Sunday, May 31, 2020

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்?

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்?

ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்!!

நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?

அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,
நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?

ஞானி சிரித்தார்!!

முதல் ஆளிடம்,
”நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா, ”என்றார்.

இரண்டாமவனிடம்,
நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார்.

இருவரும் அவ்வாறே செய்தனர்.
முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான.

இப்போது ஞானி சொன்னார்,
”சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,” என்றார்.

முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். 

இரண்டாமவன் தயக்கத்துடன்,
இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?” என்று கேட்டான்.

ஞானி சொன்னார்,
முடியாதல்லவா, அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம்.

நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. அவனுக்கு மீட்சி சுலபம். உனக்குத் தான் மீட்சி என்பது மிகக் கடினம்! என்றார்.

*சிறு துளிகள்..!!
*பெரும் வெள்ளம்..!!

சூரியகோடீஸ்வரர் திருத்தலம்

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் 


கீழச் சூரிய மூலை என்கிற சூரியகோடீஸ்வரர் திருத்தலம் தொடர்புக்கு செல்நெம்பர்
9787212969

பதிவு: பிப்ரவரி 

   
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான்.

கீழச் சூரிய மூலை என்கிற சூரியகோடீஸ்வரர் திருத்தலம்


அனைத்து லோகங்களில் உள்ளவர்கள் பிரதோ‌ஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயனடைவதைக் கண்ட சூரிய பகவானுக்கு, தன்னால் பிரதோ‌ஷ வழிபாட்டில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.

பிரதோ‌ஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படி கலந்து கொள்ள முடியும்? அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார்.

தன் வேதனையையும், வருத்தத்தையும் யாக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான். இந்த மாமுனி சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர்.

சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி, அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற கீழச் சூரிய மூலையில் உள்ள சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் சூரியனின் கவலையை எடுத்துரைத்து, தினந்தோறும் அவரை வணங்கினார். தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார்.

பின், சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக்கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக, வேதாக்கனி யோகப் பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப் பணித்தார். மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம் சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அதுவே இலுப்பை மரம். இந்தக் கோவிலின்  தல விருட்சமும் இதுதான்.

இலுப்பை மரத்தில் உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. அந்த பகுதி இலுப்ப மரக் காடாக மாறியது. தினமும் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெயால், கோடி அகல் தீபங்கள் ஏற்றி சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியா வேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோ‌ஷ வழிபாட்டு நேரம் அல்லவா?

மறுநாள் காலையில் சூரிய உதயத்தின் போது சூரிய பகவான், இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோ‌ஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றார் என்பது புராண வரலாறு. இந்த புராண வரலாற்றுகுரிய தலமே கீழச் சூரிய மூலை.

ஆலய அமைப்பு :

இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சூரியகோடீஸ்வரர். இறைவியின் பெயர் பவளக்கொடி. இறைவனின் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மனின் சன்னிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. தெற்கு கோட்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னகைத்த நிலையில் காட்சி தருகிறார். வெளிப் பிரகாரத்தின் தென் மூலையில் சக்தி விநாயகரும், மேல் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகனும், தென் மூலையில் நாகலிங்கமும், வடக்குப் பிரகாரத்தில் துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் திருமேனிகளும் உள்ளன.

வடமேற்கு மூலையில் நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார்கள். உள்ளே, சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சூரியன் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள மூலவரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவற்றில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.

பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஒரு ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளிபடுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது எங்கும் காணாத அற்புதம் என்கின்றனர் பக்தர்கள்.

பைரவர் :

இத்தல பைரவர் சொர்ண பைரவர் என அழைக்கப்படு கிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் சன்னமாக பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல  அசைவதும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி என கூறுகின்றனர் பக்தர்கள்.

இந்த பைரவர் தன் கழுத்து பவளமணியின் ஏழு ஒளிக் கிரகணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரகணங்களால் ஏற்படும் தோ‌ஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தவிர பணத்தட்டுபாடு, ஏழ்மை வறுமையை போக்கக் கூடியவர் இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.

இங்குள்ள துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. இந்த துர்க்கை தனது ஒரு காலை முன்நோக்கி வைத்துள்ளாள்.  தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் என கோவில் அர்ச்சகர் விளக்குகிறார்.

சூரிய தோ‌ஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோ‌ஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும். ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோவிலில் அன்னதானம் செய்தால் நம் முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோ‌ஷங்களும் விலகும்.

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந் திருக்கும். சூரிய கோடீஸ்வரருக்கு பிரதோ‌ஷ நேரத்தில் அகல் விளக்கு ஏற்றி வணங்கினால், கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அகத்திய முனிவர் :

சுக்ராச்சாரியார், தான் இழந்த கண் பார்வையை மீட்க பல தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்தார். அகத்திய முனிவர் முன்னிலையில் இத்தலத்தில் ஹிருதய மந்திர ஹோம பூஜ  களைச் செய்தார். சூரிய கோடீஸ்வரரை வழிபட்டார். இழந்த பார்வையை மீண்டும் பெற்றார் என்கிறது தல வரலாறு. ராமபிரானுக்கு அகத்திய முனியவர் ஹிருதய மந்திரத்தின் பல சுலோகங்களையும் இலங்கை போர்க்களத்தில் உபதேசித்தார். அதன் பின்னரே ராமபிரான் சீதையை மீட்டதாக கூறப்படு    கிறது. ராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி சாந்தமான சுபஹோரை காலங்களில் ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பலவற்றை பல நேரங்களில் ராமனுக்கு உபதேசித்து விளக்கினார். இப்படி மந்திர  உபதேசங்களை ராமனுக்கு நிகழ்த்திய தலங்களில் கீழச் சூரிய மூலையும் ஒன்று..

சூரியன் சக்தி பெற்ற கதை :

தட்சன், தான் நடத்திய யாகத்திற்கு அனைவரையும் அழைத்தான். ஆனால் தான் என்ற அகந்தை தலைக்கு ஏறியதால் சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்டார் சிவபெருமான். இந்த யாகத்திற்கு சந்திரனும் சூரியனும் முதலில் சென்று அமர்ந்தனர்.  எனவே இருவரும் தங்கள் ஒளியை இழந்தனர்.

சூரியன் ஒளியை இழந்ததால் அண்ட சராசரங்கள் இருளில் மூழ்கின. தட்சன் நடத்திய யாகத்தில் தான் கலந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தான் சூரியன். ‘எனக்குள் ஈசன் ஒளிர வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?’ எனக்கேட்டு குருவின் முன் கலங்கி நின்றான்.

குரு இலுப்பை மரங்கள் நிறைந்த வனத்தைக் காட்டினார். சூரியன் அந்த வனத்தை அடைந்ததும் தன்னால் ஓர் பேரொளி படர்வதை உணர்ந்தான். கோடி சூரிய பிரகாசராக விளங்கும் இறைவனை தினந்தினம் பூஜித்தான். இழந்த தன் முழு சக்தியையும் பெற்றான். எத்தனை யுகமானாலும் தன்னுடைய முதல் கதிரை இத்தலத்து இறைவனின் மீது செலுத்தி வணங்கி விட்டுதான் பிரபஞ்சத்தின் மீது தன் கதிர்களை பாய்சுவதாக புராணத் தகவல் கூறுகிறது.

சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான். எனவே அதை வேறுபடுத்தி காட்டவே இத்தலம் கீழச் சூரிய மூலை என அழைக்கப்படுகிறது. தாய்  தந்தையாருக்கு கருமம் செய்ய  தவறியவர்களின் கருமம் இந்த ஆலயத்தில்  நிவர்த்தி  செய்யப்படும். 

இருப்பிடம் :

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோவிலருகே இறங்கிக் கொள்ளலாம்.

விழிகிடைக்குமா அபயகரம்கிடைக்குமா

நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம்
 ஸ்ரீ மஹாபெரியவா சரணம் சரணம் சரணம் ப்ரபதே 🙏🙏🙏 அபார கருணா ஸிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம ஸ்ரீ சந்திரசேகரகுரும் ப்ரணமாமி முதான்வஹம் 
🙏🙏🙏
 விழிகிடைக்குமா அபயகரம்கிடைக்குமா 
ஸ்ரீமஹா பெரியவா சரணம்

தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மகா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார்;. ஒரு மாத காலமாக மகான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.

இந்தக் கும்பலில் அஞ்சல்துறை அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மகான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப் பட்டணத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது ஓயுவு நேரத்தில், மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மகானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்த்து. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிரார் என்பதே, அருள் பெற்றது போலத்தானே?

சில தினங்களில் மகான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார்.

இது நடந்து பல வருடங்களுக்குப் பின், மகான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார்;. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்தபின், இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்தபின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.

தீர்த்தம் கொடுக்கும் முன், மகான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுரிக்கி இவரைப் பார்த்தார்.

எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகார், “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க, மகான் புன்முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து, “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.

இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்துவிட்டது என்றாலும், அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கைதூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால், ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?

