Friday, March 31, 2023

பயங்கரம்

 51. பயங்கரம் (சிசீ 9) #ganeshamarkalam

நான், எங்கம்மா, தங்கை. திருவான்மியூரில் அப்பா வாங்கின அப்பார்ட்மென்டில் இருக்கம். அப்பாவோட அரவணைப்புல நீடித்து வாழ கொடுத்து வைக்கலை. கொரானுவல போய்ட்டர். ஆத்து பொருப்பு என்னுதாச்சு.

அம்மா எல்லாரையும் தெகிரியமா இருக்கக் கத்துத் தந்துண்டு தனக்குத் தேவையான தெகிரியத்தை எங்களைப் பாத்து வரவழைச்சிண்டு. 

நான் அதையும் இதையும் செஞ்சு முடியாம கடைசீல மாஸ் கம்யூனிகேஷன் பண்ணிட்டு திரும்பவும் அதையும் இதையும் செஞ்சுட்டு இப்போ ஆத்துலவே SFX லேப் வச்சு சில பல பெரீய ப்ரொடக்ஷன் ஹவுஸ்களோட சேர்ந்து சாம்பாத்யத்துக்கு வழி தேடிண்டாச்சு. போதுமானது வந்திண்டிருப்பதால் சிரமப் படலை. அடுத்த வருஷம் தங்கை படிப்பை முடிச்சிட்டா ஏதாவது வேலைக்குப் பொக ஆரம்பிச்சுடுவா.

சுந்தர் ஃபிலிம் இண்ட்ஸ்ட்ரீல இருக்கான் தலைதூக்கிட்டான்னு அம்மாக்குப் பெருமை. இன்னைக்குக்கூட என் ரூமுல உக்காந்துண்டு சில வேலைகளை முடிச்சுத்தர வேண்டியிருக்கு அதில் மும்முரமா. ஆத்துக்கு மாம்பலத்துலேந்து ஒரு மாமி வந்திருக்கா. அம்மாக்கு தெரிஞ்சவள். மருந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தாளாம். “சுந்தர் என்ன பண்ணிண்டிருக்கான்?” என்னமோ போண்ணைக் கொடுத்துடப் போராப்போல் கேட்டா. அம்மாவும் வரன் பேசராப்போல “சினிமா பண்ணிண்டிருக்கான், 3 படம் சைன் ஆகியிருக்கு. கைநிறைய சம்பாதிக்கரான்.” சூர்யா ரேஞ்சுக்கு சொல்ரா. வாஸ்த்தவத்தில் மாமி பொண்ண எனக்குப் பிடிக்கும். கல்யாணத்துல பாத்திருக்கேன். செம ஃபிகர். நல்ல புத்திசாலி. இன்ஃபோசிஸ்ல இருக்கா. மாமி மசியராப்போல் தெரியலை.

அப்பா வேலைபாத்த பேங்கில் தெரிஞ்சவர் மூலமா லோன் போட்டு இன்வெஸ்ட் செஞ்சுதான் லேப் எக்யுப்மென்ட்ஸ்லாம். லேடெஸ்ட் ப்ராஸசர், வெர்ச்சுவல் ரியாலிடி கேமராக்கள், அனிமேஷன் சாஃப்ட்வேர், மோஷன் கேப்சரிங்க் அக்ஸெசரீஸ்னு. இதெல்லாம் பயன்படுத்த காசுகட்டி யூஎஸ் காலேஜுல பயிற்சி எடுத்துண்டாச்சு. ஆனா இந்த சினிமா உலகம் நிரந்தரமில்லைன்னு தெரியும். ஒருநா இலைன்னா ஒருநா இந்த சினிமா டெக்னாலஜியச் சார்ந்து போயிடும் இந்த லைனில் இருப்பவாளுக்கு வேலைக்கு பஞ்சமிருக்காதுன்னு ஹேஷ்யம். என்ன ஒண்ணு நம்மள அப்டேட் செஞ்சுண்டே இருந்தாணம், அதுக்கே சிலவாகும்.

