Sunday, April 3, 2022

ஈஸி சேர் - 31

 Easychair_31

அத்யாயம் : 31 ..  ஈஸி சேர்

வாசலில் சுப்புணியை வழி அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்த வைத்யநாத ஐயர், சற்று தெம்புற்றவராகவே இருந்தார்.

அடடா, சந்தியாவந்தனத்திற்கு நேரம் ஆகிவிட்டதே.  சுப்புணியிடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லையே.

சுப்பிணி முதுகில் தடவிக் கொடுத்ததில் அவரின் கண்ணீர் தற்காலிகமாக விடை பெற்றிருந்ததை உணர்ந்தார்.

அவசர ஸ்நானம்.  சாமி விளக்கை ஏற்றிவிட்டு சந்தியாவந்தனத்திற்கு உட்கார்ந்தார்.

இன்றாவது மனம் லயித்து சந்தி பண்ணவேண்டும்.  கீதையை எத்தனை முறை படித்திருப்பார்?  கீதையின் பொருளை எத்தனை பேருக்கு உபதேசித்திருப்பார்?  கீதை சொன்ன யோக வழிகளை எத்தனை பேருக்கு அவர்கள் லயித்து கேட்குகறம் படி சொல்லியிருப்பார்?  எத்தனை பேருக்கு ஆறுதல் கிடைத்திருக்கும்?  எங்கு போனது அவையெல்லாம்?

உடல், தலை, கழுத்து இவற்றை ஒரே ஒழுங்காகவும் அசையாமலும் நிறுத்தி ஸ்திரமாயிருந்து, தன்னுடைய மூக்கு நுனியை உற்று நோக்கி ஒரு திசையும் பாராமல், அலையாத மனத்தனாய், அச்சம் ஒழித்தவனாய், மனத்தை அடக்கி என்னையே சிந்தித்து, என்னையே பரமனாய் கொண்டு யுக்தனாய் இருக்கவேண்டும்.

இந்த கீதாச்சாரப் படி மனம் லயித்து செய்து கொண்டிருந்தேன் பாரு இருந்தவரை.  ஆனால் இப்போதெல்லாம் ஏதாவது உடம்பில் ஒரு பகுதியாவது சொன்ன பேச்சு கேட்கிறதா?  மனம் அவனிடத்தில் ஒருமித்து  ஒரு க்ஷணம் இருக்கிறதா?  அப்படி என்ன பாரு செய்துவிட்டாள்? இன்று பாரு என்னை ஜெயிக்கக் கூடாது.

இத்தனை சங்கல்பமும் சந்தியாவந்தனத்திற்கு உட்காருமுன்.  போராடிப் பார்த்தார்.

பாழும் உடல் துடிக்கும் போது ஆனந்தம் வருமா?  சிந்தனையற்ற நிலைதான் வருமா?

அன்பின் சக்தி ஒருவரை ஆட்கொண்டு விட்டால் சிவனாவது, பார்வதியாவது, பெருமாளாவது, காயத்ரியாவது?  அதனால் தானோ அன்பே கடவுள் என்ற கடைசி முடிவிற்கு வந்தார்கள்?

முடியவில்லை.  மனம் லயிக்கவில்லை காயத்ரி ஜபத்தில், சந்தியாவந்தனத்தில், இன்றும் ஏனோ தானோதான்.  

தொடர்ந்து செய்து வந்திருக்கிறேன்.  கடமையாக செய்து வந்திருக்கிறேன்.  இப்பொழுதெல்லாம் கடனே என்றுதானே முடிக்கிறேன்.  இத்தனை வருடம் பக்தி ஸ்ரத்தையோடு செய்து வந்த எனக்கு அவன் தானே கஷ்டத்தை தாங்கும் சக்தியை கொடுத்திருக்க வேண்டும்.  நிச்சயமாக அவன் குற்றம் தான்.

இப்படியெல்லாம் புலம்பிக் கொண்டு கடைசியாக 'மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம்.....'. என்று இவருடைய மொத்த ஹீனத்தை ஸ்ரீ கிருஷ்ணன் தலையில் போட்டு விட்டு சமையல் அறை சென்றார்.

மதியம் சமைக்கவில்லை.  பொட்டுக்கடலை காப்பியோடு முடிந்தது.  இரவுக்கு சப்பாத்தி, ரவா உப்புமா?  அவல் கஞ்சி?

ரவா உப்புமா ஜெயித்தது.  ரவா வைத்திருக்கும் ப்ளாஸ்டிக் டப்பாவை எடுத்தார்.  அன்று இரவுக்கு போதுமான அளவு இருந்தது.

மீண்டும் வாசல் கதவைத் தட்டும் சப்தம்.  சென்றார்.  வாசலில் மலரும் அவள் கணவன் வீரமணியும்.

உள்ளே வரலாமா ஐயா?

வாங்கோ.

தொடரும்......

No comments:

Post a Comment