Tuesday, July 5, 2022

மறுபடி - சுஜாதா

 மறுபடி - சுஜாதா சிறுகதை

(குமுதம் 05.09.1963)

காதலனும் ஓட்டலிலே

காதலர்கள் என்றால் பாதி சந்திரனின் மங்கலான ஒளியில் ஒடிப் பிடித்து விளையாடி விஸ்வநாதன்-ராமமூர்த்தி மெட்டு ஒன்றில் உனக்காக எனக்காக என்று பாட்டும் பாடிவிட்டு அர்த்தமற்ற சிரிப்புகளும், வார்த்தைகளுமாக எப்போதும் சென்ஸாரை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு ஒருவரை யொருவர் அணைத்துக் கொள்கிற பிரகிருதிகள் என்று எண்ணுவீர்கள்.

அப்படி இல்லை இந்தக் கதையின் காதலர்கள். பெயர் ராமச்சந்திரன், ஸவிதா. வயது 26;22

ஸவிதா மெல்லிய பெண். பெரிய கண்கள். அலட்சியமான அழகு.

ராமச்சந்திரன், கண்ணாடி போட்ட சாத்வீகமான ஆசாமி. மாநிலக் கல்லூரியில் பி.எச்.டிக்கு 'தெர்மோ எலக்டிரிஸிடி' என்பதில் ஆராய்ச்சி செய்து கொண் டிருக்கிறான்.

இதைப் பற்றி அவன் பேசத் துவங்கினால் ஸவிதா. 'நான் எழுந்து போய்விடுவேன்' என்று பயமுறுத்துவாள். ஸவிதா பி.எஸ்ஸி. படிக்கிறாள். இருவரும் சந்தித்தது பார்க்கில் இல்லை. முதலில் சாதாரணமாக அறிமுகமானவர்கள். பின்பு தற்செயலாகச் சந்தித்தவர்கள். பிறகு வேண்டுமென்றே சந்தித்தவர்கள்.

பின்பு 'ஸாமர்ஸெட் மா'மின் நாவல்கள் பற்றியும், புதுமைப்பித்தன் கதைகள் பற்றியும் பேசிவிட்டு இருவருக்கும் பரஸ்பரம் ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று கண்டுபிடித்தவர்கள்.

இவர்கள் காதலில் இல்லாதது, 1.சோகப் பெருமூச்சுகள் 2. ஆதர்ச விஷயங்கள் 3. நீ என் உயிர், நான் உடல் போன்ற வசனங்கள்.

மௌண்ட்ரோடின் ஓர் ஓட்டலில் மாடியில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஜுக்பாக்ஸ் என்னும் ராட்சசன் அலறிக் கொண்டிருக்க, அந்த அவறலுக்கு மேல் 'பில்' யார் கொடுப்பது என்று தீவிரமாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்.

"எத்தனை தடவை நீங்கள் கொடுப்பீர்கள்?" என்கிறாள் ஸவிதா,

"இல்லை ஸவிதா. நம் இருவரில் கொஞ்சம் சம்பாதிக்கிற ஆள் நான்தான். நான் கொடுக்க வேண்டியதுதாள் முறை.'

'நான்தான் கொடுப்பேன்." அவள் பிடிவாதம் பிடிக்கிறாள். 'சரி' என்று ராமச்சந்திரன் வெய்ட்டரைக் கூப்பிட்டு ஜூக்பாக்ஸைக் காட்டி, 'அதை நிறுத்து. அதற்கு எத்தனை பேர் வேண்டும்?” என்று கேட்கிறான்.

ஸவிதா சிரிக்கிறாள். அவள் சிரிப்பில் கவர்ச்சி இருக்கிறது. நாம் முன் சொன்னதுபோவ் அலட்சியமான அழகு. எதிரே போகிற வரை அயர வைக்கும் அழகல்ல; சில சித்திரக்காரர்களின் வேக மான கோடுகளின் விளைவால் திடீரென்று தென்படும் அழகு.

ராமச்சந்திரனின் கண்ணாடி மூலம் பார்த்தால் அவள் தேவதை. ஜூக் பாக்ஸ் ஓய்ந்தது. ராமச்சந்திரன். “சீக்கிரம் பேசு ஸவிதா, மற்றொரு ஆள் நாலணா போடுவதற்குள்" என்கிறான்.

"என் மாமாவை வெள்ளிக்கிழமை வந்து பாருங்களேன்...

"உன் மாமாவை நீ வர்ணித்திருக்கிறபடி பார்த்தால், அவரை நெருங்கவே பயமாக இருக்கிறது. என்னவோ ஹிப்னாடிஸம். மெஸ்மரிஸம் என்று எல்லாம் படிப்பார் என்றாயே!"

''அதுவா; ஹிப்னாடிஸத்தில் அவருக்கு ஆர்வம் உண்டு பெரிய பெரிய விஷயங்கள் படிப்பார். ஆனால் ரொம்பத் தங்கமானவர். எனக்கு அப்பா. அம்மா எல்லாம் அவர்தான். சிறு வயதிலிருந்தே படிக்க வைத்து வேண்டுமென்கிற பணமும், சுதந்திரமும் கொடுத்து, ஒரு குறைவுமில்லாமல் வளர்த்தவர். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் அவரைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்."

"அவரிடம் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறாயா?"

''ஓ. நிறைய. அவரே உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நம் இருவரையும் பற்றி அவருக்கு நிறையத் தெரியும்.”

"எல்லாம் தெரியுமா?"

"எல்லாம் என்றால்?"

'நான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புவது

'"அதை இன்னும் சொல்லவில்லை. நீங்கள்தான் வந்து கேட்க வேண்டும்."

"எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது. எனக்கும், அவருக்கு பேச பொது விஷயங்கள் கிடையாது. சும்மா ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறோம்."

'நான் கவனித்துக் கொள்கிறேன். வந்து கொஞ்சம் சாதுர்ய மாகப் பேசிக் கொண்டிருங்கள். நகத்தைப் பார்த்துக் கொண்டு வானிலை பற்றியும், ரஷ்யாவில் ஐந்து வருஷத் திட்டம் பற்றியும் பேசாதீர்கள்" என்றாள் ஸவிதா.

''சரி, வெள்ளிக்கிழமை வருகிறேன்.'

தட்டுங்கள் அதட்டப்படும்

வெள்ளிக்கிழமை அவள் வீட்டு வாயிலில் பொத்தானை அழுத்தும் போது, ராமச்சந்திரன் உலகமே தன் இன்ப வாழ்க்கைக் காக அமைக்கப்பட்டதாக நினைத்தாலும், ஸவிதாவின் மாமாவைச் சந்திப்பதில் சற்றுப் பயமாகத்தான் இருந்தது. அவர் சம்மத மில்லாமல் ஸவிதாவை மணந்து கொள்வது முடியாத காரியம். அவரைத் தன் நடத்தையால் கவர வேண்டும். கதவு திறந்தது. ஸவிதா நீலப்புடவையில் உயரமாக நின்றாள். அவளது கண்களில் மெலிவான சோகம், "யெஸ்?" என்றாள்.

"ஹலோ ஸவிதா, நேரமாகிவிட்டதா என்ன?”

"உங்களுக்கு யார் வேண்டும்?" ராமச்சந்திரன் சிரித்தான். "இது என்ன ஸவிதா? என்னைத் தெரியவில்லையா?"

"மிஸ்டர்! நீங்கள் யார்?"

''என்னடா இது? ஏதாவது ஜோக் செய்கிறாயா? என்னைத் தெரியவில்லையா? ஏ.வி. ராமச்சந்திரன்.'

அவள் அவனைப் பார்த்த பார்வையில் இருந்த வினோதம் அவனுக்கு அர்த்தமாகவில்லை. "மன்னிக்க வேண்டும். நீங்கள் வீடு தவறி வந்திருக்கிறீர்கள்.

உங்களை எனக்குத் தெரியாது." "என்ன! விளையாடுகிறாயா ஸவிதா? முந்தா நாள் உன் மாமாவைப் பார்க்க என்னை இங்கு வரச் சொன்னாய். ஞாபகம் இல்லை."

"இல்லை. இதில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. உங்களை எனக்குத் தெரியவே தெரியாது!"

"சீ! என்ன விளையாட்டு இது ஸவிதா!" என்று அவள் கையைப் பிடித்தான்.

அதிர்ச்சியில் கையை உதறிக்கொண்டு "இடியட்! என்ன விளையாட்டு? மாமா! மாமா” என்று பயமும் தைரியமும் கலந்த குரலில் கூப்பிட்டாள். மாடிப்படியிலிருந்து தடதடவென்று இறங்கி வந்தார் நடேசன்.

