(மாசித் தாத்தா..)
(பகுதி −5..)
அன்று நடந்த அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மாசிலன், மனதாலும் அக்கோவிலுக்குச் செல்ல எண்ணவே இல்லை!..
எப்படி எப்படியோ சமாளித்து, தன் பிழைப்புக்கு வழியைத் தேடி கொண்டான்...
அவன் உழைத்த உழைப்பு, அவனுக்கு நிரந்தரமாக ஒரு வேளை உணவைத் தந்தது...
அவன் விதைத்த நம்பிக்கை, அவனுக்கு ஒரு வீட்டுத் திண்ணையில் ஒதுங்க இடம் தந்தது..
மழையோ, வெயிலோ, புயலோ, பனியோ.....
நித்தமும் காலையில் காவிரியில் ஒரு குளியல்...
அதன் பின்னே...
உயர்ந்து நிற்கின்ற கோபுரத்தைப் பார்த்து கையை உயர்த்தி ஒரு கும்பிடு...
...பிறகு...
"உழைப்பு" என்கிற பெயரில், பெரும்பாலும், தேவைப்படுவோருக்குத் தேவைப்படுகின்ற நேரத்திலே தக்க உதவி...
அலுத்துக் கொள்ளாமல், சலித்துக் கொள்ளாமல்...
வித்யாசம் பார்க்காமல் எல்லோருக்கும் உதவினான் மாசிலன்...
மனம் நிறைந்த நேர்மையான உழைப்பு, அவனுக்கு அவ்வப்போது தமிழ் ஐயாவை ஞாபகப்படுத்தும்!...
அப்படி அவருடைய ஞாபகம் வரும்போதெல்லாம், கூடவே அவனுக்கு ஒரு குறையும் வரும்..
...தமிழ் ஐயா ஒருவர் மட்டுமே அவனை "மாசிலன்" என்று அழகாக அழைத்தவர்!..
மற்றவர் எல்லோருக்கும், எப்போதும் அவன்,"மாசி"தான்!..
அன்று...
ஏதோ ஒரு விசேஷத்தை முன்னிட்டு, காவிரிக்கரையில், மனித சமுத்திரமே இருந்தது...
கும்பல் சேரும் போதெல்லாம், மாசி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது...
அப்படியே...அன்றும்...
காவிரிக் கரையின் ஆள் அரவமற்ற நிசப்தமான ஓரிடத்தில் சென்று மாசி அமர்ந்து கொண்டான்..
சற்றைக்கெல்லாம், அங்கே...
காவி உடையும், கமண்டலுமுமாக ஒரு சந்யாசி வந்தார்...
அவர் தலையில் ஒரு சிறிய ஓலைக் கூடையுமிருந்தது..
கரையின் ஓரிடத்தை, தமது கைகளாலேயே சுத்தப் படுத்தியவர், தன்னிடம் வைத்திருந்த வாழை இலைகளையும், சிறு குச்சிகளையும் வைத்து, அழகான சிறிய பந்தல் ஒன்றை அமைத்தார்...
அதன் கீழே, தாம் கொண்டு வந்த வஸ்துக்களை வைத்து அவர் ஏதோ செய்யத் துவங்கினார்...
வைத்த கண் வாங்காமல், மாசி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்...
இவன் பார்ப்பதை உணர்ந்து, அந்த சந்யாசி திரும்பிப் பார்க்கவும், மாசி நடுங்கிப் போய்விட்டான்..
அந்த அளவுக்கு, அவன் மனதில் தான் தாழ்ந்த பிறவி என்பது வேரூன்றி இருந்தது..
ஆனால்...
அந்த சந்நியாசியோ, அவனது அச்சத்தை உணர்ந்தவராக, அவனைப் பார்த்து, "பயப்படாதே!..இங்க வா!.."
என்று மென்மையாகக் கூறினார்...
தயங்கித் தயங்கி அவரை நெருங்கினான் மாசி...
"ஒக்காரு... நான் இப்போ பூஜை செய்யப் போறேன்...
நீயும் கூடவே இரு.."
