Tuesday, March 28, 2023

மூன்று தலைமுறை -6

 மூன்று தலைமுறை -6

நல்லூரில் பஞ்சு நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார். பஞ்சுவிற்கு திரும்பி வரவே மனமில்லை.அந்த காலத்தில் இப்படி எல்லாம் மனைவியுடன் தொடர்ந்து இருப்பது வழக்கமில்லை. கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் கழிந்த பின்பு ஜானகிக்கு விசாலிக்கு பிரசவ வேளை நெருங்கிவிட்டது என்று சந்தேகம் வந்தது. இதை சுந்தரேசனிடம்  கூற சுந்தரேசன் கும்போணத்திற்கு சென்று பெரிய மருத்துவச்சியை(Midwife) பார்த்து தான் செய்தி சொன்னவுடன் வந்து  சேருமாறு ஏற்பாடு செய்துவிட்டு நல்லூர் திரும்பினார்.

நாலு நாட்கள் கழித்து விசாலிக்கு வலி ஆரம்பமான மாதிரி இருந்தது. காலையிலிருந்தே கொஞ்சம் சுகவீனம் ஆக இருந்த விசாலி நேரம் செல்லச் செல்ல வலி அதிகமாவதை ஜானகியிடம் கூறினாள். உடனே சுந்தரேசன் வண்டியை அனுப்பி மருத்துவச்சியை அழைத்து வரும்படி  சொன்னார்.மருத்துவச்சி வரும் போது இரவு பத்து மணி ஆகி விட்டிருந்தது. விசாலிக்கு காலையில் விட்டு விட்டு வந்த வலி இப்போது தொடர்ந்து இருந்து வந்தது. மருத்துவச்சி  விசாலி இருந்த அறைக்குள்  எல்லா ஏற்பாடும் செய்து முடித்தாள்.இரவு முழுவதும் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் விசாலி. மறுநாள்

காலை 5:30 மணி, விடியும் நேரத்தில் 'வீல்' என்று அமைதியை கிழித்துக்கொண்டு சத்தமிட்டது குழந்தையின் குரல்.

1940,செப்டம்பர் 4, புதன்கிழமை, ஹஸ்த நட்சத்திரத்தில் பஞ்சு விசாலி தம்பதிகளின் *சீமந்த புத்ரன்* சுப ஜனனம். ஜானகிக்கும் சுந்தரேசனுக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்த  பதினைந்து நிமிடத்தில்  மருத்துவச்சி வந்து குழந்தையை காண்பித்தாள். மீதி வேலைகளை முடித்துக்கொண்டு மருத்துவச்சி கும்போணம் திரும்பிச் செல்ல தயாரானாள்.

ஒரு தாம்பாளத்தில் புது புடவையும் ரவிக்கை, வெற்றிலை,பாக்கு வைத்து அதன் மேல் 50 ரூபாயும் மருத்துவச்சிக்கு வைத்து கொடுத்தார்கள். அதை வாங்கிக்கொண்ட மருத்துவச்சி மிகவும் சந்தோஷமாக

'நான் போய்ட்டு வரங்கே'என்று கூறினாள். சுந்தரேசன் அவளை வண்டியில் கொண்டு விட ஏற்பாடு செய்தார். போகும்போது மருத்துவச்சி 'அம்மா.உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.உங்கள் பெண்ணையும்,குழந்தையையும் நல்லா பாத்துகோங்க.பச்ச உடம்பு. கொஞ்சம் இளப்பா இருக்கா'  என்று கூறிவிட்டு சென்றாள். குழந்தை பிறந்த விஷயம் ராஜகோபாலனுக்கு தெரிவிக்கப்பட்டது. அன்று மாலையே ராஜகோபாலன்,மங்களம் மற்றும் பஞ்சு வண்டியில் வந்து இறங்கினார்கள். நேரே விசாலி இருந்த அறைக்கு சென்றார்கள். விசாலி அப்போதுதான் கண்ணயர்ந்து இருந்தாள்.யாரோ வரும் சத்தம் கேட்டு முழித்துக்கொண்டாள். 'வாங்கப்பா. வாங்கம்மா'என்று மாமனார் மாமியாரை ஈனஸ்வரத்தில் வரவேற்றாள். மங்களம்  குழந்தையை  கையில் எடுத்துக் கொண்டு  சிட்டிகை சர்க்கரையை குழந்தை வாயில் போட்டாள் .'ஏன்னா.பேரனைப்பாத்தேளா. அப்படியே  குழந்தையில் பஞ்சு இருந்த மாதிரியே இல்லை?' என்று மங்களம் ராஜகோபாலனைப் பார்த்து வினவினாள். நெற்றியும், முகவாய்க்கட்டையும் பஞ்சு மாதிரி இருந்தது. மூக்கும், கண்ணும் விசாலி மாதிரி இருந்தது. மொத்தத்தில் மிகவும் லட்சணமாக இருந்தான் குழந்தை. 

குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சினாள் மங்களம். அன்றிரவு அவர்கள் அங்கு தங்கிவிட்டு மறுநாள் ஊருக்குத் திரும்பினார்கள். சுந்தரேசன் 'புண்யாக வாசனத்துக்கு சொல்லி அனுப்புகிறேன். அவசியம் வந்து நடத்திக் கொடுக்க வேண்டும்' என்றார் 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லி கிளம்பினார்கள். ஜானகி விசாலிக்கு உதவுவதற்காக  ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்தாள். அந்தப் பெண் சதா சர்வகாலமும் விசாலிக்கு வேண்டிய தேவைகளை கவனித்துக் கொண்டாள். அதிகம் தொந்தரவு செய்யாமல் சமர்த்தாக இருந்தான் குழந்தை.இரண்டாம் தலைமுறை பிறந்துவிட்டது.இனி அதன் கதையும் சேர்த்தே பார்க்கவேண்டி உள்ளது.எனக்கும் வேலை கூடிவிட்டது.

No comments:

Post a Comment