(பட்டை பிரேம் கண்ணாடி. மிக உயரமான உடல். தீவிரமான முகம்).

"என்ன ஸவிதா?''

"மாமா இந்த ஆள் என் பெயர் சொல்லிக் கூப்பிட்டு என்னவோ பேசுகிறான். இவனை எனக்குத் தெரியாது. என்னைத் தெரிந்தவன் போல் காட்டிக் கொள்கிறான்!"

"யாரடா நீ?" மரியாதையில்லாத இந்தக் கேள்வி அவனை நிலைக்க வைத்துவிட்டது. இதெல்லாம் நாடகமா, நிஜமா என்று தெரியவில்லை.

ஸவிதா, அவனைப் பயத்துடன் பார்த்துக் கொண் டிருந்தாள். அந்தப் பார்வையில் பொய் இல்லை, ஜாலமில்லை. முன்பின் தெரியாதவனை வெறுப்புடன் பார்க்கும் உண்மையான பார்வை.

"நான் ஸவிதாவின் நண்பன். எனக்கு ஸவிதாவை நன்றாகத் தெரியும். அவளுக்கும் என்னை நன்றாகத் தெரியும். உங்களைப் பார்க்க. இவள்தான் என்னை இங்கு அழைத்திருந்தாள்... நீங்கள் தானே நடேசன்?"

"இல்லை மாமா, இவனை எனக்குத் தெரியவே இதற்கு முன் நான் இவனைப் பார்த்ததே இல்லை.'

தெரியாது.

நடேசன் கைச் சட்டையை மடக்கிக்கொண்டு "ஏய் இந்த மாதிரி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்!'' என்றார்.

ராமச்சந்திரன், 'மிஸ்டர் நடேசன், நான் சொல்வது உண்மை. இவளை எனக்கு நன்றாகத் தெரியும். இருவரும் மணிக்கணக்காக..." என்றான்.

"பொய் மாமா, பொய்!" என்று உரக்கக் கத்தினாள் ஸவிதா. கண்களில் மெலிதாக ஈரம் தெரிந்தது.

"ஸவிதா! இங்கே பார். என்னைப் பார்த்துச் சொல்! என்னைத் தெரியாது உனக்கு?''

ஸவிதா அவனை நேராக வெறித்துப் பார்த்து, ''உன்னை எனக்குத் தெரியாது" என்றாள்.

"ஸவிதா நீ உள்ளே போ" என்றவர்,

"ஏய் நீ இப்பப் போகிறாயா, இல்லை உதைக்கட்டுமா?" என்றார் ராமச்சந்திரனை நோக்கி.

"மரியாதையாகப் பேசுங்கள் சார்! ஸவிதாதான் என்னைக் கூப்பிட்டாள் இங்கே. வேண்டுமென்றே இப்போது பொய் சொல்கிறாள்."

வலுவான கரங்களை அலன் மார்பில் வைத்து உந்தித் தள்ளினார் நடேசன். படிகளில் தடுமாறி சமாளித்துக் கொண்டு நின்றான் ராமச்சந்திரன்.

நடேசன் தொடர்ந்து தள்ளினார்.

"ஸவிதா, ஏன் இப்படிப் பொய் சொல்கிறாய்? ஏன் இப்படி அவமானப்படுத்துகிறாய்?"

ஸவிதா உள்ளே போய்விட்டாள். தள்ளப்பட்டுத் தெருவில் பிரமிப்புடன் அவன் நின்றான்.

பத்துப் பதினைந்து பேர் கூடி ஆர்வத்துடன் இந்த வினோத நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந் தார்கள்.

அவர்களில் ஒருவர் சற்றுப் பலமாக "பெண்பிள்ளை விஷயம் போலிருக்கிறது' என்றார்.

ராமச்சந்திரன் கவனிக்காமல் நடந்தான். எல்லாம் வேடிக்கையாகச் செய்தோம். திரும்பி வா! என்று கூப்பிடுவார்கள் என்று கூட எதிர்பார்த்தான்.கூப்பிட வில்லை.

