Friday, April 1, 2022

ஈஸி சேர் - 30

 #Easychair_30

அத்யாயம் : 30 ..  ஈஸி சேர்

வைபவங்கள் முடிந்து மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை இருவருக்கும் துவக்கம்.  இருப்பினும், கொஞ்சம் இருக்கிறதே.

வைத்தா.. கூப்பிட்டவர் அப்பா.

ஏண்டா ஊர்காராளுக்கெல்லாம் சாப்பாடு போடற உத்தேசம் இருக்கா? பாவம் நிறைய பேர் அவாவா சந்தர்ப்ப சூழ்நிலையால  கல்யாணத்துக்கு வரலையோன்னோ?

ஆமாம்பா, நானும் கோபால் கிட்ட பேசினேன்.  வர ஞாயிற்றுக் கிழமை வெச்சுக்கலாம்கறான்.  நானும் பர்வதமும் அதுக்குள்ள சொந்தக்காரா விருந்தெல்லாம் முடிச்சுண்டுடறோம்.

நல்லது.  பட்டாமணியார் கிட்டேயும் இதப் பத்தி பேசிட்டு வரட்டுமா?

சரிப்பா.

பட்டாமணியாரிடம் பேசினார்.

எனக்கு ஒரு யோசனை தோணறது.  நம்ம கல்யாணி அம்மன் கோவில்ல ஒரு மண்டகப்படி பண்ணி, ஊர்காராள கூப்பிட்டு பிரகாரத்திலேயே வெச்சு சாப்பாடு போடலாமா?

பட்டாமணியார் சொன்னது உசிதமா பட்டது.  அதற்கான ஏற்பாடுகள் துவங்கின.

நடராஜ ஐயரின் சொந்தங்கள் விடை பெற்றனர்.

இதற்கிடையில், ராஜம் அத்தையை வெங்கனகர் கொண்டுவிட்டு, அப்படியே சொந்தங்கள் இருக்கும் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்திரைப் பூண்டி ஊர்களில் உள்ள சொந்தங்களின் விருந்துகளையும் முடித்துவிட்டு பூவனூர் வந்தனர் புதுமணத் தம்பதியினர்.

ஊரில் உள்ள பெரியவர்களையும், அக்ரஹாரத்துக் குடும்பங்களையும் மண்டகப்படிக்கு அழைத்தனர் விசு வாத்யாரும் நாராயணியும்.

ஞாயிறு அன்று மாலை பிரம்மாண்டமாக நடந்தது மண்டகப்படி.  சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கொண்டைக் கடலை சுண்டல், பஞ்சாமிர்தம், தயிர்சாதம், நிவேதனங்கள் முடிந்து வினியோகம் ஊர்மக்கள் அனைவருக்கும்.

காசி விஸ்வநாதருக்கும், விசாலாக்ஷிக்கும் சாத்தப்பட்ட மாலைகளை தம்பதியினருக்கு அணிவிக்கப் பட்டது.  உள்ளூர் நாயன வித்வான் முன்னே செல்ல மூன்று முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தனர்.

விசு வாத்யார், நடராஜ ஐயர் மற்றும் வேதம் மற்றும் ஸ்லோகங்கள் அறிந்தோர் கணீர் குரல்களில் மந்திரங்களை ஒலிக்க, ஊர் பிரஜைகள் சந்தோஷித்தனர்.  வழக்கம் போல கேலிகள்,சிரிப்புகள் இடையிடையே.

இதெல்லாம் பர்வதத்திற்கு மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுத்தன.  அந்த ஊர் மக்களின் பிரேமைகளை நினைத்து நினைத்து பிரமித்துப் போனாள்.

இனிதே திருப்திகரமாக எல்லாம் நடந்தன.

மறுநாள் வைத்தாவும் நடராஜ ஐயரும் கிளம்ப ஆயத்தமானார்கள்.

அப்போது, விசு வாத்யார் வைத்தாவை அழைத்து, உன் ஆம்படையாள கொஞ்சம் கூப்பிடரையா, என்றார்.

உள்ளே பேசிக் கொண்டிருந்த பர்வதமும் நாராயணியும், மற்ற மூவரும் இருந்த வாசல் திண்ணைக்கருகே வந்தனர்.  நாராயணிக்கு பின்புறம் ஒளிந்தார்ப்போல் பர்வதம் நின்றாள்.

ஏம்மா, இவாள்லாம் நாளைக்கு கிளம்பறா.  இவாளோடையே நீயும் கிளம்பிடேன்.  அப்ப ஏதோ சொன்ன எங்களோட இருக்கேன்னு.  அதெல்லாம் நன்னா இருக்காது.  புதுசா கல்யாணம் பண்ணிண்டு இருக்கேள்.  நாங்க எப்படியோ பார்த்துக்கறோம்.  நாங்க தனியா இருக்கறது ஒண்ணும் புதுசு இல்லையே.  நீ, வைத்தா, உங்க அப்பா வேணா ஒண்ணா இருங்கோ.

பர்வதம் உடனே பதில் சொல்லவில்லை.  சற்று எல்லோரும் அமைதி காத்தனர்.

என்ன நான் சொல்றது காதுல விழுந்ததா?  திரும்பவும் விசு வாத்யார்.

இல்ல அப்பா, நான் இங்கேயே இருக்கேன்.  எனக்கு ஏதோ கொஞ்ச நாள் அம்மாவோட இருக்கணும் போல இருக்கு.

கேட்டுக் கொண்டிருந்த வைத்தாவுக்கு சற்று வருத்தம் தான்.

என்ன சம்மந்தி, ஒங்க பொண்ணுக்கு எடுத்து சொல்லுங்கோ, என்றார் விசு வாத்யார்.

எவ்வளவு சொல்லியும் பர்வதம் சம்மதிக்கவில்லை.

வைத்தாவும் தனியே அழைத்து பேசினான்.  'பாரு, அப்பாதான் சரிங்கறாளோண்ணோ.  பழச எல்லாம் விட்டுடு.  பிடிவாதம் பிடிக்காம கிளம்பு'.

ம்ம்ஹூம்.  மறுத்து விட்டாள்.

அன்று இரவு கோபாலன் வீட்டில் இருவர் தனிமைக்காக தனி அறைக்கு இடம் கொடுத்து விட்டு அவர்கள் விசு வாத்யார் வீட்டில் வந்து தங்கினர்.

இரவு முழுவதும் பேசித் தீர்த்தனர்.  இடையிடையே சிரிப்புகளும், நாளைய பிரிவின் தாக்கங்களும், ஏக்கங்களும், அழுகைகளும்.

வைபவங்கள் வாழ்க்கையின் எதார்த்தத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தன.

தொடரும்......

No comments:

Post a Comment