மூன்று தலைமுறை-4
இப்படி பரக்கப்பரக்க வேலை செய்யும் விசாலம் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்ததால் பஞ்சு ஏன் விஜாரப்படமாட்டார்?
'என்ன விசாலி உடம்புக்கு சரியில்லையா' என்றார். 'அதல்லாம் ஒன்றுமில்லை.தலை சுற்றுகிறது' என்றாள் விசாலி.
பஞ்சுவிற்கு பயமாகிவிட்டது.ஒரு நாள் விசாலி வேலைகளை கவனிக்காமல் விட்டு விட்டால் வீடே கந்தர கோளமாகிவிடும் என்பதை பஞ்சு அறிவார்.விசாலியின் தலையை அனுசரணையாக தடவி கொடுத்தவர்
'நான் போய் இஞ்சி சொரசம் போட்டுண்டு வறேன்' என்றார்.அதற்கு விசாலம் வெட்கத்துடன் 'இல்லேன்னா. இஞ்சி சொரசத்தில் தீர்ற தலை சுற்றல் மாதிரி இது நேக்கு தெரியல.நீங்க போய் மூணாவது ஆத்து
காமு பாட்டியை கூட்டிண்டு வாங்கோ' என்றாள்.பஞ்சுவிற்கு தலை சுற்றலுக்கும், காமு பாட்டிக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை.
பட படப்புடன் பஞ்சு பாட்டியை கூப்பிட போகலானார்.
அவரது படபடப்பை பார்த்து விசாலத்திற்கு சிரிப்பு வந்தது.
புத்திசாலி பிராமணனுக்கும் சில சமயம் மூளை மழுங்கி விடுகிறது என நினைத்துக் கொண்டாள். என்னதான் உசந்த படிப்பு(FA) படிச்சிருந்தாலும் சூசகமாக விஷயத்தை சொன்னால் அதை பஞ்சு க்ரஹித்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் விசாலிக்கு.பஞ்சு காமு பாட்டியை கூட்டி வந்தார். விசாலியை பார்த்து 'என்னடியம்மா உடம்புக்கு என்ன செய்யறது' என்றாள் காமு பாட்டி. "காலையிலிருந்து தலை சுத்தறது. கொஞ்சம் கை நாடி பிடித்து பார்க்கிறீர்களா" என்றாள் விசாலி.காமு பாட்டி "ஓ.அப்படியா விஷயம்' என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள்.பஞ்சுவிற்கு பாட்டி மேல் கொஞ்சம் கோபம் வந்தது.விசாலி தலை சுற்றர்து என்கிறாள்,இந்த கிழம் பாட்டுக்கு சிரிக்கிறதே என்று. விசாலியின் கையை பிடித்து நாடியை பார்த்தாள் பாட்டி.சில நொடிகள் கழிந்தன.பின் பஞ்சுவைப் பார்த்து 'நல்ல சமாச்சாரம் தாண்டா பஞ்சு. உன் வம்சம் விருத்தியாக போறது' என்றாள். பஞ்சுவுக்கு இதைக் கேட்டவுடன் 'அடடா.இதை புரிந்து கொள்ளாமல் இருந்தூட்டமே' என்று நினைத்தார். அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
நிறைய சந்தோஷமும் ஓரளவிற்கு வெட்கமும் வந்தது. விசாலி 'இப்போதாவது புரிந்ததே' என திருப்தி அடைந்தாள். வெட்கப்பட்டு கண்ணை மூடிக்
கொண்டாள்.காமு பாட்டி 'ஏண்டா மரமாட்டம் நிக்கற. மங்களத்தை கூப்பிடடா,பஞ்சு' என்றாள். அப்போதுதான் எழுந்து வந்த விசாலியின் மாமியார் மங்களம் காமு பாட்டியை பார்த்து'என்ன பாட்டி. இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கேங்க.என்ன சமாஜாரம்?'என்றாள். 'எல்லாம் நல்ல சமாஜாரந்தான்டி மங்களம். உன் மாட்டுப்பெண் உண்டாகி இருக்கா' என்றாள். அவ்வளவுதான் மங்களத்திற்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
நேராக சென்று விசாலியின் இரு கைகளைப் பிடித்துக்கொண்டு 'இனிமேல்தான் நீ ஜாக்கிரதையாக இருக்கணம்.எல்லா வீட்டு வேலையும் எடுத்து போட்டு நீயே செய்ய வேண்டாம். நான் செஞ்சுக்கிறேன்.முடியாட்டா ஆட்களை போட்டுகலாம்' என்றாள். பஞ்சுவைப் பார்த்து'ஏண்டா பஞ்சு. பிரமை பிடித்த மாதிரி மசமசன்னு நிக்கற. அப்பாகிட்ட போய் இந்த சந்தோஷ சமாஜாரத்தை சொல்லு' என்றாள்.
ஸ்வாமி அறைக்குபோய் நமஸ்காராம் செய்து விட்டு'அப்பா முருகா. இந்த கொழந்தைக்கு இப்போதாவது கொழந்தை பாக்யத்தை கொடுத்தியே.அவ நல்லபடியா கொழந்தயை பெத்தெடுக்க நீதான் கருணை காட்டணம்' என்று மனமுருகி வேண்டி கொண்டாள் மங்களம். அடுத்த பத்து நிமிடத்தில் வீடு அல்லோலகல்லோலப் பட்டது. வருவோர் போவோருக்கெல்லாம் சர்க்கரை வழங்கப்பட்டது. .
சுந்தரேசனுக்கு செய்தி சொல்லி அனுப்பப்பட்டது. இருவரும் அஷ்டபுஜ காளி அம்மன் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து குங்கும பிரசாதம் பெற்று கொண்டார்கள்.
ஜானகி,விசாலி உடம்பு தேறி நல்லபடியா பிரசவிக்க குல தெய்வமான காளியிடம் வேண்டிக்கொண்டள். பின்பு வண்டி கட்டிக்கொண்டு வந்தார்கள்.
ஜானகி கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய'விசாலி.அந்த பழனி முருகன் நீ வேண்டிண்டிய படி உனக்கு புத்ர பாக்யத்தை கொடுத்துட்டார்' எனறு கூறியபடியே அவள் நெற்றியில் காளி அம்மன் குங்கும பிரசாதத்தை இட்டாள்.பின்பு மங்களத்திடம் தான் கொண்டு வந்திருந்த திரட்டி பால்(பால் கோவா) தூக்கை கொடுத்தாள்.
அன்றிலிருந்து மங்களம் எல்லா வீட்டு வேலைகளும் கவனித்துக் கொண்டாள்.
விசாலியும் தன்னால் முடிந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.வீட்டின் அருகேஉள்ள கோவிலுக்கு போவதற்கு கூட விசாலி கூச்சப்பட்டாள்
No comments:
Post a Comment