நடேசன் சிரித்தார்

ஸவிதாவின் இந்த நடத்தையைப் புரிந்துகொள்ள இதற்கு முதல் நாள் நடந்த நிகழ்ச்சிக்குப் போகிறோம். நடேசனின் அறை; சன்ன மான வெளிச்சம். எதிரே வெண் சுவரில் மேஜை விளக்கின் வட்ட ஒளி. திரைச் சீலைகளின் சலசலக்கும் விநோதமான நிழல்களும் நடேசனின் கீழ் ஸ்தாயியில் நிறைந்த சும்பீரமான குரலும் ரேடியோவிலிருந்து தப்பித்து வரும் மெதுவான சங்கீதமும் அந்தச் சூழ்நிலைக்கு ஒரு தீவிரத்தை அளித்தன. ஸவிதா எதிரே உட்கார்ந்து கொண்டு ராமச்சந்திரனைப் பற்றி மிக ஆர்வத்துடன் நடேசனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"ரொம்ப நல்லவர் மாமா நிறையப் படித்தவர். நிதானமான ஆசாமி..." நடேசன் குறுக்கிட்டு, "ஸவிதா நீ இந்தப் பையனை மணக்க விரும்புகிறாய், அப்படித்தானே?"

ஸவிதா தயங்கிக் கொண்டே. "அப்படித்தான்" என்றாள்.

நடேசன் சிரித்தார்

"போக்கிரிப் பெண்ணே, என் மூக்கடியி லேயே ஒரு பெரிய காதல் நாடகம் நடத்தியிருக்கிறாய் உன்னை நாவல்களில் வருவது போல் கடிந்து கொள்ளட்டுமா குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! எட்ஸெட்ரா எட்ஸெட்ரா."

ஸவிதா லயித்துச் சிரித்தாள். "மாமா! யூ ஆர் வொண்டர்ஃபுல்."

நடேசன் சிரிப்பை நிறுத்தி, 'அதிருக்கட்டும். நீ அவனை முதலில் சந்தித்தது ஞாபகம் இருக்கிறதா?" என்றார்.

"அதை நன்றாக ஞாபகப்படுத்திப் பார், அப்புறம் ஒவ்வொரு தடவையும் அந்தப் பையனைச் சந்தித்ததை ஞாபகப்படுத்திப் பார்."

"எதற்கு மாமா?"

"எனக்கு அதைப் பற்றியெல்லாம் சொல்ல வேண்டும் ஸவிதா. இந்தச் சுவரில் உட்கார்ந்திருக்கும் பூச்சியைப் பார். இன்னும் கொஞ்ச நேரத்தில் அது பறந்து போய் விடும். இதைப் போல்தான் மனத்தின் நினைவுகளும்."

"புரியவில்லை மாமா!"

"ஸவிதா, உனக்கு ஞாபகமிருக்கிறதா? சில நாட்களுக்கு முன் உன்னை நான் ஹிப்னாடிஸத் தூக்கத்தில் ஆழ்த்தினேன். நினை விருக்கிறதா!"

"ஓ! என்னவோ பேசிக்கொண்டிருந்தேன். அப்படியே தூங்கி விட்டேன் ஒருவித மயக்கமாக, என்ன நடந்தது என்றே தெரிய வில்லை. ஆழ்ந்த தூக்கம்."

"தூக்கம் என்கிறது என்ன ஸவிதா?"

"ம்... ஒரு வித அயர்ந்த நிலை...

"அப்படியில்லை. தூக்கம் கடவுள் மனிதனுக்குத் தந்த பெரும் பரிசு. தூக்கத்தில் நம் உடல் அடையும் தளர்வும், மென்மையும். இன்பமும் லேறு எந்த நிலையிலும் கிடையாது. உன் இமைகள் கனக்கும். அங்கங்கள் நெகிழும் தூக்கம் உன்மேல் ஒரு மெல்லிய வானவில் போர்வைபோல் படரும். அதன் மென்கரங்களில் நீ விழுவாய். மெதுலாக, மெதுலாக. மெதுலாக, உன் கண் இமைகள் கனக்கும். அங்கங்கள் கனக்கும். தூக்கமெனும் 'வெல்வெட்' இருட்டில் நீ கரையப் போகிறாய்."

இதைப் படித்ததும் உங்களுக்குக் கொட்டாவி வருகிறதா? நடேசனின் குறிக்கோள் அதுதான்.

