(மாசித் தாத்தா..)
(பகுதி −2..)
கோயிலுக்குப் புறப்படுவதற்குத் தன்னை முற்றிலும் தயார் செய்து கொண்டு வந்திருந்த வடக்கத்தியர்,
மாசித் தாத்தாவையும், தன்னோடு கோயிலுக்கு வருமாறு அழைத்தார்..
ஆனால் தாத்தாவோ, தனக்கு இருநாட்களுக்கு அவசர வேலை இருப்பதாகச் சொல்லி அவரோடு தம்மால் வர இயலாது என்பதை நாசூக்காக உணர்த்தினார்..
தனியே சென்று திரும்பிய வடக்கத்தியர், தாத்தாவிடம் எந்த சங்கோஜமும் இல்லாததால், அவருடைய குடிலிலேயே தங்கிக் கொண்டார்..
மாசித் தாத்தாவும், அவர் எத்தனை நாட்களுக்கு அங்கே தங்குவதாக இருக்கிறார், என்று அங்கிருந்து கிளம்ப உத்தேசித்திருக்கிறார் போன்ற தகவல்களை எல்லாம் அவரிடம் சேகரிக்க முயலவில்லை!..
....அத்தனைப் பெருந்தன்மையோடு நடந்து கொண்டு, வந்திருந்த அடியவரை முகம் கோணாமல் உபசரித்தார் மாசித் தாத்தா...
மூன்றாவது நாளன்று, மறுபடியும் அந்த அடியவர் தாத்தாவைக் கோயிலுக்கு வரும்படி அழைத்தபோதும், ஏதோ சாக்குச் சொல்லிச் சமாளித்தார் தாத்தா...
ஆனால், நான்காவது நாள், அந்த அடியவர் தாத்தாவை விடுவதாக இல்லை!...
"இன்னிக்கு நீங்க என்னோட நிச்சயம் கோயிலுக்கு வந்தே ஆகணும்!..
ஒங்களோட வந்தா, எனக்கு அரங்கன் கோயில்ல இருக்கற விசேஷங்கள் எல்லாத்தயும் விவரமா தெரிஞ்சுக்க முடியும்!..
அங்கதான்....எத்தனச் சந்நிதி இருக்கு!..
ஒவ்வொன்னுக்கும் ஏதாவது கதை இருக்குமே!...
அதெல்லாம் நீங்க என்னோட வந்து சொல்லித் தரணும்.."
.....கெஞ்சாத குறையாக, மடி பிடித்துக் கேட்டவரைத் தாத்தா சற்று நேரம் வெற்றுப் பார்வையாகப் பார்த்தார்..
பிறகு, மெலிதான குரலில் தலைகவிழ்ந்து முணுமுணுத்தார்...
"....இதுவரைக்கும் நான் அந்தக் கோயிலுக்குப் போனதே இல்ல!..
நான் அந்த மண்ண மிதிச்சறியேன்!...
அதனால, அந்தக் கோயிலப் பத்தின எந்த விபரமும் எனக்குத் தெரியாது..
என்ன மன்னிச்சுடுங்க..
நீங்க விஷயமறிஞ்ச வேற யாரோடயாவது போய்ட்டு வாங்க..."
.... அதிர்ச்சி கண்களில் அப்பட்டமாய் ப்ரதிபலிக்க, வடக்கத்திய அடியவர் தாத்தாவை ஏறிட்டார்...
"என்னது... காவிரிக் கரையில இருந்துண்டு, ஒரு முறை கூட நீங்க அந்தக் கோயிலுக்குப் போனதில்லயா?...
நீங்க சொல்றது நம்பும்படியாவே இல்லயே!...
ஒருவேள..நீங்க இங்க சமீபமாத்தான் வந்து குடியேறின ஆசாமியோ?.."
.....மறுப்பாகத் தலை அசைத்தார் தாத்தா...
"இந்தக் காவிரிக் கரையில நான் கிட்டத்தட்ட எண்பது வருஷமா இருக்கேன்...
எனக்கு ஏழெட்டு வயசு இருக்கும்போது வந்தது...."
.....அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாதவர் போல் வாயை இறுக மூடிக் கொண்டார் தாத்தா...
ஏனோ, அவர் முகமும் கறுத்து இறுகி இருந்தது..
தற்பொழுது, தாத்தாவிடமிருந்து துள்ளி விலகி நின்று கொண்டார் வடக்கத்தியர்..
"ஐயோ... ஒரு நாத்திகன் வீட்டுலயா நான் நாலு நாளா தங்கி இருந்துருக்கேன்!..
....இந்த நாலு நாளா, அவன் கைச் சாப்பாட்டையா சாப்டுருக்கேன்!..
....இந்தப் பாவத்தை நான் எங்க கொண்டுத் தொலைப்பேன்?.."
....அவரது மன ஓட்டத்தை அப்படியே படித்தார் தாத்தா!..
"இனியும் இவரோட குடில் வாசம் நமக்கு வேணாம்..."
.....என்று நினைத்தவர் போல்,
குடிலுக்குள்ளே சென்ற வடக்கத்தியர், தமது சுமையோடு வெளியே வந்தார்..
தாத்தாவிற்குப் புரிந்தது...
...இனி இந்த வடக்கத்தியர் என் முகத்தில் விழிப்பதற்கும் விரும்ப மாட்டார்..."
....தாத்தாவின் இந்த எண்ணத்தை உறுதி செய்வது போல், வடக்கத்தியர்,
"போய் வருகிறேன்.." என்று கூட சொல்லிக் கொள்ளாமல், வாசலை நோக்கி நகர்ந்தார்...
அவர் வாசலைத் தாண்டுகின்ற நேரத்திலே தாத்தாவின் குரல் பின்னாலிருந்து ஒலித்தது...
"அடியவரே!..
நீங்க இந்தப் பக்கமா திரும்பி வரமாதிரி இருந்தா,
அந்தக் கோயில்லேந்து எனக்காக ஒரு பிடி மண் எடுத்துண்டு வந்து தாங்க...."
.....பதிலேதும் சொல்லவும் விரும்பாமல் அந்த வடக்கத்தியர், நடையைக் கட்டினார்...
அவருடைய அந்தச் செயல் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவும்,
.....தொய்ந்துபோய், அந்த நைந்த கட்டிலில் அமர்ந்து, தன் கடந்த காலத்தை அசைப் போட ஆரம்பித்தார் தாத்தா...
(வளரும்..)
No comments:
Post a Comment