#Easychair_29
அத்யாயம் : 29 .. ஈஸி சேர்
பூவனூர் பாலத்தடியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அக்ரஹாரம்.
நடக்க ஆரம்பித்தனர் வரவேற்க வந்தவர்களுடன் வைத்தா தம்பதியினர்.
சிலு சிலுவென அடித்த காலைத் தென்றல். ஆரம்பத்தில் அரை கிலோமீட்டருக்கு வயல் வெளிகள். தை மாத அறுவடை முடிந்து கட்டு கட்டாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்த நெற்கதிர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த பறவைகள். தன் பங்கிற்கு காலை வேளையில் புல்லுக்குப் புல் செடிக்குச் செடி உற்சாகித்த வித வித வண்ணத்துப் பூச்சிகள், வெட்டுப் பூச்சிகள், தவளை இனங்கள்.
பிரமித்து ரசித்துக் கொண்டு வந்தாள் பூவனூர் மஹாலக்ஷ்மி. முதல் அனுபவம் அவளுக்கு ஒரு கிராமத்தில் காலை நேரத்தில் காலடி வைத்தது. சிறிது நடை, பிறகு நிறுத்தம். ஏதோ ஒன்றில் லயித்து விடுகிறாள் அவள். என்ன செய்வது? தவறு கிராமத்தின் அழகைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?
நீங்க அழகாக இருக்கீங்க.
உங்களை மன்னின்னு கூப்பிடலாமா இல்லை அக்கான்னா?
நாங்க எல்லோரும் உங்களை அத்தைனுதான் கூப்பிடப்போறோம்.
இப்படி கூட நடந்தவர்களின் இடையிடையே பேச்சுக்கள்.
கிராமத்து உள்ளவர்களுக்குத் தான் எத்தனை கபடில்லா உணர்வுகள்.
ஒரு முக்கால் கிலோமீட்டரில் தெரிந்தது ஒரு பிரம்மாண்ட கோபுரம். அசந்து விட்டாள்.
சிறிய கிராமத்தில் இப்படி ஒரு கோவிலா? கமலம் சொன்னது மேலும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது பர்வதத்திற்கு.
இது எங்க ஊர் பெரிய கோவில். சிவன் பெயர் சதுரங்க வல்லப நாதர். புஷ்பவன நாதர்னு சொல்லுவா. ஆச்சர்யம் என்னன்னா, அம்பாள் இரண்டுபேர், கற்பக வல்லி, ராஜராஜேஸ்வரி. இன்னும் ஒரு விசேஷம் என்னன்னா, இங்கு சாமுண்டீஸ்வரிக்கு தனி சந்நிதி. இந்த ஊரை சுற்றிய எல்லோரையும் ரக்ஷிக்கிறா. இந்த கோவிலை சாமுண்டி கோவில்னு சொல்லுவா. இரண்டாயிரம் வருஷமா இருக்கு இது.
பிரமித்து நின்றாள் பர்வதம். ஒரு கிராமச் சூழலில் என்ன ஒரு அற்புதமா கம்பீரமா இருக்கு.
திடீரென்று வைத்தாவின் குரல்.
பாரு, சீக்கரம் வா, நாழியாறதோண்ணோ?
முதன்முதலில் பர்வதம் என்கிற பர்வதவர்த்தினியை பாரு என்று வைத்தா கூப்பிட்டது, அவளுக்கு இன்னும் சந்தோஷத்தை கொடுத்தது. அன்னியோன்னியம் கூடும்போது, பெயர் சுருங்குவது இயற்கை தானே, அதுவும் கட்டியவன் அப்படி சுருக்கிக் கூப்பிடும்போது.
அன்னா, இந்த கோவிலப் பத்தி இதுவரைக்கும் யாருமே சொல்லலையே.
சந்தர்ப்பம் வரல சொல்லல. சாயந்திரம் வரலாம் இங்க. முதல்ல எட்ட நடைய போடு. எல்லாரும் காத்துண்டிருக்காளில்லையோ.
இப்போது எல்லோரும் அக்ரஹார முகப்பில். நுழையும்போதே விசாலாட்சி அம்மன் கோவில். அருகே, அக்ரஹாரத்து தெருவின் நடுவே பிரம்மாண்ட மேடையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த அரச மரம் பிள்ளையாரோடு.
புல்லரித்து விட்டாள். ஒவ்வொரு இடமும் இங்குள்ளவர்களின் மனங்களைப் போல எவ்வளவு அழகாய் இருக்கிறது?
இதோ வைத்தா வீடு வந்து விட்டது. கேள்விப்பட்ட மற்ற அக்ரஹார வீடுகளிலிருந்தும் ஆர்வமாக வைத்தா வீட்டுக்கு வந்தனர். எல்லோரும் வாழ்த்தினர்.
ஹாரத்தி எடுக்கப் பட்டது.
கலகல என்று பேச்சுக்கள். கல்யாணத்திற்கு வரமுடியாதவர்கள் வருத்தம் தெரிவித்தனர். கல்யாணம் நடந்த சிறப்பை கமலம் ஏற்கனவே எல்லோரிடமும் முன்னதாகவே சொல்லியிருந்தாள்.
ஊர் பெரியவர்களை நமஸ்கரித்தாள். சற்று ஓய்வு, குளியல்கள், சந்தியாவந்தனங்கள்.
ஸ்வாமி ஷெல்ஃபுக்கு முன் பளிச்சென்று கம்பீரமாய் புஷபத்தை தலையில் சுமந்து நின்ற வெள்ளிக் குத்துவிளக்கிற்கு வீட்டின் மறுமகளாய் திரியிட்டு எண்ணெய் ஊற்றி ஏற்றினாள். வீடே பிரகாசித்தது.
தொடரும்.....
No comments:
Post a Comment