மஹா பெரியவா அருள்வாக்கு    
                                                                                                                                      * ஒருவருக்கு ஆனந்தத்தை தரும் சம்பவம் மற்றொருவருக்கு துக்கத்தை தருகிறது. எது நடக்க வேண்டுமோ அது இறைவன் செயல் என்று நினைப்பதே சரியாகும்.      
    
                                                     * உடல், வாய், மனம், பணம் என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.  பாவத்திற்கு பிராயச்சித்தமாக அந்த நான்காலும் புண்ணியம் செய்ய வேண்டும்.                                                     

பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மனநிறைவோடு இருப்பது தான்.   *- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Saturday, May 30, 2020

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு.

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு.

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-i (6) தெற்கு கட்டை கோபுரம்-ii (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

உடல் சூடு குறைய

கோடைக்காலத்தில் உடல் சூடு குறைய என்ன சாப்பிடலாம்?

 🥒 கோடைக்காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும். 

 🥒 சுரைக்காயில் பல்வேறு மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம். 

 பலன்கள் :

 🥒 சுரைக்காய் வைட்டமின் பி, சி சத்துக்களை கொண்டுள்ளது. இவற்றை சாப்பிடுவதால் உடல் பலமாக இருக்கும். 

 🥒 சுரைக்காயின் சதைப்பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வந்தால் சிறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். 

 🥒 சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கும் சுரைக்காய் சாப்பிடுவது மிகச்சிறந்தது ஆகும். 

 🥒 காமாலை நோய்க்கும் சுரைக்காயைப் பயன்படுத்தலாம். 

 🥒 சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலை அடையும். 

 🥒 சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். 

 🥒 அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். 

 🥒 வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும். 

 🥒 சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது. 

 🥒 மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சுரைக்காயின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு போன்ற பிரச்சனைகள் நீங்கும். 

 🥒 கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். 

 🥒 உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம். 

 🥒 நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

மகாபாரதம் பகுதி-14

🚩மகாபாரதம்  பகுதி-14

( குந்தியின்  சுயம்வரம்..!!)

பெற்ற மகனைப் பார்த்து உள்ளம் பூரித்த அதே வேளையில், குந்திக்கு பயமும் வந்து விட்டது. ஐயோ! தந்தையாருக்கு இது தெரிந்தால் என்னாகும்? குடும்ப மானம் காற்றில் பறக்குமே. சூரியனுக்கு இந்த பிள்ளையைப் பெற்றேன் என்றாலும் கூட, கன்னியாக இருந்து கொண்டே காமலீலை நடத்தினாயடி, கள்ளி, என்று தகப்பனார் திட்டுவார். ஊரார் என்ன சொல்வார்கள்? அட காமந்தகாரி, மனஅடக்கம் இல்லாத நீயா எங்கள் இளவரசி என்று வசை பாடுவார்களே, ஓ என்ன செய்வது? அப்போது அவளது அந்தரங்கத் தோழி வந்தாள்.

நடந்த விஷயங்கள் அனைத்தும் அவளுக்குத் தெரியும். அவளிடம், என் அன்புத் தோழியே! பெண்கள் ரகசியங்களைப் புதைக்கத் தெரியாதவர்கள் என்பார்கள். ஆனால், நீ அப்படிப்பட்டவள் அல்ல. என் நலத்தை மட்டுமே நாடுபவள். இந்த அந்தரங்கத்தை வெளியே சொல்லமாட்டாய் என நான் அறிவேன். நான் மீண்டும் கன்னியாகி விட்டேன். இப்போது இவன் என் குழந்தையல்ல. இவன் தெய்வத்தின் குழந்தை. இவனை இதோ இந்த பாகீரதி (கங்கை) ஆற்றில் விட்டு விடு. ஒரு பெட்டிக்குள் வைத்து விட்டால் ஆபத்தின்றி தப்புவான். யாராவது இவனைக் காப்பாற்றி விடுவார்கள் என நம்புகிறேன், என்றாள். தோழி குந்தியின் நிலையைப் புரிந்து கொண்டாள்.

இளவரசி! விளையாட்டு வினையாகி விட்டதை நானும் உணர்வேன். உன் நிலையில் நான் இருந்தாலும் இதையே தான் செய்திருப்பேன். என் உயிர் உள்ளவரை இந்த ரகசியம் வெளியே வராது. கவலைப்படாதே, என ஆறுதல் சொல்லி, சித்திரவேலைப்பாடுள்ள ஒரு அழகிய பெட்டியில் குழந்தையை வைத்தாள். குந்தி அன்று அழுது பெருக்கிய கண்ணீரின் அளவு கங்கையையும் தாண்டியது.

அந்த அழகு மகனை அவள் கங்காதேவியிடம் தாரை வார்த்தாள். புனித கங்காமாதா அந்தப் பெட்டியை மிக பத்திரமாக சுமந்து சென்றாள். ஏனெனில், பெட்டிக்குள் இருப்பவன் சூரிய மைந்தன். இந்த தேச மக்கள் சுபிட்சமாக வாழ கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாகப் போகிறவன். அலைபுரண்டு ஓடினாலும், சுழல்களுக்குள் சிக்கினாலும் பெட்டி எந்த சேதாரமும் இல்லாமல் சென்றது. நீண்ட தூரம் சென்ற பிறகு ஓரிடத்தில் அதிரதன் என்பவன் தன் மனைவியுடன் புரண்டோடும் பாகீரதி நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

அவன் அந்நாட்டு தேர்ப்பாகன்களின் தலைவன். அதிரதனின் மனைவி தூரத்தில் ஒரு பெட்டி மிதந்து வருவதைக் கணவனிடம் சுட்டிக்காட்டினாள். வெள்ளமென்றும் பாராமல், நதியில் குதித்து அதை தள்ளிக் கொண்டே வந்து கரைசேர்த்தான் அதிரதன். அதிரதனின் மனைவி அவசரமாக பெட்டியைத் திறந்தாள். உள்ளே குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. 

அவனது முகப்பிரகாசத்தை ரசிப்பதா? அல்லது உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக காதில் குண்டலமும், மார்பில் கவசமும் பளபளத்ததை ரசிப்பதா? இது என்ன ஆச்சரியம்? இவ்வளவு அதிசயமும், அழகும் கொண்ட குழந்தையைப் பெற்றவள் ஏன் தண்ணீரில் மிதக்க விட்டாள்? அவள் ஒரு பெண்தானா? என்றெல்லாம் பலவாறாகப் பேசியபடி குழந்தையை எடுத்து அள்ளி அணைத்தாள் அந்த மாதரசி. இருக்காதா பின்னே! அவர்களுக்கு கடவுள் குழந்தை செல்வத்தை தரவில்லை. மரணத்துக்கு பிறகு பிதுர்க்கடன் செய்ய இதோ ஒரு மகன் வந்து விட்டான். அவர்கள் ஆனந்தப்பட்டனர். குழந்தையையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு இல்லம் போய் சேர்ந்தனர்.

குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசித்தனர். குழந்தையின் கைகள் அடிக்கடி மூடித்திறந்ததைப் பார்த்து, ஓ இவன் வள்ளல். கொடுக்கும் குணமுடையவன். இவனுக்கு கர்ணன் என பெயர் சூட்டுவோம், என முடிவெடுத்தனர். அரசகுலத்தில் பஞ்சு மெத்தையில் அயர்ந்துறங்க வேண்டிய அந்தக் குழந்தை ஒரு ஏழை வீட்டு மரத்தொட்டிலில் படுத்திருந்தான். 

இங்கே இப்படியிருக்க, இது எதையும் அறியாத குந்தியின் தந்தை விராதன் குந்திக்கு திருமண சுயம்வர ஏற்பாடு செய்தான். பல நாட்டு மன்னர்களும் வந்திருந்தனர். வந்தவர்களில் பாண்டுவும் ஒருவன். அவனைகுந்திக்கு பிடித்து போய் விட்டது. மணமாலையை அவனுக்கே அளித்தாள். திருமணம் சிறப்பாக நடந்தது. குந்தியும், பாண்டுவும் இன்பமாய் வாழ்ந்து வந்தனர். 

அக்காலத்தில் மன்னர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. பாண்டுவின் பெருமையைக் கேள்விப்பட்டான் மந்திர தேசத்து மன்னன் ருதாயன். அவனுக்கு மாத்ரி என்ற மகள் இருந்தாள். அவளையும் பாண்டுவுக்கு திருமணம் செய்து வைத்தான். மாத்ரியின் சகோதரன் சல்லியனுக்கும் இந்த திருமணத்தில் பெரும் விருப்பம் இருந்தது. தங்கைக்கு நல்ல கணவன் கிடைத்தது கண்டு மகிழ்ந்தான். இந்த ஆண்வர்க்கம் இருக்கிறதே... அதனிடம் ஒரு பலவீனம் உண்டு. 

பெண்கள் முன்னால் தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டும் என்றால் விழுந்து விழுந்து காட்டுவார்கள். கிருதயுகம் முதல் கலியுகம் வரை இது இருக்கத்தான் செய்கிறது. பாண்டு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? புதுமனைவியர் இருவரையும் அழைத்துக் கொண்டு அவன் காட்டுக்கு போனான். மனைவிகளை அருகில் வைத்துக் கொண்டு, இதோ பார் புலி, அதைக் கொல்கிறேன், என்று சொல்லி அம்பெய்தி புலியைக் கொன்றான். யானைகளைப் பிடித்தான். 