ஸவிதாவை ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்த்த இம்மாதிரி அவள் காதுகள் அருகில் ‘உன் கண்ணிமைகள் கனக்கின்றன" என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.

ஸவிதா அப்படியே உட்கார்ந்த நிலையில் ஹிப்னாடிஸத் தூக்கத்தில் சுண்கள் மூடி ஒரே திக்கில் பிரமிப்பாக உட்கார்ந்திருந்தாள்.

"ஸவிதா!" மெதுலான குரவில் கூப்பிட்டார். ஸவிதா பெருமூச்சு விட்டாள்.

மேஜை விளக்கைக் கைக்குட்டையால் மூடி வெளிச்சத்தைத் தாழ்த்தினார். “ஸவிதா, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். உன் மனதில் நிறைய நினைவுகள் இருக்கின்றன. ஏ.வி.ராமச் சந்திரனைப் பற்றிய நினைவுகள். பி.எச்.டி.க்குப் படிக்கிறான். உன்னை முதலில் சந்தித்தான். பின்பு நிறையத் தடவை இருவரும் சந்தித்தீர்கள். சினிமாவுக்குப் போனீர்கள். உன் மனத்தில் அந்த நினைவுகள் பதிந்திருக்கின்றன. அவைகள் எல்லாவற்றையும் நீ மறந்துவிட வேண்டும். ஒன்றுவிடாமல் இந்த நிமிடத்திலிருந்து அவனைப் பற்றிய நினைவுகள் உன் மனத்திலிருந்து விடுதலை ஆகி விட்டன. அலனை நீ மறந்து விட்டாய்; ஒரு நிகழ்ச்சி விடாமல் அடியோடு மறந்துவிட்டாய். அவனை நீ பார்த்ததுண்டா? இல்லை என்று சொல்..."

“இல்லை” என்றாள் ஒரு பொம்மை கனவில் பேசுலது போல்.

"அவனுடன் பேசியதுண்டா? இல்லை என்று சொல்."

“இல்லை.”

''அவனை நீ லெள்ளிக்கிழமை ரச் சொன்னது?”

"இல்லை" என்றாள் தானாகவே.

''அவன் உருவம் உன் நினைவிலிருந்து அழிந்து விட்டது. அவ னுடன் பேசின பேச்சுக்கள், சிரித்த சிரிப்புகள், சென்ற இடங்கள். எழுதின கடிதங்கள், நினைத்த நினைவுகள் எல்லாம் மறந்து துறந்து தூரே தூரே போகின்றன. அவனை உனக்குத் தெரியவே தெரியாது. இனி அவன் உனக்கு அன்னியன், நான் சொல்வதைச் சொல், ஸவிதா.

"ஸவிதா!!"

"ராமச்சந்திரனைப் பற்றிய நினைவுகள் எல்லாவற்றையும்... "ராமச்சந்திரனைப் பற்றிய நினைவுகள் எல்லாவற்றையும்..."

"மறந்து விட்டாள்."

”மறந்து விட்டாள்.…

"ஸவிதா என்மேல் அன்பாக இரு. நான்தான், நான் நடேசன், நான்தான் உனக்கு எல்லாம். உன்னை ஆளாக்கியலன். உன்னைப் படிக்க வைத்தவன். உன் உறவினன். உனத்காகக் காத்திருப்பேன், உன் கணவனாகப் போகிறவன்... நான்தான். என்னையன்றி உனக்கு ஒருவரும் இல்லை. சரி என்று சொல்"

"சரி."

"இனி அந்தக் கட்டிலில் போய்ப் படுத்துக்கொள்... ஹிப்னாடிஸத் தூக்கத்திலிருந்து விடுபட்டு இயற்கையாகத் தூங்கு. கா யில் எழுந்ததும் நீ ராமச்சந்திரனைப் பற்றிய நினைவுகளுடன், நினைவுகள் நீங்குவதற்குக் காரணமான இந்த ஹிப்னாடில் செய்கையையும் மறந்து விடுவாய். போ. போய்த் தூங்கு..."

ஸவிதா கொடிபோல் போய்ப் படுக்கையில் விழுந்தாள்.

