Sunday, April 3, 2022

மாசித் தாத்தா - 6

 (மாசித் தாத்தா..)

(பகுதி −6..)

வயது ஏறிக் கொண்டே போன போதும், மாசியின் குணத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை!..

அவனது அந்த வெள்ளை மனதே, மற்றவரிடமிருந்து அவனை வித்யாசப்படுத்திக் காட்டியது..

வாலிப வயதை அவன் எட்டிய போது, அவன் மேல் அன்பு கொண்ட நெஞ்சங்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு, அவனைத் திருமணம் முடிக்கும்படி அறிவுறுத்தின..

"ஒனக்குனு ஒருத்தி வேணாமா மாசி?..

நாளைக்கே தலைய, கால வலிச்சா, ஆதரவுக்கு ஒரு தொணை வேணாமா?..

கொஞ்சம் யோசி..."

....ஆனால், அத்தனைப் பேருடைய வாயையும், மனம் நோகாத தன்னுடைய பேச்சினால், வெகுசுலபமாக அடைத்தான் மாசி..

"கல்யாணம்னு பண்ணா, எனக்கு ஆதரவு காட்ட, அவ ஒருத்திதான் இருப்பா!...

ஏன்னா, நான் ஒங்க எல்லாரயும் விட்டு, அப்போ ரொம்ப தூரம் விலகி இருப்பேன்!..

அதுவே, நான் கல்யாணம் கட்டாம இருந்தா, ஒங்கள்ல ஒருத்தனா இருப்பேன்..

அப்போ... ஒங்க இத்தன பேரோட அன்பும், ஆதரவும் எனக்கு என்னிக்கும் கெடைக்கும் இல்ல?..."

.... இந்த வார்த்தை மாசியிடமிருந்து வந்த பிறகு, திருமண விஷயத்தில் அவனை வற்புறுத்துவதை அத்தனைப் பேரும் நிறுத்திக் கொண்டார்கள்...

காலம் உருண்டோடியது..

காவிரிக் குளியலிலிருந்தும், கரையிலிருந்து கையுயுர்த்தி திருவரங்கனைத் தொழுவதிலுமிருந்து,  ஒரு நாளும் மாசி நழுவியதே இல்லை!..

"தெனம் தவறாம சாமி கும்பிடறயே மாசி...

அந்த சாமிகிட்ட  இதுவரையிலும் ஒனக்குனு என்ன கேட்டுருக்க?..

அந்த சாமி ஒனக்கு என்னதான் செஞ்சுருக்கு?.."

.....சீண்டுவது போல் சிலசமயங்களில் வருகின்ற கேள்விக்கும், மாசி பதில் வைத்திருந்தான்..

"எங்கயோ இருந்த என்ன, இந்தக் கரையில கொண்டு வந்த ஒதுக்கின அந்த சாமிக்கு, நான் எப்படி இருக்கணும்னு நல்லா தெரியும்...

அதனால, நான் அவன்கிட்ட எதுவும் கேக்கறதில்ல!...

இருந்தாலும், அப்பப்ப, "இத கொடு....அத கொடு"னு ஒன்கிட்ட கை ஏந்தும்படி என்ன வெச்சுராதேன்னு வேண்டிப்பேன்...

.....இந்தப் பதிலைச் சொன்ன மாசியை, அன்று அங்கே, அவனருகே நீராடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஆச்சர்யத்தோடு ஏறிட்டார்கள்!....

.....இப்படி எதன் மீதும் ஒட்டுதல் இல்லாமல் காலத்தை நகர்த்திய மாசியையும், முதுமை வந்து மெல்ல ஆக்ரமித்தது...

முன்பு போலெல்லாம், அவனால் ஓடிஓடி உழைக்க இயலவில்லை!..

"ஒனக்கு வயசாச்சு தாத்தா... இனிமே நீ வீட்ல ஓய்வெடுக்கணும்..." 

என்று விடலைகள்கூட சொல்லும் அளவிற்கு, கிழவராகிப் போனார் மாசி!...

"இத்தன நாள் திண்ணையில ஒண்டிக்கிட்டிருந்தாரு..

இனிமே மழைக்கும் குளிருக்கும் அது தோதுபடாது!.. 

தாத்தாவுக்கு இந்தக் காவிரிக் கரையிலயே ஒரு சின்னக் குடிசை போட்டுத் தந்துருவோம்.."

.....காலம் காலமாய் மாசித் தாத்தா சேர்த்து வைத்திருந்த அன்பு நெஞ்சங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்ததில், தாத்தாவுக்கென்று அங்கே ஒரு சின்ன குடில் எழுந்தது...

முடிந்த உதவியைச் செய்து கொண்டு, மற்றவருக்கு இடையூறில்லாமல் இருந்துவந்தவரைத் தேடி,  தினம் ஒரு வேளை உணவும், கொஞ்சம் பழங்களும் வர ஆரம்பித்தன..

அதையும்,  இல்லாதவருக்கும், இளைப்போடு வருபவருக்கும் பகிர்ந்து உண்ணுவதை, வழக்கமாகக் கொண்டிருந்தார் தாத்தா...

அப்படித் தன்னைத் தேடி அன்றைய இரவில் வந்த வடக்கத்தியருக்குத்தான் ஆதரவு கரம் நீட்டியிருந்தார் தாத்தா...

(வளரும்..)

No comments:

Post a Comment