கம்ப்யூடரை வச்சிண்டு இப்ப எடுக்கும் சின்மாவுல MGR, சிவாஜின்னு எல்லாரையும் எப்படி நடிக்க வச்சுடலாம்னு முயற்சிகள் நடந்துண்டுதான் இருக்கு. உதாரணத்துக்கு அம்மாக்கு கமல் பிடிக்கும். தசாவதாரத்துல கமலோட எங்கம்மா அந்த கார் சேஸிங்க் சீனுல பல்ராம் நாயுடுவோட பின்னாடி சீட்டுல உக்காந்துண்டு போராப்போல நான் கம்ப்யூடர்ல செஞ்சு காட்டிட முடியும். இல்லை சந்திரமுகீல நயந்தாராவுக்கு பதிலா ஜோதிகாவோட ரஜனி டான்ஸ் ஆடராப்போல் செஞ்சுடலாம், பிரபுவுக்குத் தெரியாம. இல்லை ரெஜீனா கசான்ட்ராவும் நானும் டூயட் பாடராப்போல. ரெஜீனா ஆடும் படக்காட்சீல உதயநிதியத் துக்கிக் கடாசீட்டு நான் எடுத்து வச்சிண்டிருக்கும் செல்ஃபீய வச்சே இத்தனை திகுடுதத்தங்களும் சாத்தியம். 30 செகண்ட் அப்படி நானே பாடிண்டு ஆடராப்போல் செஞ்சு வச்சிருக்கேன். யாருக்கும் காமிக்கலை. ரெஜீனாவ இல்லியனா சைஜுக்கு குறைக்கலாம் இல்லை குஷ்பூ மாதிரி உப்ப வைக்கலாம். செஞ்சு பாத்தப்பரம் தங்கைக்கு போட்டுக் காட்டலாம்னு உத்தேசம்.

வந்திருக்கும் மாமி கேட்டா என் சாமர்த்தியங்களை சொல்லலாம். நாழியாகிடுத்து ஓலா வந்துடுத்துன்னு கிளம்பிட்டா. அம்மா உள் காரியமாப் போயாச்சு. நான் இப்பெல்லாம் WFHதான். டிஸ்க்ஷன் இருந்தா ஸ்டூடியோக்கு இல்லை ப்ரொட்யூஸர் வீட்டுக்கு போணம். சிலசமயம் ஃபைனல் பிராடக்ட்டை மும்பையில் இருப்பவாளுக்கு இல்லை ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிடீக்கு ஜூம் கான்ஃபரன்ஸ் காலில் போட்டுக் காமிக்கணம். திருத்தங்கள் சொல்லுவா. செஞ்சு தரணம். ஃபைனல் எடிட்டிங்க் போது கூட இருந்தா நல்லது, சமாச்சாரம் தெரியாதவன் சிதைச்சுடுவான்.

செஞ்சிண்டிருந்த வேலை சித்தே புதுசு. ஷங்கர் படம். ரெம்ப சீக்ரஸி. கதையச் சொல்லாம நான் பங்குகொள்ளப்போர சீக்குவன்ஸை மட்டும் நீட் டு நோ பேசிஸில் சொல்லுவா. அதைப் புரிஞ்சிண்டு வேலைய ஆரம்பிக்கணம். சந்தேகம் கேட்டுக்கலாம். முழு விபரங்கள் சொல்லப்பட மாட்டாது. இவா சொன்னதை வச்சிண்டு கொஞ்சம் நாமளா சிலதை யூகிச்சுக்கலாம். ரஜனி படமோன்னு டவுட். இன்னும் சைன் பண்ணலையாம். ரோபோ ரேஞ்சுக்கு ஸ்க்ரீன்ப்ளே வச்சிண்டு என்னவோ பெச்சுவார்த்தை ஆகிண்டிருக்குனு ரூமர். ஷங்கருக்கு கமலையும் ரஜனியையும் சில ஹாலிவுட் ஏக்டர்ஸையும் ஒண்ணா திரையில் கோண்டுவந்துடணம்னு ஆசை. கதாநாயகன் சென்ட்ரல் ஆப்பிரிக்க காடுகளுக்கு போவதாயும் அங்கே அமேரிக்க சயின்டிஸ்டு ஒருத்திய சந்திப்பதாவும் இருவரும் கூட்டா அரிதாகிவரும் விலங்குகளை பாதுகாக்க முயற்சிக்கரப்போ வில்லன் ரஷ்யாவுலேந்து வந்து இவாளுக்கு இடைஞ்சல் தருவதாயும் படம் முத்து மாதிரி ஆரம்பிச்சு, ஹட்டாரியா மாறி கடைசீல ஜேம்ஸ் பாண்ட் படமா முடிய சாத்தியங்கள் நிறைய. அதுல அனிமல் சீக்குவென்ஸெல்லாம் எனக்குத் தந்திருக்கா.

