Tuesday, June 30, 2020

எதுர்மலை வரதராஜப் பெருமாள்

ராஜ வாழ்க்கை தரும் வரதராஜ பெருமாள் கோவில்
   
எதுர்மலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் உருவாக்கி கொடுத்தார்.  

விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் ஆட்சி செய்தார். அவரது ராயர் வம்சத்து மக்கள் அருகே இருந்த இரண்டு கிராமங்களில் வசித்து வந்தனர். 

எதுர்மலை, பாலை மலை என்பது அந்த கிராமங்களின் பெயர்கள். இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஒரு பெரிய ஏரி.

நீர் வளமும் நில வளமும் மிக்க திருச்சினாப்பள்ளியின் மீது அந்த கிராம மக்களுக்கு ஒரு கண். 

எனவே அந்த கிராமங்களை விட்டுவிட்டு திருச்சினாப்பள்ளிக்கு அருகே குடிபெயர்ந்தால் என்ன? என்று தோன்றியது.

தங்கள் விருப்பத்தை மன்னரிடம் கூற மன்னரும் சம்மதம் கூறி விட்டார்.

தாங்கள் குடியேற திருச்சினாப்பள்ளிக்கு 20 கல் தொலைவில் ஓர் இடத்தை தேர்வு செய்தனர். காட்டுப் பகுதி அது. 

மன்னரின் ஆணையால் அந்தக் காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது. குடியிருப்புக்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டு ராயர் வம்சத்தினர் அங்கே குடியேறினர்.

அந்த இடத்திற்கு தாங்கள் ஏற்கனவே வசித்த இடத்தின் பெயரையே வைத்தனர். தென் பகுதிக்கு பாலை மலை என்றும், வடபகுதிக்கு எதுர்மலை என்றும் பெயர் சூட்டினர். 

ஏரிக்கு இருபுறமும் ஊர்கள் அமைந்திருந்தன. ஊர் மக்கள் வழிபட பாலைமலையில் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தையும், எதுர்மலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் மன்னர் உருவாக்கி கொடுத்தார்.

தாங்கள் வாழ்ந்து வந்த ஊரில் இருந்த பெருமாளையே புதிதாக குடியேறிய ஊரில் அமைத்து கொடுத்த மன்னருக்கு குடியேறிய மக்கள் நன்றி கூறினர்.

அவர்களால் பெயர் சூட்டப்பட்ட பாலைமலை என்ற கிராமத்தின் பெயர், நாளடைவில் மருவி ‘பாலையூர்’ என்றும், எதுர்மலை என்ற ஊர் ‘எதுமலை’ என்றும் மாறியது. 

இந்த எதுமலையில் உள்ளதுதான் வரதராஜ பெருமாள் ஆலயம். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடி மரம் உள்ளது. 

இதில் ஆஞ்சநேயரின் திருமேனி நம் கண்களை கவரும் வண்ணம் மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது. 

இந்த ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என பக்தர்கள் கூறுகின்றனர். தாமதமாகும் திரு மணம் நடந்தேறவும், குழந்தை பேறு உண்டாகவும், கல்வி ஞானம் பெறவும் இவரை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

அடுத்ததாக கருடாழ்வாரின் சன்னிதி உள்ளது. அதை அடுத்து மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வலது புறம் கிருஷ்ணர், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனா, பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், 

நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூத்தாழ்வார், திருப்பாணாழ்வார், நாதமுனிகள், எம்பார், 

ராமானுஜர், காளிங்கன் நாகர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் கீழ் திசை நோக்கி சேவை சாதிக்கிறார். 

அருகே உற்சவர் திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் தெற்கில் கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது. அன்னை கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் முகத்தில் புன்னகையுடன் அருள்பாலிக்கிறாள்.

மணமாகாத கன்னியர் கமலவல்லி தாயாரை வேண்டிக் கொள்ள, அவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். 

மணமானதும் தம்பதியர் சன்னிதிக்கு வந்து புத்தாடை அணிவித்து ஆராதனை செய்து நன்றியை தெரிவிக்கின்றனர்.

மேற்கு திருச்சுற்றில் ஆதி அந்தபிரபுவின் திருமேனி உள்ளது. இத்திருமேனி பாதி விநாயகரையும் பாதி ஆஞ்சநேயரையும் கொண்டதாகும். 

அடுத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். வடக்கில் ஆலய தல விருட்சம் வில்வம் தழைத் தோங்கி வளர்ந்துள்ளது. 

இறைவனின் தேவக் கோட்ட விமான சுவர்களில் ஏராளமான கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. 

ஆஞ்சநேயர், கருடாழ்வார், பெருமாள், பிள்ளையார், நரசிம்மர், அன்னபட்சி, மயில், வேல்முருகன், மச்ச அவதாரம், யானை, வாமன அவதாரம் போன்ற சிற்பங்களின் நேர்த்தி நம்மை வியக்க வைக்கின்றன. 

தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது.

சித்ரா பவுர்ணமி புரட்டாசி சனிக்கிழமைகளில் இறைவன் இறைவிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 

இந்து அற நிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த ஆலயம், தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

திருச்சியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மண்ணச்சநல்லூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, எதுமலை கிராமம்.

மூச்சுப் பயிற்சி, பிராணாயாமம் என்றால் என்ன?

மூச்சுப் பயிற்சி, பிராணாயாமம் என்றால் என்ன?

உடல் வளர்க்க... உயிர் வளர்க்க!

இன்றைய அவசர யுகத்தில், மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். சுற்றுப்புறக் காற்றும் சுத்தமாக இல்லை. மாசு படிந்த காற்றை சுவாசிப்பதன் விளைவு, சுவாசப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், சளி, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி... போன்ற பல்வேறு நோய்களும் வரிசைகட்டி நம்மை வாட்டுகின்றன.  

"தியானம், பிராணாயாமம், யோகா செய்தாலேபோதும்; நோய் எதுவும் நெருங்காது" என்று ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவதும், பிராணாயாமப் பயிற்சி எப்படிச் செய்வது என்பது பற்றி கூகுளில் தேடுவதும், யாரிடம் கற்பது என்று குருவைத் தேடி ஓடுவதுமாக ஒருவிதத் திணறலுடனே காலமும் ஓடுகிறது.  

''உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்கி, இரண்டிலும் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், வெளியில் உள்ள காற்றுக்கும், உடலில்  இருக்கும் காற்றுக்கும் பாலமாக உள்ள சுவாசத்தைக் குறிப்பிட்ட வகையில் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடியதுமான அற்புதக் கலைதான் "பிராணாயாமம்"  என்கிறேன். என் அனுபவத்தில்...

இவர், சிறு வயது முதலே உபநிடதம், வேத நூல்கள், யோக நூல்களை  முறையாகக் கற்றுத் தேர்ந்து பல சித்தர்கள் யோகிகளிடம் நேரடியாக பெற்ற அனுபவத்தில் இருந்து இந்த பிராணாயாமக் கலையின்  சிறப்புகளையும், பயிற்சி முறைகளையும், பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றிய வியத்தகு விஷயங்களையும், அதை நாம் நடைமுறை படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக பகிர்கிறேன்... உங்களுக்காக முதன் முதலில் சித்தர்களின் குரல் வாயிலாக.....

''முனிவர்களும் யோகிகளும் நமக்கு அளித்த மிகப் பெரிய வரப்பிரசாதம்தான் இந்தப் "பிராணாயாமக் கலை". தீர்க்கமான சிந்தனையும் தெளிவான அறிவும் அமைய உதவும் கலை இது. மூச்சுக்காற்றானது, உள்ளே வருவதும் வெளியே போவதும் நிகழாமல் போனால், உயிர் ஓர் உடலில் நிலை கொள்ளாது.  

துக்கமான உணர்வில் ஒருவிதமாகவும், வியப்பு உணர்வில் இன்னொரு விதமாகவும், சோர்வாக இருக்கும்போதும்  ஒரு வகையாகவும், உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்போது வேறு ஒரு வகையாகவும் மூச்சின் தன்மை இருப்பது இயற்கை.  

இதைத்தான் அந்தக் காலத்தில், மனம் ஒவ்வோர் உணர்வில் இருக்கும்போதும் சுவாசம் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டறிந்து, நமக்கு எந்த உணர்வு தேவையோ அந்த உணர்வு உண்டாகும்படி சுவாசத்தை மாற்றி அமைத்துக்கொண்டனர்.

சுவாசமானது,  ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, மூக்கின் இடது பக்கத் துவாரத்தில் இருந்து வலது பக்க துவாரத்தின் வழியாக மாறிமாறி நடைபோடுவதை அறிந்தனர். இதன் நன்மை தீமைகளைக் கண்டறிந்து, இரு துவாரங்கள் வழியிலும் ஒரே நீளமும் தன்மையும் இருக்கும்படியாக மூச்சை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மூச்சுப்பயிற்சி செய்வதைக் கண்டுபிடித்தனர்.  

உடலை உரப்படுத்தி, மனதை நிலைப்படுத்தி, சுவாசத்தையும் மூச்சையும் ஒழுங்குப்படுத்தி, அதன் மூலம் பயனடைய பிராணாயாமக் கலையை அறிந்து சாத்திரமாக்கினர். மனம் இல்லையேல் மனிதன் இல்லை. அந்த மனதைக் கட்டுப்படுத்தவே பிராணாயாமம் உதவுகிறது.

சுவாசத்தை நாம் மூக்கு வழியாக உள்ளிழுத்ததும், அது தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குப் போகிறது. பிறகு, இடம் வலம் பிரியும் குழல்களின் வழியே நுரையீரல்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான காற்று அறைகளுக்குச் செல்கிறது. இது நம் மார்பில் அடங்கியிருந்தாலும், இதை வெளியே எடுத்துப் பிரித்துப் பரப்பி வைத்தால் 1,40,000 சதுர அடி பரந்திருக்குமாம்!

சுவாசிக்கும் ஐந்து இடம்:-
--------------------------------------------

மூக்கு வழியாக சுவாசிக்கும்போது, உட்புகும் காற்றானது, பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் என்ற  ஐந்து இடங்களில் இருந்து ஐந்து வேலைகளைப் புரிகின்றது.

