Wednesday, June 3, 2020

காஞ்சி மகான் காத்திருந்தது யாருக்காக?

"கடவுளின் குரல்" - தொகுப்பு: காளிதாசன்  

19 /02 /2020  குமுதம் இதழிலிருந்து..

""காஞ்சி மகான் காத்திருந்தது யாருக்காக?""

மகாபெரியவர் சன்யாசப்  பட்டம் ஏற்று பதினைந்து பதினாறு வருடங்களுக்குப் பிறகு நடந்த சம்பவம் இது.

தனக்கு வழிகாட்ட-குருவாக இருக்க ஸ்ரீமடத்தில் யாரும் இல்லாததால், சுவாமிகள் நியாய தர்மங்களை எல்லாம் படித்தும், சன்யாச தர்மங்களை சாஸ்திரங்கள் சொல்லும் வழிகளை எல்லாம் கேட்டறிந்தும் கொஞ்சமும் தவறாமல் கடைபிடித்தார்.   

அந்த சமயம் ஸ்ரீமடத்துக்கு வருமானம் மிகமிகக் குறைவு. பக்தர்கள் நிறைய வந்தாலும் எல்லோருமே பெரும் வசதி படைத்தவர்கள் இல்லை. அதோடு, மகாபெரியவாளும் மடத்தை நிர்வகிக்க பொருளாதாரப் பற்றாக்குறை இருக்கிறது என்பதை யாரிடமும் சொல்லவோ, பொருளுதவி எதுவும் கேட்கவோ இல்லை. எளிய சாத்வீகமான உணவு எது இருக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்தார், மகாபெரியவர். அதனால், மற்றவர்களும் எதுவும் கேட்க முடியவில்லை. 

மகான், வாய் திறந்து ஒரு வார்த்தை சொன்னாரானால், பல பெரிய மனிதர்கள் பணத்தைக் கொண்டுவந்து குவித்துவிடுவார்கள் என்பது மடத்தின் நிர்வாகிகளுக்குத் தெரியும். ஆனால், அதை பெரியவரிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல், சிலர் மனதுக்குள் வைத்துக் கொண்டும், சிலர் ஒருவருக்கொருவர் மெதுவாக முனங்கிக் கொண்டும் இருந்தார்கள். 

அந்த சமயத்தில் மடத்தில் நாய் ஒன்றும் வளர்ந்து கொண்டு இருந்தது. மடத்தின் சார்பில் அமைந்திருந்த கோசாலைப் பசுக்களுக்கெல்லாம் ஒருவகையில் அது காவலாக இருந்தது என்றே சொல்லலாம். மடத்தின் உள்ளும் கோசாலையிலுமாக அங்கும் இங்கும் திரிந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை மகான் இருக்கும் இடத்துக்கு வந்து அவர் முன் நிற்கும். 

அந்த சமயத்தில் இருப்பது எதுவோ அதை அந்த நாய்க்கு உணவாகப் போடச் சொல்வார், பெரியவர். அதைத் தவிர வேறு யார், எதைத் தந்தாலும் சாப்பிடாது அந்த நாய்.  தேவையில்லாமல் ஒரு குரைப்புச் சத்தம் கூட கேட்காது அதனிடம் இருந்து. 

நாட்கள் மெதுவாக நகர்ந்தது. ஒரு நாள் வழக்கம்போல் மகாபெரியவா முன்னால் அந்த நாய் வந்து நிற்க, சரியாக அதே நேரத்தில் அவரை தரிசிக்க வந்த பக்தர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் அதைப் பார்க்க..ஸ்ரீமடத்துக்குள் ஏதோ தெருநாய்தான் புகுந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டான்.  அவன், மகான் முன்னால் நாய் வந்து நிற்கிறதே என்ற பதட்டத்தில், ஒரு கல்லை எடுத்துக் கொண்டுவந்து அதனை அடித்து விரட்டினான். 

இதை எதிர்பார்க்காத நாய், பதறிக் குறைத்தபடி ஓடிப்போனது. மடத்தில் இருந்த தொண்டர்கள் அந்த நாய் மடத்தில் உள்ளது தான் என்பதை அங்கே இருந்தவர்களிடமும் அந்தப் பையனிடமும் சொன்னாலும், யாரும் அதைத் தேடிக் கொண்டெல்லாம் போகவில்லை. 

