Easychair_32
அத்யாயம்: 32.. ஈஸி சேர்
உள்ளே வந்தவர்கள் கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையை நீட்டினார்கள். ஒரு அரை டஸன் ஆப்பிள் இருக்கும்.
எதுக்கு இதெல்லாம்?
பெரியவங்க நீங்க, வேற எதுவும் வாங்கிக்க மாட்டீங்க. பழமாவது
எங்க திருப்திக்கா சாப்பிடுங்க ஐயா.
இருவரும் கொடுத்து விட்டு நமஸ்கரித்தனர்.
இருங்கோ, ச்சேர் கொண்டு வரேன்.
அமர்ந்தார்கள். மலர் ஆரம்பித்தாள்.
ஐயா, ரொம்ப ஒடிஞ்சிட்டீங்க. எப்போதும் மாமி நினைப்பாவே இருக்கீங்க. கொஞ்சம் மனச மாத்திக்கங்க ஐயா. கஷ்டம்தான். அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு. மனச கொஞ்சம் திடப்படுத்திகிட்டு அங்கிட்டு இங்கிட்டுமா போயிகிட்டு வாங்கய்யா. ஐயாக்கு நான் சொல்லிதான் தெரியணும்கறது இல்ல.
முயற்சிக்கறேன். ஆனா முடியல. இத விட சித்ரவதை லோகத்தில இருக்கவே முடியாது.
அக்கம் பக்கத்தில நாங்க இருக்கோம். ஒரு கொரல் கொடுத்தீங்கண்ணா உடனே வரோம்யா.
எனக்கு ஒரு உதவி செய்வீங்களா. எனக்கு தெரிஞ்ச சுப்புணின்னு இருக்கான். அவன்தான் என்ன கரை சேர்க்கணும். அவன் போன் நம்பர் தறேன். எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவன்தான் எல்லாம்.
சொந்தமாய்யா?
என்னோட உயிருன்னு வெச்சுக்கோங்கோ.
மலருக்கு சட்டென்று ஞாபகம் வந்தது.
ஒரு புள்ள காரை எடுத்துகிட்டு அடிக்கடி வருமே, அவராய்யா?
ஆமாம். எனக்கென்னவோ நான் ரொம்பநாள் இருப்பேன்னு தோணல. இந்த உதவி செஞ்சாலே போதும்.
வாங்கிக் கொண்டார்கள். சிறிது பர்வதம் மாமி ஞாபகமாக மலர் ஏதேதோ பேசிய பிறகு விடை பெற்றார்கள்.
கிளம்புமுன் மலர் சொன்னாள். ஐயா வீடு பூரா ஒரே ஒட்டடையும் அழுக்குமா இருக்கேய்யா. நான் வேணா ஆள அனுப்பட்டாய்யா?
அப்போது தான் வீட்டைப் பார்த்தார் வைத்யநாத ஐயர். ஆமாம் எல்லா இடத்துலேயும் ஒரே தூசு படிஞ்சு இருக்கே. பாரு இருக்கும் போது ஒரு ஒட்டடை பார்க்க முடியாதே ஆத்துல.
நாளை முடிந்த வரை ஏதாவது செய்யணும் இந்த ஒட்டடைக்கு. ஆத்துல பொண்கள் இல்லைனா எப்படி வீடு நாசமா போறது?
அவர்கள் கொண்டு வந்த பழங்கள் ஒன்றிரண்டை சாப்பிட்டு விட்டு அன்றைய சாப்பாட்டு கதையை முடித்துக் கொண்டார். ரவை உப்மா? நாளை பார்த்துக் கொள்ளலாம்.
அன்றைய தினம் என்னவோ அவருக்கு ஓரளவு அமைதியை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். சுப்புணியின் ஆறுதல், மலர் தம்பதியினரின் வார்த்தைகள் அவரை என்னவோ நிம்மதியாக உறங்க முயற்சித்தன.
ஆனாலும் உடம்பு கலக்கும் சுகமல்லவே இது. உயிர்கள் கலக்கும் சுகமாயிற்றே. உடல் இல்லா ஆத்மாவுக்கும் உயிர் உள்ள ஜீவனுக்கும் நடக்கும் உணர்வு பரிமாற்றங்கள் ஆயிற்றே?
அவர் எங்கு தூங்குகிறார். அவ்வப்போது சற்று ஓய்வு எடுக்கிறார். கொடியின் இலைகள் வெயிலில் தங்கள் சக்தியை இழந்து சாய்ந்து கிடப்பதைப்போல அவ்வப்போது களைப்பினால் சாய்ந்து கொண்டிருக்கிறார் ஈஸி சேரில்.
மறுநாள் எழுந்தவுடன் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார். பாருவின் அப்பா பெருங்களத்தூரில் வாங்கிய நிலத்தில் பாரு கட்டிய வீடு. வைத்யநாதய்யர் கொடுத்த பணத்தில் சிறுக சிறுக சேர்த்து கட்டிய வீடு. சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டும் என்று தன் பங்கிற்கும் உழைத்திருக்கிறாள், சம்பாதித்திருக்கிறாள். தீபாவளி வந்தால் தெரிந்தவர்கள் வீட்டிற்கு பக்ஷணங்கள், கார்த்திகை வந்தால் பொரி உருண்டைகள், சிரார்த்த சமையல்கள், கோடை வந்தால் அப்பளம், கருவடாம் வகைகள்... அவள் பங்கிற்கு உடம்பை என்னமாய் வருத்திக் கொண்டிருக்கிறாள் இந்த வீட்டைக் கட்ட.
இப்படி ஆசையாசையாய் அவள் கட்டிய வீட்டை ஐந்து வருடமாக எப்படி நாசம் செய்து கொண்டிருக்கிறேன். ச்சே, அவள் நினைவிலேயே இருக்கிறேனே தவிர அவள் நினைவகத்தை என்றாவது சரியாக கவனித்தேனா?
தன்னைத்தானே திட்டிக் கொண்டார். இந்த வீடு இனி என்னிடம் இருப்பதைத் தவிர நன்றாக உபயோகப்படுத்தும் யாரிடமாவது இருப்பது தான் முறை.
பேரன் பேத்தி இருந்தாலாவது அவர்களிடம் கொடுத்து விடலாம்? பகவான்தான் அதுக்கும் குடுப்பினை இல்லாமல் செஞ்சுட்டானே.
சுப்பிணி வரட்டும் இதைப்பற்றி பேசி ஒரு முடிவெடுத்துடணும்.
இதுக்கெல்லாம் ஒரு முடிவு எடுக்கும் வரைக்குமாவது நான் கொஞ்சம் பாருவை நினைக்காமல் இருக்கத்தான் வேண்டும்.
காத்திருந்தார்.. சுப்பிணியும் அந்த வார ஞாயிற்றுக் கிழமை மீண்டும் வந்தான்.
தொடரும்.....
No comments:
Post a Comment