ஓடினான் நூல் நிலையம்

இதை நம்புவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கவாம். நேரமிருந்தால் பல்கலைக்கழக நூல் நிலையத்திற்குச் சென்று கலைக்களஞ்சியத்திலாவது என்ஸைக்ளோபீடியா, பிரிட்டானிகா விலாவது ஹிப்னாடிஸத்தைப் பற்றிய கட்டுரையில் 'போஸ்ட் ஹிப்னாடிக் ஸஜெக்ஷன்' என்பதைப் பற்றிப் படித்துப் பாருங்கள்.

அதைத்தான் ராமச்சந்திரன் சில தினங்களுக்குப் பின் செய்து கொண்டிருந்தான். முகத்தில் இரண்டு நாள் தாடி. கண்களில் கலவரம். அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு இரண்டு தடவை ஸவிதாவைச் சந்தித்தான்.

ஊரை விட்டே போய்விடுவது என்று கைப்பெட்டியுடன் கூட ஒரு தடவை சந்தித்தான். ஸவிதா அப்போதும் அவனை வெறுப்புடன்தான் பார்த்தாள். "மிஸ்டர், உங்களைத் தெரியாது, தெரியாது... மறுபடி தொந்தரவு செய்தால், போலீசுக்குப் புகார் செய்வேன்" என்றாள்.

ராமச்சந்திரன் யோசித்ததில் திடீரென்று ஒரு சந்தேகம் உண்டாயிற்று.

ஒவ்வொரு தடவையும் ஸவிதாவின் பார்வையில் உண்மையான குழப்பம் தெரிந்தது. அவள் நடிக்கவில்லை.

அவள் மனம் எப்படியோ மாறியிருக்க வேண்டும். அவளால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. தன் நினைவுகளுடன் தடுமாறுகிறாள். நினைவுகள்... மனம்... மனோதத்துவம்... ஹிப்னாடிஸம்...

ஆ.... அவள் மாமா ஹிப்னாடிஸம் பயிலும் ஆசாமி. அவர் ஏதாவது செய்திருப்பாரோ? உடனே நூல் நிவையத்துக்குள் ஓடி ஹிப்னாடிஸத்தைப் பற்றி முழுவதும் படித்தான்.

படித்ததும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஹிப்னாடிஸத்தைத் துர்ப்பிரயோகம் செய்து என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் படித்து அயர்ந்தான்.

டாக்டர் பெர்ணான்டஸ் என்பவரை அடுத்த ஞாயிற்றுக் கிழமை பார்த்தான், டாக்டர் பெர்ணான்டஸ் ஜெனரல் ஆஸ்பத்திரியில் மனோவைத்தியப் பகுதியில் வேலை செய்பவர். மிகவும் பெரிய புள்ளி. அலரிடம் சொன்னான்.

"டாக்டர், திடீரென்று ஒரு ஆள் மற்றொருவரை மறந்துவிடுவது சாத்தியமா?''

"முடியாது" என்றார்.

"ஹிப்னாடிஸம் மூலம்?"

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

''டாக்டர், நான் ஒரு பெண்ணிடம் மிகுந்த சினேகமாக இருந்தேன். அவளை மணக்க விரும்பினேன். அவளைச் சந்திக்கச் சென்றேன். அவள் என்னைப் பார்த்து, நீ யார்? உன்னை எனக்குத் தெரியாது. உன்னை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்றாள்..."

''அந்தப் பெண் உன்னை விரும்பவில்லை போலிருக்கிறது."

"அப்படி இல்லை டாக்டர். அவள் என்னைப் பார்க்கிற பார்வை யில் அவள் என்னைத் தெரிந்து கொள்ளவே இல்லை என்பது நிச்சயம் தெரிகிறது. தன் நினைவுகளுடன் தடுமாறுகிறாள். அவள் மாமா ஹிப்னாடிஸம் தெரிந்தவர் என்று சொல்லியிருக்கிறாள். நான் ஹிப்னாடிஸத்தைப் பற்றி நிறையப் படித்தேன். ஹிப்னா டிஸத் தூக்கத்தில் ஒருவரை ஆழ்த்திவிட்டு அவர் மனசை என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்று படித்தேன். இது சாத்தியமா?"

"ஐ... ஸீ! இது சாத்தியம்!"

"மனத்தின் நினைவுகளை அழித்துவிட முடியுமா?'

