Wednesday, March 29, 2023

மூன்று தலைமுறை -12

 மூன்று தலைமுறை -12

விசுவிற்கு 12 மாதம் முடிந்து 13 ம்மாதம் ஜன்ம நக்ஷத்ரத்தில் ஆயுஷோமம்(ஆயுஷ் ஹோமம்)செய்ய ஏற்பாடானது.

(இந்து மத தர்மப்படி குழைந்தைக்கு ஹோமத்துடன் செய்யப்படும் மிகவும்  முக்கிய வாய்ந்த விசேஷம் இது.எனவே இதைப்பற்றி கொஞ்சம் விஸ்தாரமாக விவரிக்க போகிறேன்.விவரிக்க போகிறேன் என்றால் எனக்கு இது எல்லாமே தெரியும் என்று அர்த்தமல்ல.கொஞ்சம் தெரிந்தது. ரொம்ப கடன் வாங்கியது.கடன் கொடுத்து கை கொடுத்தது வேறு யார். கூகுள்தான்.எந்தக் குழந்தைக்காக இந்த ஹோமத்தைச் செய்கிறோமோ அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி, ‘‘வேதங்கள் கூறும் வழியில் இந்தக் குழந்தையின் ஆயுள் மேன்மை அடைவதற்கும், அபமிருத்யு தோஷ பரிகாரத்துக்காகவும், இந்தக் குழந்தைக்கு இருக்கும் எல்லா துக்கங்களும் நீங்குவதற்காகவும், இதன் மனதில் தோன்றும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதற்காகவும், இந்தக் குழந்தையின் முதல் ஆண்டு நிறைவில் - இரண்டாம் ஆண்டு ஆரம்பத்தில் - பிறந்த மாதத்திலும், ஜென்ம நட்சத்திரத்திலும் என்னென்ன தோஷங்கள் ஏற்பட்டதோ அவற்றுக்குப் பரிகாரம் செய்யவும், ஆயுள் தேவதையின் அருள் ஸித்திப்பதற்காகவும், அந்த அருளால் நீண்ட ஆயுள் கிடைக்கவும், ஆயுஷ்ய ஹோமம் என்ற இந்த கர்மாவைச் செய்கிறேன்’’ என மந்திரங்களால் சங்கல்பம் செய்ய வேண்டும்.

ஹோமத்துக்காக வழக்கம் போல சதுரமான அக்னி குண்டம் உருவாக்கி அதில் அக்னியை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அக்னிக்கு வடக்கில் தரையில் நெல்லைப் பரப்பி, அதன்மேல் நுனி வாழையிலையில் அரிசியைச் சதுரமாகப் பரப்பி, எட்டு இதழ் பத்ம கோலம் போட்டு அதன் மேல் கும்பத்தை வைக்க வேண்டும்.

இதில் ‘இமம் மே வருண’ என்ற மந்திரத்தின் மூலம் சகல தீர்த்தங்களின் அதிபதியான வருணனை முதலில் தியானித்து ஆவாகனம் செய்ய வேண்டும். இதன் பிறகு இந்த ஹோமத்துக்கு முக்கிய தேவதையான ஆயுள் தேவதையை தியானித்து ‘ஆயுஷ்டே’, ‘ஆயுர்தா அக்னே’ என்ற மந்திரங்களைச் சொல்லி கும்பத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும்.

குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அந்த நட்சத்திரத்துக்கான தேவதை ஆகியோரை தியானித்து ஆவாகனம் செய்ய வேண்டும்.

ஆயுஷ்ய ஹோமத்துக்குத் திரவியம் அன்னம்தான். அன்னத்தை வேக வைக்கும்போது தண்ணீரோடு கொஞ்சம் பால் சேர்த்து வேக வைக்கவேண்டும். கண்டிப்பாக இதை வடிக்கக் கூடாது. அப்படியே கஞ்சி சுற்றிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டும். இந்த அன்னத்தில் ஒரு பகுதியை  காகத்துக்கு உணவிடுவதற்காக வைக்க வேண்டும். இன்னொரு பகுதியை ஹோமத்துக்காகவும் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

‘ஆயுஷ்டே’, ‘ஆயுர்தா’ ஆகிய மந்திரங்களால் அன்ன ஹோமமும், நெய் ஹோமமும் செய்ய வேண்டும். (சிலர் அரச மர சமித்துகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள்!) மந்திரங்களைச் சொல்லி ஹோம குண்டத்தில் அன்னத்தை இடும்போதே அதில் கொஞ்சத்தை ஓர் இலையில் தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஹோமத் தீயில் நெய் விடும்போது அதில் ஒவ்வொரு தடவையும் மிஞ்சுவதை இந்த அன்னத்தில் கொட்டிவிட வேண்டும். இந்த நெய் கலந்த அன்னத்தில் கடைசியில் கொஞ்சம் வெல்லம் கலந்து குழந்தைக்கு ஊட்டிவிட வேண்டும். ஹோமத்தின் முடிவில் கும்பத்தில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து குழந்தை மீது தெளிக்க வேண்டும்.

