மூன்று தலைமுறை-7
குழந்தை பிறந்த பதினோராம் நாள் புண்யாகவாசனம் நடத்தப்பட்டது.
முதல் நாள் சாயங்காலமே ராஜகோபாலன் தம்பதிகள் பஞ்சு சகிதம் வந்திருந்தார்கள்.
காலையில் பஞ்சு, விசாலி மங்கள ஸ்னானம் முடித்து,சுந்தேரசன், ஜானகி வைத்து கொடுத்த புது வேஷ்டி, புடவை கட்டிக்கொண்டு மணையில் அமர்ந்தார்கள்.
ஆத்து வாத்யார் நாகராஜ கனபாடிகள் வைதீக கார்யத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார்.
பருப்பு தேங்காய்,பழங்கள்,கற்கண்டு (சாக்லேட் என்றும் குறிப்பிட இருந்தேன். ஆனால் பதிவை படிக்கும் சில நண்பர்கள் 1941 களில் சாக்லேட் இருந்ததா என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லாததால் சாக்லேட்டை குறிப்பிடவில்லை) இத்யாதி ஐயிட்டங்கள் தாம்பாளத்தில் சீர் வரிசையாக வைத்து இருந்தது.
இன்னுமொரு தாம்பாளத்தில் குழந்தைக்கு புது டிரஸ்,காலுக்கு வேப்பிலை காப்பு,தங்க காப்பு,கைக்கு தங்க வளையல் வைக்கப்பட்டிருந்தது. குழந்தைக்கு இரு கன்னத்திலும் திருஷ்டி பொட்டு இட்டார்கள்.
கலசத்திலிருந்து ஜலத்தை புதுக்குழந்தையின் பெற்றோர்கள், குழந்தையின் மேலும் மற்ற அனைவரின் மேலும் தெளிக்கப்பட்டது.
கனபாடிகளின் சிஷ்யன் வீடு முழுவதும் நீரால் ப்ரோக்ஷணம் செய்தார்.மங்களம் குழைந்தைக்காக செய்த தங்க காப்பு,அரை
ஞாண் கொடி, தங்க சங்கிலி, புது டிரஸ் அணிவித்தாள்.எல்லாம் முடிந்ததும் உணவு பறிமாறப்பட்டது.
சாயங்காலம் 4 மணி அளவில் குழந்தையை ஆகி வந்த தொட்டலில் போட்டார்கள்.சுமார் 25 வருடங்களுக்குமுன் விசாலியும் படுத்திருந்த குடும்ப தொட்டில்தான் அது.பெயர் சூட்டும் வைபவம் ஆரம்பமாயிற்று.
குழந்தைக்கு முதல் பெயராக தாத்தாக்கள் ராஜகோபாலன் மற்றும் சுந்தரேசன் பெயர்களை இணைத்து வருகிற மாதிரி சுந்தர்ராஜன் என்று தீர்மானித்து குழந்தையின் காதில் சுந்தர் ராஜன் என்று கூறப்பட்டது.
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் அந்த நட்சத்திரத்திற்கு உரியவரும் கோமல் என்னும் ஊரில் அருள் பாலிக்கும் கிருபா கூபாரேச்வரரை நினைவு கூர்ந்து இரண்டாம் பெயராக குழந்தைக்கு கிருபாபுரி என்ற பெயர் இடப்பெட்டது.(சைவசமய குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரை தடுத்தாட்கொண்டவரும் திருவெண்ணை நல்லூரில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஈசனின் பெயரும் கிருபாபுரீச்வரர் ஆகும்).மூன்றாவது பெயரை வைப்பதற்கு முன் விசாலி பஞ்சுவின் காதில் எதோ முணுமுணுத்தாள்.
அதைகேட்ட பஞ்சு மூன்றாவது பெயராக கார்த்திகேயன் என்ற பெயர் வைக்கப்பட வேண்டும் எனக்கூற எல்லோரும் ஆமோதித்தார்கள். மூன்றாம் பெயராக கார்த்திகேயன் சூட்டப்பட்டது.
