புள்ளிமான் வேட்டை -58
இரண்டு மூன்று மாதங்களில் தாரிணியும், ஹரீஷும் நன்றாக பழக ஆரம்பித்தார்கள்.
சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஹரீஷ் வீட்டுக்கு சென்ற தாரிணி சுலோச்சனாவுக்கு துணையாக இருந்து சமையல் மற்றும் இதர வேலைகளை பழகிக்கொண்டாள்.நடுவில் ஒரு தரம் தாரிணி, கோயம்புத்தூர் போய் அம்மா, தம்பி, ம்ருதுளாவை பார்த்து விட்டு வந்தாள். சுலோச்சனா கிருஷ்ணனை தொடர்பு கொண்டு" கிருஷ்ணா. ரெண்டு பேருக்கும் சீக்ரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடம்ன்னு பாக்கறேன்.ஆத்து பக்கத்துல இருக்க ஜோசியரை பாத்து நாள் குறிச்சிண்டு வந்துடறேன். நேக்கு சொந்த பந்தம் அதிகம் கிடையாது. எங்க அக்கா ஒருத்தி மதுரையில் இருக்கா. அவளுக்கு வயசு 80க்கு மேல ஆயிடுத்து. அவ வருவான்னு தெரியல. அவ பசங்க ரெண்டு பேரும் அமெரிக்காவில இருக்கா. ஹரீஷ் அப்பாக்கு கூட பொறந்தவா யாரும் இல்லை. ஒரு ஒண்ணு விட்ட மாமா தான் இருக்கா. அவர் கூப்ட்டமானா, விஷயத்தைத் தெரிஞ்சுண்டு ஏதாவது பிரச்சனை பண்ணுவார். இரண்டாவது அவர் பாம்பேல இருக்றதால வரத்துக்கும் வாய்பில்லை" என்று கூறி தொடர்ந்து "ரொம்ப வேண்டப்பட்டவர்களை மட்டும் கூப்ட்டு காதும் காதும் வச்ச மாதிரி வடபழனி கோவில்ல கல்யாணத்தை பண்ணீட்டா என்ன"என்றாள்." நீங்க சொல்றது கரெக்ட் மாமி.அப்டியே பண்ணிடலாம்"என்றான் கிருஷ்ணன். அடுத்த 15 நாட்களில் ஒரு வெள்ளிக்கிழமை என்று முகூர்த்தம் இருந்தது.அன்றைக்கு ஹரீஷ்,தாரிணி கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.சுலோச்சனா அந்த நாள் தாரிணிக்கு ஒத்து போகுமா என்று முதலிலேயே கேட்டு வைத்துக் கொண்டிருந்தாள். தாரிணியின் அம்மாவையும் கலந்து ஆலோசித்தார்கள்.
கிருஷ்ணனும், ஹரீஷும் இரண்டு நாட்கள் முன்னதாக லீவு போட்டுவிட்டு கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.முதல் நாளே மதுரையிலிருந்து பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் சுப்ரமண்யன் வீட்டில் வந்திறங்கினார்கள். வெள்ளிக்கிழமை காலை ஏழிலிருந்து எட்டு மணிக்குள் கிருஷ்ணன், பாலகிருஷ்ணன்,சரசா ஷைலஜா,சுலோச்சனா ஹரீஷ், சுப்ரமணியன்,சுநந்தா,
சம்யுக்தா,ராஜேஸ்வரி, தாரிணி, அவள்அம்மா, தம்பி, குழந்தை ம்ருதுளா, தாரணிஆபீஸ் தோழிகள் மூவர் வடபழனி முருகன் கோவிலில் ஆஜரானார்கள். தாரிணி அரக்கு கலர் பட்டு புடவையில், சுநந்தா பண்ணிய அலங்காரம் மேலும் அழகூட்ட,தேவதையாக ஜொலித்தாள். ஹரீஷ் பட்டு வேஷ்டியும், சந்தன கலர் முழுக்கை ஷர்ட்டும் அணிந்திருந்தான்.