சிங்கங்களை அழித்தான். யாழிகள் என்ற இனம் அக்காலத்தில் இருந்தது. சிங்கமுகமும், தும்பிக்கையும் கொண்ட இந்த அதிசய மிருகங்களையும் கொன்றான். இதையெல்லாம் பார்த்த, புதுமனைவியர் தங்கள் கணவனின் வீரம் கண்டு அகம் மகிழ்ந்தனர். ஓரிடத்தில் இரண்டு மான்கள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. குந்தி, மாத்ரி, பாருங்கள். அந்த மான்களை இங்கிருந்தே அடிக்கிறேன், என்றான். தூரத்தில் அந்த இரண்டு மான்களும் தங்களுக்கு எமனாக வரும் அம்பைப் பற்றி அறியாமல் இன்ப சுகத்தில் மூழ்கியிருந்தன. ஆனால், அந்த அம்பு பாண்டுவுக்கும் சேர்த்து எமனாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது என்பதை அவனும், அவனது தேவியரும் அப்போது உணரவில்லை..!!!

(.அதனால் பாண்டுவுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாளை பார்ப்போம்..!!!)

ஸ்ரீராம ஜெயம்🙏

மகாபாரதம் பகுதி-13

🚩மகாபாரதம் பகுதி-13

( துர்வாச முனிவரிடம் குந்தி பெற்ற வரமும், அதனால்,கர்ணன் பிறந்த கதையும்!!!!)

குந்தி பணிவுடன் அமர்ந்தாள். அவளுக்கு கிடைத்தற்கரிய மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுத்தார் துர்வாசர். சாதாரண மந்திரமா அது? மகளே! தேவர்கள் யாராக இருந்தாலும், இந்த மந்திரத்தைக் கேட்ட மாத்திரத்தில் ஓடோடி வருவார்கள். அவர்களால் நீ கர்ப்பமடைவாய். தெய்வ மைந்தர்களைப் பெறுவாய். அவர்களது புகழ் இந்த உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். நீயும் தெய்வத்தாய் என்ற அந்தஸ்தைப் பெறுவாய், என்றார். 

குந்தி அப்போது தான் வயதுக்கு வந்திருந்தாள். தழதழவென்ற உருவம். அவளைப் பார்க்கும் ஆண்களின் கண்கள் பார்வையை விலக்கவே விலக்காது. அவளைத் திருமணம் செய்ய பல நாட்டு மன்னர்களும் துடித்துக் கொண்டிருந்தனர். வயதுக்கு வந்திருந்தாலும், விளையாட்டு புத்தி அந்தப் பெண்ணுக்கு இன்னும் மாறவில்லை. அது மட்டுமல்ல! மனித இனத்திடம் ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்யக்கூடாது எனச் சொல்கிறோமோ அதை செய்து பார்த்தால் என்னவென்று? காலையில் பள்ளிக்கு புறப்படும் பையனிடம் தாய், டேய்! டிபன் பாக்சிலே இன்று உனக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வச்சிருக்கேன். இங்கேயே திறந்து பார்க்காதே. ஸ்கூலில் போய் பார், என்பாள். 

பையன் பாதி வழி தான் போயிருப்பான். உடனே டிபன் பாக்சை திறந்து என்ன இருக்கிறது என பார்த்து விடுவான். குறிப்பாக குழந்தைகளிடம் இந்தக் குணம் அதிகமாகவே உண்டு. டிவியில் இன்ன நிகழ்ச்சியைப் பார்க்காதே என்றால், பெற்றவர்கள் அசரும் சமயத்தில், குழந்தை அந்த சானலைக் கண்டிப்பாக திருப்பிப் பார்ப்பான்.

குந்தியும் குழந்தை தானே! அவளுக்கும் ஆசை. இந்த முனிவர் ஏதோ வரம், குழந்தை என்றெல்லாம் சொன்னாரே! சூரியனையும். சந்திரனையும், புதனையும், சுக்கிரனையும், இந்திரனையும், வசுதேவர்களையும் யாரை அழைத்தாலும் வருவார் என்று சொன்னாரே! இன்று யாரையாவது பார்த்தால் என்ன? அப்படியெல்லாம் வரவா செய்வார்கள்! இவர் ஏதோ கதை சொல்லியிருக்கிறார், என்றவளாய், வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.

கண் கூசியது. உயரத்தில் சூரியன் சென்று கொண்டிருந்தான். இந்த சூரியனை அழைத்தால் என்ன! வருகிறானா என்று தான் பார்ப்போமே, என்றவளாய், சூரியனுக்குரிய மந்திரத்தை உபதேசித்தாள். அடுத்த கணமே தேஜஸான முகத்துடன் கொவ்வைப்பழமெனச் சிவந்த நிறத்தில் வந்து நின்றான் ஒரு இளைஞன். அவனைப் பார்த்ததும் குந்திக்கு நாணம். தலை குனிந்து நின்றாள். அவன் அவளது அருகில் வந்தான். அவளை ஏதும் கேட்கவில்லை. முகத்தை தன் ஒற்றை விரலால் தூக்கி அவளது கண்களின் அழகை ரசித்தான். அவள் சுதாரித்து ஒதுங்கினாள். இளைஞரே! திடீரென இங்கு வந்த தாங்கள் யார்? என் அனுமதியின்றி எப்படி என்னைத் தொடலாம்? பெண்கள் கற்புநெறியுள்ளவர்கள் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ? என்றாள் சிறு கோபத்துடன். 

அவன் கலகலவென சிரித்தான். அன்பே! நன்றாக இருக்கிறது உன் கூற்று. நீ தானே என்னை அழைத்தாய். அதிலும் உணர்வு களைத் தூண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை வரவழைத்து விட்டு, இப்போது ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்ய முடியும்? தாபத்தால் தவித்து இங்கு வந்தேன் கண்ணே! என்று சொல்லியபடியே, அவளது பதிலுக்கு காத்திராமல், ஆசையுடன் அணைத்தான். அவள் அவனது பிடியில் இருந்து விலகினாள்.

சூரிய பகவானே! இதென்ன தகாத செயல். முனிவர் சொன்னாரே என்பதற்காக ஏதோ விளையாட்டாக மந்திரத்தைச் சொன்னேன். அதை நிஜமென நம்பிக் கொண்டு, நீர் இப்படி அடாத செயலைச் செய்வது தேவர் குலத்துக்கு இழுக்கை விளைவிக்கும். போய் விடும், என்று சப்தமாகச் சொன்னாள் குந்தி. சூரியன் அவளை விடவில்லை. மீண்டும் அவளை அணைத்தான். அழகுப்பதுமையே! இம்மந்திரத்தைச் சொன்னவர் மந்திரத்திற்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும். அப்படி மறுத்தால் மந்திரத்தை உனக்கு யார் கற்றுத் தந்தார்களோ அவருக்கு சாபமிடுவேன். மேலும் மந்திரத்தை சொன்னவரின் குடும்பமும் நாசமாகி விடும். என்ன சொல்கிறாய்? என்றான். குந்தி அவனை கையெடுத்து வணங்கினாள். 

பகலவனே! என்னை மன்னித்து விடும். அறியாமல் செய்யும் தவறுக்கு இவ்வுலகில் மன்னிப்பு இல்லையென்றால், உலகத்தில் மனிதாபிமானம் செத்துப் போகும். நான் கன்னிப்பெண். உம்மால் நான் கர்ப்பமானால், இந்த உலகம் என்னைப் பழிக்கும். ஒளி மிகுந்த உம்மால் என் எதிர்காலம் இருண்டு போகும். என்னை மன்னித்து விட்டுவிடும், என்று காலில் விழுந்தாள் குந்தி. சூரியன் அவளிடம், பெண்ணே! கலங்காதே. தேவர்களின் உறவால் ஒரு பெண் களங்கப்படமாட்டாள். அவளது கற்புநெறி பாதிக்கப்படாது. குழந்தையைப் பெற்ற பிறகும் நீ கன்னியாகவே இருப்பாய். உன் அழகும் இரட்டிப்பாகும். சஞ்சலத்தை அகற்றி மனதை ஒருமைப்படுத்தி என்னோடு இன்பமாக சேர். உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் உன் வயிற்றில் பிறப்பான். அவனை உலகமே போற்றி வணங்கும், என்றான். குந்தி ஒருவாறு இதை ஏற்றுக் கொண்டாள். சூரியனின் ஆசைக்குப் பணிந்தாள். மலர்கள் தூவிய பஞ்சுமெத்தை படுக்கையை அங்கே வரவழைத்தான் சூரியன். அவளோடு இன்பமாக இருந்த பிறகு அவன் மறைந்தும் விட்டான். 

