Saturday, April 17, 2021

அடுத்தவன் பொருளின்மீது ஆசைப்படாதவன், தர்மத்தைக் காப்பாற்றுகிறவன்

 அடுத்தவன் பொருளின்மீது ஆசைப்படாதவன் தர்மத்தைக் காப்பாற்றுகிறான்" - பெரியவா

கடன் வாங்கியவர் திருப்பித்தர நினைக்கிறார். கொடுத்தவரின் மகனோ தந்தை சொல்லாததால் பணத்தை வாங்க மறுத்த சம்பவம்.

நான் விவரிக்கும் இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது.

மகா பெரியவாள் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், இறக்கும் தருவாயில், தன் மகனை அருகே அழைத்துப் பல விவரங்களைச் சொன்னார்.

கடைசியாகத் தான் ரூ.100/- ஒருவரிடம் கடன் பட்டதாகவும், அதை மகன் தான் திருப்பித்தரவேண்டும் என்று சொல்லியபின் உயிர் துறக்கிறார். அப்போது மகனுக்கு 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்தவர். அவருக்கு சம்பளம் 15/-ரூபாய். தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று வருடங்கள் சிரமப்பட்டு 100/- ரூபாயை சேர்த்து விட்டார்.

ஆனால், தந்தைக்குக் கடன் கொடுத்தவர் யாரென்றே தெரியாத நிலை. சேமித்து வைத்த பணத்தை எங்கே கொண்டு போய்த் தருவது? காஞ்சி மகானின் பரம பக்தரான தனது தந்தையின் கடன் விவகாரம், ஒருவேளை மகானுக்குத் தெரிந்திருக்குமோ? காஞ்சி வந்த அவர், மகானிடம் விபரத்தைச் சொல்கிறார். ஒருநாள் மடத்தில் தங்கச் சொல்லி அவருக்குக் கட்டளை.

மறுநாள் காலையில் மகான், மகனிடம் சொல்கிறார்;"இங்கிருந்து நேராக நீ ஆலத்தாம்பாடி கிராமத்திற்குப்  போ. அங்கே இருக்கும் அக்ரஹாரத்தில் உள்ள கடைசி வீட்டுக்காரர் தான் உன் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்" என்று சொல்லி ஆசி வழங்கினார்.

அங்கே போனவருக்கு ஆச்சரியம். வீட்டுப் பெரியவர் இறந்து போயிருந்தார். மகன் மட்டும் இருந்தார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னதும், அவருக்கே வியப்பு.

"என் தந்தையும் இறக்கும்போது, எனக்கும் சில விஷயங்களைச் சொல்லிவிட்டுத்தான் போனார். ஆனால் இந்த கடன் கொடுத்த  விபரத்தை  பற்றிச் சொல்லவே இல்லையே"....என்று சொல்லிவிட்டார். பணத்தைக் கொண்டு  வந்தவருக்கோ ஏமாற்றம். பிடிவாதமாக அவர் மறுத்து விட்டதும், அவரையும் அழைத்துக் கொண்டு  காஞ்சி மகானிடமே வந்தார். விஷயத்தை அவர்கள் விவரிக்கக் கேட்டு, மகான் லேசாக முறுவலித்தார். பிறகு சொன்னார்;

"இங்கேதான் தர்மம் இருக்கிற்து. மற்றவர் பொருளை வாங்கும்போது, உடனடியாக நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்று நினைக்கிறோம். அதைத் திருப்பிதர யோசிக்கிறோம். அதனால் சம்பாதிக்கும் பாவத்திற்குப் பரிகாரமே இல்லை. 

"உங்கள் விவகாரம் எப்படி? வாங்கியவர் திருப்பித்தர நினைக்கிறார். கொடுத்தவரின் தந்தை மகனிடம் சொல்லாத  காரணத்தினால், மகன் வாங்க மறுக்கிறார். ஆனால் தர்மம் உங்களுக்கு தெரியாது இல்லையா? அடுத்தவன் பொருளின்மீது ஆசைப்படாதவன், தர்மத்தைக் காப்பாற்றுகிறவன். இரண்டு பேரும் காஞ்சி காமாட்சி கோவிலுக்குச் சென்று, இந்தப் பணத்தை அங்கே இருக்கும் உண்டியலில் போட்டுவிடுங்கள். அது அவள் பணம்" என்று கூறி, அவர்களை அனுப்பி வைக்கிறார்.

சின்ன விஷயம்தான்! ஆனால், அதில் உள்ள ஆழம் தெரிகிறதா?

No comments:

Post a Comment