பல பாஸிபிலிடீஸை காமிக்கணம். சிங்கம், யானை. காண்டாமிருகம். அதில் சிலதை தேர்ந்தெடுத்து இதை இப்படி செஞ்சுதாம்பா. அப்பரம் ஹீரோ யாருன்னு சொல்லி அவாள ஸ்ட்யூடியோவுல வச்சு சிலதை எடுத்து அனுப்புவா. அப்பத்தான் யார் ஹீரோன்னு தெரியும். அதையும் நான் செஞ்சு வச்சிருப்பதையும் சேர்க்கணம். இவ்ளோதான் மேட்டர். சேர்த்ததை ப்ரிவ்யூ காமிச்சு அவாளுக்கு பிடிச்சுட்டா எடுத்து படத்துல சேர்த்துப்பா. கடைசீல எடிட்டிங்கில் சிலது அடிபட்டுடும் மிஞ்சினதே திரைக்கு வந்து நீங்கெல்லாம் பாப்பேள். இதுல யானை புலீல்லாம் வந்துட்டதும் ஹீரோவோட கம்பீரம் குறைஞ்சதுன்னா என்னுத வெட்டிடுவா. தெரிஞ்சதுதான்.

எனக்கு கடைசீல சினிமாவுல யூஸ் செஞ்ச ஃபுடேஜுக்கு மட்டுந்தான் காசு. அதைப்போல் 50 மடங்கு செஞ்சிருப்பேன். கக்கூஸுல ஊத்திட்டதா நினைச்சுக்கலாம். ப்ரொட்யூசர் யாரோ குஜராதி சேட். சங்கரோட பேசவேயில்லை. எல்லாம் அவரோட மூணாவது அஸிஸ்டென்டோடத்தான். 

ஆப்பிரிக்காவுல அரிதாகி வரும் காட்டு யானைதான் எனக்கு தோணித்து. அதை ப்ராமினென்டா வச்சு எப்படி ரஷ்யாக்காரா அதோட தந்தத்துக்காக அதை வேட்டையாடரான்னு படிச்சதால் அதையே கொண்டு வந்துட்டேன். இயல்பா அவா நடமாடிண்டு இனவிருத்தி செஞ்சுண்டு அப்பப்போ சண்டை போட்டிண்டிருக்கும் ஃபுட்டேஜஸை வச்சு நான் எனக்குத் தேவையானதா அனிமேட் செஞ்சூண்டாச்சு. எதுக்கால ரஜனி ஆப்பிரக்கா காஸ்ட்யூமில் நிக்கராப்போலவும் இவர் கையில் இருக்கும் ஈட்டிய கண்டு சித்தே கூட பயப்படாம ஒரு யானை பிளிறிண்டே வராப்போலவும் கிட்டக்க வந்ததும் ரஜனீன்னு தெரிஞ்சதும் சலாம் வச்சுட்டு திரும்பிப் போராப்போலவும் இவர் “கதம் கதம்”னு பாபா முத்திரை காமிப்பதா, அதைப் பாத்த அந்த செக் சயின்டிஸ்ட் 23 வயசு லிண்டா இவர் மேல் காதல் வயப்படுவதாவும் அந்த இடத்துல இவனுவ கட் செஞ்சு மால்டைவ்ஸ் தீவுக்கு டூயட்டுக்கு போயிடராப்போல் செஞ்சுக்கட்டும்னு ஒண்ணு செஞ்சிருந்தேன். ரஜனி இல்லைன்னாலும் அஜீத், விஜய் யார வேணும்னாலும் இணைக்கலாம்.