(புதனன்று அவனும் ,தாரிணியும் பாண்டி பஜாரில் கடை கடையாக ஏறி,கடைசியில் ஒரு கடையில் தாரிணி அவன் ஷர்ட்டை செலக்ட் செய்திருந்தாள்.தாரிணியின் பட்டு புடவை சம்யுக்த்தாவின் செலக்ஷன்). ஒன்பது மணிக்கு வடபழனி முருகன் சந்ததியில் சோமநாத சிவாச்சாரியார் மாலைகள் எடுத்துக் கொடுக்க, ஹரீஷும், தாரிணியும் முருகப்பெருமான் சாட்சியாக மாலை மாற்றிக் கொண்டார்கள். சில சமயம் நமது வீடுகளில், நமது குழந்தைகள் நமது கல்யாண போட்டோ ஆல்பங்களை பார்க்கும்போது" ஏம்மா உங்க கல்யாணத்துக்கு போது நான் இல்லை" என்று கேட்கும். அதைப் போன்று கேட்கக்கூடிய வாய்ப்பு ம்ருதுளாவுக்கு கிடையாது. ஏனென்றால் அவள் தான் அவள் அப்பா அம்மா கல்யாணத்திற்கு வந்திருக்கிறாளே. மாலை மாற்றி முடிந்ததும் முருகனுக்கு அர்ச்சனை செய்தார்கள். பின்னர் கிருஷ்ணன், சுநந்தா மற்ற அனைவரும் புதுமண தம்பதிகளுக்கு கை கொடுத்து , வாழ்த்து சொன்னார்கள். எல்லாம் முடிய மணி பத்தரையை ஆனது. கோவிலை ஒட்டியிருந்த சரவணபவனில் எல்லோருக்கும் லன்ச் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது அந்த காலத்து சரவணபவன். சாப்பாடு உண்மையிலேயே நன்றாக இருந்தது.
நண்பர்கள்,நண்பிகள் விடைபெற்று சென்றனர். பின்பு மூன்று கார்களில் ஹரீஷ்,தாரிணி, சுலோச்சனா ,கிருஷ்ணன், சுநந்தா,தாரிணியின் அம்மா, ம்ருதுளா, சுப்ரமண்யன்,ராஜேஸ்வரி ஆகியோர் ஹரீஷ் வீட்டுக்கு சென்றார்கள். முன்னதாகவே ஹரீஷ் வீட்டுக்கு சென்றிருந்த சம்யுக்தா ஆரத்தி எடுத்து, புதுமண தம்பதிகளுக்கு நெற்றியில் ஆரத்தி இட்டு வரவேற்றாள்.மாலை வரை வீடு கலகலவென பேச்சும் சத்தமுமாக இருந்தது. கிருஷ்ணன், அப்பா, அம்மா, தங்கையை இரவு ட்ரெயினில் ஏற்றிவிட்டு தன்னுடைய இடத்துக்கு திரும்பினான். சுப்ரமணியன், சம்யுக்தா, ராஜேஸ்வரி, சுநந்தாவை அழைத்துக்கொண்டு டாக்சியில் வீடு திரும்பினான்.இதெல்லாம் நடந்து முடிந்து ஆறு மாதத்திற்கு பிறகு சுநந்தா படிப்பை முடித்து இருந்தாள். கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி, கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்கில் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்ந்தாள். மூன்று மாதத்திற்கு பின் சுப்ரமணியன் சரசாவுக்கு போன் செய்து"என்னம்மா. நிச்சயதார்த்தம் வச்சுக்கலாமா" என்று கேட்டான். "தாராளமா வச்சுக்கலாம் அண்ணா. உன் காலைத்தான் டெய்லி எதிர்பார்த்திண்டிருந்தேன்என்றாள். அடுத்த 10 நாட்களுக்குள் நல்ல நாளாக பார்த்து மதுரை தல்லாகுளத்தில் இருந்த ஒரு மினி ஹாலில் நிச்சயதார்த்தம் ஏற்பாடாகி இருந்தது.
No comments:
Post a Comment