Sunday, April 3, 2022

ஈஸி சேர் - 34

 #Easychair_34


அத்யாயம் : 34 ..  ஈஸி சேர்.

அந்த வாரத்திலேயே ஐயப்ப சமாஜ ட்ரஸ்டிகளோடு பேச்சு வார்த்தைகளை துவக்கினான் சுப்புணி.

சிவதானுப் பிள்ளை, சேதுராமலிங்கத் தேவர், ஹரிஹர வர்மா, மனக் சந்த் சேட், மற்றும் நடேச கனபாடிகள் என்ற ஐவரும் ட்ரஸ்டிகள்.  வேதராமன் இருந்தவரை அவர்தான் மேனேஜிங் ட்ரஸ்டி.  தற்போது சிவதாணு பிள்ளை.

வைத்யநாத ஐயரைப் பற்றி கூறிவிட்டு அவர் விருப்பத்தை கூறினான் அவர்களிடம்.  ஏகமனதாக ஒத்துக் கொண்டார்கள்.  பிறகு பெருங்களத்தூர் வந்து இடத்தைப் பார்த்தார்கள்.

இரண்டு க்ரௌண்டில் இடம்.  தன் சக்திக்கேற்ப 500 சதுர அடியில் மட்டும் வீடு.  பராமரிப்பு இல்லாததால் முட்செடியும் புதர்களுமாக இருந்தது வீட்டைச் சுற்றி.

வேதராமன் ஐயப்ப சமாஜதத்திற்கு செய்த கைங்கர்யங்களை நினைவு கூர்ந்து சில முடிவுகள் எடுக்கப் பட்டன.  இந்த வேத பாடசாலைக்கு தனியாக ட்ரஸ்ட் ஆரம்பித்து அதில் சுப்ரமணியனை மேனேஜிங் ட்ரஸ்டியாக நியமிப்பது.  வைத்யநாத ஐயர் உயிருடன் இருக்கும் வரை சிறு பராமரிப்புகளை மாத்திரம் மேற்கொண்டு வீட்டை அப்படியே வைப்பது.  கூடிய விரைவில் மீதி உள்ள இடங்களில் கட்டிட வேலைகளை துவக்குவது.

வேதபாட சாலைக்கு பர்வதவர்த்தினி அம்மாள் வேதபாடசாலை என்று பெயரிடுவது.

தற்போதுள்ள வீட்டில் உடனே ஒரு ஐந்து சிறார்களை வைத்து பாடசாலையை துவக்குவது.  அவர்களுக்கு வேத பால பாடம் சொல்லித்தர வைத்யநாத ஐயரையே ஆசிரியராக அமர்த்துவது.  குழந்தைகளுக்கு சமைத்து போட ஒருவர்.  வைத்தா வாத்தியாருக்கு ஆரம்ப கட்டமாக சிறிதளவு சம்பளம்.

இவை அனைத்தும் சுப்புணியின் ஆலோசனைகளை மையப்படுத்தியே ஒப்புதல் பெறப் பட்டது.

வைத்யநாத ஐயரை ஆசிரியராக பணி அமர்த்துவதால் அவர் சோகம் பெருமளவு குறையும் என கணித்தான் சுப்பிணி.

வைத்யநாத ஐயரிடம் எல்லாவற்றையும் விளங்கினான்.

பத்திரங்கள் பதிவு சுபயோக சுபதினத்தில் நடந்தது.

பெயர்பலகை வந்தது.

பர்வதவர்த்தினி அம்மாள் வேதபாட சாலை.

வைத்தா வாத்தியார் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.  பெயர் பலகையின் வாசகத்தை படித்துக் கொண்டே இருந்தார்.  வீட்டுக்குள் போவார், வாசலுக்கு வருவார், படிப்பார். உட்கார்ந்து சில முறை, நின்று கொண்டு சில முறை.

சிறிது நாட்களுக்குப் பிறகு நண்டும் சிண்டுமாக மூன்று குழந்தைகள், ஐந்து ஆறு வயதுக்குள் இருக்கும் எல்லாத்துக்கும்.

தாத்தா, நீங்கதான் எங்களுக்கு பாடம் சொல்லித் தரப்போரேளா?

ஏய், அப்படி சொல்லக்கூடாது டா.  சார்னு தான் சொல்லணும்.

பரவாயில்லை, என்னை தாத்தான்னே கூப்புடலாம்.

இப்போது அவருக்கு மூன்று பேரக் குழந்தைகள்.  பாரு இருந்திருந்தா எப்படி சந்தோஷப் பட்டிருப்பா?

அழுகை, ஆனந்தம், கண்ணீர்.  மனசு பூரா ப்ரம்மானந்தம்.

சில நாட்களுக்கு அவர்களுக்கு பாடம் ஆரம்பிக்கவே தோணவில்லை அவருக்கு.  கதைகள் என்ன, விளையாட்டுக்கள் என்ன, அவர்களோடு மழலைப் பேச்சுக்கள் என்ன?  இவர்கள் வயதில் தான் கும்பகோணம் வேதபாட சாலையில் கழித்த நாட்கள் எல்லாம் நினைவிற்கு வந்தன.

பேரக் குழந்தைகளை மடியில் போட்டு ஆட்டித் தூங்க வைப்பார். அவர்களது இயற்கை உபாதைகளுக்கு உதவுவார்.  படு பிஸி ஆகிவிட்டார்.

பாருவைக் கொஞ்சம் மறந்துதான் போயிருந்தார் மனுஷர்.

(இவர் இங்கு சற்று சந்தோஷிக்கட்டும் குழந்தைகளுடன். நாமும் சற்று பூவனூர் சென்றுவிட்டு வருவோம்).

தொடரும்......

No comments:

Post a Comment