இன்னொண்ணு! எத்தனைதான் வயசான ரஜனியக் காமிக்க? ஏற்கனவே அண்ணாத்த ஊத்திட்டது தெரியும். அதனால அதே யானை இன்னும் பிற விலங்குகளோட சண்டை போட்டு ஜெயிக்கராப்போல (கிங்க் காங்க்+கோட்ஜில்லாவுல வராப்போல்) சிலதும் வச்சிருக்கேன் கேட்டா தந்துடலாம்னு. எல்லாத்தையும் ஜெயிச்ச யானை கடைசீல ரஜனிகிட்ட தோத்துப் போவதா வச்சிண்டா இமேஜ் கெடாது.

ஆபிரக்க யானை பாத்திருக்கேளா? படத்தில் பாக்கலாம். அது சும்மா நின்னாலே பேன்ட் ஈரமாகிடும். ஆசிய யானையைவிட பெரீசா. தலைய உசந்திண்டு நடக்கும். காது மடல் ரெம்பப் பெரீசு. தும்பிக்கையில ரெண்டு உதடு. பெரீய தந்தங்களோட 14 அடி உசரத்துக்கு வேகமா உங்களைப் பாத்து வந்ததுன்னா குடல் அதுவாவே வெளீல வந்துடும். நான் என் கம்ப்யூடரில் அதை 30அடியா காமிச்சேன். நினைச்சுப் பாத்துக்கலாம். அங்கேயே போய் படம் ஷூட் செய்யலாம்தான். இந்த யானை நாம சொல்லித்தராப் போலெல்லாம் நடிக்காது. ஒரு கேமரா க்ரூ மட்டும் போய் சுற்றூப்புற சூழலையும் காடுகளையும் எடுத்துண்டு வந்து எனக்குத் தந்துட்டா அதை பேக்ரவுண்டுல வச்சு அதுல நான் செஞ்ச யானைய வச்சு ஆட்டங்கள் சில காமிச்சப்பரம் அது கண்பார்வையுல ஆப்பிரக்க இன காஸ்ட்யூம்ல டூப்ளீகேட் ஆள வச்சு போட்டுக் காமிச்சாச்சு. இப்பத்தான் சொல்ரானுவ ரஜனிய சைன் செஞ்சாச்சாம். ரெம்ப நல்லதுன்னும் அவர் நடிக்கராப்போல ராமோஜி ஃபில்ம் சிடீல எடுத்ததை கொடுங்கோ பண்ணி முடிச்சிடலாம்னு.

மொத டோக்கன் அட்வான்ஸ் 1 லட்சம் தந்ததும்தான் வேலை ஆரம்பிச்சேன். முழு கான்ன்ராக்ட் 1 நிமிஷ ஃபுடேஜுக்கு 5 லக்ஷம் தரதா பேச்சு. இதுவரைக்கும் செஞ்சு வச்சிருப்பதே 20 நிமிஷம். கடைசீல இதெல்லாம் ஃபர்ஸ்ட் க்ளைமேக்ஸில் வரதால் ஒரு 5 நிமிஷம்தான் வைப்பா. கடைசீல 18ஆவது ரீலில் யானையும் ரஜினியும் சேர்ந்து வில்லனை அடிக்கரதா கேட்டிருக்கா. அது ஒரு 5  நிமிஷம் தேவைப்படும். மொத்தமா 10 நிமிஷத்துக்கு 50 லட்சம் எனக்கு சேரணம். ஆனா அதுக்காக நான் செய்யப்போரது 100 நிமிஷ ஃபுட்டேஜ். அதை செய்ய எனக்கு 45நாட்கள் ஆகும். அதுவும் ராப்பகலா உழைச்சா. இப்போ மேற்கோண்டு செய்யரத்துக்கு மின்னாடி முழு அட்வான்ஸ் 5 லட்சத்தையும் கேட்டுட்டா என்னன்னு பட்டது. போனில் கேட்டப்போ “இன்னொரு 1 லட்சம் தரம், முழு சீகுவன்ஸ் முடிச்சுத்தாங்க சொச்சத்தை அப்பரம் பாத்துக்கலாம். சங்கரே சொல்லச் சொன்னாரு. ரஷ் பாத்த ரஜனி உங்க வொர்க் ரெம்ப பிடிச்சிருப்படா சொல்லச் சொன்னாரு” இதுவேற! ஆனா இந்த பொய் பாராட்டுகள் என்னை புளகாங்கிதப் படுத்தலை. கையுல காசு வாயில தோசைனாத்தான் சந்தோஷம். ஆனா என்ன செய்ய?

