Wednesday, March 22, 2023

மூன்று தலை முறை-5

 மூன்று தலை முறை-5

இரண்டாம் மாதத்தில் இருந்து தொடங்கிய மசக்கை விசாலியை படித்தி எடுத்து விட்டது. 

மங்களம் 'தலைச்சன் குழந்தைனா அப்படித்தான் இருக்கும்.பஞ்சு வயித்திலிருக்கும் போது நான் படாத கஷ்டமா' என்றாள். மங்களம் அடிக்கடி விசாலிக்கு ஏதாவது  பக்ஷணம் செய்து கொடுத்துகொண்டிருந்தாள். வீட்டு பசுந்தயிரும்,பசு நெய்யும் மூன்று வேளையும்  சாப்பாட்டில் அதிகமாக சேர்க்கப்பட்டது. அவற்றையெல்லாம் விட விசாலிக்கு மாங்காயும்,சாம்பலுமே சாப்பிட பிடித்திருந்தன. நான்காம் மாதம் தொடங்கிய உடன் விசாலம் ஆசைபட்டபடி பின்புறத்தில் உள்ள மாமரத்திலிருந்து மாங்காய்களை பறித்து கொண்டு வந்தான் பஞ்சு. யாருக்கும் தெரியாமல் சாம்பலையும் சாப்பிட்டாள் விசாலி.

(வயிற்றில் வளரும் குழந்தை தாயின் ரத்தத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதால், அம்மாவின் உடலில் ரத்தம் குறையும். இதனால், பித்தம் குறையும். பித்தம் குறைவதால், புளிப்புச் சுவையயுள்ள நெல்லிக்காய், மாங்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள். சிலர் புளி, புளியங்காய், சாம்பல் ஆகியவற்றை விரும்பித் தின்பார்களாம்)

ஐந்தாம் மாதம் பிறந்ததும் நல்ல நாளில் வளைகாப்பு செய்யப்பட்டது.விசாலி ரொம்ப வருடங்கள் கழித்து கர்ப்பம் தரித்து இருப்பதால் அனாவசியமாக அலைச்சல் கூடாது என்ற காரணத்தினால் வளைகாப்பு பஞ்சு வீட்டிலேயே கொண்டாடப்பட்டது.

(நமது தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த “வர்மக்கலை” தத்துவப்படி பெண்களின் இரண்டு கைகளின் அணிவிக்கப்படும் வளையல்களால்  வயிறு மற்றும் கருப்பையை இயக்கும் வர்ம புள்ளிகள் தூண்டப்பெற்று பெண்ணுக்கும், பிறக்க போகின்ற குழந்தைக்கும் உடல்நலம் மேம்படுகிறது. மேலும் 5, 7 அல்லது 9 மாதத்தில் கருவில் இருக்கும் குழந்தை தாய் அணிந்திருக்கும் வளையல் சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் அக்குழந்தையின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது என்கிற நமது முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மையை நவீன மேலை நாட்டு அறிவியல் ஆய்வாளர்களும் உண்மை என்பதை தங்களின் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.இந்த உண்மை மேலை நாட்டாரால் அங்கீகரிக்கப்படுவதால் அப்பாவி தமிழன் போனால் போகிறது என்று ஏற்றுக்கொள்கிறான்).

அதையடுத்து ஏழாவது மாதம் சீமந்தம் நடந்தது. விசாலிக்கு மாலை அணிவித்து, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, இரு கைகளிலும், கன்னங்களிலும் சந்தனத்தை நலங்கு பூசினார்கள். பின்பு இரு கைகளிலும் வளையல் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி படைத்து விசாலியையும், கருவிலிருக்கும் குழந்தையையும் வாழ்த்தினார்கள்.

சீமந்தத்தின் போது விசாலத்தைப்பார்த்த காமு பாட்டி அவள் முகத்தின் பூரிப்பையும், வயிற்றையும் பார்த்து 'நோக்கு நிச்சயம் பெண் தான் பொறக்கப் போறா' என்றாள். மங்களம் 'ஆணோ, பெண்ணோ, நல்லபடியாக பெத்து பிழச்சா சரி' என்றாள்.

விசாலியின் அழகு பல மடங்கு கூடி இருந்தது. முகம் பள பள வென பூர்ண சந்திரன் போல ஜொலித்தது.இரண்டு எட்டு நடப்பதற்குள் மூச்சு முட்டியது.

அடிக்கடி வயிற்றில் குழந்தை எட்டி உதைத்தது. சீமந்தம்  முடிந்த அடுத்த நாள் வண்டி கட்டிக்கொண்டு விசாலி நல்லூர் செல்ல ஏற்பாடானது. விசாலி, ஜானகி, சுந்தரேசன் ஆகிய மூவரும் வண்டியில் ஏறிக் கொண்டனர். வாசலில் வழியனுப்ப  ராஜகோபலன் ன்,மங்களம் மற்றும் பஞ்சு நின்றுகொண்டிருந்தார்கள். பஞ்சு ஒரு மாதிரி நிலை கொள்ளாமல் பரபரப்பாக இருந்தார். அதை பார்த்த ராஜகோபாலன் 'ஏண்டா பஞ்சு நின்று கொண்டிருக்கிறாய்.

நீயும் அவர்களுடன் போய் ரெண்டு நாள் இருந்துட்டு வா'என்றார்.  இதற்காகவே காத்திருந்த பஞ்சு, உள்ளே போய் சட்டையை போட்டுக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தான்.  வண்டி ஓட்டுபவனை பார்த்து ராஜகோபாலன்  'பார்த்து ஓட்டப்பா. மேடு பள்ளங்களில் நிதானமாக ஓட்டு. அதிர்ச்சி கூடாது' என்றார். 'சரிங்க எஜமான்' என்றான் வண்டி ஓட்டுபவன். வண்டி நல்லூரை நோக்கி சென்றது.நமது அடுத்த பதிவில்  விசாலிக்கு பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது தெரிந்து விடும்.அந்த குழந்தைதான் இரண்டாம் தலைமுறையின் கதாநாயகி அல்லது கதாநாயகன்.அது சரி.உங்களில்யாராவது விசாலிக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்று ஆருடம் கூறமுடியுமா?

No comments:

Post a Comment