1. பிராணன்:  
-----------------------
உடலின் மேலே இயங்கும் இது 'தலைமை சுவாசம்’ எனப்படுகிறது.  மேலும், நுரையிரலை இயக்கி சுவாசம் மற்றும் ரத்த ஓட்டத்தை நிகழ்த்துவதோடு புலன்களையும் இயக்குகிறது.

2. அபானன்: 
-----------------------
கீழ் உடலில் இருந்து கீழ்நோக்கிய வேலைகளை நிகழ்த்துகிறது. கழிவுகளை வெளியேற்றுகிறது. 'குதம்’ எனும் மலத்துளையே இதனுடைய இடம்.

3. உதானன்: 
-----------------------
உடலை எழுந்து நிற்கச் செய்வது, மேல் நோக்கி இயங்கும். உணவை விழுங்குதல், உறங்க வைப்பது. தொண்டையில் இருக்கும் இது, உயிர் பிரிகையில் ஸ்தூல உடலில் இருந்து நுட்ப உடலைப் பிரிக்கிறது.

4. சமானன்: 
---------------------
உணவைச் செரித்து, சக்தியை ரத்தத்தில் கலக்கச் செய்வது. தொப்புள் பகுதி இதனுடையது. வாயுக்களைச் சமப்படுத்தும்.

5. வியானன்: 
------------------------
ரத்த ஓட்டத்தை நடத்துகிறது. உடலின் உறுப்புகளிலும் பரவி வேலை செய்கிறது.

தேவைகள்
******

நம்மை நாமே பயிற்சிக்குத் தயார் செய்துகொள்ளத் தேவையானவை:
(1)தேர்ந்த குரு
(2) பயிற்சிக்கு ஏற்ற இடம்
(3) முறையான உணவு
(4) தகுந்த காலம்
(5) நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்
(6) உடல் தூய்மை
(7)தொடர்ச்சி பயிற்சி

குரு: 
---------
அதிக நேரம் மூச்சை நிறுத்திப் பழகவும், வகை வகையான பிராணாயாமங்களில் திறமை பெறவும் சிறந்த குருவின் நேரடிப் பார்வையில் பயிற்சி செய்வது.  

ஏற்ற இடம்: 
--------------------
மூச்சுப்பயிற்சிக்கு என்று தனியாக ஓர் இடம் வைத்துக்கொண்டால் நல்லது. திறந்தவெளி, இயற்கைக் காட்சிகள் நிறைந்த சூழல், கடற்கரை, ஆற்றங்கரை, வீட்டின் மொட்டைமாடி... என நல்ல காற்றும் வெளிச்சமும் வரும் இடமாகத் தேர்வு செய்யவேண்டும்.  

முறையான உணவு: 
------------------------------------
மனதுக்கும் உணவுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆன்மிகம், யோகம் போன்ற பயிற்சிகளைப் பழகுபவர்களுக்கு மன அமைதி அவசியம். மனதை சாந்தமாக வைத்திருக்க, சாத்வீக உணவு உட்கொள்வதே நல்லது. இதனால், உள்ளேயோ, வெளியேயோ மூச்சைக் கும்பகம் செய்யும்போது, விரும்பும் நேரம் வரை நிறுத்த முடியும்.  

எளிதில் ஜீரணமாகக்கூடிய தானிய உணவுகள், சாறுள்ள பழங்கள், பச்சைப் பயறு, காய்கறிகள், எலுமிச்சம்பழச் சாறு, பால், வெண்ணெய், நெய், கைக்குத்தல் அரிசி, சிவப்பரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மாவால் ஆன உணவுகள் ஆகியவை  எடுத்துக்கொள்ளலாம்.

உப்பு, புளிப்பு, காரம், கசப்பு மிகுந்த உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும். சமைத்து வெகுநேரம் ஆன, பழைய, கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பச்சைக் காய்கறிகள், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிகம் வெயிலில் அலைவதோ, நெருப்புக்கு அருகில் இருப்பதோ கூடாது.  

அரை வயிறு உணவும், கால் வயிறு காற்றும், கால் வயிறு தண்ணீரும் உட்கொள்ள வேண்டும். அதிகப் பசியுடனோ, சாப்பிட்ட உடனோ பிராணாயாமம் செய்யக்கூடாது.

தகுந்த காலம்: 
---------------------------
மார்ச் முதல் ஏப்ரலில் அதாவது வசந்த காலத்தில் பயிற்சியைத் தொடங்கலாம். இலையுதிர் காலமான செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகூட, பயிற்சியைத் தொடங்க ஏற்ற காலம். பிற்பகலில் காற்றில் சூடு அதிகம் இருப்பதால், பயிற்சிகளை தவிர்த்துவிடலாம். காலை 4 மணியில் இருந்து 6 மணி வரையிலான குளிர்ந்த சமயத்தில் பயிற்சி செய்வது உசிதம்.

நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்:
--------------------------------------------------------------------
 அதிகாலை வெயில் வருமுன் பழகுதல் நல்லது. மாலை சூரியன் மறையும் நேரம் அதாவது 6 மணிக்குச் செய்யலாம்.

முதலில் நாடி சுத்தீயில் தொடங்கும்போது, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு என நான்கு வேளைகளில் பழகுவார்கள். இப்படி ஒரு மாதம் செய்து, நாடிகளைத் தூய்மை செய்துகொள்ளலாம்.  

உடல் தூய்மை: 
----------------------------
தினமும் காலையில் எழுந்ததும், பல் துலக்கி, கை, கால்களை நன்றாக கழுவவேண்டும்.  பிறகு, கடவுளை வணங்கிவிட்டு, பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.

உடல் சுத்தம் மனதையும் புத்துணர்ச்சியாக்கும். கோபம், வெறுப்பு, கூடாத உணவு, மாறான நடவடிக்கை, கூடா குணம், நடத்தைக் கோளாறு உள்ளவர்களுக்குப் பிராணாயாமக் கலை கை கூடாது.

தொடர் பயிற்சி: 
------------------------------
அன்றாட கடமைகளை செய்வது போல், மூச்சுப்பயிற்சியையும் தொடர்ந்து செய்துவந்தால், ஆர்வம் அதிகரிக்கும்.  தினமும் ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பதை உணரமுடியும்.

கடவுள் மீதான நம்பிக்கை, உணவு, பேச்சு, செயல், உறக்கம்... என எதிலும் மிதமாக இருத்தல், அக்கறையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான தகுதிகள்.  

பிராணாயாமத்தின் நிலைகள்
************

மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை , உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

(1)முதல் நிலை:
----------------------------

இது சாதாரணப் பிராணாயாமம்.

"தாழ்ந்த வகை" எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து), 24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது.  (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு. இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)

ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.

(2)நடு நிலை:
-------------------------

இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64 முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே விடலாம்.  உடம்பில் வியர்வை வழியும். அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல் வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.

இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும். இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை அடையவேண்டும்.

(3)உயர் நிலை:
---------------------------

இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும். உடனே, 96 முறை  உள்ளே நிறுத்திக் கும்பகம் செய்யவும்.  கும்பகம் செய்தவுடன் 48 முறை வெளிவிடவும்.  இப்படி ஒழுங்காக உயர்த்தி, திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி சீராகவும் இழுக்கவும் விடவும் பழகவேண்டும்.  

காலை 4 மணிக்கு அதாவது சூரிய உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும் தெய்வத்தை வணங்கிவிட்டு, பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி செய்யவேண்டும்.  

காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11 மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை பயிற்சியில் ஈடுபடவேண்டும்.  ஒரு தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள் ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர பயிற்சி.

பலன்கள்: 
பயிற்சியில் நாம் பிரணவ மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம் உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும். புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன. சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும்.  உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய் ஆகியவை பயன்படுத்தவேண்டும்.  எண்ணெய்க் குளியல் அவசியம் தேவை.

எளிய பிராணாயாமங்கள்
***********

உடலின் உதவியின்றி மனம் ஒன்றும் செய்ய முடியாது. மனம் அனுசரிக்காமல் உடலாலும் ஒன்றும் சாதிக்க முடியாது. ஆகவே, இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்படுமாறு பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

தலைவலி, வயிற்றுவலி, சூடு, குளிர்... என வேறு உபாதைகளுடன் உடல் இருந்தால், அது நோய் கொண்ட நிலை. இந்த நிலையில் மனதால் பிரயோகப் பயிற்சிகள் செய்ய முடியாது. ஆகவே, உடலை ஆசன சாத்திரப்படி பல ஆசனங்களால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். உடல் நினைவே இன்றி இயங்க முடியும்போதே நாம் உடல் நல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று பொருள்.

எளிமையான ஓர் ஆசனத்தில் நீண்ட நேரம் உட்காரக்கூடிய பக்குவத்துக்கு நாம் தயாராக வேண்டும். நெஞ்சு, கழுத்து, தலை போன்றவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். உடல் முன்னால், பின்னால், இடம், வலம் என எப்படியும் சாயாமல், வளையாமல் நேராக உட்கார்ந்து, நிமிர்ந்திருக்க வேண்டும்.  

தொடர்ந்து உட்காரும்போது ஆசன நிலை சரியாக அமைந்துவிடும். சற்றே குண்டாக இருப்பவர்களுக்கு பத்மாசனம் உடனே வந்துவிடாது. ஆசனம், சரியாக வரும் வரை பயிற்சியைத் தொடங்காதிருக்க வேண்டியதில்லை. ஆசன நிலையுடன் இதையும் பழகிவரலாம்.

வயோதிகர்களும் முடியாதவர்களும் நாற்காலியில் உட்கார்ந்தபடியே பிராணாயாமம் செய்யலாம்.  