பழனி முருகன் அருளால் பிறந்த குழந்தை ஆதலால் முருகனின் பெயரான கார்த்திகேயன் பெயரை சூட்டுவது(ஆண் குழைந்தையாக பிறந்தால்) என்று முன்பே பஞ்சு, விசாலி தம்பதிகள் தீர்மானித்திருந்தார்கள். குழந்தையை வீட்டில் கூப்பிட ஒரு சுருக்கமான பெயரை தீர்மானம் செய்யலாமா என்று கேட்டாள் விசாலத்தின் சித்தி. ரெண்டு தாத்தாக்களின் பெயரை சொல்லி குழந்தையை கூப்பிட முடியாது. கார்த்திகேயன் என்ற பெயர் நீளமாக இருக்கிறது.எனவே சுருக்கமான பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள்.
விசாலியின் சித்தி இதைப் பற்றி முன்பே யோசித்து வைத்திருந்தாள். அப்பொழுது அவள் 'விசாலியின் பெயரில் முதல் எழுத்தையும், மாப்பிள்ளையின் வீட்டில் சுருக்கமாக கூப்பிடும் பெயரின் கடைசி எழுத்தையும் சேர்த்து 'விசு' என்று கூப்பிட்டால் என்ன' என்றாள்.இது எல்லோருக்கும் பிடித்துவிட்டது.
எனவே கார்த்திகேயன் வீட்டில் 'விசு' என்று அழைக்கலாம் என்று தீர்மானித்தார்கள். இந்த குழந்தை எந்த பெயரால் பிற்காலத்தில் அழைக்கப்பட போகிறானோ?
பின்பு யாராவது பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. விசாலியின் அத்தைக்கு நல்ல காத்ரமான குரல். எல்லோரும் அவளைப் பாடச் சொன்னார்கள். தன்யாசி ராகத்தில் அமைந்த 'பாலகிருஷ்ணன் பாத மலர்' என்ற போலகம் ராமையாவின் கீர்த்தனையை அவள் சிறப்பாக பாடினாள்.இந்த போலகம் ராமையா வேறு யாருமில்லை. பிற்காலத்தில் தமிழ் தியாகைய்யா என்று புகழப்பட்ட பாபநாசம் சிவன்தான் அவர்.(பாபநாசம் சிவன் அவர்கள் 1940-41 களில் இந்த பாடலை எழுதி இருக்கிறாரா என்று அடுத்த சர்ச்சையை கிளப்ப வேண்டாம். சில கெடுதல் அளிக்காத பொய்களும், வாழ்க்கையில் நடக்கும் சிலவற்றை மிகைப்படுத்திக் காண்பித்தலும் கவிதைக்கும், கதைக்கும் இலக்கணமாகும். இப்படி இருப்பதால் தான் கதையோ கவிதையோ பரிமளிக்கிறது. எனவே தான் பாபநாசம் சிவன் அன்றே இப்பாடலை பாடி இருக்கிறாரா என்ற வீண் சர்ச்சை வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்)
கடைசியாக ஜானகியும், மங்களமும் ஆரத்தி எடுத்தபின் குழந்தையின் நெற்றியில் பொட்டு வைத்தார்கள்.
இப்பதிவில் வரும் பாலக்ருஷ்ணன் பாதமலர்
பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.எனவே அதை ஒருவழியாக கதையில் புகுத்திவிட்டேன். அருமையான வரிகள் அமைந்த இத் தமிழ் பாடல் முழுவதும்கீழே கொடுத்துள்ளேன்.பாடலை ரசிக்க கர்னாட சங்கீத ஞானம் தேவையில்லை.
தமிழை ரசிக்க முடிந்தால் பாடலை ரசிக்கலாம்.
No comments:
Post a Comment