"அது அந்தப் பெண்ணை இதற்கு முன் எத்தனை தடவை ஹிப்னாடிஸத் தூக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறார் என்பதைப் பொறுத்து சுலபத்தில் தூக்கத்தில் ஆழக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும். 'ஹிப்னாடிக் ஸிடிஸன்' என்று படித்திருப்பீர்கள்... இந்த ரீதியில் ப்ராய்டின் மன தத்துவ உதாரணத்தில்...

"டாக்டர்! அந்தப் பெண்ணே திடீரென்று என்னை, மறந்தது போல நானும் அவளை மறந்துவிட முடியுமா?"

டாக்டர் சிரித்தார். "இல்லை டாக்டர். அவள் என்னை இம்மாதிரி நிராகரித்ததும் எனக்குப் படிப்பு ஓடவில்லை. வாழ்க்கையின் தீவிரம் போய் விட்டது. அவள் நினைவு என்னை நிழல் போல் தொடர்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறேன்... டாக்டர், உங்களுக்கு ஹிப்னாடிஸம் தெரியும். என்னையும் அந்தத் தூக்கத்தில் ஆழ்த்துங்கள் டாக்டர். தயவுசெய்து என்னை அவள் நினைவுகள் என்னும் தரசத்திலிருந்து விடுவித்து விடுங்கள் டாக்டர்... ப்ளீஸ்,, "

"மிஸ்டர் ராமச்சந்திரன், அது அவ்வளவு சுலபமான காரியமில்லை.''

"டாக்டர்! அவளை மறக்கவேண்டியது என் வாழ்வில் மிக முக்கியம்" என்று கண்ணைத் துடைத்துக்கொண்டே கேட்டான்.

டாக்டர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே. நான் உனக்கு உதவுகிறேன்... இரவு சரியாகத் தூங்குகிறாயோ?"

"தூங்குவதில்லை.''

"சரி, ஒரு மாத்திரை கொடுக்கிறேன். நாளை மாலை என்னை இதே சமயத்தில் வந்து பார். சிவப்பு மசி நிரப்பி ஒரு பேனா கொண்டு வா..." என்றார்.

பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மாநிலக் கல்லூரியில் பௌதிக ஆராய்ச்சிப் பகுதியில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும் ராமச்சந்திரனை, ஸலிதாவுக்கும், ஒரு டெலிபோன் டைரக்ட ரிக்கும் வித்தியாசம் கேட்டிருந்ததால் அலனுக்குத் தெரிந்திருக்காது. அவ்வளவு முழுமையாக ஒரு நாவலின் அச்சடிக்கப்படாத அத்தியாயம் போல் அவள் நினைவுகள் அவன் மனத்திலிருந்து மறைந்து விட்டன. சுதந்திரமாக உணர்ந்தான்.

முடியாத கதை

மன்னிக்கவும். கதை இந்த இடத்தில் முடியவில்லை.

சில மாதங்கள் கழித்து மௌண்ட்ரோட்டில் ஜூக்பாக்ஸ் அவறும் ஒரு ஓட்டல். ஒருவனும் ஒருத்தியும் எதிர் எதிரே உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... அவன் அவளிடம், “உங்களைப் போனவாரம் நான் சந்தித்ததிலிருந்து உங்களிடம் நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் எனக்கு என்னவோ வேறு எங்கேயோ, வேறு எந்தச் சந்தர்ப்பத்திலோ பேசின மாதிரி ஞாபகம் வருகிறது" என்கிறான்.

"எனக்குக்கூட அப்படித்தான்" என்கிறாள் அவள்.

அவன் வெய்ட்டரைக் கூப்பிட்டு ஜூக்பாக்ஸை நிறுத்த எவ்வளவு போட வேண்டும் என்று கேட்கிறான். ஸவிதா சிரிக்கிறாள்... ஜூக்பாக்ஸ் ஓய்கிறது.

*"சீக்கிரம் பேசு ஸவிதா, மற்றொரு ஆள் ஜுக்பாக்ஸில் நாலணா போடுவதற்குள் "

அவன் பெயர் ராமச்சந்திரன், அவள் பெயர் ஸவிதா.

===================================

கதை எழுதப்பட்டு இன்றைக்குக் கிட்டத்தட்ட 59 வருடங்கள் !!!!! ஆகியும், இன்னும் புத்தம்புதிது போலத் தோன்றுவதுதான் சுஜாதா எழுத்தின் வசீகரம்.......

= = ராம் ஸ்ரீதர் = =

No comments:

Post a Comment