ஒழுங்குமுறை
******

பிராணனின் வெளித்தோற்றம் - உடல்மூச்சு. எனவே, ஒழுங்கற்று நடக்கும் மூச்சை முதலில் ஒழுங்குபடுத்தவேண்டும்.  இதில் இருந்து பிராணாயாமம் தொடங்கிவிடுகிறது.

இதில் ஜெயித்தால் உடல், மன இயக்கங்கள், பிறருடைய செயல்கள், பிரபஞ்ச இயற்கை... என எல்லாவற்றையும் படிப்படியாகக் கட்டுப்படுத்தும் திறன் வந்தடையும்.

மனநிலைக்கு ஏற்ப மூச்சு விரைவாகவும் மெதுவாகவும் இல்லாமல், அதை அடக்கி, மாற்றி அமைக்கும்போது,  மாறுபடும் மனநிலையைக்கூட மூச்சு கட்டுப்படுத்திவிடுகிறது.

பலன்கள்: 
உடலும் மனமும் கட்டுப்பட்டு இருக்கும். நினைத்ததைச் சாதிக்க முடியும். நல்ல தோற்றப் பொலிவு, உடல் பலம், மன உறுதி, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம். வீரியமும் ஒருமுகப்பட்ட மனமும் எதையும் வசீகரிக்கும் சக்தியும் மேம்படும்.

சுவாசக் கணக்கு
********

ஒருவர் நாள் ஒன்றுக்கு சுமார் 21,600 முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிறார். அவர் வேகவேகமாக மூச்சு விடும்போது, இந்த எண்ணிக்கை சீக்கிரமே குறைந்து, ஆயுளும் குறைகிறது. யோகி, ஆயுளை ஆண்டுக்கணக்கால் அளவிடுவது இல்லை. மூச்சுக் கணக்கில்தான் அளக்கின்றனர். உயிராற்றல் அதாவது பிராணன், வெளி மூச்சுக்குப் பிறகு உள்ளே இழுத்துக்கொள்ளும் மூச்சின் அளவிலேயே அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். ஒருவர், நிமிடத்துக்கு 15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார் என்று கணக்கிடப்படுகிறது.பி

சுவாச ஒழுங்கு
*******

உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப் பழகுவதுபோல, வெளிவிடுவதையும் மெள்ளச் செய்தால், இதுவே சுவாச ஒழுங்கு.உள்ளிழுப்பதை 'சுவாசம்’ என்றும், வெளிவிடுவதை 'பிரச்வாசம்’ என்றும் கூறுவர். இரண்டின் வேகத்தையும் குறைத்தால் அதை நிகழ்த்தும் பிராணன் நமக்கு லாபமாகிறது. ஆகவே, நிமிடத்துக்கு 15 முறை மூச்சுவிடும் மனிதனுக்கு, 100 ஆண்டு ஆயுள். ஒரு நிமிடத்துக்கு நான்கே மூச்சுவி டும் ஆமை எத்தனை காலம் வாழ்கிறது தெரியுமா? 400 ஆண்டுகள்! ஆச்சரியமாக இருக்கிறதுதானே!? பிராணாயாமம் மூலம் சக்தி அதிகரிக்கிறது. சக்தி இல்லையெனில் சுகம் இல்லை. எனவே, பிராணனே உடலுக்கான பலத்தையும் சுகத்தையும் தரவல்லது.  

பிராணாயாமங்களிலும் பல வகை  
--------------------------------------------------------------

சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச் செய்யும்.

உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும்.

பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது.

நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல்.

பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல்.

சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல்.
மேல் உடலைத் தூய்மையாக்கும்.

மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல்.

கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல்.

பிராணாயாமத்துக்கான எளிய  பயிற்சிகள்

நாடி சுத்தீ
****

நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு, சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது.

பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும்.  

செய்முறைகள்:
----------------------------
முதலில் கால்களைக் குறுக்காகப் போட்டுப் பத்மாசனத்தில் அமரவும். கண்களை மூடி, புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும். வலது கையின் பெருவிரலையும், கடை மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்டு மூக்கைப் பிடியுங்கள். வலது பெருவிரலால் மூக்கின் வலதுபக்கத் துளையை அடைத்துக்கொள்ளவும்.  இடது மூக்குத் துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே சீராக ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள, சீராகத் தொடர்ந்து வெளியே விடுங்கள். மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச் செய்யவும். இது ஒரு சுற்று.

பிறகு, வலது மூக்கைத் திறந்து மற்ற மூன்று விரல்களால் இடது மூக்கை அடையுங்கள். பெருவிரலை எடுத்து மூக்கின் வலது பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்கு மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள். இதையும் 12 முறை செய்தால் ஒரு சுற்று. மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும் 'ஓம்’ அல்லது ஏதாவது மந்திரத்தை ஜபிக்கலாம்.

முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும் சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில் இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில் மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு சுற்றுச் செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.

இந்தப் பயிற்சியில் உள்ளே மூச்சை நிறுத்தும் கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப அதிகச் சுற்றுகளைப் பழகலாம்.

பலன்கள்: 
------------------
இது மூச்சை ஒழுங்குப்படுத்தும்.  இதனால் மூச்சளவு ஒரே சீராகி, நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். உடலில் பலமும் கூடும்.  

இரு மூக்குத் துளைகளின் மூலமும் முடிந்த அளவுக்கு மூச்சை ஓசையின்றி ஒரே சீராக மெள்ள இழுத்து, நுரையீரல்களில் நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல இரண்டு மூக்குத் துளைகள் மூலமும் மூச்சை வெளியே விடவும். இதை 12 முறைகள் செய்ய ஒரு சுற்றாகும். நேரம், திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள் செய்யலாம். இதிலும் கும்பகம் இல்லை.

உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ அதுபோல் அமருங்கள். மூக்கின் வலதுபக்கத்  துளையை வலப் பெருவிரலால் மூடி, மூக்கின் இடதுபக்கத் துளையில் சுவாசத்தை இழுங்கள். இடது துளையை மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள இழுத்த காற்றை வெளியே விடுங்கள். வலமூக்கு வழியே முடிந்த அளவு காற்றை உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன் மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12 முறை இதைச் செய்யலாம்.  இது, ஒரு சுற்றுக் கணக்கு. இதில் மூக்கு மாற்றிச் செய்வதே சிறப்பு.

நாற்காலி, சோபாவில் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள். இரு மூக்குத் துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள். முடிந்தவரை உள்ளே நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி வெளியே விடுங்கள். இது எளிய கும்பகமாகும். உள்ளிழுத்தல், நிறுத்தல், வெளியேவிடலில் குறிப்பிட்ட விகிதம் எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு இழுப்பது, முழுவதும் வெளிவிடுவதும், சுகமாக இருக்கும் வரை மட்டுமே அடக்குதலும் உண்டு.

பலன்கள்: 
ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு, ஒருங்கிணைப்பு உண்டாகும்.  மனம் ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும். படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி தங்கும். மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப் பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத் தூண்டும் பயிற்சி இது.  

சீத்காரி
****

இதற்கு 'குளிரானது’ என்று பொருள். செய்வது மிகவும் எளிது. இந்தக் கோடை காலத்தில் இதைச் செய்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளலாம்.

ஏதேனும் ஓர் ஆசனம் போட்டு அமருங்கள். இரு வரிசைப் பற்களையும், சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். வாய்க்குள் நாக்கை மேலண்ணத்தில் ஒட்டியவாறு  கொஞ்சம் மடித்துக்கொள்ளுங்கள். 'இஸ்ஸ்ஸ்...’ என்று காற்றை வாய்வழியே உள்ள பல் இடுக்கு வழியாக உறிஞ்சவேண்டும். முடிந்தவரை கும்பகம் செய்யலாம்.

காரம் நாவில் பட்டதும், அல்லது ஜில்லென ஐஸ் பட்டால் 'ஸ்..ஸ்’ என்று காற்றை இழுப்பது போலத்தான். பிறகு,  மெள்ள  மூக்கின் வழியே காற்றைச் சீராக வெளியேற்றுங்கள்.

வாயால் இழுத்து மூக்கால் வெளிவிடுவதால், முடிந்தவரை பற்கள் ஒன்றாக சேர்ந்தபடி இருக்கவேண்டும். கும்பகம் செய்யும்போது நாக்கின் நுனி மேலண்ணத்தில் தொட்டு அமுத்தியிருக்கவேண்டும். காலை, மாலையில் 10 முறை செய்யப் பழகுங்கள்.  

சவாசனத்தில் பிராணாயாமம்
************

இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம்.

சூடு இல்லாத சமமான ஒரு தரையில் விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு படும்படி மல்லாந்து படுங்கள்.  கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள். உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும் கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்கட்டும். மூட வேண்டாம். பாதங்கள் நேரே சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள், நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து இருக்கட்டும். அகலமாக இருந்தால் கட்டிலில் கிடந்து இதைப் பண்ணலாம்.

இரு மூக்குத் துளைகள் மூலமாக ஓசையின்றி மூக்கு சுருங்குதலோ, விரிதலோ இல்லாமல் மெள்ள சீராக மூச்சை உள்ளே இழுங்கள். முடியும் வரை சிரமம் இல்லாத வரையில் மூச்சை உள்ளே நிறுத்துங்கள். விடத் தோன்றும்போது இரு மூக்கின் வழியாகவும் மெள்ளச் சீராக மூச்சை, தொடர்ச்சியாக வெளியே விடுங்கள்.

இப்படி காலையில் 10 முறையும், மாலையில் 10 முறையும் செய்து பழகுங்கள். மூச்சை இழுக்கும்போதும் விடும்போதும் 'ஓம்’ என்று ஜபிக்கலாம். கும்பகத்தின்போதும் ஜபிக்கலாம்.  

பலன்கள்: மனமும் உடலும் பூரண ஓய்வுகொள்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் சுகமாக இதைப் பயிற்சிக்கலாம். மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும். இதயம் இதமாக இருக்கும்.

