#Easychair_33
அத்யாயம் : 33 ... ஈஸி சேர்
சுப்புணி அன்று வந்ததற்கு காரணம் இருந்தது. வைத்யநாத ஐயர் கொடுத்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுப்புணியோடு பேசியிருந்தாள் மலர்.
சார், அய்யரு பேசுவது எனக்கு பயமா இருக்கு. நான் ரொம்ப நாள் இருக்கமாட்டேனு சொல்றார். உடனே நீங்க வந்தீங்கனா....
அவனுக்கு இது புதுசு அல்ல. கடந்த ஐந்து வருடமாக சுப்புணி இதைத்தானே கேட்கிறான்.
அவர்கிட்ட சொல்ல வேண்டாம். இந்த ஞாயித்துக் கிழமை வந்து பார்கரேன்.
வந்தவனுக்கு ஆச்சர்யம். சற்று வைத்யநாத ஐயர் தெளிவாக இருந்தார். வருத்தம் அவர் முகத்தி்ல் அவ்வளவாக இல்லை.
வாடா சுப்புணி, எப்படி இருக்க?
நன்னா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கேள்.
அவனுடைய உத்யோகம் அது இதுன்னு கொஞ்சம் உருண்டது இருவருடைய பேச்சிலும்.
மாமா, இன்னிக்கு கொஞ்சம் ப்ரைட்டா இருக்கேள். இப்படித்தான் மாமா இருக்கணும் இனிமே.
அது கிடக்கட்டும் கொழந்த. நான் ஒண்ணு உன்கிட்ட ஒண்ணு சொல்வேன். எனக்காக செஞ்சு குடுப்பியா?
மாட்டேன். என்ன பண்ணுவேள்?
கொஞ்சம் விளையாடினான்.
இல்லடா, இந்தாம் பாரு பேருல இருக்கோண்ணோ, என்ன பண்ணலாம்.
புரியலியே மாமா நீங்க சொல்றது?
இல்லடா, எனக்கு குழந்தை குட்டி இல்லையோண்ணோ. அதனால இத ஏதாவது சாரிடிக்கு எழுதி குடுத்துடலாம்னு நெனைக்கிறேன். நான் உசுரோட இருக்கும்போதே...
ஏன் மாமா? அப்புறம் நீங்க எங்கே இருப்பேள்?
எனக்கு பிற்காலம் டா. இப்பவே ஏற்பாடு பண்ணனுமோன்னோ. எனக்கும் வயசாறது இல்லையா? உங்கப்பா உசுரோட இருந்திருந்தா அவர்கிட்ட சொல்லியிருப்பேன். அதான் உன் தலைல எல்லா பாரத்தையும் வெக்கறேன். செஞ்சு தருவியோன்னோ?
அது இல்ல மாமா. எங்கப்பா காலம் ஆனதுக்கப்பறம் நான் எந்த பொதுக்காரியத்தையும் ஏத்துக்கறதில்ல. ஆபீஸே சரியா இருக்கு மாமா.
சரி, எனக்காக ஏதாவது ஏற்பாடு பண்ணித்தாயேன்.
சரி, உங்க மனசுல என்ன தோணறது மாமா? ஏதாவது அனாதை ஆஸ்ரமத்துக்கு கொடுக்கலாம்னு தோணறதா?
உங்கப்பா சதா சர்வகாலம் ஐயப்ப சமாஜத்தைப் பத்தியே பேசிண்டு இருப்பா. அவா கிட்ட கொடுத்து இங்க ஒரு வேதபாடசாலை ஆரம்பிக்கச் சொன்னா என்ன? ஆனா நீதான் ட்ரஸ்டியா இருக்கணும் அதுக்கு.
நான் டிரஸ்டியா இருக்க யோசிக்கணும் மாமா.
அப்படி சொல்லாதடா. எங்க சொத்துனு சொல்றத விட பாரு வோட சொத்து. அவ அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு அவளுக்கு கொடுத்தார். பாரு உன் மேல உசுரா இருந்தா. அவளுக்காகவாவது நீ ஏத்துக்கணும்.
சொல்லிவிட்டு புழிய புழிய அழ ஆரம்பித்து விட்டார்.
சரி மாமா, அழாதீங்கோ. ஐயப்ப சமாஜக்காராள்கிட்ட பேசிட்டு வரேன்.
சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றான் சுப்பிணி.
அவன் சென்ற பிறகு வைத்யநாத ஐயர் நினைவெல்லாம் வேதராமன் மரணத்தை நோக்கி பயணித்தது.
எப்பேர்பட்ட ஆத்மா? வைதீகப் பறவைகளுக்காகவே அவதரித்த ஆத்மா. மூதாதையர் சொத்துக்களை வைதீக தர்மங்களுக்காகவே அர்பணித்து வாழ்ந்த ஆத்மா.
பாரு விபத்தில் மரணித்த போது கான்ஸரில் படுத்த படுக்கையாக இருந்த போதும் சுப்புணியைக் கூப்பிட்டு வைத்தாவை முதலில் கவனிக்கச் சொன்னவர். பர்வதம் காரியங்கள் முடிந்த சில நாட்களிலேயே அவரும் உயிர் நீத்தார் சிகிச்சைகள் பலனின்றி.
வேதராமனின் சாவுக்கு நேரில் சென்று அவா குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லாமல் அன்று வைத்யநாத ஐயர் இருந்தார், மனைவியை பறிகொடுத்த மனநிலையில். இவர் குலுங்கிக் குலுங்கி அழுவதைப் பார்த்து சுப்புணியே அனுப்பிவிட்டான்.
பகவானே நீ எல்லாம் இருக்கியாங்கறதே சந்தேகமா இருக்கே. நல்ல ஆத்மாக்களுக்கெல்லாம் கஷ்டத்தை கொடுத்துண்டே இருக்கியே. எப்படி ஒன் மேல நம்பிக்கை வைப்பா.
மீண்டும் புலம்பல், அழுகை, சோகம், கை கால் நடுக்கம். வாய் உதறல்.
வேறு என்ன செய்ய முடியும்.
கொஞ்சம் உட்காருமய்யா...ஈஸி சேர் சொன்னதைக் கேட்டார்.
ஈஸி சேரே நினைவுகளை கூட்டுகிறது. ஈஸி சேரே ஆஸ்வாசப் படுத்துகிறது. ஒரு வேளை அந்த ஈஸி சேர்தான் பகவானோ?
தொடரும்.....
No comments:
Post a Comment