Wednesday, March 29, 2023

மூன்று தலைமுறை -11

 மூன்று தலைமுறை -11

விசுவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு சில நாட்கள் முன்பு பஞ்சு குடும்பத்தினர் குல தெய்வமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றார்கள்.வண்டி கட்டிக்கொண்டு, முதல்நாள் சாயங்காலம் கிளம்பி ராத்திரி போய் சேர்ந்தார்கள்.நல்லூரியிலிருந்து  ஜானகியும்,சுந்தரேசனும் மறுநாள் காலை வந்து சேர்ந்தார்கள்.

(வைத்தீஸ்வரன் கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலின் மூர்த்தி  வைத்தியநாதர். அம்பாள் தையல் நாயகி. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்று ஒரு பெயரும் உண்டு.புள் என்ற சடாயு பறவையும், இருக்கு. (ரிக்)  வேதமும், வேள் என்கிற முருகப்பெருமானும், ஊர் என்கிற சூரியன் ஆகிய நால்வரும் இத்தலத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இப்பெயர் பெற்றது. இக்கோவிலின் குளம் சித்தாமிர்த குளம் என அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் இந்த குளக் கரையில் சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது ஒரு பாம்பு தவளையை முழுங்க முயலும் போது அவற்றை சபித்தார் சதானந்த முனிவர். இதன் காரணாமாக இன்றும் இக்குளத்தில் தவளை, பாம்பு போன்றவை காணப்படுவதில்லை

என்கிறார்கள்.

மற்ற கோவில்களில் எல்லாம் நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருக்கும். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்கள் அனைத்தும் இக்கோவிலின் மூலவரான வைத்தியநாதரின் சந்நிதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்கு பணிந்து பக்தர்களின் நோய்களையும், தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம்.

புற்று மண், அபிஷேக தீர்த்தம், அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி,

வேப்பிலை ஆகியவற்றை கலந்து “திருச்சாந்து” உருண்டை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை உண்பவர்கள் எல்லாவிதமான நோய்களும் நீங்கி முழு குணம் அடைவர் என்று நம்பப்படுகிறது.

இந்த ஸ்தலம் சீதா தேவியை இராவணன் கவர்ந்து சென்றபொழுது,கழுகு மன்னான ஜடாயு இடைமறித்து தடுத்ததால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட ஜடாயுவின் சடலத்தை இராமபிரான் மற்றும் லக்ஷ்மணன் இருவரும் இணைந்து இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து ஜடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளம் சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இதே போல திருவள்ளூரில் வைத்ய வீரராகவ பெருமாள் அருள்பாலிக்கிறார்.

ஸ்மார்த்தர்கள் இரு ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடுவது உண்டு)

குந்தையின் மாமா அல்லது தாத்தா (அப்பாவின் அப்பா) மடியில் உட்காரவைத்து மொட்டை போட வேண்டும் என்ற முறை இருப்பதால் ராஜகோபால ஐயர் மடியில் உட்கார வைத்து விசுவுக்கு மொட்டை அடிக்கப்பட்டது.(விசாலிக்கு சொந்த சகோதரனோ ஒண்ணுவிட்ட சகோதரனோ கிடையாது)

மொட்டை அடிக்கும்போது விசு அழுது, ஆகாத்யம் செய்து ஊரை கூட்டிவிட்டான். ராஜகோபாலனால் அவனை வைத்துக் கொள்ளவே முடியவில்லை. கையிலிருந்து  திமிறினான். கஷ்டப்பட்டு தான் அவனை பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

மங்களமும்,பஞ்சுவும் ராஜகோபாலனுக்கு இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொண்டு  விசுவை பிடித்துக்கொண்டார்கள்.விசுவோ விசாலியிடம் போக வேண்டுமென்று அடம் பிடித்தான். இப்படியாவது குழந்தையை அழ வைத்து மொட்டை போட வேண்டுமா என்று விசாலிக்கு மனதில் தோன்றியது. அப்படி தோன்றிய உடனே மீண்டும் அவள்  'அபசாரம்.  அபசாரம்.  தெரியாமல் ஏதேதோ நினைத்துவிட்டேன்.

தெய்வ குத்தம் இல்லாமல் இருக்கணம்' என்று வேண்டிக்கொண்டாள்.மொட்டை அடித்ததும், 

விசுவை குளிப்பாட்டி தலையில்  சந்தனம் தடவினார்கள். சுவாமிக்கு உச்சிகாலத்தில் விசுவின் பெயரில் அர்ச்சனை பண்ணப்பட்டது.  கொஞ்ச நேரம் ஆனதும், களைப்பில் குழந்தை உறங்க ஆரம்பித்தான். சுந்தரேசன், ஜானகி கொண்டு வந்திருந்த சாப்பாட்டை அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள். மாலை மீண்டும் தையல்நாயகி சமேத  வைத்யநாதனையும்,

முத்துக்குமரனையும் வழிபட்ட பின்னர் கிளம்பி இரவு வீடு வந்து சேர்ந்தார்கள் .

No comments:

Post a Comment