திருவையாறு கதைகள்.
26. ஒரு மரமேறியின் காதல் கதை
(சிறுகதை சீசன் – 3) #ganeshamarkalam
ரொம்ப வருஷத்துக்கு அப்புரம் திருவையாறு வரேன். நார்த் கேரோலினாவுலேந்து ந்யூயார்க் வந்து அங்கேந்து சென்னை துபாய் வழியா. சென்னையில் 1 வாரம். வருஷத்துக்கு ஒருக்கா அப்பாவை அம்மவைப் பாத்துட்டுப் போரதுதான். “இந்தத் தடவை பாட்டியையும் போய்ப் பாத்துட்டு வா சுபத்ரா.” அப்பாவே அனுப்பிவச்சர்.
“போய்ட்டு வா, சந்தோஷப்படுவள். உடம்பு முடியாம இருக்கா. அடுத்த தடவை நீ வரச்சே இருப்பாளான்னு தெரியலை.”
காரில்தான் 6 மணிக்கு கிளம்பினேன். திருச்சி ரோடில் பெரம்பலூர் கிட்டே வந்துட்டு பைபாஸில் இடதுபக்கம் திரும்பி அரியலூர் வழியா 1 மணி தூரம். அப்பா சொல்லச் சொல்ல கேக்காம செல்ஃப் ட்ரைவிங்க். கூடவே என் 7 வயசு பிள்ளை பிரகாஷ் கொள்ளுப்பாட்டியைப் பாக்க. முதல் தடவை இந்தியா வரான். வழீலே ஆடு மாடு பாத்துட்டா “வாவ்”தான். திருமானூர் கொள்ளிடம் பாலம் தாண்டினதும் திருவையாறு வந்துடும்னு கூகிள் சொல்லித்து. அம்மன் சன்னிதிக்கு முன்னாடி இடதுபக்கம் திரும்பினா பாவாசுவாமி அக்ரஹாரம். இடதுபக்கம் 4ஆவது வீடு தாத்தாவோடது.
தாத்தா இல்லை, பாட்டியை சித்தி சித்தப்பா பாத்துக்கரா. காரை நிறுத்திட்டு பிரகாஷை கதவைத்தட்ட சொன்னேன்.
திறந்தது சித்தப்பா. “என்னா கண்ணா வேணும், யார் நீ?” “ஐ கேம் டு சீ மய் க்ரேட் க்ராண்ட் மதர், ஓபன் தெ டோர்” அப்போதான் அவர் என்னை கார்லேந்து இறங்கரதைப் பாத்துட்டு, “அடியே யார் வந்திருக்கா பாரூ!”ன்னு உள்ளே ஓடிப்போயிட்டர். ரெண்டு மித்தம் தாண்டி அடுக்களையில் பாட்டியும் சித்தியும் இவர் போட்ட சத்தம் கேட்டு எழுந்து வரவும், நான் உள்ளே இவனை கையப்பிடிச்சிண்டு நுழையவும் சரியா இருந்தது.
கார்த்தாலே காக்கா கத்தித்தாம். செல்லப் பேத்தியே அமேரிக்காவுலேந்து நேர வந்தது எல்லாரையும் சந்தோஷப் படுத்திட்டது.
கல்யாணம் முடிஞ்சு 8 வருஷம் கழிச்சு பாட்டியும் பேத்தியும் சந்திச்சிண்டா என்ன நடக்கும்? அதுவும் பாக்க மாட்டோமான்னு பூத்துப்போன கண்களுக்கு எதுத்தாப்புலே கொள்ளுப்பேரன் அதுவும் ஆத்துக்காரரை உரிச்சு வச்சாப்போலே வந்து நின்னா ஒரு 88 வயசு கிழவிக்கு எப்படி இருக்கும்? அப்போ என்ன நடக்கும்? அப்படியே நடந்தது.
காபி தந்தா. இவன் ப்ளாக் காபீன்னு கேக்க இவாளுக்கு புரியலை. “டார்க்கா கேக்கரான்.” சித்தப்பா சொல்ல என்னவோ வந்தது. இவனும் சமுத்தா குறை சொல்லாம குடிச்சாச்சு. ஹி ஹேட் அ பாத் நியர் தெ வெல் இன் தெ மித்தம். இவன் ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவிச்சு சிலாகிச்சு பேச இவன் சின்னத்தாத்தா இவனையே ஆச்சர்யமா வேத்துக் கிரகத்துலேந்து வந்தவன் போல பாத்திண்டிருக்க, சித்தி எனக்குப் பிடிச்சதையெல்லாம் உள்ளே சமைக்கக் கிளம்ப, நான் இவாத்துக் கொல்லைப்பக்கம் எப்படி இருக்குன்னு பாக்க கிளம்பிட்டேன்.
ரெண்டு நா இருப்பதாத்தான் பிளான். ஆனா செய்யன்னு நினெச்சிண்டு வந்தது ஒரு நூறு மேட்டராவது இருக்கும். சின்ன வயசில், அப்புரம் வயசுக்கு வந்துட்டதும், அப்புரம கல்யாணம் நிச்சயமானப்புரம் பத்திரிகை வைக்கன்னு அப்பா அம்மா வந்தபோது நானும் அடம் பிடிச்சு வந்தது - நேத்துப்போல்!
கொல்லைப்பக்கம் 300 அடிக்கு தோட்டம். ஆரம்பத்தில் ரெண்டு பலாமரம், அப்புரம் நெடுக தென்னையும் பாக்கும்தான். தென்னை மரத்தைப் பாத்ததும்தான் எனக்கு டக்குன்னு முத்தண்னன் ஞாபகத்துக்கு வர மனசெல்லாம் வலிச்சது. ஏன்னு எனக்கும் பாட்டிக்கும்தான் தெரியும்.
முத்தண்ணன் இந்தாத்து ஆஸ்தான மரமேறி. என்னைவிட 3 வயசு பெரியவன். கருத்த தேகம். அனால் கட்டுமஸ்தாக, இந்தக் காலத்தில் ஜிம்முக்குப் போராப்புலே போகாமலேயே அப்பவே வெறுமனே சரீரத்தால் உழைப்பு மிகுந்த தொழிலை அவன் அப்பாவோட சேர்ந்து செஞ்சிண்டு அதுக்குன்னு தனி முயற்சி எடுத்துக்காமலே தேக்குமரமொத்த மெலிந்த தேகம்.
அவனை முதல்ல பாத்தப்போ என் வயசில் யாரா இருந்தாலும் அத்தனை ஈர்ப்பு ஏற்பட்டது ஆச்சர்யமே இல்லை. மில்ஸ் ஏண்ட் பூன்ஸ் படிச்சா மனசு குழப்பிண்டிருந்த காலம். ஸ்கூல் ஃபைனல், காலேஜுக்குப் போகப்போர வயசு. உடம்பு உலகத்தை பாத்து அதுக்கேத்தா மாதிரி பதிலைத் தெடிண்டு, எதுத்தாப்புலே வரவாளை சுண்டி இழுத்து கேள்வி கேட்டு உலுப்பிண்டு அப்படி ஒரு தினுசான வயசில் முத்தண்ணன் பரிச்சயமானான்.
லீவுக்கு வந்த குழந்தைக்கு இளநீர் பறிச்சுப் போடுங்கோன்னு பாட்டி சொல்ல ஆள் அனுப்பிச்சு, அப்பாவுக்கு உடம்பு முடியலைன்னு பையன் முத்து வந்தான். வேடிக்கை பாப்பேன்னு கூடவே போய் அண்ணாந்து இவன் மரம் ஏறும் அழகையும், ஏறி இறங்கச்சே இவன் உட்மபு காட்டும் மர்ம ஜாலங்களையும் ரசிச்சிண்டு. 25 இளநீ பறிச்சுப் போட்டுட்டு இறங்கினான்.