நடந்துகொண்டே பயிற்சி
**********

தோள் பட்டைகள் பின் செல்ல, தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். ஓர் அடிக்கு ஒன்று என, மூன்று அடிகள் எடுத்து, மூன்று 'ஓம்’ அல்லது ஏதாவது ஒரு மந்திரம் சொன்னபடி மெள்ள மூச்சை இழுங்கள். பிறகு, 12 அடிகள் எடுத்து வைத்து 12 'ஓம்’களை ஜபித்து மூச்சை உள்ளே நிறுத்தி வையுங்கள். பிறகு, ஆறு அடிகள் எடுத்துவைத்து ஆறு 'ஓம்’களைச் சொல்லி மெள்ள மூச்சை வெளியே விடவேண்டும். இது ஒரு சுற்று.  

இதன் பிறகு, சற்று ஓய்வாக நடக்கலாம். காலடி வைக்கும்போது 'ஓம்’ எனச் சொல்வது சிரமமாகத் தெரிந்தால், காலடி எடுத்து வைத்தல் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதிக வேலைச் சுமையுள்ளவர்கள் வாக்கிங் போகும்போது காலையிலும் மாலையிலும் இதைச் செய்யலாம். சுத்தமான காற்றில் நடந்தபடியே பிராணாயாமம் செய்வது, உடலுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும். அமர்ந்திருந்து செய்தே பழகியவர்கள், இப்படி நடந்தபடியே செய்யலாம்.  

பலன்கள்: தாகமாக இருக்கும்போது இந்தப் பயிற்சியைச் செய்தால் தாகம் தீரும். முக அழகு கூடும். உடல் வலிமை உண்டாகும். பசி, தாகம், தூக்கத்தை வெல்லலாம். விஷத்தைக்கூட முறியடிக்கும் வல்லமை பெற்ற இந்தப்பயிற்சி, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.

நின்றுகொண்டே பிராணப் பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.

சீதளிப் பிராணாயாமம்
**********

இதுவும் குளிர்ந்த பிராணாயாமம்தான். சீதளம் எனில், குளிர்ச்சி என்று பொருள். கோடையில் வெளியில் அதிகம் அடிக்கும்போது செய்தால் குளிர்ச்சியாக இருக்கும். உடலில் இருந்து வெப்பம் காதுகள் வழியே வெளியேறுவதை உணரமுடியும்.

ஆசனத்தில் வசதியாக உட்கார்ந்துகொள்ளுங்கள். இரு உதடுகளின் இடையிலும் நாக்கைத் துருத்தி குழல் போல் மடித்து வெளியே நீட்டவும். இருபுறமும் மடிந்த நாக்கு நடுவில் குழல்போலப் பள்ளமாக இருக்கும். 'ஷ்’ என்று சீறும் ஓசையுடன் காற்றை வாய் வழியாக உள்ளே இழுத்திடுங்கள். பிறகு காற்றை விழுங்கிடுங்கள். சுகமாகப் படும்வரை மூச்சை உள்ளே அடக்கிக் கும்பகம் செய்திடுங்கள். (வெப்பத்தை மட்டும் குறைத்துக்கொள்ள விரும்புபவர்கள் கும்பகம் செய்ய தேவையில்லை.)  

பிறகு இரு மூக்குகளின் வழியே மெள்ள சீராக வெளியே விடுங்கள். இந்தப் பயிற்சி செய்வது எளிது. 10 முதல் 20 முறை பயிலலாம். நிற்கும்போது, நடக்கும்போது, எந்த நிலையிலும் எப்போதும் செய்யலாம்.

பலன்கள்: 
------------------
இது உடலை குளிர்விக்கும். செரிமானத்தைச் சரி செய்யும். பித்தக் கோளாறுகள், கபத் தொல்லை, தீராத நோய்களின் வீக்கம், புண், காய்ச்சல், இருமலை போக்கும். நா வறட்சி ஏற்படாது. தாகத்தைத் தீர்க்கும்.

நோய், களைப்பை அகற்றலாம்!

மனிதனின் உயர்வைக் கட்டுப்படுத்துவது களைப்புதான். அதன் அதீதம் அல்லது நீட்டிப்பே நோயை உண்டாக்குகிறது. வலி, வீக்கம், உடல் உறுப்பு கெடுதலுடன் அதிகம் முடியாமை  போன்றவை நோயினால் வருவதே. களைப்பை நீக்கும் பிராணாயாமம் நோயையும் விலக்குகிறது. காரணம், எல்லாமே மூச்சுதான்!

ஆழ்ந்து சுவாசிப்பதே ஆரோக்கியம் நீட்டிக்க உதவிடும். இருந்தாலும், பிராணனை மையப் படுத்தும் நுணுக்கங்கள் சில.  

 பிராணனை வெளியிலிருந்து உள்ளே இழுங்கள். வயிற்றில் அப்படியே நிரப்புங்கள்.

 தொப்புளுக்கு நடுவிலும், மூக்கின் முனையிலும், இரு கால் பெருவிரல்களிலும் இந்தப் பிராணன் இருப்பதாக மனதில் ஆழ்ந்து எண்ணவேண்டும். இது, அந்தந்த இடங்களில் பிராணனை மையப்படுத்தும்.

 இதை, சூரிய உதயத்துக்கு முன்பும், சூரியன் மறையும் மாலை வேளையிலும் செய்யலாம்.

 இப்படிச் செய்யும்போது அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடமுடியும். உடனடி பலனாகக் களைப்பு நீங்கும்.

தொப்புள் பகுதியில் பிராணன் நிறுத்தப்படுவதால் எல்லா நோய்களும் விலகுகின்றன. காரணம், அங்கே எல்லாப் பாகங்களுடனும் தொடர்புள்ள நாடிகள் வந்து சேரும் பகுதி உள்ளது. 'தம் கட்டுதல்’தான் இந்த மூச்சுப் பயிற்சி.  எனவே, அது நீட்டிக்கும்போது களைப்பும் காணாமல் போய்விடும்.

மூக்கின் முனையில் மையப்படுத்துவதால் காற்றினுடைய தனித்தனிப் பொருள்கள் அத்தனையையும் ஆளும் திறன் உண்டாகும். அசுத்தம் நீங்கி, தூய பிராணன் நிலைபடும்.

கால் பெருவிரல்களில் நிறுத்தப்படுவதால் உடல் லேசாகும். உடல் கனம் நீங்குவது என்பது அழுக்கு நீங்குவதுதான்.

கும்பகம்:
****

குறிப்பிட்ட கால அளவில் மூச்சை நிறுத்துவதே கும்பகம் எனப்படும். அதாவது, மூச்சைச் சலனமின்றி, சஞ்சாரம் இன்றி ஓரிடத்தில் அடக்கிவிடுவது அல்லது நிறுத்திவிடுவது. இதையே பிராணன் ஆயமம் = பிராணாயாமம் என்கிறார்கள். இதைச் சார்ந்த மற்ற மூச்சு முறைகளும் அந்தப் பெயரிலேயே கூறப்படுகின்றன.

தம் கட்டுதல் என்கிறோமே அதுதான் இது. இதுவே பலம் ஆகிறது. பளு தூக்கும்போதோ, பேசும்போதோ பிராணாயாமம் நடக்கிறது. 'மூச்சைப் பிடித்துக்கொண்டு வேலை செய்கிறான்’ என்பார்கள்.  இது 'தம்’, 'ஸ்டாமினா’ எனப்படும் மூச்சை அடக்கும் திறனையே குறிப்பதாகும்.  

அந்தர்முக கும்பகம் - மூச்சை உள்ளே நிறுத்துவது.

பஹிர்முக கும்பகம் - வெளியே மூச்சை நிறுத்துவது.

கேவல(தனி) கும்பகம் - உடனடியாக சுவாசம் தடைப்படுவது. அதாவது, மூச்சை உள்ளே இழுத்தல், வெளியே விடுதல் இல்லாமல் ஒருவருக்குள் மூச்சு திடீரென நிற்பது. இதுவே கேவல கும்பகம்.

மந்திரங்கள்:
******

பிராணாயாமப் பயிற்சியில் மூச்சை அளக்கவே மந்திரம் கூறப்படுகிறது.  'ஓம்’ எனும் பிரணவ மந்திரம், நாபிக் கமலத்தில் இருந்து உச்சரிக்கப்படுவதால், சுவாசத்தை சீராக இயக்கும். மந்திரத்தை ஜபித்தபடி செய்யும் பயிற்சியால் மனமும் ஒருநிலைப்படும். கும்பகத்தோடு மந்திரம் நல்ல பலனைத் தரும். காயத்ரி, ஓம், விருப்பமான தெய்வ மந்திரம், பஞ்சபூத பீஜாட்சரங்கள் சொல்லலாம். இவை, மூச்சின் அளவை அறியவும் உதவி செய்யும். மூச்சை முடிந்தவரை உள்ளிழுத்து, விடுவதும் கும்பகம் செய்வதும் இயற்கையாக அமைந்துவிடும். மந்திர நீளத்தில் சுவாசிப்பதும் கும்பகிப்பதும் அப்படியே.

கால அளவு:
*****

மூச்சை வெளியிலோ, உள்ளேயோ நிறுத்தும் இடத்தையும் காலத்தையும் மாத்திரைகளின் மூலமாக அளக்கப்படும். கண்ணிமைத்துக் கண் திறப்பது ஒரு மாத்திரை. கையை மூடிவிட்டு திறக்கும் அளவே ஒரு மாத்திரையின் கால அளவை நிர்ணயித்துள்ளனர். மூச்சு விட்டு மூச்சு இழுப்பது ஓர் அளவே. சிறுசிறு நிகழ்ச்சிகளால் இப்படிக் கால அளவு கணிக்கப்படும். 'ஓம்’ என்பது அ, உ, ம அடங்கிய ஓர் எழுத்து.  இதைக் கொண்டும் மூச்சின் காலம் அளக்கப்படும். இதுவே ஆன்மிகமானது; நற்பயன் தருவது.  எனவே, பலரும் இந்தக் கால அளவை 'ஓம்’ என்றே அளந்துகொள்வார்கள்.