எப்படியோ பாருங்கோ, எல்லாம் முடிச்சுத் தந்து எல்லாம் தேர்வாகி ஆகக்கூடி 18 நிமிஷ சிக்குவன்ஸ் மொத்தமா நான் தந்ததை வச்சிண்டு முழுப்படத்தையும் எடிட் செஞ்சு டப்பாவுல போட்டுவைக்க 2 வருஷமாச்சு. இப்போ எனக்கு கொடுத்த 2லட்சம் அட்வான்ஸ் போக 88 லட்சம் தரணம். எல்லாம் சேர்த்து இன்வாயிஸ் அனுப்பியாச்சு. இதே வேலையை அமேரிக்காவுல அனுப்பிச் செஞ்சிருந்தா இவாளுக்கு 10மில்லியன் டாலர் தீட்டியிருப்பான். சுமார் 75 கோடி. அவாளுக்கு வந்தா ரத்தம் நமக்கு வந்தா தக்காளிச் சட்னி. பாப்பம்னு என் விரல்களை குறுக்கா வச்சுண்டு உக்காந்திருக்கேன். அதுக்கப்பரம் ஒண்ணும் சைனாலை. இது வெளிவந்தா சுந்தர் ஃபேமஸாவானோ?

படமும் வந்தது. படத்துக்கு மொத்தமா அனா சிலவு 320கோடியாம். எல்லா ரைட்ஸும் வித்ததுமே இவாளுக்கு 800கோடி வருமானம். ஆக லாபத்தை கணக்குப் போட்டுக்கலாம். எனக்கு தரவேண்டியது வரலை. சரித்தான் ஒரு எட்டுப்போய் என்னன்னு விசாரிச்சுட்டு வரலாம், இதையெல்லாம் WFHஆ சாதிக்கமுடியாதுன்னு சங்கரோட ஆபீஸைத் தேடிண்டு போரேன். வந்த காரியம் என்னன்னு தெரிஞ்சிண்டு மும்பை ப்ரொட்யூஸருக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தத்தில் அவா ஒண்ணூம் செய்யமுடியாதுன்னு சொல்ரான் அந்த மூணாவது அஸிஸ்டென்ட். வாஸ்த்தவந்தான். ஃப்ளைட் பிடிச்சு மும்பை

மும்பை கொலாபாவுல ப்ரொட்யூஸர் வீட்டுல என்னைப்போல பலபேர் வந்து காத்திண்டிருப்பதை பாக்க முடிஞ்சது. அப்பாயின்ட்மென்ட்டே கிடைக்கலை. ஆனா வந்தவா எல்லாருக்கும் நல்லா சாப்பாடு பரிமாறி கெளரவிச்சா!. பாப்பம்னு கிளம்பி வரச்சே ப்ரபாதேவீல இருக்கும் சித்தி விநாயகர் கோவிலுக்குப் போய் எனக்குச் சேர வேண்டியது தாமதமாகாம கைக்கு வந்து சேரணம்னு வேண்டிண்டு ஏர்ப்போர்ட்டுக்கு வந்தாச்சு. சென்னைக்கு வர ராத்திரி 1030. ஆட்துள்ள நுழையரேன் மணி 11:30. நான் வரட்டும் சாப்டேனோ இல்லையோண்னு எங்கம்மா முழிச்சிண்டிருக்க மனசுக்கு கவலையாப் போயிடுத்து.

