Sunday, April 11, 2021

அருணாசல அக்ஷரமணமாலை பிறந்த கதை

 கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !

அருணாசல அக்ஷரமணமாலை பிறந்த கதை !

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி திருவண்ணாமலையில் உள்ள விருபாக்ஷ குகையில் 1914 ஆம் ஆண்டு வாசம் செய்து கொண்டிருந்தபோது , அவரது அன்பர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவர் இயற்றி அருளிய அற்புதமான பாடல்களின் தொகுப்பு தான் “ ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை “ .இந்த பாடல் பிறந்த கதை.

ரமணருடன் இருந்த அடியார்கள் சிலர்,தாங்கள் பிச்சை எடுக்கச் செல்லும் போது பாடிக் கொண்டு செல்வதற்காக ஒரு துதியை இயற்றித் தரும்படி ரமணரை வேண்டினர். ஆனால் அவரோ, ”தேவாரம் திருவாசகம் முதலான எத்தனையோ சிறந்த பாடல்கள் இருக்கும் போது புதிதாக ஏழுதுவது எதற்கு ? என்று கூறிவிட்டார்.

ஆனாலும், அவரது அன்பர்களோ ரமணரின் வாக்கினால் ஒரு துதியை பாடச் செய்து,அதை பாடிக் கொண்டு ,தாங்கள் மலை மீது உள்ள ரமண மஹரிஷியின் அடியார்கள் என்று தம்மைக் காட்டிக் கொள்ள ஆசைப்பட்டனர். இதையொட்டி அவர்கள் அவ்வப்போது ரமணரிடம் பாடல்  இயற்றித் தருமாறு அன்பு வேண்டுகோள் விடுப்பது உண்டு.

இந்நிலையில் ஒரு நாள் ரமணர் திருவண்ணாமலையை கிரிவலம் வர புறப்பட்டார். அப்போது உடன் இருந்த அன்பர் என்ன நினைத்தாரோ எப்போதும் இல்லாத வகையில் கையில் பென்சில்லையும்,சில வெள்ளைக் காகிதங்களையும் எடுத்துக் கொண்டு வந்தார். இன்றாவது ரமணரின் வாக்கால் ஒரு பாடலை இயற்றச் செய்வது வாங்கிவிட வேண்டும் என்பது அவரது ஆசை.

அவரது ஆசைக்கு கைமேல் பலனும் கிடைத்தது.அதுவரை பாடல் இயற்றும் விஷயத்தில் மௌனம் காத்து வந்த ரமணர், “அருணாசல” நாமத்துடனேயே துதியைத் தொடங்கினார்.அவரது உள்ளத்தில் இருந்து பொங்கி எழுந்த அருள் மொழிகளை அந்த அன்பர்,தான் கொண்டு வந்த வெள்ளைக் காகித்தத்தில் எழுதி கொண்டே வந்தார்.

“ அருணாசலம் என அகமே நினைப்பவர்
 அகத்தை வேரறுப்பாய் அருணாசலா “
முதல் மந்திரமாகவும்,

“ மாலை அளித்து அருணாசல ரமண என்
  மாலை அணிந்து அருள் அருணாசலா “

என்பது 108வது மந்திரமாகவும் இடம் பெற்றது.

பாடல் இயற்றி முடித்ததும் அவற்றீன் பொருளை அறிய முற்பட்டனர்.அதுபற்றி ரமணரிடம் கேட்ட போது, “ நீர் தான் அவற்றின் பொருளைச் சொல்லுமே ! உம்மைப் போலத்தான் நானும் அவற்றின் பொருளே யோசித்தே சொல்ல வேண்டும்.ஏதாவது நினைத்து எழுதியிருந்தால் அதற்கான பொருளை கூறலாம். எப்படியோ எழுந்தவை அவை.” என்று சொல்லிவிட்டார்.

ஆனால் அன்பர்கள் அவரை விடவில்லை .எப்படி பாடலை இயற்றித் தருமாறு அவரை விடவில்லை. எப்படி பாடலை இயற்றித் தருமாறு அவருக்கு அடிக்கடி அன்பு வேண்டுகோள் விடுத்தார்களோ,அதே போன்று இயற்றிய பாடல்களுக்கான பொருளையும் விளக்குமாறு வேண்டி வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஒரு நாள்,தான் இயற்றியருளிய பாடல்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் திருவாய் மலர்ந்தார் ரமணர்.

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலைக்கு பொருள் அதை பாராயணம் செய்வதுதான். என்று அழுத்தமாக கூறிவிட்டார் அவர்.

இன்னொருமுறை அதுபற்றி குறிப்பிடும் போது “ பாடியவன் எவனோ,அவன் எங்கு போனானோ,அவனைக் கேளுங்கள்.என்னைக் கேட்டால் என்ன செய்வது ? நானும் உங்களை போலத்தான். மண்டையை உடைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பொருள் சொல்ல வேண்டும். அந்த சிரமத்தை நீங்களே  ஏற்றுக் கொண்டு  பொருளைக் கண்டுபிடியுங்கள் என்று கூறிவிட்டார்.

இறைவனின் அருளானது கடல் போன்று முழுமையாக பாய்ந்து கொண்டே இருக்கிறது.ஒவ்வொருவர் அவரவர் திறமைக்கு ஏற்ப அதில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள் என்கின்ற உண்மையை ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை காட்டுவதாக ரமணரின் பக்தர்கள் நம்புகிறார்கள்.

குறிப்பு :  பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகள் ஞானோதயம் பெற்ற புனிதத் தலமான மதுரை ஸ்ரீ ரமண மந்திரத்தில் தினமும் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக அருணாசல அக்ஷரமணமாலை காலை பாராயணம் நடைபெற்று வருகிறது. மேலும் அக்ஷரமணமாலை நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

No comments:

Post a Comment