Monday, July 1, 2024

திருச்செந்தூர் கோயில் அதிசயம்

 *திருச்செந்தூர்* *ஆலயத்தில் உள்ள*

*கடிகார மாளிகை*

*ரகசிய தீபாராதனை* *மற்றும் பன்னீர் இலை* *விபூதி பிரசாதம் வரை*

ஆச்சர்யப்படுத்தும் தகவல்கள் பற்றி தெரிந்து கொள்வோமா*?

திருச்செந்தூர் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. 

திருச்செந்தூர் என்றதுமே கடற் குளியல், நாழிக்கிணறு, இலை விபூதி, கந்தசஷ்டி விரதம் இவையெல்லாமும்தான் நினைவுக்கு வரும். 

இவை தவிர நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னும் பல ஆச்சர்யப்படுத்தும் சிறப்புகள் திருச்செந்தூர் கோயிலில் உண்டு. 

அவை என்னென்ன தெரியுமா?

பிரணவ வடிவம்... கடிகார மாளிகை!

செந்திலாண்டவன் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. 

கோயில் வடக்கு - தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு - மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. 

கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. 

இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது.

திருச்செந்தூர் கோயிலில் முதல் பூஜை யாருக்குத் தெரியுமா?

இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். 

எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை. 

செந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். 

மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்தத் தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். 

அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். 

செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.

திருச்செந்தூரில் - இப்படி வழிபட்டால்தான் நம் பிரார்த்தனை முழுமை அடையும்!

கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. 

இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். 

அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம் பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய - சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற்காகவே!

முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். 

அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப்பெறும். 

அஷ்ட லிங்கங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. 

ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதிகம்.

திருச்செந்தூர் முருகனுக்கு என்னென்ன நைவேத்தியங்கள் தெரியுமா?

மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. 

சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. 

பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. 

உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. 

இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.

திருச்செந்தூர் முருகனுக்கு நடைபெறும் ரகசிய தீபாராதனை!

மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். 

பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். 

இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள். 

உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடை பெறுகிறது. 

இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

திருச்செந்தூர் கோவில் இலை விபூதிக்கு அப்படி என்ன சிறப்பு?

திருச்செந்தூர் தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். பன்னீர் இலை பார்க்க முருகனின் வேல் போலவே இருக்கும்.

திருச்செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். 

பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். பன்னீர் இலைக்கு வேத மந்திர சக்திகளை கிரகித்துக் கொள்ளும் சக்தி உள்ளது

முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. 

சூரபதுமன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.

அபிநவகுப்தர் என்ற சித்தர், ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். 

இதனால் சூலை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் ஆளானார். 

உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆதிசங்கரர், இறைவனை மனமுருக வேண்டினார். 

இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. 

அவர் ஒவ்வொரு கோயிலாகச் சென்று, இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியிடம் வந்து மனமுருக வேண்டினார். 

அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. 

பன்னீர் இலை விபூதியை உடலில் பூசிக்கொண்டதோடு, அதை உட்கொள்ளவும் செய்தார். 

சில நாட்களில் அவரைத் தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தன.

அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாக கூறப்படுகிறது

முருகன்பெருமானேஉன்னுடைய இலை விபூதிப் பிரசாதமகிமையை எப்படி எடுத்துரைப்பது?
வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரழிவு, குன்மம்
முதலிய கொடுமையான வியாதிகளும்,
பூத, பிரேத, பசாசங்கள் பற்றியதால்
உண்டாகும் துன்பங்களும் உன்னுடைய இலை விபூதி பிரசாதத்தை
பூசிக்கொண்ட மாத்திரத்தில் மறைந்து
விடுமே என்கிறது ஆதிசங்கரர் அருளிய

சுப்பிரமணிய புஜங்கத்தில் உள்ள ஒரு சுலோகம்

திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் பன்னீர் இலை விபூதியை தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள். 

350 வருடங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் மேல கோபுரத்தை திருவாடுதுறை ஆதினம் நிர்மாணித்தார். 

பொருள் பற்றாக்குறையின் காரணமாக பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலி தர இயலவில்லை.

அவர்களுக்கு பன்னீர் இலை விபூதியை கூலியாக கொடுத்தார். 

கோயிலை தாண்டி வெளியே சென்று அதைப் பிரித்து பார்க்கும்படி கூறினார்.

அப்படி திறந்து பார்க்கும் போது தங்களின் வேலைக்குரிய கூலி அதில் இருந்ததை கண்டு கூலியாட்கள் மெய் சிலிர்த்தனர்’ என்கிறது கோயில் வரலாறு

இந்த பன்னீர் இலை விபூதியைப் பூசினால் களைப்பு நீங்குவதோடு, கை, கால் வலி, வலிப்பு நீங்கும். 

அதுமட்டுமல்லாமல் பூதம், பிசாசு தீவினைகள் நீங்கும். 

இதைப் போல பல சிறப்புகளை உள்ளடக்கியதாகப் பன்னீர் இலை விபூதி உள்ளது.

திருச்செந்தூர் இலை விபூதி எப்படித் தயாரிக்கிறார்கள்? அவற்றின் மகிமை என்ன? என்பது குறித்து விளக்கும்  காணொளிக்காட்சியை பாருங்கள்!✍🏼🫀

No comments:

Post a Comment