ரெண்டுநா ஆனதும் இந்த மாச சிலவுக்கு எங்கே போகன்னு ஏக்கம் மனசுல. நம்ப வாழ்க்கையையும் கூட வித்யாசமா கம்ப்யூடர்ல SFX செஞ்சு க்ரேஃபிக்ஸ்ல மேம்படுத்தி ஜகஜோதியா சந்தோஷம் மிக்கதா செஞ்சுட முடிஞ்சுட்டா? பேக்ரவுண்டுல சொர்கத்தோட ஷாட்ஸ் வச்சு, நான், என் தங்கை அம்மா ஹேப்பியா ஆத்து ஹாலில் தாயக்கட்டு விளையாடிண்டிருகப்போ செத்துப்போன எங்கப்பாவும் ஆபீஸ்லேந்து வந்து கூடவே இருக்காப்போல. சமைக்கக் கோள்ள ஆள் போட்டு அம்மாக்கு ரெஸ்ட் தங்கைக்கு பெரீய இடத்துலேந்து வரன் கேட்டு வாசல்ல கார் வச்சிண்டு காத்திண்டிருகராப்போல. செய்யணம்னு நினைச்சுண்டே படுத்துத் தூங்கரேன்

சொப்பனத்துல ரெம்பப் பெரீசா ஆப்பிரக்க யானை ஒண்ணு சீற்றத்தோட ஓடி வராப்போலவும் நான் பயந்து எழுந்து கட்டில்ல உக்காந்துண்டா அது என்னடான்னா சலாம் வச்சுட்டு ரிவர்ஸில் போராப்போலவும். கார்த்தால 8 இருக்கும் செல்போன் அடிச்சது. மும்பை சேட். “சுந்தர் சார்! எப்படி இருக்கீங்க? வந்திருந்தீங்களாம் இப்ப சொல்ரான். பாக்க முடியல. மன்னிக்கணம். சேர வேண்டியத உங்க அக்கவுன்டுக்கு ட்ரேன்ஸ்ஃபர் செஞ்சுட்டேன். வந்திச்சா பாருங்க?” ‘கொஞ்சம் இரு’ன்னுட்டு பாத்தா க்ரெடிட் ஆனதுக்கு SMS! முழுசா 1 கோடி! நன்றி சொல்ரேன். 

“நன்றி கிடக்கட்டும் சார். உங்க யானைய திரும்பக் கூப்பிட்டுக்கங்க. ரெண்டு நாளா கனவுல வந்து பயங்கரமா பிளிறிட்டு பீதியக் கிளப்பிட்டு!”.

(இதற்குப் பிறகு சீசன் 9இல் சின்ன ப்ரேக் எடுத்துக்கரேன். திரும்ப சந்திக்கும் தினம் அறிவிக்கப் படும்.)

பலம்

 47. பலம் (சிசீ 9) #ganeshamarkalam

ரயில்வே ஸ்டேஷணுக்கு மின்னாடி நேந்திரங்காய் சிப்ஸ் பண்ணி விக்கர கடைகள். 10க்கு மேல ஒரே ரோவா. 

என்னமோ கோட்டயத்துக்கு ரயிலில் வந்து இறங்கினதும் சிப்ஸ் வாங்கி வாயில போட்டுக்காம யாரும் அவாவாத்துக்கு போமாட்டா மாதிரி. வெளியூருக்குப் போரவா எல்லாரும் ஆளுக்கு 2 கிலோ வருவல் வாங்கி வழீல சாப்டூட்டு சொச்சத்த போர ஊரில் இறங்கினதும் விநியோகம் செஞ்சுட்டுத்தான் மறுவேலை. கால 6 மணிக்கு தொறந்தா மும்முரமா காயத் தோல் சீவரதும் தேங்காய் எண்ணையக் காய்ச்சிண்டு அதுக்கு மேலே 4 காயச் சேர்த்து பிடிச்சிண்டு சரக் சரக்குன்னு. சிப்ஸ் மட்டுமா? இல்லை. என்னென்னமோ. இப்போ கேரளா போளி சேர்ந்திட்டது. எதுக்கு இத்தனை கடை? லாபம் கொழிக்கரத்துனாலதானே! இல்லைன்னா மூடிண்டு போயிடமாட்டாளா என்ன?

