் ஓடியிருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் ரெண்டு ஷட்டகரும் தன் பொண்ணுகளுக்கு கல்யாணம் செஞ்சா. “அவா வச்சுக்கொடுத்த வேஷ்டியும் துண்டும் இருக்கே, அதை முதல்லே போட்டு கிழிங்கோ”ன்னுட்டு என்னை எங்கேயும் அழைச்சிண்டு போய் புதுசு வாங்கித் தந்ததில்லை. 

6 வருஷத்துக்கு முன்னாடி என் முதல் பொண் வயத்துப்பேரன் லீவுக்கு வரச்சே ரெண்டு பெர்மூடாஸ் கொடுத்தான். அவன் அப்பா யூஎஸ்ஸில் தனக்குன்னு வாங்கிண்டது மறந்துபோய் எடுக்காம பீரோ அடீலே வீடுமாத்தரச்சே கிடெச்சிருக்கும். தெரியாதா என்ன? இருந்தாலும் மூத்த பேரனின் முதல் பரிசு. பழக்கமில்லை, இருந்தாலும் அதை எடுத்து ஒருநாளைக்குப் போட்டுண்டேன். 

இடுப்பில் கருப்பு பெர்மூடாஸ், சைடில் மஞ்சள் கோடு. எத்தனை முடிச்சு போட்டாலும் 8இன்சுக்கு நாடா முன்னாடி தொங்கரது. மேலே பூணல் போட்ட கருத்த உடம்பு, கழுத்தில் மெல்லிசா செயினில் ஒத்தை ரூத்ராக்ஷம், நெத்தியில் குளிச்சதும் இட்டுண்ட மூணுவிரல் பட்டை. பாக்கிரத்துக்கு வினோதமா இருந்திருக்கும். எங்காத்துலே சொன்னா, “உங்களுக்கு ரொம்பவே நன்னா இருக்கு”ன்னு. நானும் கொஞ்சநாழி கண்ணாடி முன்னாடி நின்னு பாத்துட்டு “நன்னாதான் இருக்கு போலைருக்கு”ன்னு சந்தோஷப்பட்டேன். 

ரெண்டுநாள் கழிச்சு இவள் வேலைக்காரிகிட்டே சொல்லிண்டிருக்கா. “சாரோட துணி இனிமேல் நிறைய விழாது. ஒரு அரை நிஜார்தான்”னு. சரிதான். இப்படியே விட்டா ஒருநாள் பழனியாண்டவர் மாதிரி ஆக்கிடுவா. “கோமணம் தானே குளிக்கரச்சே நீங்களே துவச்சுடுங்கோ, ஒரு உதறு உதறினா காஞ்சுடும், திரும்பவும் அத்தையே கட்டிண்டு வெளீலே வாங்கோ”னு சதி பண்ணுவாளோ!

படுத்துண்டா தூக்கம் வரலை. சென்னை சில்க்ஸில் ஆடித்தள்ளுபடியில் கோமணம் விக்கமாட்டானே! இப்படியெல்லாம் கவலை அலைக்கழிச்சது.

இந்த மாசம் ஆடி பிறந்ததுமே நாமே போய் நமக்கு வேண்டியதை மனசுக்கு பிடிச்சாமாதிரி வாங்கிண்டுடணும். ஷட்டகருக்கு கல்யாணம் செஞ்சுகொடுக்க பொண்கள் தீந்து போச்சு. இனிமேல் வேஷ்டி துண்டு எங்கேந்தும் வராது, நாமாத்தான் ஏர்பாடு செஞ்சுக்கணும். ஒரு வேஷ்டி தனியா எடுத்து வச்சுண்டுடணும். பழசா ஆனாலும். ஆபத்து சம்பத்துக்கு உதவும். ஒரு மனக்கணக்கு போட்டேன். எட்டு முழமா இருந்ததுன்னா 32 கோமணம் வெட்டலாம். சொச்ச லைஃபை ஈஸியா ஓட்டிடலாம்.

