Wednesday, March 29, 2023

மூன்று தலைமுறை - 10

 மூன்று தலைமுறை - 10

விசுவுக்கு ஐந்தாவது  மாதம் நடந்து கொண்டிருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி இருக்கும். விசாலி கத்தினாள். 'அம்மா.இங்கே வா.வா. சீக்கிரம் வா' என்றாள். கொதித்துக் கொண்டிருந்த ரசத்தை அப்படியே அடுப்பில் விட்டுவிட்டு ஜானகி, என்னவோ ஏதோ என்ற பயத்தில். விசாலியின் ரூமுக்கு ஓடிச்சென்று பார்த்தபோது விசாலி சந்தோஷத்தில் குதித்துக்கொண்டிருந்தாள். விசு முதல் முறையாக குப்புறப் படுத்துக்கொண்டு இருந்தான். 'விசு குப்புற படுத்து விட்டான் அம்மா'என்று கத்தினாள்.அவளுக்கு விசு சந்திரமண்டலத்துக்கே போன மாதிரி இருந்தது. ஜானகி குழந்தைக்கு சாயங்காலம் திருஷ்டி சுத்தி போட வேண்டுமென்றாள்.அதற்கப்புறம் அடுத்த சில நாட்களில் இரண்டு மூன்று முறை குப்புற படுத்துக்கொண்டு விட்டான். ஆறாம் மாதம் ஒரு நல்ல நாளில் விசுவையும் விசாலியையும் பஞ்சு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள். தான் புதிய இடத்தில் வந்திருக்கிறோம் என்று புரியக் கூடிய வயதில்லை விசுவுக்கு. பஞ்சுவும் மங்களமும் விசுவை மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்கள். ராஜகோபாலனுக்கு குழந்தைகளை எடுத்து அதிக பழக்கம் இல்லை. அதனால் எப்போதாவது ஒருமுறை பேரனை எடுத்து கொஞ்சுவார்.

விசுவுக்கு எட்டாவது மாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அடிக்கடி அழ ஆரம்பித்தான். அருகில் கிடைப்பதையெல்லாம் வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித்தான். பின்பு வயிற்றாலை (பேதி.புரிகிற மாதிரி தமிழில் சொன்னால் லூஸ் மோஷன்!) ஆரம்பித்தது. விசாலி மிகவும் பயந்து போனாள்.

பஞ்சுவிடம் கும்பகோணம் சென்று டாக்டரிடம் காண்பித்து கொண்டு வரலாமா என்று கேட்டாள். அதற்குள் மங்களம் 'அவசரப்படாதே.பல் முளைக்கப் போறதுன்னு நினைக்கறேன். எதற்கும் காமு பாட்டியை கேட்டூ டலாம்' என்றாள். காமு பாட்டி வந்தாள். விஷயத்தை  கேள்விப்பட்டவுடன் தன் கையை நன்றாக அலம்பி துடைத்துக்கொண்டு விசுவின் வாயிலில் விரலை வைத்து தடவினாள். பின்னர் விசாலியிடம் 'ஒண்ணுமில்லை விசாலி. உன் குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பிச்சூட்த்து. ஈறு கொழுத்துண்ருக்கு. இதனால் தான் எதை வேண்டுமானாலும் வாயில் போட்டுகணம்னு நெனைக்கிறான். இந்த சமயத்தில் வயிற்றாலை மிகவும் சகஜம். உடம்புல தண்ணீர் குறஞ்சூடும். கொஞ்சம் முடிஞ்சவரைக்கும் தண்ணீரை சுட வைச்சு நாட்டு சக்கரை போட்டு கொஞ்சம் கொஞ்சமா கொடு.முதல்ல ரெண்டு பால் பல் முளைக்கும்.அப்றம்  சரியாகிவிடும்' என்று கூறினாள். நீர்சத்து குறைவதை De- Hydration என்று காமு பாட்டிக்கு தெரியாது.ஆனால் நீர் சத்து குறைந்தால் என்ன ஆகும்,அதற்கு மாற்று என்ன செய்ய வேண்டும் என்பது காமு பாட்டிக்கு அத்துபடி.

இதுக்குதான் வீட்டில் வயதானவர்கள் இருக்க வேண்டும் என்றார்கள்.இலவச பாட்டி வைத்தியம் கிடைக்குமல்லவா.

விசாலி நிம்மதி பெருமூச்சுவிட்டாள். பாட்டி சொன்ன மாதிரியே கொஞ்ச நாட்களில் விசுவின்  கீழ் தாடையில் வெள்ளி மாதிரி இரண்டு பால் பற்கள்  தோன்ற ஆரம்பித்திருந்தன.

கிட்டத்தட்ட விசுவுக்கு 11 மாதம் நடக்கும் போது பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். இரண்டடி நடப்பான். பின்பு கீழே விழுவான்.  அழுவான். விசாலிக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். என்ன செய்வது? எல்லா தாய்மார்களுக்கும் இந்த அனுபவம் நேர்ந்திருக்கும்.

No comments:

Post a Comment