அம்பாளின் சாகம்பரி அலங்காரம்
-------------------------------------------------
ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார்.
அங்கிருந்த சாஸ்திரியிடம், “பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும். அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்” என்றார்.
“இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!” என்று நினைத்த சாஸ்திரி, அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!” என்றார் பணிவுடன்.
பெரியவர் அவரிடம்,“அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா,” என்று சொல்லி விட்டார்.
அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் (கோயம்பேடு) இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது. பணியாளர்கள் விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே பெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
பொங்கலன்று கோவிலுக்கு வந்த பெரியவர் எங்கும் காய்கறி, பழத் தோரணம் இருப்பது கண்டு மகிழ்ந்தார். அம்பிகையையும் சாகம்பரியாக தரிசித்த பெரியவர் பக்தர்களிடம், “ பொங்கலன்று சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம் உண்டாகும். இன்று தர்ப்பணம் செய்வது அவசியம். அம்பாளை சாகம்பரியாக தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். நாளை கோபூஜை செய்யுங்கள். நாளை மறுநாள் உடன்பிறந்தவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று சொல்லி ஆசியளித்தார்.
நடமாடும் தெய்வமான பெரியவர் சொன்ன வழியில் அம்பாளை சாகம்பரியாக தியானித்து வழிபடுவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.
No comments:
Post a Comment