ஆனால், அன்றைக்கு சாயந்திரமே திரும்பி வந்துவிட்டது அந்த நாய். ஆனால், அதனிடம் ஒரு மாற்றம். முன்பெல்லாம் அமைதியாக இருந்த அது, இப்போது மகாபெரியவா முன் வரும்போது யாராவது உற்றுப் பார்த்தாலே குரைக்கத்       தொடங்கியது.  சிலரை விரட்டவும் செய்தது. 

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மடத்துத் தொண்டர்கள் சிலர் சேர்ந்து ஒரு தீர்மானம் எடுத்தார்கள். அந்த நாயை எங்கேயாவது தொலை  தூரத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுவது என்று. 

அப்படியே நாயை ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டுபோய் பத்துப் பதினைந்து மைல் தொலைவில் கொஞ்சம் வனாந்தரமாக இருந்த இடத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். 

இது நடந்தபோது, மகான் வழக்கமான பூஜை, புனஸ்காரங்களை செய்து கொண்டிருந்ததால், அவருக்கு விஷயம் தெரியாது. ஆனால், மகாபெரியவா பூஜைகளை முடித்த பிறகு யாரிடமும் எதுவும் பேசவில்லை. பிட்சா வந்தனமும் எடுத்துக் கொள்ளவில்லை. 

அணுக்கத் தொண்டர்கள் வந்து பிட்சைக்கான நேரமாகிவிட்டது என்பதை நினைவுபடுத்தியபோதெல்லாம், பரவாயில்லை.. அப்புறம் ஆகட்டும் என்பது போலவே சைகை செய்தாரே தவிர, பேசவேயில்லை. 

ஏன், என்ன காரணம் என்று புரியாமல் மனதிற்குள் அலைபாய்ந்தார்கள்  தொண்டர்கள். ஆனால், மகானோ அதைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. சற்றைக்கு ஒரு முறை மடத்தின் வாசல் பக்கமாகப் பார்வையை ஓட்டிக் கொண்டும் இருந்தார், அவர்.

அவரது அந்த செய்கை, யாருக்காகவோ காத்துக் கொண்டு இருப்பதுபோல தோன்றியது. ஆனால், அதைப் பற்றி அவரிடம் கேட்க எல்லோருமே தயங்கினார்கள். 

சுமார் நான்கைந்து மணி நேரத்துக்குப் பிறகு ரொம்பவே தயங்கித் தயங்கி ஸ்ரீமடத்துக்குள் நுழைந்தது அந்த நாய். ரொம்ப தூரம் ஓடி வந்த களைப்பில் நாக்கைத் தொங்கவிட்டபடி நின்று மூச்சு வாங்கியது.

அன்போடு அதைப் பார்த்தார், மகாபெரியவர். "என்ன, வழி தெரிஞ்சுதா? இனிமே குரைச்சு பயமுறுத்தாதே.....!" மிக மெதுவாக அதனிடம் சொன்னார். 

"இதுக்கு முதல்ல கொஞ்சம் ஜலம் வைச்சுட்டு அப்புறம் ஏதாவது ஆகாரம் குடுங்கோ!" சீடர்களிடம் சொன்னார். 

அதன் பிறகே அன்றைய பிட்சாவந்தனத்தை எடுத்துக் கொண்டார், மகான். நாயைக் கொண்டுபோய் எங்கோ விட்டுவிட்டதை யாருமே சொல்லாதபோது எப்படித் தெரிந்து கொண்டார், மகான்? அது வழி கண்டுபிடித்து வந்துவிடும் என்பதை அறிந்து அதற்காகக் காத்திருந்தது எப்படி? அதன் பிறகு அந்த நாய், ஒருபோதும் குரைக்காமலே இருந்ததும், பக்தர்கள் மகானை தரிசிக்க வரும் சமயத்தில் தவறியும் அது அங்கே வந்ததில்லை என்பதும் எப்படி? எல்லாமும் மகானுக்கு மட்டுமே விடைதெரிந்த புதிர்கள்!   

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏

No comments:

Post a Comment