வேடிக்கை என்னன்னா 5 மரத்துலேந்து பறிச்சவன், ஒரு தடவை ஏறிட்டு ஒரு தடவைதான் இறங்கினதைப் பாத்து அது எப்படின்னு வியப்பில் கேக்க, அசால்டா, “மேலே ஏறி ஒரு மரத்தில் பறிச்சதும் பக்கத்தில் இருக்கும் பாக்கு மரக் கிளையை இழுத்துப் பிடிச்சு அதில் தவ்விண்டு அது வளைஞ்சு போரச்சே அடுத்த தென்னையில் கால் வச்சுப் பிடிச்சுக்கணும். இல்லைன்னா ஒவ்வொரு வாட்டியும் கீழே வந்து திரும்ப மேலே போகணும்.”
“பயமில்லையா, விழமாட்டாயா?” சிரிச்சான். “உங்க வீட்டில் எண்ணை ஆட்டரத்துக்கு தேங்காய் பறிக்க கூப்பிடுவாங்க அப்போ இங்கே ஏறி, தோப்பு கோடிலே இறங்குவேன்”.
அப்புரம் பாட்டி இவா என்னெல்லாம் செய்யரான்னு சொல்லப் போக இவாத்துக்குப் போய் தாம்பக்கயிறு திரிப்பதைப் பாக்கணும்னு அடம் பிடிச்சுப் போனேன். இவா குடிசை எங்காத்துலேந்து கபிஸ்தலம் வழீயா கும்மொணம் போர ரோட்டை கிராஸ் செஞ்சா தியாகராஜர் சமாதிக்கு போர வழீலே இருக்கு போயிட்டு சீக்கிரம் வந்துடுன்னு அனுப்பிச்சா.
குடிசை வாசலில் உக்காந்திருந்த இவன் அம்மா “ஐயர் வீட்டுப்பொண் வந்திருக்கு”ன்னு உக்காரவச்சு மோர் தந்தா,. தொட்டீலே தேங்காய் நாறை ஊறப்போட்டு காயவச்சு அடிச்சுப் பிரிச்சு அப்புரம் ஒரு மெஷீனில் கயித்தை திரிப்பது எப்படீன்னு முத்து செஞ்சு காமிச்சன்.
கயீறு மட்டும் திரிக்கலை, எங்களூடே இனம் புரியாத நட்பும் அதீத ஈர்ப்பும் திரிந்ததை எங்களால் உணர முடிஞ்சது. நான்தான் வலியக் கிட்டக்கப் போய் இது என்ன பன்றாய், எனக்கு செய்ய விடுன்னு கையும் உடம்பும் தொட்டுக் கொள்ள காரணங்கள் உருவானது. இருந்த ஒவ்வொரு நாளும் ஏதாவது சால்ஜாப்பு சொல்லி இவனை ஆத்துக்கு வரவழைப்பதும் நான் வெளீலே போரேன்னுட்டு இவனைப் பாத்துன்னு ஆச்சு.
ஊருக்கு கிளம்பர டயத்தில் காவேரிக் கரையில் மீட் செய்யரதா எங்களுக்குள் ஏற்பாடு. சாயங்காலம் 4 இருக்கும் தியாகராஜர் சமாதிக்கு பக்கத்தில் படித்துறை. யாரும் வரமாட்டா. அங்கே சந்திச்சோம்.
அறியாத வயசா? எல்லாம் புரிஞ்சது, இவன் மேல் சொல்லொண்னா காதலை எப்படி சொல்ரதுன்னு மனசு தவிக்க நான் சொல்லிட்டேன். “எனக்கும் உன்னை ரொம்பவே பிடிக்கும் சுபத்ரா, ஆனா நீங்க பெரீய இடம், ஜாதி, மதமெல்லாம் தாண்டின பெருஞ்சுவர் அந்தஸ்து. எத்தனை மரம் ஏறினாலும் உன்னை என்னால் எட்ட முடியாது.” எல்லாம் மறந்துட்டு ஊருக்குப் போ!” நல்லவிதமா அறிவுரை சொன்னான். முத்தான மனுஷன். இவன் மாதிரி நம்படவாளில் கிடைப்பாளா?