அந்த நேரமே அவளது வயிற்றில் கரு உற்பத்தியானது. வீட்டுக்குச் செல்லவில்லை அவள். நதிக்கரை ஒன்றில் இருந்த அரண்மனையில் இருந்த அவள் யாரையும் பார்ப்பதைத் தவிர்த்தாள். சில நாட்களிலேயே கரு முதிர்ந்து விட்டது. குந்தியின் வயிற்றில் இருந்து அழகு குழந்தை ஒன்று வந்தது. குந்தி ஆசையோடு தன் மகனை முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம்! குழந்தையின் காதுகளில் குண்டலம் ஒளிர்ந்தது. மார்பில் அழகான தங்கக்கவசம் இருந்தது. சூரிய மைந்தனல்லவா! பிறக்கும் போதே வீரச் சின்னங்களுடன் பிறந்திருக்கிறான்..!

( நாளை  பார்ப்போம்..!)

ஸ்ரீராம ஜெயம்🙏

மகாபாரதம் பகுதி-12

🚩மகாபாரதம் பகுதி-12

( திருதராஷ்டிரன்  காந்தாரி திருமணம்..!)

குழந்தைகள் மூவரும் இளமைப்பருவம் எய்தினர். திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்றாலும் கூட, மூத்தவனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அஸ்தினாபுரத்தின் மன்னர் பதவி வழங்கப்பட்டது. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார் பீஷ்மர். திருதராஷ்டிரனுக்காக காந்தார தேசத்துக்கு சென்றார் பெண் பார்த்தார் பீஷ்மர். அந்நாட்டு மன்னன் சுபலன். அவனுக்கு பீஷ்மர் குடும்பத்தில் பெண் கொடுக்க வேண்டும் என்றால் கசக்கவா செய்யும்? தன் மகள் காந்தாரியை அழைத்தான்.

அழகுப்பதுமையான அவள் தந்தை முன் வந்து நின்றாள். அம்மா! பீஷ்மர் வந்திருக்கிறார். தன் குலம் காக்க வந்த திருதராஷ்டிரனுக்கு உன்னைப் பெண் கேட்க. என்னம்மா சொல்கிறாய்? தந்தையே! இதெல்லாம் என்ன கேள்வி! பெற்றவர்களைப் பெருமைப்படுத்துபவளே பெண். நான் இதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது? என் நன்மை என்னை விட தங்கள் கையில் தான் அதிகம் இருக்கிறது, என்றாள் பணிவோடு காந்தாரி. குடும்பத்திற்கேற்ற குலவிளக்கு, என பாராட்டினார் பீஷ்மர். காந்தாரியின் அண்ணன் சகுனி அங்கே வந்தான். 

காந்தா! தந்தையார் உன்னிடம் சம்மதம் கேட்பதில் ஒரு உட்பொருள் இருக்கிறது. உனக்கு பார்த்துள்ளமாப்பிள்ளைக்கு பார்வை கிடையாது. அதையும் யோசித்துக் கொள்,. அண்ணா! இதில் யோசிக்க ஏதுமில்லை.

என் சகோதரனுக்கும், தந்தைக்கும் தெரியாதது என்ன? அவர் பார்வையில்லாதவராக இருந்தால் என்ன? நானும் இந்தக்கணமே என் பார்வையை இழந்து விடுகிறேன், என்றவள், வேகமாகத் தன் அறைக்குச் சென்று, பொன்னால் செய்யப்பட்ட ஒரு பட்டையை எடுத்து வந்தாள். அதைத் தன் கண்ணில் கட்டினாள். எனக்கு வரப்போகும் கணவரால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதே போல நானும் இவ்வுலகத்தைப் பார்க்க மாட்டேன், என சொல்லிவிட்டு குனிந்த தலையுடன் தோழிப் பெண்களின் துணையுடன் தன் அறைக்குப் போய் விட்டாள்.

மகாபாரதத்தை ஏன் படிக்கச் சொல்கிறோம் இதுபோன்ற நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தான். பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்கும் பெண்கள் இப்போது குறைந்து போய் விட்டார்கள். 

குறிப்பாக திருமண விஷயத்தில், பெற்றவர்கள் எடுக்கும் முடிவை பல பெண்கள் ஆமோதிப்பதில்லை. போதாக்குறைக்கு காதல் என்ற படு குழியில் வேறு விழுந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள். ஒரு பார்வையற்றவனை மணக்கக்கூட அந்தக்காலத்துப் பெண் சம்மதித்திருக்கிறாள். அதற்காக தன் சுகத்தையும் அழித்துக் கொண்டாள் என்று பாரதத்தில் படிக்கும் போது அக்காலப் பெண்களைப் பற்றி நம் நெஞ்சு மகிழ்ச்சியால் விம்முகிறது. இந்த தேசம் இத்தனை வன்முறைகளுக்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து நிற்கக்காரணம் இவளைப் போன்ற பெண்கள் செய்த தியாகத்தால் தான். பெண்கள் பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும். காந்தாரியின் சம்மதம் கிடைத்ததும் ஒரு நல்லநாள் பார்க்கப்பட்டது. 

அக்காலத்தில் மன்னர்கள் பல பெண்களை திருமணம் செய்ய அனுமதி இருந்தது. அதன்படி திருதராஷ்டிரனுக்கு பல மனைவிகள் ஏற்கனவே இருந்தாலும், காந்தாரியே பட்டத்தரசியானாள்.

இங்கே இப்படியிருக்க, சுரதை என்ற பெண்மணி துர்வாச முனிவருக்கு பல சேவைகள் செய்து வந்தாள். துர்வாசர் என்றாலே எல்லாருக்கும் தெரியும். அவர் பெரிய கோபக்காரர் என்று. சுரதை ராஜகுமாரி என்றாலும் கூட, அவர் மனம் கோணாமல் சேவை செய்து வந்தாள். இவள் சூரன் என்ற மன்னனின் மகள். அவளை குந்திபோஜன் என்ற மகாராஜா, தன் மகளாக சுவீகராம் எடுத்துக் கொண்டான். குந்திபோஜனின் அரண்மனைக்குத் தான் துர்வாசர் வந்திருந்தார். 

வந்தவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள மகளையே நியமித்திருந்தான் மன்னன். குந்திபோஜனின் மகளான பிறகு சுரதைக்கு அவளது சொந்தப் பெயர் மறைந்து விட்டது. அவளுக்கு குந்தி என்று பெயர் நிலைத்து விட்டது. இப்போது குந்தி சிறுமியாகத்தான் இருந்தாள். அவள் தன் தோழியரோடு அம்மானை ஆடுவாள். ஆற்றுக்குச் சென்று தோழியருடன் நீச்சலடித்து மகிழ்வாள். ஊஞ்சல் கட்டி ஆடுவாள். இப்படி விளையாட்டு பருவமுள்ள சிறுமி கோபக்கார துர்வாசருக்கு எப்படி சேவை செய்ய முடியும் என்று மன்னன் கொஞ்சமும் எண்ணி பார்க்கவில்லை. ஏதோ ஒரு தைரியத்தில் அந்த பணியை ஒப்படைத்துவிட்டான்.

குந்தியும் தன் விளையாட்டுகளையெல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, முனிவருக்கு தேவையான பணி விடையை அவரது மனம் கோணாமல் செய்து வந்தாள். துர்வாசருக்கு சந்தோஷம். எப்போதும் கடுகடுவென இருப்பவர்களைக் கூட பொறுமை மகிழ்ச்சிகரமாக்கி விடுகிறது. துர்வாசர் சமயத்தில் கோபபட்டாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் சிறுமி குந்தி சேவை செய்தாள். துர்வாசரே அசந்து விட்டார். அம்மா! குந்தி, நான் புறப்படுகிறேன். இங்கிருந்த காலத்தில் எனக்கு வேண்டிய பணிவிடைகளை நல்ல முறையில் செய்தாய். உன்னைப் போன்ற பொறுமையுள்ள பெண்ணை பூமியில் நான் இதுவரை பார்க்கவில்லை. உபசாரம் என்பது பெரியகலை. பிறர் மனம் கோணாமல் உபசரிப்பவர், சொர்க்கத்திற்கு செல்வார்கள். இந்த உபசரிப்புக்காக பரிசொன்று தரப்போகிறேன். நீ பெற்றுக் கொள், என்றாள். என்ன இருந்தாலும் குந்தி குழந்தை தானே! மேலும் அவர் கோபக்கார மகரிஷி. வேண்டாம் என்று சொல்லி அவர் சபித்து விட்டாலோ, தந்தையிடம் புகார் சொன்னாலோ என்னாவது? குந்தி பணிவுடன் கைகட்டி நின்றாள். அவளை அருகில் அழைத்த மகரிஷி, தன் மடியில் இருத்திக் கொண்டு, அம்மா! ஒரு ரகசிய மந்திரம் ஒன்றை உனக்கு கற்றுத் தரப்போகிறேன். இது யாருக்கும் கிடைக்காத அரிய பரிசு. கவனமாகக் கேள், என்றார்.

(அது என்னவென்று நாளை பார்ப்போம்)

ஸ்ரீராம ஜெயம்🙏

மகாபாரதம் பகுதி-11

🚩மகாபாரதம் பகுதி-11

( திருதிராஷ்டிரன் பாண்டு ,மற்றும் விதுரன் பிறப்பு...!)

அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருளில் பிறந்ததால் அது கரிய நிறமுடையதாகக் காணப்பட்டது. அந்தக் குழந்தை தான் வியாசன். பிறக்கும் போதே அவனுக்கு ஜடாமுடி இருந்தது. பிறக்கும் போதே அவன் என்னிடம் பேசினான். அம்மா! நீ மீண்டும் கற்பு நிலையை அடையப் போகிறாய். அப்படியிருக்க நான் உன்னோடு இருக்க இயலாது. நான் தவம் முதலானவை இயற்றிக் கொண்டு கானகங்களில் வசிப்பேன். நீ எப்போது என்னை நினைக்கிறாயோ அப்போது உன் முன் தோன்றுவேன். உனக்கு ஏதேனும் சிரமமான சூழ்நிலைகள் வந்தால், என்னை அழை! என்று சொல்லி விட்டு மறைந்து விட்டான். இன்று அவன் பெரியவனாக இருப்பான். அவனை நான் வரவழைக்கிறேன். அம்பிகா, அம்பாலிகாவுக்கு அவன் அத்தான் முறை ஆகிறது. முறை பிறழாமல், அரச தர்மத்தை மீறாமல், அவர்களை குழந்தை பெறச் செய்வோம், என்றாள் யோஜனகந்தி. 

பீஷ்மர் மகிழ்ந்தார். தாயே! இறைவன் யாரையும் கைவிடுவதில்லை. ஒரு பாதை அடைபட்டால், இன்னொரு பாதையைத் திறந்து விடுவான் என்பது இதுதான் போலும். கவலையை விடுங்கள்! நீங்கள் வியாச மாமுனிவரை அழையுங்கள். நம் கவலை நீங்கும், என்றார். யோஜனகந்தி அந்தக் கணமே, மகனே வியாசா, வா என் செல்வமே, என்றாள்மிகப்பெரிய ஜடாமுடி தரையில் புரள, கன்னங்கரிய நிறத்துடன், ஆஜானுபாகுவான ஒரு உருவம் அவள் முன்னால் வந்தது. என்னைப் பெற்றவளே, வணக்கம். 

உத்தரவிடுங்கள் தாயே! கட்டளைக்கு காத்திருக்கிறேன், என்று சாஷ்டாங்கமாக அன்னையின் பாதத்தில் விழுந்தது அந்த உருவம். ஆம்... வியாசர் வந்து விட்டார். மகனை அள்ளியணைத்து உச்சி முகர்ந்தாள் யோஜனகந்தி. மகனே! என் நிலையை நீ அறிவாய். முக்காலமும் உணர்ந்த உனக்கு, எல்லாம் தெரிந்த உனக்கு எதையும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாட்டுக்கு வாரிசு வேண்டும். பீஷ்மனால் வாரிசுகளைத் தர இயலாத நிலையில் நீ தான் அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப் பெற்று தர வேண்டும், என்றாள். 

தாய் சொல்லைத் தட்டவில்லை வியாசர். அம்பிகா, அம்பாலிகாவிடமும் நிலைமையை எடுத்துச் சொல்லி, வியாசருடன் மகிழ்ந்திருக்க சம்மதம் பெற்றாள் யோஜனகந்தி. அன்றிரவில், அம்பிகையும், அம்பாலிகாவும் பஞ்சணையில் படுத்திருக்க வியாசர் உள்ளே நுழைந்தார். அவ்வளவு நேரமும் அவரைப் பார்க்காத அந்தப் பெண்கள் அதிர்ந்து விட்டனர். வியாசர் என்றால் செக்கச்சிவந்த கோவைப்பழமாக இருப்பார் என நினைத்தோம். குறைந்த பட்சம் ஒரு இளமைத் தோற்றமாவது இருக்கும் என நினைத்தோம். இதென்ன ஜடாமுடியும், தாடியுமாய்... ஐயோ! சுந்தரன் ஒருவன் வருவான் என பார்த்தால், கோரத்தின் சொரூபமாய் ஒருவன் வருகிறானே. வியாசர் அம்பிகாவை நெருங்கினார். அவளை அள்ளி அணைத்தார். அவளோ அவரது உருவத்தைக் காண சகியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

வேண்டா வெறுப்பாக தன்னை அவரிடம் ஒப்படைத்தாள். அடுத்து அம்பாலிகா விடம் சென்றார் வியாசர். அவளோ பயத்தில் வியர்த்து விறுவிறுத்தாள். உடலில் உள்ள ரத்தமெல்லாம் வற்றி வெளுத்து விட்டது. 

அந்த நிமிடமே அவர்கள் குழந்தைகளைப் பெற்றனர். ரிஷிகளுக்கு உடனடியாக குழந்தைகளைக் கொடுக்கும் சக்தி உண்டு என்கின்றன நமது இதிகாசங்களும், புராணங்களும். கந்த புராணத்தில் காஷ்யப முனிவர் அசுரக் குழந்தைகளை உடனுக்குடன் உருவாக்கியதாக தகவல் இருக்கிறது. மகாபாரதத்தில் வியாசர் பிறந்ததும் அப்படியே. 

அதுபோல், இப்போதும் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். குழந்தைகளை ஆசையோடு எடுத்தார் வியாசர். அந்தக் குழந்தையை அசைக்கவே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. பத்தாயிரம் யானைகளை ஒரு சேர தூக்க முடியுமா? அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தது அந்தக் குழந்தை. அதன் கண்களைப் பார்த்த வியாசர், இது பார்வையில்லாமல் பிறந்திருக்கிறதே, பிறந்தும் பயனில்லையே. இந்தக் குழந்தையால் எப்படி நாடாள முடியும்? என்றவராய், 

அம்பாலிகாவின் குழந்தையைப் பார்த்தார். அதன் முகம் வெளுத்துப் போயிருந்தது. மற்றபடி குறைகள் ஏதுமில்லை. இதனால் ஆறுதலுடன் வெளியே வந்து, யோஜனகந்தியிடம் நடந்ததை விவரித்தார். பீஷ்மர் தன் தாயிடம், அம்மா! நாடாள நல்லதொரு புத்திரன் வேண்டும். இன்னொரு முறை முயற்சித்துப் பார்ப்போம், என்றார். மூத்தவள் அம்பிகாவுக்கு பார்வையற்ற பிள்ளை பிறந்துள்ளதால், நல்ல குழந்தைக்காக அவளையே அனுப்பி வைக்க எண்ணினர். அவளும் சம்மதிப்பது போல நடித்தாள். ஆனால், துறவியைப் போல் கோரமாய் தோற்றமளிக்கும் இவனுடன் இன்னொரு முறை செல்வதா என வெறுப்படைந்து, தன்னைப் போலவே அலங்கரித்து தன் தோழிப் பெண் மாதுரியை அனுப்பிவிட்டாள். 

இருளில் அவளை வியாசர் அடையாளம் காணவில்லை. ஒருவேளை அவருக்கே இது தெரிந்திருந்தாலும் கூட, எது விதிக்கப்பட்டதோ அதன்படியே நடந்து கொண்டார். அவள் அந்த மகானை அடைவதை தன் பாக்கியமாகக் கருதி, நல்ல மனநிலையுடன் தன்னை ஒப்படைத்தாள். அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பேரழகுடன் விளங்கினான். வியாசரைப் போல் கருப்பாக இல்லாமல், தாயைப்போல் சிவப்பாய் இருந்தான். தாம்பத்ய வாழ்க்கையில் மனமொத்த நிலை வேண்டும். சண்டை போட்டுக் கொண்டோ, குடித்து விட்டோ, விருப்பமில்லாமலோ, இருவரில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் கட்டாயத்துக்காகவோ உறவு கொண்டால், பிறக்கும் குழந்தைகள் உருவத்திலும், குணத்திலும் மாறுபாடு கொண்டதாக இருக்கும். கெட்ட குணமுடையவர்களை உருவாக்குவதே பெற்றவர்கள் தான்.வியாசர் விடை பெற்றார். மீண்டும் தன் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறு தாயிடம் வேண்டினார். முதல் குழந்தைக்கு திருதராஷ்டிரன், அடுத்த குழந்தைக்கு பாண்டு, மூன்றாவது குழந்தைக்கு விதுரன் என பெயர் சூட்டினர்...!

நாளை தொடரும்..!

  ஸ்ரீராம ஜெயம்🙏

மகாபாரதம் பகுதி-10

🚩மகாபாரதம்
         பகுதி-10

(பீஷ்மரின்
     போர்)

பரசுராமருக்கும், பீஷ்மருக்கும் பத்து நாட்கள் கடும் போர் நடந்தது. பீஷ்மரின் பாணங்களை பரசுராமரால் தாங்க முடியவில்லை. தசரத புத்திரன் ராமன் எப்படி அம்பு மழை பொழிவானோ அதுபோல் பொழிந்தாராம் பீஷ்மர். தன் தோல்வியை சிஷ்யனிடம் ஒப்புக்கொண்ட பரசுராமர் அங்கிருந்து சென்று விட்டார்.அம்பா அழுகையும், கோபமும் ஒன்றையொன்று மிஞ்ச, தனக்கிருந்த ஒரே ஆதரவையும் இழந்து விட்ட நிலையில், அங்கிருந்து காட்டிற்குச் சென்றாள். 

