(மாசித் தாத்தா..)
(பகுதி −4..)
நொப்பும் நுரையுமாக பெருக்கெடுத்தோடி வரும் வெள்ளநீரில், இளங்கன்று பயமறியாது என்பதை நிரூபிப்பதைப் போல, மாசிலன் ஓடி வந்து குதித்தான்...
அவனது நீச்சல் திறமையெல்லாம் அந்த நீரில் காட்டி விட வேண்டும் என்ற வேகம் அவனுக்கிருந்தது..
ஆனால் காவிரியின் வேகமோ, அவன் வேகத்தை விட பன்மடங்கு அதிகமிருந்ததால், சிறுவன் மாசிலனை, அவள் தன்போக்கிற்கு இழுத்துச் சென்றாள்...
அதே நேரம், அவனுடைய அதிர்ஷ்டம், நதி வெள்ளத்தில் பெரிய மரமொன்றும் அடித்துக் கொண்டு வந்தது..
சமயோசிதமாய், மாசிலன் அதை இறுகப் பற்றிக் கொண்டதால், ஓரளவுக்கு நதியின் வேகத்தை அவனால் சமாளிக்க முடிந்தது...
ஆனால், ஒரு கட்டத்தில் அதீத அலைக்கழிப்பினால், அம்மரத்தின் மீதே அவன் மயங்கிச் சாய்ந்தான்..
அப்பொழுதும் மரத்தைப் பற்றியிருந்த அவன் பிடி மட்டும் தளரவே இல்லை!..
மாசிலனுக்கு ஆயுள் அதிகம் இருந்ததாலோ என்னவோ, அவன் பற்றியிருந்த மரம் ஓர் இடத்தில் கரை ஒதுங்கியது..
கரையோரம் நின்றிருந்தவர்களின் கண்களில் மாசிலன் படவே, அவர்கள் ஓடி வந்து, அவனுக்குச் சிகிச்சை அளித்து, அவன் மயக்கத்தைத் தெளிவித்தனர்...
தான் ஏதோ புதிய இடத்தில், புதிய மனிதர்களின் இடையிலிருப்பதை மாசிலன் தற்போது உணர்ந்து கொண்டான்..
அவனைச் சுற்றி இருந்தவர்கள், மனிதாபிமானத்தோடு, அவனுக்கு உடையும், உணவுமளித்து, அவனைப் பற்றி விசாரிக்கவும் செய்தனர்...
மாசிலன் குறிப்பிட்ட அவனுடைய சிறிய கிராமத்தை, அங்கிருப்பவர்கள் எவருமே அறிந்திருக்கவில்லை!...
தான் அனாதையாகி விட்டோம் என்பது, மெல்ல மெல்ல சிறுவனுக்கு உறைக்க ஆரம்பித்தது!...
....பெற்று வளர்த்த பெற்றோரைப் பிரிந்த துக்கத்தைவிட,
பத்து நாளே பழகியிருந்த தமிழ் ஐயாவின் பிரிவு, மாசிலனின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது....
எப்படியோ, சுற்றி இருந்தவர்கள் அளித்த அன்பிலும், ஆதரவிலும் ஓரிரு தினங்களைக் கழித்தான் மாசிலன்...
அதன்பின்னே, எதிர்காலம் பற்றிய அச்சம், அவனுள் விஸ்வரூபமாய் எழுந்தது...
"எங்கே போவது?..
என்ன செய்வது?..." என்ற கேள்வியோடு, இலக்கில்லாமல் நடந்து கொண்டிருந்தவனின் கண்களில் அந்தப் பெரிய கோபுரமும், அதன் கீழே விரிந்திருந்த நீண்ட மதில் சுவரும் தென்பட்டன..
இப்பொழுது அவனுள் ஒரு நம்பிக்கைச் சுடர் விட்டது...
அவனிருந்த ஊரின் ஐயனார் கோவிலிலே, அவ்வப்பொழுது யாரேனும் படையலிட்டுப் பிரசாதமாகக் கொஞ்சம் பொங்கல் தந்ததும், அதை வாங்கி உண்டு, தான் பசியாறிய காலங்களும் நினைவு வரவும்,
எதிரே தெரிகின்ற கோயிலுக்குச் சென்றால், தன் பசிக்கு ஏதேனும் உண்ணக் கிடைக்கும் என்ற எண்ணமும், இரவு படுக்க வசதியாய் அங்கேயே ஒரு இடமிருந்தால் நன்றாக இருக்குமே என்கிற எதிர்பார்ப்பும், தற்சமயம் அவனை ஆட்கொண்டன..
மெல்ல, அவன் கால்கள் கோயிலிருந்த திசை நோக்கி நடந்தன...
அநேகமாகக் கோயிலை சமீபித்துவிட்ட சமயம்...
அப்பொழுது, அவனே எதிர்பாராத வண்ணம், ஒரு அதட்டலான குரல் அவனை வழிமறித்தது...
"ஏ பொடியா!.. இங்க என்னடா ஒனக்கு வேல?..
எதுக்கு இந்தப் பக்கமா வரே?.."
....கண்களை உருட்டிக் கோபமாகக் கேட்டவருக்கு விடையாகத் திக்கித் திணறி,
"நா...நான்....கோவி....லுக்குப் போ....றேன்..."
....என்று ஒரு வழியாகச் சொல்லி முடித்தான் சிறுவன்...
குரலுக்குச் சொந்தக்காரரான அந்தப் பெரியவர்(?), அவனை எரித்து விடுவதுபோல் முறைத்தார்...
"ஏய்....பொடியா...
இந்தக் கோவிலுக்கெல்லாம் ஒன்ன மாதிரி ஜனமெல்லாம் வரலாமா டா?..
இது எப்பேர்ப்பட்ட மகான்களோட கால் பட்ட எடம்னு ஒனக்குத் தெரியுமா டா?
இந்த மண்ண நீ மிதிச்சு, பாவத்த சம்பாதிக்கப் போறயா?..
போடா....தெய்வக் குத்தம் ஏதும் பண்ணாம, பொழைக்கற வழியப் பாரு..."
....இந்தப் பேச்சைக் கேட்டதும், யாரோ அணையிட்டுத் தடுத்து நிறுத்தியது போல் மாசிலனின் கால்கள் அப்படியே நின்றன!...
"தெய்வக் குத்தம்...."
"குத்தம் பண்ணாம பொழை...."
....இந்த வார்த்தைகள், அவனுக்குத் தமிழ் ஐயாவை ஞாபகப்படுத்தின...
"மாசிலன்"னா "குத்தமில்லாதவன்"னு அர்த்தம்...
அந்தப் பேருக்குத் தகுந்தமாதிரி நடப்பயாடா?.."
....தமிழ் ஐயாவே எதிரே நின்று கேட்பது போல் தோன்றியது..
மாசிலனின் வாய், அவனறியாமல் திறந்தது...
"ஐயா...நான் எந்தக் குத்தமும் பண்ண மாட்டேன்... நீங்க சொல்றபடியே நடக்கறேன்..."
....திரும்பி நடந்த சிறுவனின் பின்னால், திருவரங்கக் கோபுரம் தெரிந்தது...
(வளரும்...)
No comments:
Post a Comment