Monday, March 20, 2023

மூன்று தலைமுறை-3

 மூன்று தலை முறை -3

By N Krishnamurthy 

பழனியிலிருந்து திரும்பிய இரண்டாம் மாதம்.காலையிலிருந்தே விசாலிக்கு மயக்கமாக இருந்தது.காலை அனுஷ்டானத்தை முடித்து விட்டு காபி குடிக்க சமையல் கட்டுக்கு சென்ற பஞ்சு அங்கு விசாலம் இல்லாததை பார்த்து பால் கறக்கிறாளோ என்று கொல்லைக்கு சென்று பார்த்தார்.

விசாலி அங்குமில்லை. படுக்கை அறையில் எட்டிப்பார்த்தவர், அவள் கண் விழித்து படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பதை பார்த்து பதறிப்போய்விட்டார்.

பஞ்சு விசாலத்தை பார்த்து இப்படி பதறுவ தற்கு காரணம் இருக்கிறது.விசாலியின் தினப்படி ரொடீன் தெரிந்தால் தான் காரணம் புரியும். விசாலி அதிகாலையில் எழுந்து விடுவாள்.

தாலிக்கொடியை கண்ணில் ஒத்திக்கொண்டு இரண்டு உள்ளங்கைகளையும் பார்ப்பாள். உள்ளங்கைகளில் லக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம்.

பல் துலக்கி, காலைக் கடனை முடித்துவிட்டு, குளித்துவிட்டு வந்து விடுவாள்.கூந்தலை நன்றாக துண்டால் துடைத்து, கூந்தலை துண்டாலேயே மடித்துக் கட்டிக் கொண்டு, வாசல் பக்கம் சென்று தண்ணீர் தெளித்து கோலமிட்டு பின்பு பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைப்பாள். நெய்விளக்கு ஏற்றி ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்வாள்.பில்டரில் காபி பொடியை போட்டு பில்டரை கையால் பிடித்து கொண்டு பில்டரின் அடிப்பாகாத்தை நாலு தட்டு  தட்டுவாள்.இப்படி செய்தால் டிகாக்ஷன் கெட்டியாக இறங்குமாம்.பின்னர் தண்ணீர் கொதிக்க வைத்து நன்றாக சூடு பறக்கும் போது பில்டரில் உள்ள காபிபொடி மேல் சீராக ஊற்றுவாள். டிகாக்ஷன் அதன் பாட்டிற்கு இறங்கி கொண்டிருக்கும். இப்படி செய்து கொண்டே இருக்கும்போது லட்சுமி 'ம்மா' என்று கத்துவாள். அவர்களிடம்  இருந்த மூன்று கறவை பசுக்களில் லக்ஷ்மி தான் விசாலத்திற்கு Pet. லக்ஷ்மியைதன் சொந்த குழந்தையைப் போல விசாலம்  பார்த்துக்கொண்டாள்.

சமயல் கட்டிலிருந்த படியே  'இருடி. வறேன்' என்று குரல்  கொடுப்பாள்.

லட்சுமிக்கு இது கேட்குமா, கேட்காதா,கேட்டாலும் புரியுமா என்று தெரியாது.விசாலிக்கு அப்படி ஒரு பதில் சொல்வதில் பரம திருப்தி. நடுநடுவே வாய் ஏதாவது ஒரு ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.

பின்பு பின்புறம் சென்று லட்சுமியின் முகத்தையும் பின்புறத்தையும் நீரால் துடைத்து விடுவாள்.  

முகத்திற்கும் பின் புறத்திற்கும் சந்தனப் பொட்டு, குங்குமம் வைத்து விட்டு லட்சுமியை நமஸ்கரிப்பாள்.

லட்சுமியின் மடியை நீரால் கழுவி, பித்தளை பாத்திரத்தை லட்சுமியின் மடியின் அடியில்  வைத்துக்கொண்டு பாலைக் கறக்க ஆரம்பித்து விடுவாள்.இது முடிந்தவுடன் கன்றுகுட்டியை அவிழ்த்து விடுவாள். கன்று லட்சுமியின் மடியில் பால் குடிக்க ஓடும். கன்று பால் குடிக்கும் போது அந்த காட்சியை அயராமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.தவறாமல் பெருமூச்சும் விடுவாள் விசாலி.மற்ற இரண்டு மாடுகளின் பாலை வேலைக்காரி சுப்பம்மா லேட்டாகவந்து கறப்பாள். விசாலி பின்னர் பாலை ஸ்வமிக்கு நைவேத்யம் (நிவேதனம்) பண்ணி விட்டு, சூடு பண்ணுவாள்.எல்லாவற்றிற்கும் குமிட்டி அடுப்புதான்.  

இதற்குள் பஞ்சாபகேசன் எழுந்து காலைக்கடன் முடித்து, குளித்து காலையில் செய்ய வேண்டிய சந்தியாவந்தனத்தை முடித்துக்கொண்டு சமையல் அறைக்கு வருவார்.அவர் வந்ததும் விசாலம் சுடச் சுட  பொன்னிறத்தில் நுரையுடன் கூடிய காப்பியை கொடுப்பாள். அதை வாங்கி பஞ்சு குடித்தால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அவருக்கு பசி எடுக்காது. இதற்கு காரணம் காப்பி பவுடரின்   ருசியா அல்லது விசாலியின் கை பக்குவமா என்று தெரியாது.பஞ்சு மாதம் ஒரு முறை கும்போணத்திலிருந்து (கும்பகோணத்துகாரர்கள் கும்பகோணத்தை அழைப்பது இப்படித்தான்) காபி கொட்டை வாங்கி வந்து விடுவார்.ஒரு வாரத்திற்கு உண்டான காபி கொட்டையை  வாணலியில் வறுத்து பின்பு அதை கையால் அறைக்கும் மெஷினில் போட்டு அறைத்து விடுவாள் விசாலி. வாரத்திற்கு ஒரு முறை அறைப்பதால் தான் பவுடர் மிகவும் மணமாக இருந்தது. இத்துடன் வீட்டில் கறந்த பசும் பாலும் சேர்ந்துகொள்ளும். இப்படிப்பட்ட காபி குடிக்க அதிக சுவையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. நம்மில் பலர் இது போன்ற காபியை குடித்து இருப்போமா என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment