ஆடி ஸ்பெஷல் பகுதி 15
புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் உள்ள
சோழவந்தான் ஜெனகை_மாரியம்மன் கோயில் வரலாறு :
"மாரி இல்லா ஊர் மண்மேடு' என்ற பழமொழிக்கேற்ப தமிழகம் முழுவதும் ஏறக்குறைய அனைத்து ஊர்களிலும் விநாயகருக்கு அடுத்தபடியாக கோயில் கொண்டு விளங்கும் தெய்வம் மாரியம்மன். "உலகத்து நாயகி' என்றும், "தேச முத்துமாரி' என்றும் மாரியம்மனைப் போற்றி "அவளைச் சரணடைந்தால் எல்லா வளங்களையும் பெறலாம்' என்கிறார் பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி. சிறப்பு மிக்க சக்தி வாய்ந்த மாரியம்மன் திருக்கோயில்களில் ஒன்று தான், வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்க்கரையில் உள்ள சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில்.
ஜெனகை மாரியம்மன் கோயில், இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தானில் பாயும் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறையில் சந்தன மாரியம்மன் நின்ற நிலையிலும், ஜெனகை மாரியம்மன் அமர்ந்த நிலையிலும் காட்சியளிக்கிறார். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் அமைந்த இடத்தை முன்னர் ஜெனகாயம்பதி, சதுர்வேதிமங்கலம், சோழாந்தக சதுர்வேதி மங்கலம், ஜெனநாத சதுர்வேதி மங்கலம் என்று அழைத்ததாக கோவில் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது.இந்த மருத்துவக் கோயிலில் குடிகொண்டுள்ள ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார். ஜெனகை மாரியம்மன் குடிகொண்டுள்ள இந்த ஊர் இராமாயணத்தில் வரும் ஜனகர் மகளான ஜானகியை போற்றும் வகையில் ஜெனகபுரம் என்று முன்னர் அழைக்கப்பட்டது. மேலும் மாரியம்மனுக்கு ஜெனகை மாரியம்மன் எனப்பெயர் சூட்டப்பட்டது. இக்கோயில் தல விருட்சம் வேப்பமரம் மற்றும் அரசமரம் ஆகும்.
தல வரலாறு:
தனது தந்தை ஜமதக்னி முனிவர் கட்டளைப்படி, தாய் ரேணுகா தேவியின் சிரம் கொய்த பரசுராமர், பின் தந்தையிடம் தாயை உயிர்ப்பித்துக் கொடுக்கும்படி வரமாகக் கேட்கின்றார்.
ஜமதக்னி முனிவர் மந்திரித்த கமண்டல நீரைத் தர, அதைப் பெற்றுக் கொண்ட பரசுராமர் வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை அங்கு கிடந்த வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்டவைத்துத் தண்ணீரைத் தெளிக்க உயிர் பெற்றாள் ரேணுகா.
ஆனால் உடல் மாறியதால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அரக்கியின் சினம் அதிகரிக்கின்றது. அரக்கியை அடக்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதியின் வடிவமாக மாரி எழுந்தருளி அருள் பாலிப்பதாக வரலாறு கூறப் படுகின்றது.
இதன் பொருட்டு இவ்வாலயத்தில் ஒரே கருவறையில் இரண்டு தெய்வத் திரு மேனிகளாக, மாரியம்மனுக்கு பின்புறம் "சந்தன மாரி' என்ற பெயரில் நின்ற நிலையில் ரேணுகாதேவியும் காட்சி தருவது சிறப்பு. இந்த மாரியம்மனை ஜனக மகாராஜா வழிபட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.
நோய் தீர்க்கும் அம்மன் :
எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவக் கோயில் உள்ளது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு, அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும்.பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, கோயிலில் தொட்டில் கட்டி பூஜை செய்வது வழக்கம்.
வெள்ளிக் கிழமை மட்டும் அம்மன் சந்தன காப்பில் அருள் வழங்குவார். வெள்ளி போன்ற சிறப்பு நாளில் காலை 6 மணி முதல் இரவு 8 வரை தொடச்சியாக கோயில் நடை திறந்திருக்கும். பிற நாட்களில் பகலில் 6 மணி முதல் 11 மணி நேரம் வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்து இருக்கும். கோயிலில் நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஜெனகை மாரியம்மன் பெயரில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஜயதசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடும் திருவிழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மையாகும்.
மூலவர் சந்நிதிக்கு பின்புறம் வாயு மூலையில் சுதை ரூபத்தில் அருள் பாலிக்கின்றாள் அன்னை நாகாத்தம்மன். ஆலயச் சுற்றில் சமயச் சொற்பொழிவு மற்றும் அன்னதானக் கூடம், தீச்சட்டி தொட்டி, பொங்கல் மண்டபம் போன்றவற்றைக் காணலாம். மொத்தத்தில் சீராகப் பராமரிக்கப்படும் சிறிய ஆலயம் என்று கூறலாம்.
ஆலய அமைப்பு:
ஐந்து நிலை ராஜகோபுரம், மகா மண்டபம், முன்மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் பலி பீடம், கொடிமரம் அடுத்து முடிவில் துவார பாலிகையர்களுக்கு இருபுறமும் விநாயகரும், முருகரும் சந்நிதி கொண்டுள்ளனர். கிழக்கு பார்த்த கருவறையில் ஜெனகை மாரியம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக புன்னகை ததும்பும் வதனத்துடன் அருள்பாலிக்கின்றாள். மீண்டும் மீண்டும் தரிசிக்கும் உணர்வை ஏற்படுத்தும். அற்புத சிற்ப வேலைப் பாடுகளுடன் உயரமான கருவறை விமானம் ஆலயத்தை அலங்கரிக்கின்றது.
ஆண்டுதோறும் வைகாசி மாதம் 17 நாட்கள் பிரம்மோற்சவம் திருவிழா நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளான்று ஜெனகை அம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். வைகாசி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் படையல், அக்னிசட்டி எடுத்தல், பூக்குழியில் இறங்குதல் போன்ற நேர்த்திக கடன்கள் பக்தர்கள் செலுத்துவர். 17ஆம் நாள் இரவு 7 மணி முதல் விடிய விடிய வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
ஓம் சக்தி 🙏
No comments:
Post a Comment