தரை விரிப்பு:      
******
தரைவிரிப்போ, பருத்தித் துணி, பலகை அல்லது கம்பளி இன்றி வெறும் தரையில் உட்கார்ந்து பிராணாயாமம் செய்யக் கூடாது. இதனால் உடலின் பிராணனை தரை இழுத்துக் கொண்டுவிடும். பூச்சிகளால் இடையூறு ஏற்படலாம். தரையின் சூடோ, குளிரோ உடலைத் தாக்கலாம்.  

ஆசன அவசியம்
********

18 ஆசனங்களைப் பழகினால், பிராணாயாமப் பயிற்சியில் இடையூறு இருக்காது. அஜீரணமோ, மலச்சிக்கலோ, வாயுத் தொல்லையோ இருக்காது. இது, நாடிகளைத் தூய்மை செய்ய மிகவும் உதவும். சூட்டையும் குளிரையும் தாங்கும் சக்தி நமக்குள் பெருகும். மேலும், உடலை நிமிர்த்தி உட்காரும் முறையும் ஒழுங்குப்படும்.

காலத்துக்கேற்ப பயிற்சி!
**********

வெயிலின்போது காலையில் மட்டும் பயிற்சி செய்தால் போதும். உடலில் உஷ்ணம் மிகுந்தால், உடலில் வெண்ணெய் தடவியும், தலையில் நெல்லிக்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயைத் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.  சர்க்கரை அல்லது கற்கண்டை தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம்.  நீர் மோராக கரைத்துக் குடிக்கலாம்.  துண்டை தண்ணீரில் நனைத்து உடலில் போட்டுக்கொள்ளலாம்.  அடிக்கடி உடலில் தண்ணீர் படும்படி செய்யலாம்.  இவை அனைத்தும் உடல் உஷ்ணமாகாமல் தடுக்கும்.

குளிர்ச்சியைத் தரவல்ல கேப்பைக் கூழில் மோர் கலந்து, வெண்டைக்காய், வெந்தயம் சேர்த்து உண்ணலாம்.  இரவிலும் பகலிலும் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாம்.  

தக்காளி, முலாம், தர்ப்பூசணி போன்ற பழங்கள் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

குளியல்
*****

குளித்துவிட்டுதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பது இல்லை.  குளித்தால் தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மெல்லிய துணியால் தலையை மூடிக்கொண்டு செய்யலாம்.  சிலருக்கு ஆசனம் போட குளித்தால்தான் உடல் வளையும்.  குளியல் குளிர்ந்த நீரிலா, வெந்நீரிலா என்று இடம், காலம் பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம்.  

செயலில் ஆரோக்கியம்!
***********

இடது கைக்கு ஏதாவது தலையணையை அண்டக் கொடுத்து படிப்பது, டி.வி. பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.  தூங்கும்போது எப்போதும் இடதுபுறம் ஒருக்களித்துப் படுங்கள். எப்போதும் பகலில் வலதுபுறம் சாய்ந்து வலதுபுற கைக்கு அடியில் ஏதாவது திண்டை வைத்துக்கொண்டு படிக்கலாம். அலுவலகம் எனில், வலதுபுறம் சாய்ந்த நிலையில் வேலையைப் பாருங்கள்.  இடதுகாலின் மேல் வலதுகாலைப் போட்டுக்கொள்ளுங்கள்.

 இயற்கையாகவே இப்படி நடக்கலாம்.  ஆனால், பிறருக்கு விநோதமாகப் படக்கூடாது என்பதை,க் கவனத்தில் கொள்ளவேண்டும். சுவாசம் சுகமானது!

கற்சிலைக்கு அபிஷேகம்

கற்சிலைக்கு அபிஷேகம் 

பாட்ரியில் சார்ஜ் குறைய குறைய எப்படி நாம் சுத்தமான டிஸ்டில்டு நீர் ஊற்றி பாட்ரியில் உள்ள லித்தியம் தகடிற்கு சக்தி ஏற்றி பிறகு பவர் அளிக்கிறதோ  
அதே போல் சுத்தமான பொருட்களால் அபிஷேகம் செய்ய செய்ய மூலவருக்கு கீழ் உள்ள எந்திரத்திற்கு புரோட்டான்களை அதிகரித்து மூலவரின் மூலமாக கருவரையில் இருந்து வலம் வந்து நம் உடலுக்குள் செல்கின்றன.

ஐந்தாறு வருடங்கள் கழித்து பாட்டரி மாற்றுவது தான் பனிரெண்டு வருடங்களுக்கு பிறகு மூலவருக்கு கீழ் உள்ள எந்திர தகட்டையும், கோபுர கலசத்தில் உள்ள வரகு, சாமையும் மாற்றி கும்பாபிஷேகம் செய்து ஆற்றலை புதுப்பித்தல் ஆகும்.

எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு சுத்தமான பொருளை கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்ல அதிர்வுகள் ஏற்படுத்தும்.

அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் முதலியன. 

அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : 
எண்ணெய்,
பஞ்சகவ்யம், அரிசிமாவு,
நெல்லிமுள்ளி,
மஞ்சள்பொடி,
பஞ்சாமிருதம், 
பால், தயிர், 
நெய், தேன், 
கரும்பின் சாறு, 
பழ ரசங்கள்,
இளநீர்,
அன்னாபிஷேகம், 
பன்னீருடன் சந்தனம், 
ஸ்நபனம் 

 அபிஷேக திரவியங்கள் தரும் பலன் 
சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும், 
மணம் உள்ள தைலம் - சுகம் தரும், 
பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும், 
பஞ்சாமிர்தம் - செழிப்பினைத் தரும், 
நெய் - மோக்ஷம் அளிக்கும், 
பால் - வாழ்நாள் வளர்ச்சி, 
தயிர் - மக்கட் செல்வம் தரும், 
மாப்பொடி - கடன் ஆரோக்கியம் அளிக்கும், 
தேன் - சுகம் தரும், 
பழபஞ்சாமிர்தம் - செல்வங்கள் பெருகும், 
வாழைப்பழம் - பயிர் செழிக்கும், 
பல்லவம் - உலகை வயப்படுத்தும்,
மாம்பழம் - மகனுக்குச் சீர் சேர்க்கும், 
மாதுளை - கோபத்தை நீக்கும், 
கொளஞ்சி நாரத்தை - சோகத்தைப் போக்கும்,
நாரத்தை - ஒழுங்கு ஏற்படுத்தித் தரும், 
எலுமிச்சை - மரணபயம் நீக்கும், 
சர்க்கரை - பகை களையும், 
இளநீர் - இன்பங்கள் நல்கும்,
 அன்னாபிஷேகம் - நாடாளும் வாய்ப்பு அளிக்கும், 
சந்தனக் குழம்பு - தொலையா நிதியம் (லக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும். 

பஞ்சகவ்யம் :
 கோமயம் (பசுஞ்சாணம்),
 கோஜலம், 
நெய், 
தயிர், 
பால், 
இவைகளைக் கலந்து பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும். 

 பஞ்சாமிர்தம் இரு வகை :

 ரஸ பஞ்சாமிர்தம் 
ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், நாட்டு சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது. 

பழ பஞ்சாமிருதம் மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது.

 பூஜைக்கு 
மாதுளை, எலுமிச்சை,  கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா - ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தொகுப்பு:
 கோ.பிரபாசங்கர்
 கீழ்பாலூர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஷோபனா

ஷோபனா (மனதை தொட்டுவிடும் கதை – 80)
#ganeshamarkalam

ஆபீஸெ அல்லோலகல்லோல பட்டது. புதுசா ஒரு ரிசெப்ஷனிஸ்ட் வேலைக்கு சேரப்போரான்னு. இதுக்கு முன்னாடி இருந்த கௌசல்யாவை யாருக்குமே பிடிக்காது. ஏன்னு சொன்னாத்தானே உங்களுக்கு புரியும்? ஏன் பிடிக்கலை, புதுசா வரவளுக்காக ஏன் இவ்வளவு ஆரவாரம்? சொன்னால் எல்லாமே புரியும். சொல்ரேன்.

கௌசல்யா ஒல்லிபிச்சு. அவளை எப்படி இந்த வேலைக்கு எடுத்தான்னே டவுட். அப்புரம் பிரான்ச் மானேஜருக்கு அவ தூரத்து சொந்தம்னும் ஃபேவர் பண்ணியிருக்கார்னும் தெரிஞ்சு எல்லார் கோபமும் அவர் மேல பாய்ஞ்சது. ரஸனையில்லாத மனுஷன், திட்டம் போட்டு தினம் தினம் எல்லார் மூடையும் கெடுக்கரத்துகுன்னே இதைப்பண்ணினான்னு பேசினா. ஒரு நாளைக்கு அவளாவே அவாத்துக்காரருக்கு ட்ரான்ஸ்ஃபெர் ஆகிடுத்துன்னு ரிஜைன் பண்ணிட்டா. அவளுக்கு ஃபேர்வெல் தரலை. ஆனா ராமசுப்பு எங்களுக்கெல்லாம் எதுத்தாப்புலே இருந்த ஐஸ்க்ரீம் பார்லரில் பார்டி வச்சான். அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாம்.

பார்டீலே ஒரு விஷயம் சொன்னான். அவன் வேலை விஷயமா தில்லி போயிருக்கரச்சே BHEL கார்பொரேட் ஆபீசுக்கு போயிருக்கான். அங்கே சேர்மென்னோட ஆபீசில் ஒரு டாகுமென்ட் கொடுக்கப்போக அவரோட செக்ரெடரியை பாத்துட்டு அப்படியே அங்கே போட்டிருந்த வைடிங்க் ரூம் சோபாபில் மயங்கி சரிஞ்சுட்டானாம். அழகுன்னா கொள்ளை அழகாம். பாகிரவா மனசை கொள்ளையடிச்சது ஒரு பக்கம் வச்சுட்டாலும் அவள் தன்னைப்போல இன்னும் 12 பெண்களுக்கு போய்ச்சேரவேண்டிய அழகையும் கொள்ளையடிச்சு தன்கிட்டேயே வச்சிண்டதுதான் இவனை மயக்கம் போட வச்சதாம். 

