Monday, April 26, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −41

 (தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −41

(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)

596. பிறப்புஇறப்பு தீட்டு உள்ளர்கள் தீட்டுக் கழியும் காலம் வரையிலும், முகச்சவரம், முடித்திருத்தம் செய்து கொண்டவர்கள் நீராடித் தூய்மை அடையும் வரையிலும், அடுத்தவரைத் தீண்டக்கூடாது.

597. இரும்பு, ப்ளாஸ்டிக், அலுமினியம், எவர்சில்வர் ஆகியவற்றால் செய்யப்பட்ட வளையல்களை அணியக்கூடாது.

598. ருத்ராக்ஷம், ஸ்படிகம், துளஸி மாலைகளை அணிந்துகொண்டு இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லக்கூடாது.ஆனால் அவை தாமிரம், பித்தளை, வெள்ளி, தங்கம் ஆகியவற்றுள் ஏதோ ஒன்றினால் கோர்க்கப்பட்டிருந்தால், தவறில்லை.

599. ஸம்ஸ்க்ருத வார்த்தைகளைச் சரியாகத் தெரிந்துகொண்டே உச்சரிக்க வேண்டும்.. தவறாக உச்சரிப்பதால் கெடுதல் நேரவும் வாய்ப்பிருக்கிறது.

600. ஜபம் செய்து முடிக்கும்வரையிலும் மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.ஜபத்தை இடைஇடையே நிறுத்தி மற்றவருடன் பேசிவிட்டு மீண்டும் தொ டருதல் தகாத செயலாகும்.

601. குழுவாக ஜபம் செய்யும்பொழுது, ஒருவர் பின் ஒருவராக அமர்ந்துகொண்டு ஜபம் செய்யக்கூடாது. அருகருகே அமர்ந்தே ஜபம் செய்ய வேண்டும்.

602.தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டோ, தொலைபேசியில் பேசிக்கொண்டோ சந்த்யாவந்தனம், காயத்ரி ஜபம் போன்றவற்றைச் செய்யக்கூடாது.

603. தீபாவளி அன்று, தர்ப்பணத்தைக் காரணம் காட்டி எண்ணெய் ஸ்நானம் செய்யாமல் இருக்கக்கூடாது. சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் ஸ்நானம் செய்வதால், அது முதல்நாள் கணக்கில் வந்துவிடும்.

604. நதிகளில் நீராடும்பொழுது, நதிகளின் நீர்போக்குத் திசையில் ஸ்நானம் செய்யாமல், நதிகளின் நீர்போக்கை எதிர்கொள்ளும்வண்ணம் நின்று கொண்டு, சிரம் முழுவதும் அமிழ்ந்திடுமாறு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

605. இரத்த சம்பந்தம் உள்ளவர்களைத் தவிர, மற்றவர் மீதம் வைக்கின்ற பால், நீர், பழரசம் போன்றவற்றைப் பருகக்கூடாது.

606. தர்ப்பண தினங்களில் புழுங்கலரிசியால் செய்த இட்லி, தோசை போன்றவற்றைச் சாப்பிடக்கூடாது.

607. காலணிகளை அணிந்துகொண்டு உண்ணுதல், அன்னலக்ஷ்மியைப் பழிக்கும் செயல் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும்..

608. வைகுண்ட ஏகாதசி அன்று எட்டு வயதுக்கு மேற்பட்டவரும், எண்பது வயதுக்குக் கீழுள்ளவர்களும் உணவில் அரிசி, உளுந்தைக் சேர்க்கக்கூடாது.

609. உணவருந்தி முடித்த பிறகு நிச்சயம் கால்களையும் கழுவ வேண்டும்.

610. பூணூலில் சாவி, டாலர் ஆகியவற்றைக் கோர்க்கக் கூடாது..

(வளரும்..)

No comments:

Post a Comment