அவள் கடும் தவம் ஒன்றை இருந்தாள்.இறைவனிடம், கடவுளே! பீஷ்மன் என்னும் அபாரசக்தி கொண்ட ஒருவனால் நான் ஏமாற்றப்பட்டேன். அவனால் என் வாழ்க்கை அழிந்தது. நான் இருக்கும் இந்த தவத்தை ஏற்று அவனை என்றேனும் ஒருநாள் போரில் ஜெயிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும், என வேண்டினாள். பத்தாண்டுகள் உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் பாதம் மீது மற்றொரு பாதத்தை வைத்து கைகளை தலை மேல் கூப்பிய நிலையில் செய்த அவளது தவம் பலித்தது. அவளது மறைவுக்குப் பின் யாகசேனன் என்பவனுக்கு மகனாகப் பிறந்தாள். சிகண்டி என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டினான் யாகசேனன்.

இந்த நிலையில் அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம் செய்த விசித்திரவீரியன் அவர்களைக் கூடாத நாளே இல்லை என்றாலும், இரண்டு பெண்களுக்கும் கருத்தரிக்கவே இல்லை. அது மட்டுமல்ல! பெண் இன்பத்தை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெறும் க்ஷயரோக நோயால் அவன் இறந்தே போனான். தாய் யோஜனகந்தி துக்கத்தில் ஆழ்ந்தாள். சந்திரவம்சம் இத்தோடு தொலைந்து விட்டதே, என்ன செய்யலாம்? என்ற ஏக்கத்தில் பீஷ்மரை அழைத்தாள். பீஷ்மா! நான் சொல்வதைக் கேள். நீ உன் தந்தைக்குகொடுத்த வாக்குறுதியை நாட்டின் நலன் கருதி கைவிட வேண்டிய நிலைமை இப்போது வந்து விட்டது. மேலும், தாயின் அனுமதியுடன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதில் தவறேதும் இல்லை.

தேவமுறை என்ற தர்மத்தின்படி, சகோதரன் குழந்தையின்றி இறந்து போனால், நாட்டை ஆளும் பொருட்டு, அவனது இன்னொரு சகோதரன் அப்பெண்ணைக் கூடி குழந்தை பெறலாம். அதன்படி நீ அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப் பெறு. நாட்டைக் காப்பாற்று. இது என் உத்தரவு, என்றாள். இடியோசை கேட்ட நாகம் போல் நடுங்கி விட்டார் பீஷ்மர்.அம்மா! இது கொடுமை அல்லவா? தம்பியின் மனைவிகளை நான் தொடுவதாவது? மேலும், எந்த நிலையிலும் என் பிரம்மச்சரிய விரதத்தை கைவிடுவதில்லை என்ற சத்தியத்தை உங்கள் தந்தைக்கு செய்து கொடுத்தேன். என் தந்தையிடமும் வாக்கு கொடுத்தேன். வேண்டாம் தாயே. ஆனால், இன்னொரு யோசனை இருக்கிறது. அதை பரிசீலியுங்கள் தாயே! என்றார்.

யோஜனகந்தி அவசர அவசரமாக, சொல்! பீஷ்மா, எனக்கு பேரக்குழந்தைகள் பிறக்க வழியிருக்கிறதா? சந்திரவம்சம் அழியாமல் இருக்க மார்க்கம் இருக்கிறதா? நாட்டை ஆள ஒரு புத்திரன் பிறக்கப் போகிறானா? சொல்...சொல்...ஏக்கமும் ஆவலும் என்னை பதட்டமடையச் செய்கின்றன, என்றாள்.தாயே! பரசுராமர் அரசகுலத்தின் மீது கோபம் கொண்டு, எல்லா அரசர்களையும் வேருடன் கிள்ளி எறிந்து விட்ட காலம் ஒன்று இருந்ததைத் தாங்கள் அறிவீர்கள். அப்போது கணவனை இழந்த அரசிகள் எல்லோரும் ஒன்றுகூடி, முனிவர்கள் மூலமாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இது சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. அந்த விதியின் படி அம்பிகா, அம்பாலிகாவைக் குழந்தை பெறச் செய்யலாம், என்றதும், யோஜனகந்தி ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினாள். 

பல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்வில் நடந்த அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள்.அப்போது யோஜனகந்தி மிக மிக அழகாக இருப்பாள். அவளது தொழில் படகோட்டுவது தானே! ஒருநாள் பராசரர் என்ற முனிவர் யமுனைக்கரைக்கு வந்தார். அந்த நேரத்தில் உலகம் அதுவரை கண்டிராத ஒரு அதிர்ஷ்டகரமான கிரகநிலை ஏற்பட்டது.

பராசரர் இதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அந்த கிரகநிலை மாறி விடும். அதற்குள் இந்த பூமியில் ஒரு குழந்தை பிறந்தால், அது உலகம் புகழும்படி வாழும். உலகத்துக்கு அரிய பல கருத்துக்களைத் தரும் என்று அவர் மனதில் பட்டது.யோஜனகந்தியின் படகில் ஏறினார். ஆற்றின் நடுவே சென்ற போது, பெண்ணே! உலகம் இதுவரை கண்டிராத ஒரு அதிசய கிரகநிலை ஏற்பட்டிருக்கிறது. 

இந்நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அதனால் இந்த உலகமே பலனடையும். இங்கே நீயும், நானும் மட்டுமே இருக்கிறோம். நான் உன்னோடு கூடுகிறேன். நீ அந்தக் குழந்தையைப் பெறும் பாக்கியவதி ஆகிவிடு. குழந்தை பிறந்ததும் நீ மீண்டும் கன்னித்தன்மை உடையவளாகி விடுவாய். இது சத்தியம், என்றார்.யோஜனகந்தி கோபப்பட்டாள்.முனிவரே! உம் தரத்துக்கும் தகுதிக்கும் இந்த வார்த்தைகள் அழகா! கல்வியறிவற்றவள் என நினைத்து தானே என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்! நீர் சொல்வதை நம்ப முடியவில்லை, என்றாள்.நேரம் செல்லச்செல்ல பராசரர் பதட்டப்பட்டார். தனது நிலையில் உறுதியாக நின்றார்.கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையுமல்லவா? யோஜனகந்தியும் கரைந்து விட்டாள். தன் உடலில் இருக்கும் மீன்வாடை அவரை நெருங்க விடாது என அவரிடம் கூறினாள். அந்த மணத்தை அப்படியே மாற்றிய பராசரர் அவளது உடலுக்கு சந்தன மணத்தைக் கொடுத்தார். யோஜனா மகிழ்ந்து போனாள். அதேநேரம், பகிரங்கமாக நட்ட நடு ஆற்றில் உறவு கொள்வது எப்படி என வெட்கப்பட்டாள்.அப்போது பராசரர் தன் சக்தியால் அந்த இடத்தில் இருள் கவியச் செய்தார். அந்த நிலையில் அவர்கள் கூடினர். அவள் கர்ப்பமானாள்.

(பிறக்கும் குழந்தை
யார் என்பதை நாளை 
     பார்ப்போம்.!)

ஸ்ரீராம ஜெயம்🙏

மகாபாரதம் பகுதி-9

🚩மகாபாரதம்  பகுதி-9

(அம்பா!
      பீஷ்மர்!)

அம்பா இப்படி சொன்னதும் பீஷ்மர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.மகளே! காதலை அழிக்கவல்லவர் யார்? காதலைக் கெடுப்பவர்கள் நன்றாக வாழ முடியாது. நீ விரும்பியபடி சாளுவதேசம் செல். உன் காதலனை மணந்து கொண்டு சந்தோஷமாக இரு, என வாழ்த்தி, தக்க படைபலத்துடன் அவளை சாளுவ தேசத்துக்கு அனுப்பி வைத்தார்.அம்பா மிகுந்த மகிழ்ச்சியுடன் சாளுவதேசத்துக்கு சென்றாள். அரண்மனைக்குச் சென்று பிரம்மதத்தனை அப்படியே அள்ளி அணைத்தாள்.மன்னவரே! பீஷ்மரிடம் பிடிபட்டவர்கள் தப்பித்த வரலாறு உண்டா? நான் உங்கள் மீது கொண்ட காதலை அவரிடம் தெரிவித்தேன். 

அவரது தம்பியை மணந்து நிம்மதியாக வாழ முடியாது. மனதில் ஒருவனையும், வீட்டில் ஒருவனையும் சுமந்து கொண்டு வாழ முடியாது என்றேன். என் கருத்தை பீஷ்மர் ஏற்றார். என்னை விடுவித்து விட்டார். பிரம்மதத்தரே! இனி நம்மை பிரிக்க யாருமில்லை. நம் மணநாளைக் குறியுங்கள், என படபடவென பொரிந்தாள். சீ மானம் கெட்டவளே! வெளியே போ, என அரண்மனையே அதிரும் வகையில் கத்தினான் பிரம்மதத்தன். அம்பா அதிர்ந்தாள். ஏ அம்பா! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய். 