“அதுசரி, அந்தமாதிரி பெரீய பதவியில் இருக்கராவா எப்படி வேணும்னாலும் தங்களோட ஸ்டாஃப் செலெக்ட் செஞ்சுக்கலாம்னு இருகச்சே அதெல்லாம் சாத்தியம்தான்”னேன். அதுக்கு அவன், “ரிசெப்ஷனில் இருந்த பொண்ணு அவளையுமே தூக்கி அடிக்கராமாதிரிடா”னான். “எங்க ப்ரான்ச் மாதிரி சின்ன இடத்தில் எப்படி அப்படி எதிர்பாக்க முடியும்”னு கேட்டதுக்கு, “மானேஜர் கொஞ்சமாவது ரஸனையோட பிறந்திருந்தா முடியும்டா, அழகான பெண்களுக்கா பஞ்சம்”கிரான். எங்களுக்கு இவன் சரீன்னு பட்டது.

கௌசல்யா போயாச்சு. இப்போதைக்கும் அடுத்த ரிசெப்ஷனிஸ்ட் வரத்துக்குமான இடைப்பட்ட தினங்கள் எங்களுக்கு பதபதைப்பா கழிஞ்சது.

மானேஜரை பாக்க யாராவது பொண்ணு கொஞ்சம் இளமையா இருந்துட்டா போதும் அவள் அவர் காபினுக்குள் நுழஞ்சதும் ராமசுப்பு தன் சீட்டுலேந்து எழுந்து வந்து, “இவளா இருக்குமாடா”ன்னு கேப்பான். ஒருதடவை ஒரு 38 வயசு மதிக்கத்தக்க பெண்மணி வந்தா. உள்ளே போய் ரொம்பநாழி ஆச்சு. மானேஜரை பத்தி நன்னா தெரிஞ்சதாலே இவளா இருக்குமோன்னு மனசில் கிலேசம் ஏற்பட்டது. அப்புரம் டெஸ்பாட்ச் கிளர்க், மானேஜராத்துக்கு அடிக்கடி போரவன் வந்து விஷயத்தை சொன்னதும்தான் கொஞ்சம் நிம்மதி. வந்தது அவர் வைஃபாம். நல்லவேளை இன்டெர்வ்யூவுக்கு வரலை. 

ஆனா அவரோட டேஸ்ட் முதல்லேந்தே இப்படித்தான்னு ஊர்ஜிதமாச்சு.

காஷியர் கமலா டாம்பீரமா ட்ரெஸ் செஞ்சுண்டு வருவா. வடக்கத்திக்காரி மாதிரி. அவள் நாங்க கூடிக்கூடி பேசரதை பாத்துட்டு “என்ன விஷயம் கோபால்”னு எங்கிட்டே வந்தா. அவளுக்கு என்மேல் கொஞ்சம் சாஃப்ட் கார்னெர். எனெக்கொரு ஒன்ணுவிட்ட அக்கா இருந்தா எப்படி நடந்துப்பாளோ அப்படி. அவ கிட்டே எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லலாம். பொம்மனாட்டி மேட்டரும். சொல்லிட்டேன். “எல்லோரும் காஞ்சுபோய் கிடக்கோம், அதான் புதுசா வர ஃப்ரென்ட் ஆபீஸ் பொண் பத்தி தினம் சர்ச்சை”னேன். அவ “கொஞ்சம் நாளாகும், இப்போதான் பேப்பரில் விளம்பரம் கொடுத்திருக்கா”ன்னா. 

“எங்க கிட்டே கேட்டுச் செய்யப்பிடாதா”ன்னு ராமசுப்பு. “கேட்டால் என்ன செஞ்சிருப்பாய்”னா. ரிசெப்ஷனிஸ்ட்னா இப்படி இருக்கணும்னு நாங்க எடுத்துகொடுத்து விளம்பரத்திலேயே தெளிவுபடுத்தி நாளைக்கு செலெக்ஷனில் தப்பு நடக்காமல் செய்யலாமேன்னுதான்”னு இழுத்தான். .அவள் “அப்படியெல்லாம் செஞ்சால் டிஸ்க்ரிமினேஷன்னு வழக்கு போட்டு நம்ம எல்லோரையும் உள்ளே தள்ளிடலாம்னு சட்டமே இருக்கு”ன்னு தெளிவா சொல்லி ஒரு கிலி ஏற்படுத்தினா.

நன்னா கண்ணுக்கு ரம்மியமா கூட வேலைபாக்கிரவா இருக்கணும்னு நினைக்கரதுகூட இந்த நாட்டில் குத்தமா ஆகிடித்துங்கரதை நினெச்சு நாங்க நீலிக்கண்ணீர் வடிச்சோம். அப்போதைக்கு வேர ஒண்ணும் செய்யத்தோணலை.

இந்த விளம்பரத்தை கொடுத்தது HOவில். எந்த பேப்பரில் கொடுத்து தொலைச்சிருக்கான்னு தெரியலை. அதைக் கண்டுபிடிக்கணும்னு ராமசுப்பு சொன்னான். அந்த வேலையை எனக்கு கொடுத்தா. கண்டுபிடிச்சேன். சென்னை ஹிந்துவில் 12ஆம் தேதி அப்புரம் 20ஆம் தேதி ரிபீட் ஆகியிருக்கு. கமலாதான் அடுத்து நாங்க செய்யவேண்டியது என்னன்னு கிளாஸ் எடுத்தா. அய்யே, இது நமக்குத்தோணாம இந்த குண்டு சல்வாருக்கு தெரிஞ்சிருக்கேன்னு தோணித்து. ஒண்ணுமில்லை, எங்களுக்கு பிடிச்ச 25 வயசுக்குள் இருக்கிர அழகான பெண்களை தேடிப்போய் இந்த விளம்பரத்துக்கு அப்ளை செய்யசொல்ரதுதான். ஆரம்பிச்சோம். அதே நினைப்பா இருந்ததால் எங்கே யார் இருப்பான்னு வகைப்படுத்திண்டு ஆளுக்கு ஒரு ஏரியா கவர் செய்யரதுன்னு. 

எனக்கு தெரிஞ்ச சிட்டுகள் எல்லாம் படிச்சு ஐடியில் போயிடணும்னு அலையரதுகள். இந்த வேலை ஆவாதுன்னு வராதுகள். அதுவுமில்லாம அவா எனக்குமட்டுமேன்னு வச்சு பாதுகாத்திண்டிருகச்சே இங்கே வேலை கொடுத்து ராமசுப்பு, ராம்கி, பஞ்சாபகேஸன் எல்லாம் சைட் அடிக்க விடலாமான்னு தோணித்து. கொஞ்ச நாள் கழிச்சு ஒவ்வொருத்தனும் அப்படித்தான் யோசிக்கரான்னு பட்டது. யாருமே அப்ளை செய்யலை. 

இடையில் அப்பப்போ ஃப்ரீயா இருகச்சே அந்த டெஸ்பட்ச் கிளார்கே, (32 வயசு பையன்) கொஞ்சநாழி ரிசெப்ஷனில் உக்காந்துண்டு வர கால்ஸும் அட்டெண்ட் செய்யணும்னு சொல்லிட்டா. நாங்க இப்படி அப்படி போரச்சே அவனை அங்கே பாத்தால், “எப்படி இருக்கீங்க மிஸ்”, அல்லது, “நீ இந்த ட்ரெஸ்ஸில் ரொம்ப அழகா இருக்கீங்க மிஸ்”ஸுன்னு கலாய்ப்போம். தாங்கமுடியாம அவன் மானேஜரிடம் புகார் செஞ்சுட்டான். “அங்கே உக்காரரத்துக்கே வெக்கமா இருக்கு இனிமேல் இந்த மாதிரி செய்யச்சொல்லாதீங்க”ன்னு வார்ன் செஞ்சான். யூனியனில் சொல்லி கோஷம் எழுப்புவோம்னு மிரட்டியிருக்கான். அவர் ஏன் இனிமேல் அப்படி சொல்லப்போரர்?

ரெண்டு பாசம் கழிச்சு 5 அப்ளிகேஷன் வந்திருக்கு, அதில் 3 பேரை நேர்காணலுக்கு வரச்சொல்லப் போரான்னு வதந்தி. மானேஜர்தான் இன்டெர்வ்யூ எடுப்பர். அதை முதல்ல தடுக்கணுமே? என்ன செய்யலாம்? அதுக்கு ஒரு மீட்டிங்க் போட்டோம்.

தெரு முனையில் ஒரு ஆந்த்ரா மெஸ். அங்கே போய் வெஜிடேரியன் தாளி சொல்லிட்டு பேச ஆரம்பிச்சோம். கமலா தெரிஞ்சவா கிட்டே பேசி என்னைக்கு இன்டெர்வ்யூன்னு கண்டுபிடிச்சு சொல்லுவா. நானும் சுப்புவும் வரவாளை முதல்லே பாத்து சரியில்லைன்னா கிட்டக்க போய் பேசி “இங்கே சம்பளம் சரியா தரமாட்டா”ன்னு சொல்லி அவா மனசை கலைச்சு போகவச்சுடணும். நமக்கு வேணும்கிரா மாதிரி வரவா அமைஞ்சுட்டா அவாளை உள்ளே அனுப்பிச்சுட்டு ராமகியும், பஞ்சாபகேசனும் கிட்டக்கே இருக்கிர பிள்ளையார் கோவிலில் எங்க செலெக்ஷனையே மானேஜரும் செலெக்ட் செய்யணும்னு சிதர் தேங்காய் போட்டு எல்லார் சார்பாவும் பிரார்த்தனை செஞ்சுட்டு வரணும்னு.