நாளைக்கு கார்த்தாலே சீக்கிரமா எழுந்து குளிச்சு நெத்திக்கிட்டுண்டு பூஜையை ஷார்ட்டா பண்ணிட்டு எப்பவும்போல ரவா உப்புமா சாப்டுட்டு திநகருக்கு கிளம்பிடணும். யாராவது கேட்டா ஜிஎன்செட்டி ரோட்டில் என் ஃப்ரெண்ட் தியாகராஜனுக்கு ஜுரம்னு சொல்லிடணும். ஏன், எனக்கு பிளான் செய்ய வராதா? அப்போதான் போன் அடிக்கரது. எப்போவும் இல்லாம லேண்ட்லைனில். 

உள்ளே பூண்டு வதக்கிண்டிருந்தவ இது அடிக்கும்னு முன்னாடியே தெரிஞ்சு வச்சிண்டிருந்த மாதிரி “அடுப்பை கொஞ்சம் பாத்துக்கோங்கோ”ன்னு ஓடிவரா. ஏன் நான் எடுக்க மாட்டேனா? பூண்டை நான் ஏன் பாத்துக்கணும்? வெளி வராந்தாவுலேயே நாத்தம் சகிக்கலை. வந்தவ போனில் யார்னுகூட கேக்காமல் “ஆகட்டும், சரி, எத்தனை மணிக்கு, சரி, நான் பாத்துக்கரேன்” அப்படின்னு மோனோசிலபிளில் பதில் சொல்லிட்டு போரா. முன்னே ஒருதடவை “யார் போனில்”னு கேடடுட்டு வாங்கிக்கட்டிண்டது நினைவிருக்கு. நமக்கேன் வம்புன்னு பேசாம வாசல் ஊஞ்சலில் உக்காந்துண்டேன். 

அந்த வைதேகியா இருக்கும். “கட்டப்பை கலெக்ட் செய்யப்போலாம், வரியா”னு கேட்டிருப்பா. இல்லை இவள் தம்பி, இந்தியன் பேங்கில் இருக்கான். அக்கா நீ பண்ர அவியல் நன்னா இருக்கும். பண்ணிண்டு வந்து தரியான்னு கேட்டிருப்பான். அவன் லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுண்ட பொண் சமைச்சா எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். அப்பப்போ தான் உயிர் வாழரத்துக்கு அக்காகிட்டே வாங்கிச் சாப்பிடுவான். ஆத்துக்காரிக்கு தெரியாம போன் போடுவான். இவளும் அண்ணா நகருக்கு அவியலெடுத்துண்டு போவள். ஓலாவில். நூறு ரூபாய் பெறும் அவியலை கொண்டு சேர்க்க 500 ரூபாய் வண்டிச்சத்தம். நான் இங்கேயே வாசல் ஊஞ்சலில் உக்காந்து 600 ரூபாயில் எத்தனை வேஷ்டி வாங்கலாம், ஒரு வேட்டிக்கு 32ன்னா எத்தனை கோமணம் வரும்னும் அது எல்லாம் போச்சேன்னு இருப்பேன்.

