Friday, April 1, 2022

மாசித் தாத்தா - 3

 (மாசித் தாத்தா...)

(பகுதி −3..)

சிறு பொறி போன்று  சொல்லோ, செய்கையோ... ஏதேனும் ஒன்று, ஒருவரைச் சீண்டும் போது,  எப்படிப்பட்ட பிடிவாதத்தையும் அது தளர்த்திவிடுகிறது!..

அப்படித்தான்...

கடந்த காலத்தை நினைக்கவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த மாசித் தாத்தாவையும், வடக்கத்தியரின் பார்வை சீண்டி விட்டதில், தாத்தாவின் பிடிவாதம், அவரை அறியாமல் தளர்ந்து போயிருந்தது!..

"இவனைப் போன்ற ஒரு நாத்திகனின் குடிலிலா நான் நான்கு நாட்களாக இருந்தேன்!.." என்ற எண்ணம் தோய்ந்த வடக்கத்தியரின் அந்தப் பார்வை... நான்குபக்கமும் சூழ்ந்துகொண்டு,  தாத்தாவை அப்படிப் புரட்டி எடுத்தது!...

அது தாத்தாவை பின்னோக்கி நகரச் செய்தது..

அப்பொழுது....

மாசித் தாத்தாவுக்கு ஒரு ஏழு அல்லது எட்டு வயதுதான் இருக்கும்..

அவனது பெற்றோர் அருகிலிருந்த ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில், அவனைச் சேர்த்து விட்டிருந்தனர்..

அங்கே.. சிறுவன் மாசியோடு சேர்த்து மொத்தம் பத்து குழந்தைகள் பாடம் பயின்று வந்தனர்..

"தமிழ் ஐயா" என்று சொல்லிக் கொண்டு, ஒரு அறுபது வயது அந்தணர், அன்றிலிருந்து பாடம் எடுக்கப்போவதாக ஏற்பாடாகி இருந்தது..

தமிழ் ஐயா வந்தவுடன், முதலில் குழந்தைகளின் பெயர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்..

தன்முறை வந்த போது, சிறுவன் மாசியும், "ஐயா...என் பேரு மாசி..ங்க.." என்று பவ்யமாகக் கூறினான்..

"அது என்னடா மாசி, பங்குனி...னு...

முழுப் பேரயும் சொல்லுடா..."

....தமிழ் ஐயா சற்றே குரலை உயர்த்தி ஆணையிடவும், சிறுவன் மாசி கொஞ்சம் அரண்டுதான் போனான்..

அவசர அவசரமாய், "ஐயா... என் பேரு மாசி..ங்க... 

இல்ல...இல்ல...

"மாசிலன்"...ங்க.."

....என்றுத் தட்டுத் தடுமாறி கூறியவனை,

தமிழ் ஐயா ஓடி வந்து அணைத்துக் கொண்டார்...

மீதி குழந்தைகள் பண்டைய ராஜாக்களின் பெயரையும், பழம்பெருமை கொண்ட சில நபர்களின் பெயர்களையும், தமது பெயராகக் கொண்டிருந்த போது,

இச்சிறுவனின் பெயர்மட்டுமே, தூய தமிழ்ப் பெயராய் இருந்ததில், தமிழ் ஐயா மிகவும் மகிழ்ந்து போனார்..

"டேய் மாசிலா....

என்ன அழகுப் பேர்டா ஒனக்கு!..

ஒன் பேரோட அர்த்தம் தெரியுமா டா ஒனக்கு?.."


உதட்டைப் பிதுக்கி, தலையை மறுப்பாக அசைத்தான் சிறுவன்..

அவன் மீது அரவணைப்பாய் வைத்திருந்த தன் கைகளை விலக்காமல், தமிழ் ஐயா, சிறுவனின் கண்களைத் தீர்க்கமாக உற்றுநோக்கி,

"டேய் மாசிலா!..

"மாசிலன்"னா "குற்றம் இல்லாதவன்"னு அர்த்தம் டா!...

தெரிஞ்சோ, தெரியாமயோ...

ஒன்னப் பெத்தவங்க இந்த அழகுப் பேர ஒனக்கு வெச்சுருக்காங்க!...

இனி நீ இந்தப் பேருக்கேத்த மாதிரி ஒன்னோட வாழ்க்கைய அமைச்சுக்கணும்... செய்வையாடா?.."

.....என்று நம்பிக்கையோடு வினவவும்,

தன்னை அறியாமல், தலையைப் பலமாக ஆட்டினான் சிறுவன்...

ஏனோ... 

முதன் முறையாக, அவனுக்குத் தன் பெயரின் மீது ஒரு பெரிய பிடிப்பு தோன்றியிருந்தது!...

கொஞ்சம் பெருமையாகத் தன்னை உணரவும் ஆரம்பித்தான்..

தன் பெயரின் மகத்துவத்தை எடுத்துச் சொன்ன தமிழ் ஐயாவையும் மாசிலனுக்குச் சட்டென்று பிடித்துப் போனது...

அதனால்....அவர் சொல்லித் தருகின்ற தமிழ் பாடங்களின் மேல் தனி ஆர்வமும் உண்டாகியது...

மொத்தத்தில்... தமிழ் ஐயாவின் தரிசனத்துக்காகவே, பள்ளிக்கூடம் போக விரும்பினான் மாசிலன்..

....கிட்டத்தட்ட ஒரு பத்து நாட்கள்...

அன்று...தமிழ் ஐயா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மாசிலன் மட்டுமே சரியாக விடையளித்ததில், அவர் அவனை ஏகமாய்ப் புகழ்ந்திருந்தார்...

மனதில் எழுந்த சந்தோஷ அலைகளின் ஆர்ப்பரிப்பை அடக்க முடியாமல் தவித்தான் மாசிலன்...

பள்ளி விட்டதும்கூட, அந்த மகிழ்ச்சி சற்றும் குறையாமல் இருக்க, துள்ளிக் கொண்டு தன் வீடு நோக்கி புள்ளி மானாய் ஓடினான் சிறுவன்...

செல்லும் வழியில், இவன் மனதை அப்படியே எதிரொலிப்பதுபோல், என்றுமில்லாத வகையில் காவிரியும், தன் இருகையையும் விரித்துக் கொண்டு, புது நுரையுடனும், புது வேகத்துடனும் கரை புரண்டு வந்து கொண்டிருந்தாள்...

தன் சந்தோஷத்தை முதலில் இவளோடுதான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான் சிறுவன் மாசிலன்..

தன் எழுதுபலகை, எழுத்தாணி இவற்றோடு, தான் அணிந்திருந்த உடையையும் கழற்றிக் கரையில் வைத்து விட்டு, இடுப்புக் கோவணத்துடன் காவிரியை நோக்கி நடந்தான் அவன்...

(வளரும்..)

No comments:

Post a Comment