(மாசித் தாத்தா..)
(பகுதி −7..)
ஒரு பெருமூச்சு வெளிப்பட, பழைய நினைவுகளிலிருந்து மெல்ல வெளியே வந்தார் மாசித் தாத்தா...
"ஹூம்... இந்த சுயபச்சாதாபம் எனக்குத் தேவதானா?..
அந்த வடக்கத்தியர் பார்வையில நான் நல்லவனா இல்லாட்டா போறேன்...
அதோ... அந்த கோபுரத்துக்குக் கீழ நீளமா படுத்துக் கெடக்கறானே.... அவனுக்கு நான் நல்லவனா இருந்தா போறாதா?.."
.....தன்னைத் தானே கேட்டுக் கொண்டே, துண்டோடு சேர்த்து,
தனது பழைய நினைவுகளையும் உதறியவாறு, கட்டிலைவிட்டு இறங்கி நடந்தார் மாசித் தாத்தா...
அங்கே...
மனதில் பெரிய பாரத்தோடு கோயிலின் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்திருந்தார், தாத்தாவின் விருந்தினராய் இத்தனை நாளும் தங்கியிருந்த வடக்கத்தியர்..
உள்ளே சென்று அரங்கனைத் தொழுது வந்த போதும்,அவர் உள்ளம் மட்டும் எரிமலையாய்க் கொந்தளித்துக் கொண்டிருந்தது!....
"எத்தனைப் பெரிய பாவத்த செஞ்சுட்டேன்!...
நாலுநாளா, ஒரு நாத்திகனோட வீட்டில தங்கி இருந்ததுமில்லாம, அவன் கைச் சாப்பாட்ட வேற சாப்டுருக்கேனே!....
எனக்கு விமோசனம் உண்டா?..
இந்த ரங்கன், என்ன ஏன் அந்த மாதிரி ஒரு எடத்துல கொண்டு போய் விட்டான்?.."
......திரும்பத் திரும்ப இதையே யோசித்து, மனம் ஆற மறுத்தது!...
அரங்க தரிசனத்தால் கிடைத்திருந்த கொஞ்சநஞ்ச ஆத்ம த்ருப்தியையும்,
அந்தக் கிழவருடைய நினைவு, மொத்தமாய் கபளீகரம் செய்திருந்தது!..
"சரி... தெரிஞ்சு இந்தத் தப்ப நான் செய்யல!...
இது யதேச்சையா நிகழ்ந்ததுதான்!..
அந்த ரங்கன் சந்நிதிக்குப் போய், நடந்தத சொல்லிட்டு மன்னிப்பு கேட்டுடலாம்...
அவன் கருணாமூர்த்தி!..
மன்னிக்காமயா போயிடுவான்?.."
.....தன்னையே கேட்டுக்கொண்டு, மீண்டும் அரங்கனைத் தரிசிப்பதற்காக எழுந்தார் வடக்கத்தியர்...
நாலடிகூட வைத்திருக்க மாட்டார்...
அங்கே...
ஒரு பெரியவரும், எட்டு வயதே இருக்கக்கூடிய சிறுமி ஒருத்தியும், பேசிக் கொண்டிருப்பது இவர் காதில் வந்து தானாய் விழுந்தது..
"தாத்தா.... எதுக்குத் தாத்தா, இந்த மண்ண வேஷ்டியில முடிஞ்சுக்கற?..
இத வெச்சு நீ என்ன பண்ணுவே?.."
எதனாலோ உந்தப்பட்டு, குரல் வந்த திசையை நோக்கித் தமது பார்வையைச் செலுத்தினார் வடக்கத்தியர்...
பெரியவர், தனது பேத்தியின் தலையை மெதுவாக வருடிக் கொடுப்பது தெரிந்தது..
"அதுவாடி கொழந்தே?..
இந்த மண்ணுக்கு அப்டி ஒரு மகத்துவம்டி!..
எத்தனையோ புண்ய புருஷர்களோட பாதம்பட்ட பூமிடி இது!..
இந்த மண்மட்டும் நம்ம வீட்ல இருந்தா...
...நமக்கு அந்த புண்ணவான்களோட கடாக்ஷம் பரிபூரணமா கெடைக்கும்!...
நம்ம புத்தியும்... இதோ உள்ளே இருக்கானே...
அவன் மேலயே சுத்திச் சுத்தி வரும்!...
மனசு வேற எங்கயும் அலைபாயாது!...
இந்த விஷயம் ரொம்ப பேருக்குத் தெரியாது...
விஷயம் தெரிஞ்சவங்களுக்கும், நம்பிக்கை இருந்தாதான், அது பலிக்கும்!..
எந்த ஜென்மத்துப் புண்யத்தாலயோ, இந்த விஷயம் இப்போ எனக்குத் தெரிய வந்தது!....
அத கேள்விப்பட்டதுலேந்து, அதுல ஒரு ஆழ்ந்த விஸ்வாசமும் எனக்கு உண்டாயிருக்கு!..
அதனாலதான், இந்த மண்ணுலேந்து ஒரு பிடிய வீட்டுக்குக் கொண்டு வரேன்டி தங்கம்..."
.....கண்களை அகல விரித்து, அந்தப் பெண்குழந்தை ஆவலோடு கேட்டுக் கொண்டது போலவே, வடக்கத்தியரும் கேட்டுக் கொண்டார்...
திடீரென்று அவருக்குள் ஒரு பொறி தட்டியது!...
"........அந்தக் கிழவர் என்ன சொன்னார்?....
.....இந்தப் பக்கம் திரும்பி வரமாதிரி இருந்தா, எனக்குக் கோயில் மண்ணுலேந்து ஒரு பிடி கொண்டு வர முடியுமா?னு தானே கேட்டார்!..
கண்டிப்பா... அந்தக் காரியத்த மொதல்ல செஞ்சுடறேன்!...
இந்த மண் அந்தக் கிழவரோட குடிசைல நொழஞ்சப்பறமாவது, அவருக்குத் தெய்வ நம்பிக்கை வந்தா நல்லதுதானே?....
கடைசி காலத்துலேயாவது, அவருக்கு அந்தக் கொடுப்பினையும், அரங்கனோட க்ருபையும் கெடைக்கட்டும்!..
...எப்படிப் பாத்தாலும், அவர் கேட்டததானே, நான் கொண்டுபோய் கொடுக்கப் போறேன்!.."
....உள்ளே அரங்கனைச் சென்று தரிசித்து வர வேணும் என்ற எண்ணம் வைத்திருந்த வடக்கத்தியர், தற்பொழுது, தானும் ஒரு பிடி மண்ணை எடுத்து, தனது மேல்அங்கியில் முடிந்து கொண்டு, அரங்கனைக்கூட தரிசிக்க மறந்தவராய், மாசித் தாத்தாவின் குடிசையை நோக்கி வேகவேகமாக நடந்தார்...
(வளரும்..)
No comments:
Post a Comment