அந்த பீஷ்மன் தன் தம்பி விசித்திர வீரியனுக்காக உன்னை அழைத்துச் சென்றான். அவன் உன்னிடம் உல்லாசமாக இருந்திருப்பான். அங்கே இருந்துவிட்டு இங்கே வர உனக்கு எப்படி தைரியம் வந்தது? இங்கிருந்து ஓடிவிடு. உன்னை நான் இனியும் திருமணம் செய்ய மாட்டேன். ஏற்கனவே ஒருவனால் கடத்தப்பட்ட உன்னை திருமணம் செய்துகொள்ள நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல, என்று வாய்க்கு வந்தபடி பேசினான்.மனம் உடைந்துபோன அம்பா, தலைகுனிந்து அவமானப்பட்டு அங்கிருந்து அஸ்தினாபுரத்திற்கே திரும்பினாள்.

பீஷ்மரின் முன்னால் சென்ற அவள் நடந்த சம்பவத்தை அழுதபடியே விவரித்தாள். பீஷ்மர் அவளுக்கு ஆறுதல் கூறினார்.அம்பா பீஷ்மரிடம், அன்பரே! உங்களால் கடத்தி வரப்பட்டதால்தான் என்னை திருமணம் செய்ய முடியாது என பிரம்மதத்தன் சொல்லி விட்டான். உங்கள் தம்பியை திருமணம் செய்தால் நீ பிரம்மதத்தனுடன் எத்தனை நாள் இருந்தாய் என அவர் என்னிடம் கேள்வி கேட்பார். இந்த நிலையில் நான் உங்களை மட்டுமே நம்பியுள்ளேன். நீங்கள்தான் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் என் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனக்கு நல்ல பதில் சொல்லுங்கள், என்றாள்.

பீஷ்மர் தன் நிலைமையை அவளிடம் விளக்கி சொன்னார். தனது தந்தைக்காக பிரம்மச்சரிய விரதம் ஏற்றிருப்பதையும், இந்தப்பிறவியில் தனக்கு திருமணம் என்ற ஒன்று இல்லை என்றும் அழுத்தமாக சொன்னார். அம்பா பிடிவாதம் செய்தாள்.இருந்தாலும், அவளது வாதம் எடுபடாததால் தந்தை காசிராஜனின் வீட்டிற்கே திரும்பிவிட்டாள். மகளின் நிலைமையைக் கண்டு காசிராஜன் நொந்துபோனான். 

அவளுக்கு ஒரு ஆலோசனை சொன்னான்.மகளே! பீஷ்மர் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருப்பது உண்மையே. ஆனால் அதை உடைக்கும் சக்தி இந்த உலகில் ஒரே ஒருவருக்குத்தான் இருக்கிறது. அவர்தான் பரசுராமர். பரசுராமரிடம் பீஷ்மர் வில்வித்தை கற்றார். குருவின் சொல்லை சீடனால் மறுக்கமுடியாது. மேலும் பரசுராமர் அரசகுலத்திற்கு எதிரானவர். அரசர்கள் ஏதேனும் தவறுசெய்தால் அவர்களை கொல்லவும் தயங்கமாட்டார். நீ பரசுராமரிடம் செல். அவரது பாதங்களில் விழுந்து கதறி அழு. உன் நிலைமையை எடுத்துச்சொல். நிச்சயமாக அவர் உனக்கு உதவுவார். சென்று வா, எனச்சொல்லி வழியனுப்பி வைத்தான்.

அம்பா பரசுராமரின் ஆஸ்ரமத்திற்கு சென்றாள். ஒரு அபலைப்பெண் தன் ஆதரவைத்தேடி வந்திருப்பதை அறிந்த பரசுராமர் அவளிடம் நடந்த விஷயங்களை கேட்டறிந்தார். நிச்சயமாக அவளுக்கு உதவுவதாக வாக்களித்தார். அவளை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தார்.பரசுராமர் தன்னை பார்க்க வருகிறார் என்பதை அறிந்த உடனேயே பீஷ்மர் அவர் வரும் வழியிலேயே சென்று வரவேற்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குருவைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரை வெகுவாக விசாரித்தார்.சீடனே! இந்த அம்பாவுக்காக பரிந்துபேச நான் வந்திருக்கிறேன். இவளை நீ திருமணம் செய்ய முடியாது என சொல்வது எந்த விதத்திலும் நியாயம் அல்ல. 

எந்த ஆண் மகனால் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாளோ, அவனே அவளை ஏற்றுக்கொள்வதுதான் தர்மம். என் சீடனான நீ, தர்மத்தை மீறி நடக்கமாட்டாய் என நம்புகிறேன். உன் குரு என்ற முறையில் அம்பாவை திருமணம் செய்துகொள்ள கட்டளையிடுகிறேன். திருமணத்திற்கு ஏற்பாடு செய். நானே இருந்து நடத்தி வைக்கிறேன், என்றார்.குருவின் இந்த வார்த்தைகள் பீஷ்மரின் காதுகளில் அம்பெனப் பாய்ந்தது. அவர், குருவே! என் தந்தைக்காக நான் பிரம்மச்சரிய விரதம் பூண்டுள்ளேன். எனக்கு திருமணம் என்பதே கிடையாது. ஒரு வேளை நான் கங்கா மாதாவின் வயிற்றில் இன்னொரு முறை பிறந்தால் அது நடக்கலாம். நடக்காத ஒன்றுக்காக தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள், என்று பணிவோடு சொன்னார்.

பரசுராமருக்கு கோபம் வந்துவிட்டது. கண்களில் அனல் பறந்தது.உனக்கு நான் குருவாக இருந்து சொல்லிக்கொடுத்தது அனைத்தும் இந்த நிமிடத்தோடு வீணாகப் போயிற்று. குரு சொல் கேளாதவன் மனிதனே அல்ல. கடைசியாக சொல்கிறேன். இவளை மணக்க முடியுமா? முடியாதா? என்றார்.பீஷ்மர் மறுத்துவிட்டார்.

அப்படியானால் இந்த பிரச்னைக்கு போர் ஒன்றுதான் தீர்வு. நான் உன்மீது போர் தொடுக்கப் போகிறேன். நீ தோற்றுப்போனால் நான் சொன்னதை ஏற்கவேண்டும், என்று சொல்லியபடியே வில்லையும் அம்பையும் எடுத்தார் பரசுராமர்.!

(பீஷ்மர் என்ன செய்கிறார் என்பதை
நாளை சொல்கிறேன்.)

ஸ்ரீராம ஜெயம்🙏

மகாபாரதம் பகுதி-8

🚩மகாபாரதம்  ( பகுதி-8)

(அம்பா, அம்பிகா,
       அம்பாலிகா,)
         (சுயம்வரம்)

(நேற்றைய 
          தொடர்ச்சி)

நாங்கள் அந்த மீனை தற்செயலாக அறுத்தோம். அதன் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். சேதி வம்சத்து மன்னன் வசு அந்த ஆண் குழந்தையைப் பெற்றுக்கொண்டான். அந்த குழந்தைக்கு மீனவன் என்று பெயர் வைத்தான். பெண் குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டான். அவளுக்கு யோஜனகந்தி என பெயரிட்டு நான் வளர்த்தேன். அவள்தான் இப்போது உங்களுக்கு மனைவியாகப் போகிறவள். இவளைமீனவப் பெண் என நினைக்க வேண்டாம். உங்களுக்கே உரித்தான அரசர்குலத்தில்தான் பிறந்தவள். 

எனவே இவளை நீங்கள் தயக்கமில்லாமல் திருமணம் செய்துகொள்ளலாம். இன்று மிகச்சிறந்த முகூர்த்தநாள். இந்த நாளிலேயே இவளை ஏற்றுக்கொள்ளுங்கள், என செம்படவர் தலைவன் சொல்லி முடித்தான். அன்றைய தினமே சந்தனுவுக்கும் யோஜனகந்திக்கும் திருமணம் நடந்தது. தந்தையார் புதிய மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தியதால், அரசபதவியை பீஷ்மர் ஏற்றுக்கொண்டார். அவரது அரசாட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். சில ஆண்டுகளில் யோஜனகந்திக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இருவருமே சூரியனையும் சந்திரனையும் போன்று ஒளிமிக்கவர்களாக திகழ்ந்தனர். ஒருவனுக்கு சித்ராங்கதன் என்றும், மற்றொருவனுக்கு விசித்திர வீரியன் என்றும் பெயரிட்டனர்.

தன் சித்தி பெற்றெடுத்த புத்திரர்களை தன் உடன்பிறந்தவர்களாக கருதி பீஷ்மர் அவர்களுக்கு போதிய கல்வியறிவை புகட்டினார்.இதனிடையே சந்தனு இறந்து போனான். சித்தி பெற்றெடுத்தமக்களில் மூத்தவன் சித்ராங்கதனுக்கு பீஷ்மர் முடிசூட்டினார். சித்ராங்கதன் மானிட பிறப்பாக பூமியில் இருந்தாலும் இதே பெயரைக் கொண்ட கந்தர்வன் ஒருவன் வானலோகத்தில் சுற்றிவந்தான். அவனுக்கு தன் பெயரைக்கொண்ட சித்ராங்கதன் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தான். ஆனால் பீஷ்மர் மீதிருந்த பயத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. 

