Monday, March 20, 2023

நாங்குநேரி

 நாங்குநேரி

===========

விடியற் காலையிலே திருநெல்வேலிக்கு வந்து விட்டது எங்களது ரயில்.

ஜங்ஷன் அருகிலேயே தங்குவதற்கு ஹோட்டலை முன்பதிவு செய்து இருந்தேன்.

காலையில் உள்ளே நுழைந்ததும், உற்சாகமா வரவேற்பு. லிஃப்ட்டில் நுழையும் போது, மங்கல இசை ஒலித்துக் கொண்டு இருந்தது. அயோத்தி ஹால் என்று ஹோட்டலின் விளம்பரம். ஹோட்டலின் பெயரே ஜானகி ராம். என்ன ஒரு பொருத்தம்...

அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் நாளிதழுடன் நெல்லையின் புகழ் பெற்ற அல்வாவை கையில் கொடுத்து வரவேற்றார் பணியாளர்.

காலை உணவு இலவசம். அற்புதமான சிற்றுண்டி. 

வாடகைக் கார் வந்து விட்டது. நாங்கள் முதலில் செல்ல இருந்த திருத்தலம் நாங்குநேரி. அருமையான சாலை. 

108 திவ்ய தேசங்களில் ஒன்று நாங்குநேரி. பார்க்காமல் விடுபட்ட திவ்ய தேசம். 

சிறிய ஊர். கோவில் அருகே இருந்த வீதி அழகாக இருந்தது. முதலில் இருந்த வீட்டை பார்த்ததும் அருகே சென்று புகைப்படம் எடுத்தேன்.

கோவிலின் உள்ளே நுழைந்தோம்.

ஸ்வயம் வியக்த ஷேத்திரங்கள் எட்டு. அவற்றில் நாங்குநேரியும் ஒன்று. திருச்சிரீவர மங்கை, வானமாமலை என்றும் அழைக்கப்படுகிறது.

பெருமாள் ஸ்ரீ வான மாமலை ராஜ தர்பாருடன் வைகுந்தத்தில் இருப்பதைப் போல காட்சி அளிக்கிறார்.

ஆதி சேஷன் குடை ஏந்த, ஊர்வசியும், திலோத்தமை இருவரும் சாமரம் வீச, பிருகு முனிவர், மார்கண்டேய முனிவரும் அருகே நிற்க, அவர்களது புதல்வியார் ஸ்ரீ தேவி, பூதேவி அருகில் இருக்க, சூரிய சந்திரர்கள் வாழ்த்த (வெளியே இருந்து தரிசனம் செய்யும் நமக்கு இவர்கள் இருவரையும் பார்க்க இயலாது), வலது கால் தொங்கவிட்டு, இடது கால் மடித்து, தோத்தாத்திரி நாதன் நமக்கு அமர்ந்த கோலத்தில் அளுள் பாலிக்கிறார்.

தினமும் பெருமாளுக்கு எண்ணெய் காப்பு தான். அதை தனியாக கிணற்றில் சேமித்து வைத்து உள்ளனர்.

தினமும் எண்ணெய் குளியல் என்பதால் தளிகையில் மிளகாய் கிடையாது. மிளகு மட்டுமே..

ஈசன் கோவில்களில் உள்ள விநாயகப் பெருமான் போல, வைணவத் திருத்தலங்களில் விஷ்வக்சேனர். இங்கு தனி சன்னதியில். கருடாழ்வார் வித்தியாசமாக, இறக்கைகள் இல்லாமல் காட்சி தருகிறார்.

இங்கு சடாரியில் நம்மாழ்வார் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 

இங்கு 1450 வருடங்கள் பழமையான வானமாமலை ஜீயரின் திரு மடம் உள்ளது. முதல் ஜீயர் பொன்னடிக்கா ஜீயர் சுவாமிகள் ஒரு முறை திருமலைக்கு எழுந்தருளினார். அங்குள்ளவர்களின் கனவிலே தாயார் தோன்றி, உற்சவர் நாங்குநேரி நாச்சியார் என்றும், வந்துள்ள ஜீயர் சுவாமிகளுடன் அனுப்பி வைக்க கூறினார். அவ்வாறே, ஸ்ரீ வரமங்கை நாச்சியார் நாங்குநேரிக்கு வந்து சேர்ந்தார்.

நந்தவனத்திலே அழகான மரங்களும், பூக்களும் நம்மை மகிழ்விக்கின்றன. பலா மரத்தில் இருக்கும் பலாப் பழம் நமக்கு உற்சாகத்தை தருகிறது.

தல விருட்சம் மாமரம். வைகானஸ ஆகமம். இங்கு உள்ள தீர்த்தம் சேற்றுத் தாமரை தீர்த்தம். 

தரிசனம் முடிந்து திருக்குறுங்குடி விரைந்தோம்.

நான்கு நாட்கள் நெல்லையை சுற்றி உள்ள அழகு கோவில்கள் தரிசனம்.

அன்று வெள்ளிக்கிழமை. தங்கி இருந்த ஜானகி ராம் ஹோட்டலின் உணவகத்தில் மதிய உணவு..

சார்... இந்தாங்க சொதி சாப்பிடுங்க... என்று பரிமாறிய போது, அதன் சுவையில் சொக்கிப் போனேன். கடையில் வைத்திருந்த தேங்காய் பால் கலந்து செய்த முறுக்கில் மயங்கிப் போனேன்.

சங்கர்

சென்னை

No comments:

Post a Comment