கிளம்பரச்சே நானெ எதிர்பாக்காத ஒண்ணை செஞ்சேன். அவனை எங்கிட்டே இழுத்து நுணிக்காலில் நின்னிண்டு அவன் கழுத்தை கட்டிண்டு எப்பவுமே இருக்கட்டூம்னு ஞாபகார்த்தமா – ஒரு முத்தம். தந்தேனா, எடுத்துண்டேனான்னு தெரியலை. அவன் நிலை குலஞ்சு அங்கேயே நிக்க, விடுவிடுன்னு ஆத்துக்கு வந்தாச்சு.
பாட்டிக்கு மட்டும் சொன்னேன். “ஜாக்கிரதையா ஊர் போய் சேரு, இல்லைன்னா உங்கப்பன் என்னை கொன்னே போட்டுடுவன்.” அவள் பெரிசு படுத்தலை
அதுக்கப்புரம் இப்போ இதே ஊரில் அவன் ஏறின மரங்களின் நடுவுலே. நான் போனப்புரமும் இந்தாத்துக்கு வந்திருப்பன். என்னை நினெச்சுப் பாத்தானா? நான் அவனை அத்தனை நினைக்கலைன்னு சொல்லணும். இப்போதான் திடுதுப்புன்னு தாத்தாவாத்து தென்னைமரத்தைப் பாத்ததும்.
உள்ளே வந்ததும் பாட்டீ, “ஏண்டீ முத்தண்ணன் ஞாபகம் இருக்கா? உன் பிள்ளைக்கு இளநீ பறிச்சுப் பொடணுமா? சொல்லியனுப்பரேன்.” வேலைக்காரி கிட்டெ சொல்ல அவள் “மத்தியானம் வந்துடுவான் மாமி”ன்னா
மணி 3 இருக்கும் முத்தண்ணன் ஆஜர். 8 வருஷம் கழிச்சு என்னைப் பாத்ததில் ஆச்சர்யம். “யாரோ விருந்து வந்திருக்காங்கன்னு சொல்லி கூப்பிட்டாங்க, நீங்கன்னு சொல்லலை, எப்படி இருக்கீங்க அம்மா, வெளிநாட்டில் எல்லாம் சவுக்கர்யமா இருக்கா?” “நல்லா இருக்கேன் முத்து, இதோ இவன்தான் என் பையன் பிரகாஷ். உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” “ஆயிடுச்சும்மா, கனகான்னு பேர் கபிஸ்தலத்துலே அவிங்க அப்பா செங்கல் சூளையில் வேலை. 5 வருஷம் ஆச்சு. ஒரு பொண் குழந்தை.”
“கூட்டிண்டு போய் அறிமுகம் செய்ய மாட்டீங்களா?” நான் கேக்க, “அதுக்கென்னமா, நீங்க எப்போ வேணும்னாலும் வாங்க, ஏன் நாளைக்கு காலேலேயே வாங்க.” அப்புரம் மரம் ஏறி தேங்காயும் இளநீரும் பறிச்சுப்போட, எல்லாம் நடந்தது.
பிரகாஷுக்கு அமேரிக்காவுலே காணக் கிடைக்காத காட்சி. எப்படி ஏறினான், எப்படி இறங்கினான், அதைவிட தேங்காய்க்குள் அத்தனை நல்ல ட்ரிங்க்ஸ் யார் ஊத்தி வச்சான்னு சந்தேகங்கள் எழும்ப, சொல்ரேண்டா அப்புரமான்னு நான் முத்துவையே கண்கொட்டாமப் பாத்திண்டிருந்தேன்.
மனசில் ஒரே ஒரு கேள்விதான் எஞ்சி நின்னது. யார் அந்த அதிர்ஷ்டக்காரி, கபிஸ்தலத்தில்? இவனை அடைஞ்சுட்டா!