ஒருமுறை மிகவும் தந்திரமாக அரண்மனைக்குள் சென்று சித்ராங்கதனைக் கொன்றுவிட்டான்.மகன் இறந்த துக்கத்தில் யோஜனகந்தி மிகவும் துயருற்றாள். வேறு வழியின்றி இரண்டாவது தம்பி விசித்திரவீரியனுக்கு முடிசூட்டப்பட்டது. இந்த நேரத்தில் தங்கள் வம்சத்தைப் பெருக்கிடும் வகையில் விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்துவைக்க பீஷ்மர் எண்ணினார். அப்போது காசியை ஆண்ட மன்னன் காசிராஜன் தன் மூன்று புதல்விகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகியோருக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தான். இதற்காக சுயம்வர அறிவிப்பையும் வெளியிட்டிருந்தான். தம்பியையும் அழைத்துக்கொண்டு பீஷ்மர் சுயம்வரத்திற்கு சென்றார். 

நீண்ட தூரம் பயணம் செய்ததால் பீஷ்மர் கங்கைக்கரையில் மிகுந்த களைப்புடன் தங்கினார். அப்போது பீஷ்மரின் தாய் கங்காதேவி நதியிலிருந்து எழுந்து வந்தாள். தன் மகனின் களைப்பைப் போக்கும் வகையில் தண்ணீர் துளிகளை அவர்மேல் தெளித்தாள். பீஷ்மர் தாயை வணங்கிவிட்டு காசி போய் சேர்ந்தார். காசி மன்னனுக்கு பீஷ்மரின் திறமை பற்றி நன்றாக தெரியும். எனவே மற்ற மன்னர்களை வரவேற்றதைவிட பீஷ்மருக்கு தனி மரியாதை கொடுத்து வரவேற்றான்.அங்கு வந்திருந்த மற்ற மன்னர்களுக்கு மனதில் சந்தேகம் ஏற்பட்டது.

காலம் முழுவதும் திருமணமே செய்யமாட்டேன் என விரதம் பூண்டிருந்த பீஷ்மருக்கு இங்கு என்ன வேலை? இங்கு சுயவரமல்லவா நடக்கிறது என்பதே அந்த சந்தேகம்.ஒவ்வொருவரும் பீஷ்மரின் பராக்கிரமம் பற்றி பேசியது மூன்று சகோதரிகளின் காதிலும் விழுந்தது. அவர்களில் அம்பா நீங்கலாக மற்ற இரு சகோதரிகளும் பீஷ்மரையே திருமணம் செய்துகொண்டால் என்ன என எண்ணினர். ஆனால் பீஷ்மருக்கு வயதாகிவிட்டது என்ற விஷயம் அவர்களுக்கு தெரியாது. சுயம்வர மண்டபத்திற்கு மாலையுடன் வந்த அவர்கள் பீஷ்மரைத் தேடினர். 

பீஷ்மர் இவர்தான் என அடையாளம் காட்டப்பட்டதும் அவர் அருகில் சென்று பார்த்தபோது தாடி, மீசையுடன் வயதாகிப் போயிருந்ததைப் பார்த்து பின் தங்கினார்கள். விசித்திரவீரியனை அவர்கள் விரும்பவில்லை.அவர்கள் தயங்குவதைக் கண்டு பீஷ்மர் ஓரளவு யூகித்துக்கொண்டார். உடனே மூன்று பெண்களையும் அரண்மனைக்கு வெளியே இழுத்துவந்தார். மற்ற நாட்டு மன்னர்களெல்லாம் கொதித்து எழுந்தனர். யாரையும் பிடிக்காமல் இந்த பெண்கள் பின்வாங்குகின்றனர். 

இந்த சமயத்தில் பீஷ்மர் அவர்களை இழுத்துச் செல்கிறார் என்றால் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என பொருமினர்.பீஷ்மரை பின்தொடர்ந்து எல்லா மன்னர்களும் விரட்டினர்.வில்வித்தையில் கைதேர்ந்தவரான பீஷ்மர் பாணங்களால் அந்த மன்னர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினார். பிறகு அஸ்தினாபுரம் வந்துசேர்ந்தார். அந்த பெண்களில் ஒருத்தியான அம்பா கண்ணீருடன் காணப்பட்டாள்.மகளே! நீ எதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? உன் மற்ற சகோதரிகளிடம் இதுபோன்ற வருத்தம் காணப்படவில்லையே! என் தம்பி விசித்திரவீரியனுக்காகவே நான் சுயம்வர மண்டபத்திற்கு வந்தேன். 

அவனைத் திருமணம் செய்துகொள்ள உனக்கு சம்மதம்தானே! என்றார்.அவள் கண்ணீரைப் பெருக்கி, நான் தங்களின் சகோதரனை திருமணம் செய்துகொள்ள இயலாது. ஏனென்றால் நான் சாளுவ தேசத்து அரசன் பிரம்மதத்தனை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தை என் தந்தை தகர்த்துவிட்டார். அவருடைய கட்டாயத்துக்காகவே சுயம்வர மண்டபத்திற்கு வந்தேன். ஆனால் நீங்களோ என்னைக் கடத்தி வந்துவிட்டீர்கள். என்னை அவரிடமே அனுப்பி வைத்துவிடுவீர்களா? என கேட்டாள்...

பீஷ்மர் என்ன சொல்கிறார் 
என்பதை! (நாளை சொல்கிறேன்...!)

ஸ்ரீராம ஜெயம்🙏

காஞ்சிபுரம் இட்லி

Today's special காஞ்சிபுரம் இட்லி (குடலை) அடியேன் கைவண்ணத்தில்..

உங்களுக்காக Recipe..செய்முறை :

இதற்கு பெயர் காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி - இது காஞ்சிபுரம் கோவிலில் செய்து வரதனுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.

குடலை - சின்ன சின்ன மூங்கில் கூடைகளில் மந்தாரை இலைகள் மற்றும் வாழை இலைகள் வைத்து வார்ப்பார்கள் .

எந்த அளவு மாவு கெட்டியாக இருக்குமோ அந்த அளவு  ரொம்ப நல்லா இருக்கும்.

தேவையானவை: ( அளவுக்காக -  உங்களுக்கு தேவைக்கு ஏற்ப செய்து கொள்ளவும் )

அரிசி 1 கப்

உளுத்தம் பருப்பு 3/4 கப் ( சமயத்தில் அரிசிக்கு சமமாகவும் உளுந்து போடுவோம் )

மிளகு 1 டீ ஸ்பூன் உடைக்கவும்

சீரகம் 1 டீ ஸ்பூன் உடைக்கவும்

சுக்கு பொடி 1/2 டீ ஸ்பூன்

பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்

நெய் மற்றும்  உப்பு தேவைக்கு ஏற்ப & கறிவேப்பிலை

எப்படி செய்வது பார்ப்போம்

அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும், 1 மணி நேரம் ஊறினால் போதும். #கொஞ்சம்_கரகரப்பாக அரைக்கணும்.fb:sryasdmurali

இந்த குடல இட்லிக்கு அரைப்பது தான் ரொம்ப முக்கியம்.  உப்பு போட்டு கரைத்து அப்படியே ஒரு

12 மணிநேரம் வைக்கணும்.  மறுநாள் காலை, நெய்யை உருக்கி மாவில் விட்டு நன்கு கலக்கவும்.

மேலும் அதில் உடைத்த மிளகு, சீரகம், சுக்கு பொடி, பெருங்காயப்பொடி மட்டும் கறிவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும். மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.

பெரிய எவர்சில்வர் (அவரவர்கள் வசதிக்குஏற்ப) குக்கரில் சிறிய  பெரிய round size படி மரக்கா மாதிரியான பாத்திரம் எடுத்து கொள்ளவும்.

அதில் நெய் தடவிய மந்தாரை இலை அல்லது வாழை இலை வைத்து -  
Size - 70% அளவுக்கு பாத்திரத்தில் ஊற்றவும் மாவை அதில் ஊற்றவும்.

குக்கரில் சிறிய தட்டு வைத்து இந்த பாத்திரத்தை வைக்கவும்.

அல்லது பெரிய அளவிலான பாத்திரங்களை (professional) வைத்து செய்யும் போது உள்ளே அதிகமான குடலை வைக்க முடியும்.

நம் இல்லங்களில்  செய்யும் போது குக்கரில் ஒன்று இரண்டு பாத்திரங்களையே வைக்க முடியும்,

அதில் தண்ணீர் விடுவது தான் முக்கியம் பாத்திரத்தில்  மாவு எங்கு உள்ளதோ அந்த அளவுக்கு இருக்கும்படி பார்த்து கொள்ளவும்,  (remove cooker wait )

அடுப்பு எரியும் தன்மையை பொருத்து 45 முதல் 60 நிமிடங்கள் வேக வைத்தல் வேண்டும்.

பதம் பார்க்க ஒரு கம்பியை எடுத்து இட்லியில் சொருகி பார்க்க ஒட்டாமல் வந்தால் நன்றாக வந்துள்ளது என அறியவும்.

சுவையான 'காஞ்சிபுரம் இட்லி' தயார் .

தொட்டுக்கொள்ள ஏதும் வேண்டாம் வெறுமனவே சாப்பிடலாம் நல்லா இருக்கும்.  வேண்டுமானால் தோசைமிளகாய் பொடி நல்லா இருக்கும்.இட்லி மேல நல்லெண்ணெய் விட்டு கொண்டும் சாப்பிடலாம்.fb:sryasdmurali

உங்கள் Sryas D. Murali Battachariar