ஆனா மூணுபேர்தான்கிரப்போ கொஞ்சம் சாய்ஸ் கம்மின்னும், நாம மொதல்லெ பேசினபடி செஞ்சிருந்தா 12 பேராவது வரா மாதிரி பண்ணி ஒரு 5 பேரையாவது மனசுக்கு பிடிச்சாமாதிரி உள்ளே அனுப்பிக்கலாமேன்னு தோணித்து. இப்போ ரொம்பவே காலம் கடந்து போச்சு. இதுக்கு யார் காரணம்னு ஒருத்தரை ஒருத்தர் திட்டிண்டோம். ஆந்த்ரா மெஸ்லே இலை போட்டு பரிமாறுவன், முதல்ல சட்னீ, துவையல்னு 6 வகை வைப்பன், கமலா மட்டும் நாங்க பட்ர அவஸ்தைக்கும் அவளுக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்லாத மாதிரி சட்னியை நுணி விரல்ல வழிச்சு முழிங்கிண்டிருந்தாள்.

அன்னைக்கு எதிர்பார்தாப்புலே 3 பேர் வந்தா. ஒரு பொண் நன்னா பாந்தமா, இப்படிபட்ட வேலைக்குன்னே பொறந்தவ மாதிரி பட்டா. எல்லார் மனசுக்கும் இவள் மாதிரி ஒரு டஜன் அப்ளை பண்ணியிருந்தா நன்னா இருக்கும்னு பட்டது.
ஒருத்திக்கு வயசாயிடுத்துன்னு தெளிவா புரிஞ்சது. இந்தியன் ஏர்லயின்ஸில் ஏர்ஹோஸ்டஸா இருந்து ரிடையர் ஆனாப்புலே. நான் கிட்டக்கபோய் பேச்சு கொடுத்தேன். ஸ்ட்ராங்கா ஏதோ பெர்ஃப்யூம் குமட்டித்து. பேச்சே வரலை. அதுக்குள்ள அவளை உள்ளே கூப்பிட்டுட்டா. ராமசுப்பு சொன்னான், இவள் செலெக்ட் ஆனா உன் கழுத்தை என் கையாலயே நெறிப்பேன்னு. நல்லவேளை அவள் போனவேகத்தில் திரும்பிட்டா. காபிகூட குடிக்கலைன்னு தெரிஞ்சுது. ரிஜெக்டட்னு அவ முக பாவனையிலே பட்டது. மானேஜர் திருந்திட்டார்னு தோணித்து. 

அடுத்ததா பாத்த பொண் கொஞ்சம் கருப்பு. ஊருக்கு வெளீலே ஒதுக்குபுறமா கட்டியிருப்பாளே அந்தமாதிரி காலேஜில் படிச்சவ மாதிரி தோணித்து. சூடிகையா, முகம் துருதுருன்னு புத்திசாலியா காட்டித்து. ஓகே மாதிரி பட்டது. ஆனா ராமசுப்பு அவள்கிட்டே பக்கத்து சீட்டில் உக்காரரத்துக்கு போனவன், கார்பெட்டில் கால் தடுக்கி நேரா அவள் மடியில் விழப்போனான். அவளோ அதை எதிர்பாத்தா மாதிரி டக்குன்னு அவன் தோளைப்பிடிச்சு நிருத்தினா. அந்த ஸ்பரிசம் இவனை என்ன செஞ்சதோ, இவன் சுதாரிக்கரத்துகுள்ள அவளும் உள்ளே போயிட்டா. வரத்துக்கு 20 நிமி ஆச்சு. இவள்தான்னு முடிவே பன்ணிட்டோம். இருந்தாலும் வந்திருக்கிர 3 பேரையும் பாக்காம அந்த சண்டாளன் முடிவெடுக்க கூடாது, மாட்டான்னு கமலா சொன்னா.

கடைசீலே நம்ம கேண்டிடேட். அவ உள்ளே போனதும் ஏதொ நாங்களே பரீக்ஷை எழுதராப்புலேயும், எங்க எல்லோருக்குமே செலெக்ஷன் நடக்கராப்புலேயும், என்ன ரிசெல்ட் வருமோன்னு காத்திருந்தோம். ஒரு 10 நிமிஷத்தில் – எங்களுக்கு 40 நிமிஷமா பட்டது – அவளும் கிளம்பிப்போனா. என்ன முடிவோன்னு நாளைக்காவது தெரியுமான்னு யோசிக்கரச்செ, மானேஜர் தன் காபின்லேந்து கிளம்பி வெளீலெ போரான். மாடீலேந்து கழுத்தை வளைச்சி கீழே பாத்தா அவன் காரை எடுத்துண்டு போரதைத்தான் பாக்க முடிஞ்சது. காரில் கூட யாராவது இருந்தாளான்னு தெரியலை

2 வாரத்தில் முதல் பாராவில் சொன்னது நடந்தது. நாளைக்கு புது ரிசெப்ஷனிஸ்ட் வெலைக்குச் சேரப்போரா. அவ யாருங்கரத்தைவிட, யாரா இருந்துடகூடாதுங்கிரதில் பலவிதமான ஹேஷ்யம் ஓடித்து. எங்களுக்குள் எல்லோரும் வழக்கமா வர டயத்துலேந்து ஒரு அரை மணி தாமதமா வரணும்னு முடிவு பன்ணினோம். ஏன்னா உள்ளே நுழையரச்சே அவளை பாத்துடணும்னு. அவ வந்து சார்ஜ் எடுத்துண்டு அவ இருக்கையில் அந்த பெரீய டேபிளுக்கு பின்னாடி கொலு மாதிரி உக்காந்துக்கட்டும்னு.

நானும் கமலாவும் கீழே மீட் பண்ணி மத்தவாளுக்காக வைடிங்க். அவாளும் வந்தா. லிஃப்டில் ஏறி போரோம். பாழாப்போன லிஃப்ட் இன்னைக்குன்னு பாத்து மெள்ளப்போரது. வரவேற்பரையில் நீ முதல்ல போன்னு இவா எனக்கு வழி விடரதும், இல்லை கமலா போகட்டும்னு நாங்க எல்லாரும் விட்டுக்கொடுக்கரதுமா நடந்தது. 

உள்ளே போனால் நாங்க பாக்காத ஒரு சிவப்பா அழாகன பெண், நன்னா பொட்டு வச்சுண்டு, மலர்ந்த முகத்தோட பற்கள் இவ்வளவு வெண்மையா வச்சுக்கமுடியுமாங்கிராப்புலே எங்களை மயங்கி விழராப்புலே பாத்துட்டு குட் மார்னிங்க் சொல்லி வரவேற்கிரா. வழி தவறி வந்துட்டோமோன்னு ஒத்தரை ஒருத்தர் பாத்துண்டோம். இது கனவாகூட இருக்கும்னு டெஸ்ட் செஞ்சுக்க கமலா கையில் நறுக்குன்னு கிள்ளினேன். வீல்னு கத்தினா.

நாங்களும் “குட் மார்னிங்க்” சொல்லிட்டு எங்கள் இடத்துக்கு போனோம். மேற்கொண்டு ஆகவேண்டியதை கவனிக்கணும். ஆனால் இன்டெர்வ்யூவுக்கு வராத இவளை யார் செலெக்ட் செஞ்சதுன்னு ஒரு கேள்வி எல்லார் மனசிலேயும். ராமசுப்புதான் “இப்போ அதுவா முக்கியம்? எப்படியோ நாம நினச்சது நிறைவேறித்து, இன்னைக்கு லன்ச் சாப்டுட்டு ஐஸ்க்ரீம் பார்டி”ன்னுட்டன். நான் “புதுசா செர்ந்தவாளுக்கும் ட்ரீட் கொடுக்கராமாதிரி அவளையும் அழைச்சிண்டு போலாம்”னு ஒரு ப்ரொபோசல் வச்சேன். அதை இந்த நூற்றாண்டிலேயே நல்ல யோசனையா பாராட்டினா.

சாப்டுட்டு நாங்க 5 பேரும் கிளம்பி அவகிட்டே போனோம். எங்களை அறிமுகப்படுத்திண்டோம். அவள் பேர் ஷோபனாவாம். “ரொம்ப பொருத்தமான பேர்”னு வழிஞ்சோம். அப்புரம் வந்த விஷயத்தை சொன்னோம். அவள் “ரொம்ப தாங்க்ஸ், ஆனால் என்னால் முடியாதே, வாங்கிண்டு வந்து ஏன் ஷேரை இங்கே தரமுடியுமா”ன்னு கேட்டா. எங்களுக்கு ஆச்சர்யமா இருந்தது. கொஞ்சநாழி வெளீலே போனா மானேஜர் ஒண்ணும் சொல்லமாட்டார்னு தைரியம் தந்தோம்.

அவள் “அதுக்கில்லை, என்னால் முடியாது”ன்னு அவள் இருக்கைக்கு கால்மாட்டில் மடிச்சு வச்சிருந்த சக்கர நாற்காலியை காட்டினாள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஷோபனா!


எதிர்பார்ப்போடு காத்திருக்கும் இளவட்டங்களுக்கு
செம அடி!
ஊனம் இல்லாமல்
சுமாரான அழகுடன் இருந்தாலும் அவர்கள்
ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
அது மொத்தமான மனிதர்களின் மனோபாவம்.
சரியான டிவிஸ்ட்

சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ; தீர்த்த கட்ட விபரங்கள்

🔥சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்🔥


தீர்த்த கட்ட விபரங்கள்

பூர்வவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் 

ஊர்ஜஸ்தீர்த்தம், இஷர்தீர்த்தம், விருஷர்ங்கதீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், சக்கரதீர்த்தம், பாண தீர்த்தம் ஆகியவை உள்ளது. உத்திரவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் வாமன தீர்த்தம், ரேம்ப தீர்த்தம், நரசிங்க தீர்த்தம், போகி ராஜ தீர்த்தம் உள்பட பல தீர்த்தம் உள்ளது. பாண தீர்த்தம், பாஞ்சஜன்ய தீர்த்தம். வராக தீர்த்தம், சக்கரசீலா தீர்த்தம், முனிதீர்த்தம், பிசங்கிலா தீர்த்தம், கன்னியாதீர்த்தம், வருணாதீர்த்தம், ராமதீர்த்தம், காலதீர்த்தம் இத்தகைய தீர்த்தங்களும் தாமிரபரணி நதி உற்பத்தி ஸ்தானத்தில் இருந்து கல்யாணதீர்த்தம் வரை உள்ளது.

