Monday, March 20, 2023

கோடக நல்லூர் பெருமாள் கோயில்

 மத்யமர் குழும உறவுகளுக்கு வணக்கம்🙏🙏

ஒருமுறை நானும் எனது சகோதரி அவர்களும் கோடக நல்லூர் சென்று விட்டு வந்து நடுக்கல்லூரில் பேருந்துக்காக ஒரு தேங்காய்க் கடை முன்பு நின்று கொண்டிருந்தோம்.

 கடைக்காரர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார். என் சகோதரி வா வேறு இடம் போய் நின்று கொள்வோம் என்றார்.

அவர் சொன்னது கோடக நல்லூரில் ஒரு பெருமாள் கோவில் மிகவும் விசேடமானக் கோவில் என்று..

   பெருமாள் என்றதும் ஆர்வத்தில் சொல்லுங்கள் ஐயா என்றேன்.

 கார்கோடகன் என்ற நாகம் ஒரு சமயம் தீக்குள் மாட்டிக் கொண்டது .நளன் அதனைக் காப்பாற்றினார். பின்பு சாபத்தால் அவர் தமயந்தி மற்றும் பிற  எல்லாவற்றையும் மறந்து விட்டார். 

  தனக்கு உதவிய அவருக்கு கார்கோடகன் தீண்டிடவே சாபம் நீங்கியே பழைய நினைவு திரும்பினார் நளமகராசன்

    ஆனால் நளனைத் தீண்டிய கார்கோடகன் பாவம் நீங்க பெருமாளிடம் மோட்சமும் முக்தியும்  வேண்டிக் கேட்டிடவே. . 

பெருமாளும் தாமிரபரணிக் கரையிலே தவம் இயற்று  தாமிரபரணி கிழக்கு முகமாக ஓடி தெற்கில் திரும்பி மறுபடியும் கிழக்காகத் திரும்பும் அந்த இடம்தான் உனக்கு தவமியற்றிட  ஏதுவானது .என்றும் பின்பு உனக்கு அகத்தியர் வந்து முக்தி அளிப்பார் என்றும் உரைத்தாராம்.

    அதன்படியே. 

கார்கோடகனும் தாமிரபரணி நதியில் ஒரு பாறை மீது அமர்ந்து தவம் செய்யத் தொடங்கியதாம். மனம் ஒருமிக்காததால் ஆற்றின் சேற்றையும் மண்ணையும் வைத்து பெருமாளைப்  பிரதிஷ்டை செய்து தவம் செய்ததாம் .

தவம் முடிவடையும் காலம்  பெருமாள் அதன் மூன்றே தோன்றி நீ மோட்சம் பெறுவாய் என்று திருவாய் மலர்ந்தாராம்.

   பொதிகைமலைக்கு வந்த அகத்தியரும் கார்கோடகனுக்கு முக்தி அருளினாராம்.

  கதையைக் கேட்டதும்  கோவில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆவி துடித்தது.

   நானும் என் தோழியை அழைத்துக் கொண்டு  கோவில் சென்றேன்..

அர்ச்சகர் வந்து அவரும் இதே கதையை விவரித்தார். கோவிலுக்குப் பின்புறம் உள்ள பாறையில் தான் தவம் இயற்றியதையும்.. நாகத்தின் மூச்சுக் காற்றால் பெருமாள் முகம் நீல நிறமாகவும் இருக்கிறது என்று தீபாராதனைத் தட்டை உயர்த்திப் பிடித்துக் காண்பித்தார்..

அபிஷேகம் கிடையாது. உற்சவருக்குதான் அபிஷேகம் என்றார் 

கார்கோடகனே செய்த பெருமாள் இவர் என்றார் 

எங்களுக்கு வைகுண்டம் சென்று வந்த சிலிர்ப்பு.

   தீபாராதனைத் தட்டில் என்னோட தோழி மா ஐம்பது ரூபாய் போட்டார்.

 அடுத்து அவர் சொன்னதுதான் என்னவோ போலாகி விட்டது..

   பெருமாள் யாரும் வந்து பூ பழங்கள் பத்தி குங்குமம் துளசி கற்கண்டு இப்படி ஏதாச்சும் கொண்டு வந்து சேவிக்க மாட்டார்களா அவர்களுக்கு நாம் அருள் பாவிக்க மாட்டோமாட்டோமான்னு வனாந்திரத்துல இருக்கிறாப்போல காத்து இருக்கிறார். இப்படி வெறுங்கையோடு சேவிக்கலாமோ.. அடுத்து வரும் போது அவைகளில் ஏதாச்சும் கொண்டு வாருங்கள் சேமமாயிருங்கள்னு சொன்னார்.. 

நாகம் முக்தியடைந்த ஸ்தலம் என்பதால் பித்ருக்கள் திதி செய்யவும் நாக தோசம் நிவர்த்தி கல்யாணமாகாதவர்கள் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கும் பரிகாரம் செய்கின்றனர்..காரிய அனுகூலமும் வெற்றியும் அடைகின்றனர்.

  தாமிரபரணி புஷ்கரணியின் போது எனது முகநூல் தோழியுடன் அந்த இடத்தில் நீராடினோம். வேன் டிரைவர் ஒரு புது விஷயம் சொன்னான்.வெற்றிலையில் சூடன் ஏற்றி தண்ணீரில் விட்டால் முதலில் தெற்கு நோக்கிப் பயணமாகி பின்பு கிழக்கில் திரும்பும் என்று. உடனே நாங்களும் செய்தோம் .தெற்கு முகம் சென்று கிழக்காக சென்றது.

  மிகவும் பிரசித்திப் பெற்ற இந்தக் கோவில் வரலாறும் எனது அனுபவமும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

திருநெல்வேலியிலிருந்து 7கி மீ தூரத்தில் உள்ளது. நடுக்கல்லூர் என்னும் ஊரில் இறங்கி 1கிமீ ல் கோடகநல்லூர் அடையலாம்.இயன்றவர்கள் சென்று பலனடையுங்கள்.

செல்லும் பாதை இருபுறங்களும் வயல்களும் நீர் நிலைகளும் மிக ரம்மியமாகக் காட்சியளிக்கும்.

இத்தலத்தில் நிறைய நாகங்கள் உண்டு ஆனால் யாரையும் எதுவும் செய்வதில்லை.

எம்பெருமான் திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment