(தெரிந்து கொள்ளலாமா?..)
தர்ம சாஸ்திரம் பகுதி −46
(ஆசிரியர் −திரு.V.ராஜகோபால கனபாடிகள்..)
671. நல்ல பலன்களை முழுமையாக அடைய வேண்டுமானால், மற்ற அறைகளிலிருந்து பூஜை அறையானது தனியாக இருக்க வேண்டும்.
பூஜை அறையின் நுழைவாயிலின் அடிப்பகுதியில் ஒரு மரத்தடுப்பும் (வாசல்படி) அவசியம்.
672. எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், ஸோமயாகம், வாஜபேய யாகம் (ஸ்ரௌத்த கர்மா) போன்றவற்றை மற்றவரிடம் த்ரவியங்களை யாசகம் பெற்றே நடத்த வேண்டும்.
673. வேதம் அறிந்தவர்கள், தமது குழந்தைகளை வேடபாடசாலைக்கு அனுப்புவதற்கு முன், தாம் ஒரு சிறுபகுதியையாவது வீட்டில் சொல்லித்தர வேண்டும்.
674. வீட்டின் நுழைவாயில், அலமாரிகள் ஆகியவை கதவுகள் இல்லாமல் இருக்கக்கூடாது.
675. வீட்டைத் தூய்மைப்படுத்த உதவுகின்ற துடப்பத்தை சமையலறை, சாப்பிடும் அறை போன்ற இடங்களிலோ, மற்றவர்கள் பார்வையில் படுகின்ற இடங்களிலோ வைக்கக்கூடாது.அவற்றைக் கதவுகளின் பின்னே கண் மறைய வைக்க வேண்டும்.
676. இடிக்கப்பட்ட வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கதவுகள், ஜன்னல்கள், தலைவாசல் சட்டம் ஆகியவற்றைப் புதிதாகக் கட்டுகின்ற வீட்டில் உபயோகிக்கக்கூடாது.
677. தலைவாசல் கதவு உட்புறம் திறக்குமாறு அமைக்கப்பட வேண்டும்.
678. துணிமணிகள் வைத்துக் கொள்ளப் பயன்படுகின்ற அலமாரிகளுக்கான கதவுகள் வெளிப்புறம் திறக்கும்படியாக இருக்க வேண்டும்.
679. குழந்தையைப் பெற்ற தாயானவள், அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட காரணத்தினால், பதினோறாம் நாள் புண்யாஹவசனம் அன்று நீராட இயலாமல் போனால், குழந்தையின் தாத்தா−பாட்டி புன்யாஹவசன சாங்கியங்களைச் செய்துவிட வேண்டும்.
680. மந்திர உருவேற்றி ஜபிக்கப்பட்ட நீரில் தூசுகள் அல்லது வேறு பொருட்கள் விழுந்திருந்தாலும், அவற்றுள் கைகளை நுழைத்து, அகற்றக்கூடாது.
(சில முக்கியமான சொற்களின் எளிமையான பொருள்..)
1. அபிஷேகம் − பால், இளநீர் போன்ற பொருட்களைக் கொண்டு தெய்வ விக்ரஹங்களை நீராட்டுதல்.
2. ஆவாஹனம் − தெய்வங்களை அழைத்து எழுந்தருளச் செய்தல்.
3. ஹோமம் − கடவுளரையும், முன்னோர்களையும் நினைத்து அக்னியில் நெய், அரிசி போன்றவற்றை இடுதல்.
4. ஹோமகுண்டம் − மேற்சொன்னபடி ஹோமங்களைச் செய்வதற்கு தேவையான அக்னியை உண்டாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட குண்டம்.
5. ஜபம் − மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்கின்ற இறை திருநாமங்களும், மந்திரங்களும்.
6. நிவேதனம் − இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்ற உணவு வகைகள்.
7. தர்ப்பணம் − முன்னோர்களைக் குறித்து குறிப்பிட்ட காலங்களில் செய்யப்படுகின்ற சடங்கு.
8. உபசாரம் − இறைவனுக்கு/இறைவிக்குச் செய்கின்ற பலவகையான சடங்குகள்..
9. விஸர்ஜனம் − பூஜை முடிந்த பிறகு செய்கின்ற சடங்கு.
10. யதாஸ்தானம் − விஸர்ஜனம் ஆன பிறகு, இறைவனை/ இறைவியை பழையபடியே எழுந்தருளச் செய்தல்.
(நிறைந்தது)
No comments:
Post a Comment