....என்று அன்புக் கட்டளை இட்டார்...
அந்த அன்புக்குக் கட்டுப்பட்டு, மாசியும் ரொம்பவும் பவ்யமாக அவர் அருகே அமர்ந்தான்..
தன் ஓலைக்கூடையிலிருந்து எடுத்தவற்றை, மாசிக்குக் காட்டி, "இதெல்லாம் என்னனு ஒனக்குத் தெரியுமா?.." என்று மெல்லிய குரலில் வினவினார் சன்யாசி..
"தெரியாது" என மாசி உதட்டைப் பிதுக்கினான்..
"இதெல்லாம் சாளக்ராம கற்கள்..
அதோ...அந்த கோபுரத்துக்குக் கீழ படுத்துண்டு இருக்கானே, அவன், தன்னைச் சுருக்கிண்டு இதுலயும் இருக்கான்...
அதனால, அங்க போய்தான் நாம பூஜை பண்ணணும்னு அவசியம் இல்ல!..
இந்த சாளக்ராமங்களுக்கு நித்யமும் பூஜை பண்ணாலே போறும்... தெரியறதா?.."
.....அவர் சொல்லி முடித்ததும்தான் தாமதம்...
மாசி அவசர அவசரமாக, அவரிடம் தனது சந்தேகத்தை வைத்தான்..
"சாமி... அப்ப நான்கூட இதுக்குப் பூஜை செய்யலாங்களா?.."
....அவனைப் பார்த்து மென்மையாக அந்த சந்யாசி சிரிக்கவும், மாசி தன்னிலை விளக்கம் தர முற்பட்டான்...
"இல்ல சாமி... நான் பிறப்பால ரொம்பவும் தாழ்ந்தவனாம்.. அதனால அந்தக் கோவில் மண்ணக் கூட மிதிக்கக் கூடாதுன்னு ஒரு பெரியவர் சொல்லிட்டாரு...
....அதனாலதான், "சாமி" கும்பிடறதுக்கு ஆசப்பட்டு ஒங்கள கேக்கறேன்.."
மாசியைக் கருணையோடு நோக்கிய சந்யாசி மெல்ல வாய்திறந்தார்...
"அப்பனே!.. இந்த பூஜை புனஸ்காரம்லாம்கூட ஒனக்கு வேண்டாம்..
அந்தப் பெரிய கோவில்ல இருக்கற பெருமாள், அஞ்சு தலை கொண்ட பாம்புப் படுக்கையில படுத்துண்டு இருக்கான்...
நீ என்ன பண்ணறே...அதோ.. அந்தப் பெரிய கோபுரத்தயே, அந்த அஞ்சு தலை பாம்பா நெனச்சுக்கோ...
அதுக்குக் கீழ நீளமா இருக்கற மதில் சுவர,
"படுத்துண்டு இருக்கற பெருமாளா" நெனச்சுக்கோ...
தெனமும், காலையில ஒரு முறை....
அந்தி சாயற நேரத்துல ஒரு முறை...
அவன மனசாரக் கும்பிட்டுக்கோ...
அதுவே போறும்!..
நீ அவனத் தேடி போக வேண்டாம்!..
ஒரு நாள் நிச்சயமா அவனே ஒன்னத் தேடி வருவான்!..
சந்தேகமே இல்லாம நான் சொல்றத நம்பு!..
ஒரு நாள் அது நடந்தே தீரும்..."
.....தெய்வ வாக்காக மாசிக்குச் சொன்னவர், பூஜை ப்ரஸாதங்களில் கொஞ்சம் கொடுத்து விட்டு, தன் பயணத்தைத் தொடர்ந்தார்...
அந்த தினத்திலிருந்து மாசிக்கு ஒருநாளின் இரு வேளையும், உயர்ந்து நின்ற கோபுரத்தில் ஆதிசேஷ தரிசனமும், நெடிது நீண்ட மதில் சுவற்றில் திருவரங்கன் தரிசனமும் தடையில்லாமல் கிடைத்தது...
(வளரும்..)
No comments:
Post a Comment