மறுநாள் கார்த்தாலே டிபன் சாப்டூட்டு கிளம்பினேன். 8 நிமிஷ நடை அவ்ளோதான். பிரகாஷ் இன்னும் எழுந்திருக்கலை, அதுவும் நல்லதுக்குத்தான். இல்லைன்னா “ஐ வில் ஆல்ஸொ கம்” என்பான்.
முத்தண்ணன் குடிசை வாசலில் முறத்தில் அரிசி புடெச்சிண்டு லக்ஷனமா ஒரு பொண், கூட 4 வயசு சிறுமி, ஸ்கூல் யூனிஃபார்மோட புஸ்தகத்தை பிடிச்சிண்டு. “சுபத்ராவா, வாங்கக்கா!” என்னை அவள் பேர் சொல்லிக் கூப்பிட்டது அத்தனை அழகா, இவள் என்னை எதிர்ப்பாத்தே காத்திண்டிருக்கா. அக்கான்னு வேர! குரல் கேட்டு முத்தண்னன் வர, “உள்ளே வாங்க என்ன சாப்பீடரீங்க?” கேட்டான். “இப்போதான் சாப்டுட்டு வந்தேன்.”
கையில் கொண்டுவந்த பையை அந்தக் குழந்தை கையில் தந்துட்டு, “வாயேன் காவேரிக்கரை வரைக்கும் போலாம்!” நான் கேக்க, கனகா சற்றும் யோஸிக்காம “போய்ட்டு வாங்க”ன்னு எங்களை அனுப்ப, சின்னது “நானும் வருவேன்”னு கிளம்பித்து. நான் ஆசையா கையை நீட்டிக் காமிச்சு பிடிச்சுக்கோன்னு சொல்ல நினைக்கையில் அவள் அம்மா, “அப்பாவும் ஆன்டியும் போகட்டும், நீ என்கூட இரு.”அதட்டல் போட்டு பிடிச்சு வச்சிண்டா.
போனம், அதே படித்துறைக்கு. 8 வருஷத்தில் எத்தனை தண்ணி ஓடியிருக்கும்? என்ன பேசரதுன்னு புரியலை. முத்து சட்டுன்னு “நம்பளைப் பத்தி கனகாவுக்கு தெரியும்”னான். அதிர்ந்து போனேன். “அதான் நம்பளை தனியா அனுப்பிச்சான்”னும் சொல்ல அதிர்ச்சி விலகி ஆச்சர்யத்துக்கு இடம் தந்தது. “பாட்டியைத் தவிர நான் யாருக்கும் சொல்லலையே!” “பரவாயில்லை. அப்புரம் எப்போ வருவீங்க?” வார்த்தைகளில் பன்மையும், இருவருக்கும் இடையில் தெளிவான தூரமும் விட்டு முத்து அன்னைக்கு பாத்தா மாதிரியே நின்னான்.
நின்னா நான் ஏதாவது செஞ்சுடுவேனோன்னுட்டு நானும் தள்ளி உக்காந்திண்டேன், “இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் வர முடியும்.” ரெண்டுபேரும் தனிமையில் வாடினோம். ஒண்ணும் பெசலை.
போலாமான்னு கேக்க உடனே எழுந்துண்டான்.
கிளம்பி வரச்சே அவன் குடிசைக்கு கிட்டே வச்சு கேட்டேன். “உன் பொண்ணுக்கு என்ன பேர்? அவளோட ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா?” கேக்க, “தாராளமா. அவள் பேரும் சுபத்ராதான்”. சொல்லிட்டு குடிசைக்குள் மறைந்து போனான்.
வெளீலே போனவன் இத்தனை சீக்கிரமா வந்துட்டானேன்னு ஆச்சர்யமா பாத்தபடி கனகாவும் போடோவுக்கு போஸ் தந்தா.
No comments:
Post a Comment