10 மணிக்கு ஜவுளிக்கடை தொறந்துடுவானே? கிளம்பின சரியா இருக்கும். 9:20க்கு 52ஸி அஸ்தினாபுரத்த்லேந்து நேர திநகர் பஸ் ஸ்டாண்ட்வரை போகும். “கிளம்பரேன்”னதும் எங்கே போராய்னு கேட்டா அபசகுணம்னுட்டு “என்ன அவசரம்”னு கேட்டா. அதுக்கு விளக்கம் சொல்ரச்சே எங்கேன்னு தெரிஞ்சுடுமாம். கோயமுத்தூர்காரியாச்சே! “தியாகராஜனுக்கு ஜுரம்”னு இழுத்தேன். “இப்பொல்லாம் நிறைய தொத்து ஜுரம் அடிக்கரதாம், நீங்க ஒண்ணும் நேர்லே போய் பாக்கவேண்டாம். வாட்ஸப்பில் வீடியோபோட்டு பாருங்கோ”ன்னுட்டா. அட, இதை எதிர்பாக்கலையே! இவ்வளவு கேவலமாவா பிளானிங்க் பண்ணினேன்? பதிலுக்கு கொஞ்சம் யோசிக்கணுமே! “எதுவாயிருந்தாலும் ஒரு மணிநேரம் கழிச்சு போங்கோ. மாப்பிள்ளையும் பொண்ணும் வரான்னு இப்போதான் போன் வந்தது”ங்கிரா.

அவாளுக்கு எப்படி நான் துணி வாங்கப்போரது தெரிஞ்சது? இவ சொன்னாளா? இவளுக்கே தெரியாதே? நாமே ஏதாவது தூக்கத்தில் நேத்து ராத்திரி பினாத்திட்டேனா? தெரிஞ்சு வராளா, இல்லை தெரியாம வராளா? தெரிஞ்சால், நம்மோட ஆடித்தள்ளுபடிக்கு கடைத்தெருவுக்கு வரப்போராளா? அப்படீன்னா போன வருஷம் ஆனாப்புலே ஆயிடுமா? இல்லை, வேர வேலையா வந்தாலும் நான் போரேன்னு தெரிஞ்சு நாங்களும் வரோம்னு சொல்லுவாளா? ஈஸ்வரோ ரக்ஷதுன்னு விட்டுட்டேன்.

சரியா 10:20க்கு மாப்பிள்ளை கார் நம்மாத்து முன்னாடி வந்து நிக்கரது. என் ரெண்டு பேரப்பசங்களும் என்னைப்பாத்துட்டு ஓடிவந்து கட்டிக்கரா. “தாத்தா! என் புது ஜீன்ஸ், டி ஷெர்ட் பாத்தியா”ன்னு அவன் காமிக்க, இன்னொருத்தன் கையில் மண்டை சைஸுக்கு ஒரு புது வாட்ச் “மணிபாத்து சொல்லவா”ன்னு காமிக்கரான். பின்னாடியே பொண்ணும் மாப்பிள்ளையும் புதுசு உடுத்திண்டு வரா. கையில் ரெண்டு கட்டைப்பை. சரிதான் இவாளோட ஆடித்தள்ளுபடி பர்சேஸ் முடிஞ்சிடுத்து. நல்லது, நாம இப்போ ஜாலிய போகலாம்னு மனசு லேசாச்சு. எல்லாம் ஈஸ்வரன் செயல்.

வாங்கோன்னு உள்ளே அழைச்சிண்டு போரேன். பொண் கேக்கரா, “என்னப்பா எங்கே கிளம்பிப் போரத்துக்கு ரெடியா நிக்கராய், நாங்க வந்து உன்னை டிலே ஆக்கிட்டோமோ”ங்கிரா. “அதாண்டி ஆடி சேல் போட்டிருக்கானோ, ரெண்டு ட்ரெஸ் எடுத்துக்கலாம்னு.” “எங்கேயும் போக வேண்டாம். இங்கே பாரு, நாங்களே உனக்கு வாங்கிண்டு வந்துட்டோம்”னு பையை கொடுத்தா. 

பிரிச்சு பாத்தா, ரெண்டு 8 முழம் மில்லு வேஷ்டி, ஒரு ஜீன்ஸ், ரெண்டு டீ ஷொர்ட், பசங்க போட்டிண்டிருக்காப்புல அதே டிஜைன், அதே கலர். “சீக்கிரம் போட்டுண்டு வா. இவா ரெண்டுபேரும் உன்னோட செல்ஃபீ எடுத்துக்கணும்னு வந்திருக்கா.”

No comments:

Post a Comment