கல்யாண தீர்த்தம், நாரத தீர்த்தம், வருண தீர்த்தம் (அகத்தியர் அருவி), பிராசேதல தீர்த்தம், தும்புரு தீர்த்தம், பருவத்தீர்த்தம், பாபநாசத்தில் இந்திரசீல தீர்த்தம், திரிநதிசங்கம தீர்த்தம், தீப தீர்த்தம், சாலா தீர்த்தம், அம்பாசமுத்திரத்தில் காசிப தீர்த்தம், கண்ணுவ தீர்த்தம், கல்லிடைகுறிச்சியில் பிருகு தீர்த்தம் ஆகியவையும் மிக முக்கியவையாகும்.

உத்திரவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் கோட்டீஸ்வர தீர்த்தம் (ஊர்க்காடு), சக்கர தீர்த்தம், மாண்டக தீர்த்தம்,திருப்புடைமருதூரில் கடனா சங்கம தீர்த்தம், மானவ தீர்த்தம், சுரேந்திர மோட்ச தீர்த்தம், பைசாசமோசன தீர்த்தம், தர்மதர தீர்த்தம், தண்டபிரம்மசாரி தீர்த்தம், கரும தீர்த்தம், அத்தாளநல்லூரில் கஜேந்திரா மோட்ச தீர்த்தம், புஷபவனேச தீர்த்தம், மணிக்கீரிவ தீர்த்தம், அரிய நாயகிபுரத்தில் யட்ச தீர்த்தம், கோ தீர்த்தம், சோம தீர்த்தம் சேரன்மகாதேவியில் வியாச தீர்த்தம், மார்கண்டேய தீர்த்தம், ரோமச தீர்த்தம்,(கோடகநல்லூர்), துருவாச தீர்த்தம், பார்கவ தீர்த்தம்(கரிசூழ்ந்த மங்களம்), 🔥
வைனதேய தீர்த்தம், சாயா தீர்த்தம், காந்தர்வ தீர்த்தம், பானு தீர்த்தம், பிரபா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம் (செவல்), யாக தீர்த்தம், ருத்ர தீர்த்தம், புஷப தீர்த்தம் (சிந்துபூந்துறை), ரிஷி தீர்த்தம், மூர்த்தீஸ்வரன தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தயா தீர்த்தம், புசங்க மோகன தீர்த்தம், சுசி தீர்த்தம், சிங்க தீர்த்தம், கேது தீர்த்தம், உஷர் தீர்த்தம், இவைகள் எல்லாம் தருவை அருகில் உள்ளன.

வடகரையில் ராமா தீர்த்தம், ஜடாயு தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம், ஆகியவை திருவண்ணநாதபுரம் மற்றும் அருகன்குளம் அருகில் உள்ளன. பாவ விமோட்சன தீர்த்தம், பட்ஷி தீர்த்தம், அட்சுரு தீர்த்தம், காசி தீர்த்தம், நதி ஸ்தம்பன தீர்த்தம், பூசாவதன தீர்த்தம் (செப்பரை), துரிதாபக தீர்த்தம், மங்கள தீர்த்தம் (பாலாமடை), லோகிவாச தீர்த்தம் ஆகியவையும் உத்திரவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் உள்ளது.🔥


.     சர்வம்🔥🔥
.            சிவமயம்🔥🔥
.                ஆன்மீக குழு


சொரிமுத்து அய்யனார் கோவில்

🔥🔥சொரிமுத்து அய்யனார் கோவில் ஸ்தல வரலாறு🔥🔥


இன்னல்களை தீர்க்கும் சொரிமுத்து அய்யனார் கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தின் வரலாற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் சொரிமுத்து அய்யனார். இறைவியர் புஷ்கலை, பூர்ணகலை. தல விருட்சம் இலுப்பை மரம் ஆகும். இங்கு பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன.

இந்த ஆலயமானது, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள், பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட, தாமிரபரணி சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் இயற்கையின் மையத்தே அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கொடிய விலங்குகள் பல வசித்து வந்தாலும், இத்தலத்து பகவானின் அருளால் அவைகள் பக்தர்களுக்கு எந்த வித தொல்லையும் கொடுப்பதில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்🔥
தல வரலாறு:

இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

தென்னாட்டில் பண்டைய காலத்தில் பண்டமாற்று வணிகமுறை நடைமுறையில் இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்து உள்ள இடத்திற்கு அருகில், பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது. அப்போது பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகியது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு அதிசயித்து பார்த்தனர்.

அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. ‘குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இனி வரும் காலங்களில் மகாலிங்க சுவாமியை, சொரிமுத்தைய்யன், சங்கிலிமாடன், பிரம்மரட்சகி போன்ற மூர்த்திகள் சூழ ஆலயம் எழுப்பி வழிபட்டு வாருங்கள்’ என்றது அந்தக் குரல். அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பல சன்னிதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர்.🔥🔥
இமயமலையில் பரமேஸ்வரனுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இந்த தெய்வீக காட்சியைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வடதிசை நோக்கி பயணப்பட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகை சமநிலை அடையச் செய்வதற்காக, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்தார். ‘அகத்தியனே! நீ தென்திசை நோக்கிச் செல். உன்னால் தான் இந்த உலகை சமநிலை பெறச் செய்ய முடியும்’ என்றார்.

இறைவனின் ஆணைப்படி நடக்க சித்தம் கொண்ட அகத்தியர், தென்திசை நோக்கி பயணித்து பொதிகை மலையை வந்தடைந்தார். அங்கு தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்திருக்கும் இடத்தில் நீராடி, தனது நித்திய காரியங்களை முடித்துக் கொண்டு யோக நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது ஜோதி ஒன்று அவரது மனக்கண்ணில் தோன்றியது. அதைக் கண்டு அதிசயித்த அகத்தியர், அந்த ஜோதியை யார் என்று அறிய ஞான திருஷ்டியால் பார்த்தார்.

அப்போது சாஸ்தாவானவர், சொரிமுத்து அய்யனாராக, மகாலிங்க பெருமானை பூஜிக்கும் காட்சி அவருக்கு தெரிந்தது. சொரிமுத்து அய்யனாருடன், பேச்சியம்மன், பிரம்மரட்சகி ஆகியோரும் மகாலிங்க சுவாமியை வழிபட்டனர்.

இதுகண்டு அகத்திய முனிவர் ஆனந்தம் அடைந்தார். பின்னர் மலர் தூவி ‘இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆக வேண்டும்’ என்றும், ‘பக்தர்கள் தனது மக்களுடன் வழி, வழியாய் எல்லாப்பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வரம் தர வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டார்.🔥🔥
அப்போது சாஸ்தாவானவர் ‘மலர் சொரிமுத்தய்யனார்’ என்று பெயர் தாங்கி, மகாலிங்கேசுவரர், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசி பூதத்தார், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பேச்சியம்மன், தூண்டில் மாடன், ஜோதிருத்திரன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் ஒருசேர காட்சி கொடுத்து மறைந்தார். அன்று தொடங்கி இத்தலத்தில் மேற்சொன்ன அனைத்து தெய்வங்களுக்கும் சன்னிதி ஏற்படுத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஒரு சமயம் இப்பகுதியில் வற்கடம்(12 ஆண்டுகளுக்கு மழையின்மை) ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர் ‘ஆடி அமாவாசையன்று, இந்தத் திருத்தலத்தில் உள்ள சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும்; வறட்சி நீங்கும்’ என்று கூறினார். அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ய வறட்சி நீங்கியது. மழையை பொழிய வைத்த அய்யனார், ‘சொரிமுத்து அய்யனார்’ என அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.🔥
முத்துப்பட்டன் என்ற பிராமண இளைஞன், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பொம்மக்கா, திம்மக்கா ஆகிய சகோதரிகளை மணம் புரிந்து கொண்டு செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தான். ஒருசமயம் பசுக்களை பாதுகாக்க போரிடும்போது முத்துப்பட்டன் வீரமரணம் அடைந்தான். பட்டவராயன் என்றழைக்கப்பட்ட அவருக்கும், இத்தலத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங் களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து மாலை அணிவிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இக்கோவிலில் தினசரி காலை 6 மணி அளவிலும், மாலை 5.30 மணி அளவிலும் பூஜைகள் நடைபெறுகிறது.🔥🔥
நெல்லைக்கு மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக செல்லும் பாதையில் நெல்லையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து இக்கோவிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆடி அமாவாசை திருவிழா :

அகத்திய முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை ஆகும். எனவே இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர். இத்திருத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவானது நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட திருவிழா ஆகும். இதேபோல் தை, மாசி மாத அமாவாசை தினங்களும் விசேஷமான நாட்களாகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்ததார் கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது🔥
செருப்பு காணிக்கை:

குல தெய்வம் தெரியாதவர்கள் இவரையே(சொரிமுத்து அய்யனார்) குலதெய்வமாக வழிபடலாம் என்ற சிறப்புடையது இக்கோவில். இத்திருத்தலத்தில் உள்ள பட்டவராயர் சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முதல் ஆண்டு இங்கு கட்டப்படும் செருப்புகளை மறு ஆண்டு இக்கோவிலுக்கு வந்து பார்த்தால் அந்த செருப்புகள் தேய்ந்திருப்பதை காணமுடியும். பக்தர்கள் இத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.

மணி விழுங்கி மரம் :

இத்திருக்கோவில் வளாகத்தில் இலுப்பை மரம் ஒன்று உள்ளது. பக்தர்களின் வேண்டுதலின்படி இந்த மரத்தில் கட்டப்படும் மணிகள் மரத்தின் உள்ளே பதிந்து விடுவதால் இந்த மரம் மணி விழுங்கி மரம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கைகளை இறைவன் இதன் மூலம் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது...🔥




.     சர்வம்🔥🔥
.            சிவமயம்🔥🔥
.                ஆன்மீக குழு