கேரளான்னுட்டா நேந்திரங்காய்தானா? மலையாள பாஷை இல்லையா? மம்மூட்டி மொகன்லால் கிடையாதா? நயந்தாரா? நான் இங்கே வந்ததும் அவள் அங்கே தமிழ்நாட்டுக்குப் போய்ட்டா. அதனால என்ன? மஞ்சு வாரியர் இல்லையா என்ன? கோட்டயத்துல யாரும் காணக் கிடைக்க மாட்டா. இங்கே சபரிமலைக்கு போரவாதான்.

பக்தி மிகுந்த பயணமா இருந்தது இப்போ களியாப் போயிடுத்து. எல்லாத் தரப்பட்டவாளும் மலைக்குப் போரா. கோட்டயம் வந்துட்டு போறவாதான் நிறைய. இங்கேந்து பஸ் வேன் வச்சிண்டு போய் ஏறி தரிசனம் முடிஞ்சதும் வந்து ரயில் பிடிச்சு. போரப்போ சாதுவா ரயில்லேந்து இறங்கரவா கோட்டயம் பிராமண சமூகத்துல சிரம பரிஹாரம் செஞ்சுண்டு அங்கே ஃப்ரீயா கிடைப்பதை அள்ளி வாயுல போட்டுண்டு அதேபோல பதவிசா திரும்பப் போராளான்னா இல்லா. என்னமோ 40 நா ஜெயிலில் அடச்சு வச்சுட்டாப்போல இருமுடி கொடுத்தப்பரம் எப்படா இறங்குவம்னு. அதுலேயும் பல சின்னப்பசங்க பம்பையாத்தங்கரைக்கு இறங்கி காலப் பதிச்சதும் மத்யம் பாட்டில தொறந்து தொண்டைல ஊத்திண்டு பரோட்டா கடிச்சிண்டு. இல்லை கோட்டயம் வந்ததும் அரசாங்க பாரில் நல்ல சரக்கா சிப்ஸ் சைட் டிஷ்!

நீ யாரு? நீ எப்படி இதெல்லா அறியாம்னு நினைக்கலாம். ஞான் பரையாம் என்ன அவசரம்?

நான் பலராமன். சொந்த ஊர் கன்யாகுமரி. 3 வயசுல இந்தூருக்கு வந்தாச்சு. இங்கேதான் ஸ்டேஷன்லேந்து பஸ் போர ரோடுல வந்தா சீமாட்டி சர்கிள் வரும். அங்கே ஒன்வே பண்ணிட்டா. நேரப்போயி ரைட்ல திரும்பினா திருநாக்கர மஹாதேவர் கோவில், இந்தூரில் பிரசித்தம். அங்கே கோவில் யானையா இருக்கேன். இந்தண்ட பக்கம் பள்ளத்துல போனால் பிராண சமூகம். சபரிமலை யாத்ரீஸ் வந்துண்டும் போயிண்டும். வரவா சிவன் கோவிலுக்கும் வருவதால் எல்லாம் அறியாம், நாமளும் அப்பப்போ ஊர்வலமாப் போரம், குட்டசேட்டன் காலார அழைச்சிண்டு போவான், வரவா சன்சாரிக்குன்னது கேட்டு, நாமளே கண்டுப்பதையும் கலந்துபோட்டு தீர்மானம் செஞ்சுப்பதுதான்.

கோவிலில் என்ன வேலை? சும்மா நிக்கணம். அரைவயித்துக்கு ஆகாரம். நிப்பதே சிரமம். கோவிலுக்கு வரவாளுக்கு காட்சி கொடுக்கணம். கார்த்தால, சாயரக்ஷை ஊர்வலமா கோவிலுக்குள்ளவே. பெரீசா கொட்டாய் வசதியா கொடுத்திருக்கா. வருஷத்துக்கு ஒருதடவை மலைப்பிரதேசத்துல கேம்ப். பராமரிப்புக்கு அரசாங்கம் தரும் பேட்டாவுல பாதி குட்டன் பொண்ணு மேகலா படிப்பு சிலவுக்காகும். பெரீசா எடுத்துக்கலை. வெளீல போரப்போ என்னைக் காட்டி வருமானம் பாத்துப்பன் படவா.