கடைசியில், ‘‘இந்த நட்சத்திரத்தில், இந்த ராசியில் பிறந்த இந்தக் குழந்தை ஆயுள் விருத்தி பெறட்டும்... கஷ்டங்கள் தீரட்டும். இந்த வரங்களை அளிக்கும் வல்லமை கொண்ட அக்னி தேவனே... வாயுவே... சூரியனே... பிரஜாபதியே... அருளுங்கள்!’’ என மந்திரங்களைச் சொல்லி ஹோமத்தை முடிக்க வேண்டும். வழக்கமான மந்திரங்கள் தவிர, ஆயுஷ்ய சூக்தம் எனப்படும் எட்டு மந்திரங்கள் அடங்கிய தொகுப்பைச் சொல்லியும் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டும். 

சகலமும் அறிந்து,பின்பு அதை எனக்கு அளித்த  கூகுளுக்கு மனமார்ந்த நன்றி) அதிகாலையில் எழுந்து பஞ்சுவும், விசாலியும் மங்கள ஸ்னானம் செய்தார்கள். பின் பஞ்சு புது வேஷ்டியை பஞ்சகச்சமாக அணிந்து,விபூதி தரித்து காலை சந்தியாவந்தனத்தை முடித்தார். விசாலி புதுப்புடவையை மடிசார் கட்டுக்கொண்டாள்.

நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு, கூந்தலில் வீட்டிலேயே பூத்த ஜாதி மல்லி பூவை அணிந்தாள்.பிறகு இருவரும் ஆத்து வாத்யாரிடமிருந்து தேங்காய்களை வாங்கி பூஜை அறையில் ஸ்வாமி முன்பு  தேங்காய்களை வைத்து நமஸ்காரம் செய்தார்கள். ராஜ கோபாலன்,மங்களம் மற்றும் சுந்தரேசன்,ஜானகி தம்பதிகளிடம் தேங்காய்களை கொடுத்து நமஸ்காரம் செய்தார்கள்.பின்னர் வைதிகாளுக்கும் சபைக்கும் நமஸ்காரம் செய்து மணையில் அமர்ந்தார்கள்.விசுவுக்கும் தைலம் தடவி ஸ்னானம் செய்யப்பட்டு புது உடுப்பு அணிவிக்கப்பட்டது.

வைதீக கார்யம் நடந்து கொண்டிருக்கும் போதே உள்ளூர் தட்டான் வந்து விசுவின் காதுகளிள் துளையிட்டு சிறிய தங்க தோடுகள் மாட்டினார்.காது குத்தும் போது அவன் அழுத அழுகை சொல்லி மாளாது. வழக்கம் போல விசாலிக்கு தாங்க முடியவில்லை. தட்டானுக்கு சன்மானம் தந்தார்கள்.ஆத்து வாத்யார் வைதீக கார்யங்களில் ஒரு குறையுமில்லாமல் பிரமாதமாக நடத்திக்கொடுத்தார். அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக  ராஜ கோபாலன் அவருக்கு

சம்பாவனை செய்தார். நவக்கிரஹ ஹோமத்திற்கும்,இதர கார்யங்களுக்கும் வந்திருந்த வைதீகர்களுக்கு மடி சமையல் பறிமாறப்பட்டடது.

கடைசி பந்தியில் பெண்கள் சாப்பிட்டு முடிக்க பகல் ஒரு மணி ஆகிவிட்டது. முன்பாக சுந்தரேசன், ஜானகி வாங்கி வந்திருந்த வெள்ளி கிண்ணத்திலிருந்து விசாலி, விசுவுக்கு  பருப்புஞ்சாதம் ஊட்டினாள்.அதற்கு முன் நெய் கலந்த அன்னத்தில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து விசுவுக்கு விசாலி ஊட்டினாள். சுந்தரேசனும் ஜானகியும் பேரனுடன் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு சென்றார்கள்.விசாலி மங்களத்துக்கு கூடமாட ஒத்தாசைகள் செய்து வந்தாள்.

பஞ்சு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கும்போணம் சென்று ஆனந்த விகடன், கல்கி,கலைமகள்,அமுத சுரபி முதலியவற்றை வாங்கிவந்தார்.விசாலிக்கு சாதாரண நாட்களில் அதையெல்லாம் படிக்க நேரமே கிடைப்பதில்லை.

இதற்காகவே கடவுள் பெண்களுக்கு மாதத்தில் சில நாட்கள் கொடுத்திருந்தான். அது போன்ற நாட்களில் விசாலி எல்லா புத்தகங்களையும் படித்து விடுவாள்

No comments:

Post a Comment