(தெரிந்து கொள்ளலாமா?..)
தர்ம சாஸ்திரம் பகுதி −42
(ஆசிரியர் −திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)
611. தர்ப்பண தினங்கள், ஏகாதசி, பௌர்ணமி ஆகிய நாட்களில் முகச்சவரம் செய்யக்கூடாது.
612. திருமணமானவர்கள் தகுந்த காரணமில்லாமல் நாற்பந்தைந்து நாட்களைக் கடந்து முகச்சவரம் செய்யாமல் தாடி, மீசை ஆகியவற்றை வளர்க்கக்கூடாது.
613. பிறப்பு இறப்பு தீட்டுகள் கழிகின்ற நாளாக இருந்தாலும், பிதா உயிரோடு இருப்பவர்கள் வெள்ளிக் கிழமைகளில் முகச்சவரம் செய்யக்கூடாது.
614. மந்திரம் சொல்லிப் பூணூல் அணிவதால், தவறுதலாகக்கூட அவற்றைக் கழற்றி வைக்கக்கூடாது.
615. ஈரவேட்டியை உலர்த்தாமல் காலையில் சந்தியாவந்தனம் செய்யக்கூடாது.
616. மதிய வேளைகளில் குளித்து விட்டு சந்தியாவந்தனம் செய்வதாக இருந்தால், ஈர வேட்டியை மாத்யாஹ்னீகம் செய்தபிறகே உலர்த்த வேண்டும்.
617. பூணூலை மாற்றும்பொழுது தலையை முதலில் நுழைத்து, அதன்பிறகு வலது கையை நுழைப்பது தவறான செயலாகும்.
618. ஆவணி அவிட்டமன்று, சூரியன் அஸ்தமித்த பிறகு, வேதம் கற்கக்கூடாது.
619. உபநயனம் ஆனவர்கள், குறைந்த அளவிலாவது காயத்ரி ஜபம் செய்தபிறகே, ஸ்லோகங்கள் சொல்வதும், மற்ற பூஜைகளையும் ஜபத்தையும் செய்வதையோ தொடர வேண்டும்.
620. சந்த்யாவந்தனம் செய்ய வேண்டிய நேரமாகிய சூரிய உதய/அஸ்தமன நேரங்களில் எந்த விதமான பஜனை, ஆன்மீகக் காரியங்கள், கூட்டு ப்ரார்த்தனைகள், உபன்யாசங்கள் ஆகியவற்றைச் செய்யக் கூடாது. இடைப்பட்ட நேரத்திலோ, முன்போ, பின்போ செய்வது தவறாகாது.
621. சந்த்யாவந்தனத்தை ஒரே இடத்தில் முழுமையாகச் செய்ய வேண்டும்..பாதி வீட்டிலும் பாதி நதி/ஆற்றங்கரைகளிலும் செய்வது தவறான செயலாகும்.
622. சந்த்யாவந்தன மந்திரங்களை குருமுகமாகவே அறிய வேண்டும். CD மூலமாக அறிந்து பழகுவது தவறாகும்.
623. தங்க நகைகளை இடுப்புக்குக் கீழே இருக்கின்ற பகுதிகளில் (உ.ம். மெட்டி) அணிவது, மஹாலக்ஷ்மியை அவமதிப்பதாகும். அதனால் அவ்வாறு அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
624. உதய/அஸ்தமன நேரங்களில் பெண்கள் அழுது கொண்டிருப்பது, அந்த வீட்டில் மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தை தடை செய்யும். அதனால் அவ்வாறு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
625. தலையை விரித்துப் போட்டுக் கொண்டும், கருப்பு ஆடை அணிந்து கொண்டும், கணவன் அனுமதி இல்லாமலும் திருமணமான பெண்கள் பூஜை செய்யக்கூடாது.
(வளரும்..)
No comments:
Post a Comment