கடைத்தெருவுக்குத்தான் போவம். தெரிஞ்ச பெரீய ஜவுளீ, நகைக்கடைங்கள்ல கூப்பிட்டு எனக்கு பூஜை செய்து இவன் கையில் 500 ரூபா கொடுப்பா. இப்படி போயிட்டு வரம்னு போலீஸுக்குத் தகவல் கொடுத்துடனம். செய்வான். ஆங்காங்கே போலிஸ் ஜீப் நிக்கும். யானைக்கு மதம் பிடிச்சா மயக்கமருந்து போட்ட புல்லட் சுடலாமே! ஃபாலோ செய்வா. பொதுமக்களுக்கு ஏதும் ஆகிடப் பிடாதுன்னுட்டு. என்னமோ அவன் அடிக்கும் புல்லெட் என்னைத் தூங்கப் பண்ணிடுமோ? பாப்பம்.

45 வயசாச்சு. முரண்டு செஞ்சு ஆர்ப்பாட்டம் காமிச்சிண்டதில்லை. கோபப் படும்படியா எதுவும் சம்பவிக்கலை. அப்பப்போ இந்த குட்டசேட்டன் நடந்துப்பத பாக்கரப்போ தும்பிக்கையால அவன் பின்னம்மண்டையில் ஓங்கி ஒண்ணு வைக்கலாம்மான்னு வரும். போய்ச் சேர்ந்துடுவான். பொண் இன்னும் படிப்பு முடிக்கலை. எதுக்கு வேண்டாமே! சாதுவா வேடிக்கை பாத்துண்டு போயிடரது. என்னைக் கடுப்பேத்தராப்போல் என்ன செய்வான்னு தெரிஞ்சுக்க ஆசையோ!

எப்பேர்ப்பட்ட பலம் பொருந்தியவர்கள் நாங்கள்! யானை பலம்னு மஹாபாரதத்தில் பீமசேனனுக்கு பெருமை. பலத்தில் எங்களை தரதம்யம் செஞ்சுப்பது உங்க வழக்கம். யானைப் படை இருந்தா ஜெயிப்பது கஷ்டம்னு எல்லா ராஜாக்களும் யானை வளர்த்து சண்டை பயிற்சி கொடுத்து வச்சுப்பா. மிகப்பெரீய பாரத்தை அநாயாசமா துக்கிண்டு போக, தொலைதூரத்துக்கு எறிய எங்களுக்கு சுலபம். தும்பிக்கையில் 150000 மசில்ஸ் இருக்கு. முழுசா வளர்ந்து நெடிதுயர்ந்து நிக்கும் மரத்தை நிமிஷமா வேறோட பிடிங்கி எரிஞ்சுடுவம். ஒரே டயத்தில் 7 டன் பளுவ தூக்கிண்டு நடப்பம், மேட்டுல ஏறுவம். 18ஆயிரம் பவுண்ட் இழுத்துண்டோ தள்ளிண்டோ நடப்பம். எங்களுக்கு இருக்கும் மோப்ப சக்தி நாயைவிட 100மடங்கு கூர்மையானது. அதேபோல் ஞாபக சக்தியும். இத்தனைக்கும் ப்யூர் வெஜெடெரியன்ஸ். மன்ஸிலாயீ? இலை தழைகள், உருட்டிக்கொடுத்த சாதக்கட்டி, வெல்லம், பழங்கள்னு கொடுத்துண்டேயிருந்தா களிச்சுண்டு யாருக்கும் குழப்பம் கொடுக்காம. காட்டில் யானைக் கூட்டத்தில் 20 யானை இருக்கும், எங்களுக்குன்னு ஒரு 100 சதுர மைல் காடும் பக்கத்துல நீர் வத்தாத நதியும் இருந்துட்டா மதி. ஆனா இப்படி பிடிச்சுண்டு வந்து கட்டுப்படுத்தி வேலை தரது என்னமோ போங்கோ.

இந்த குட்டன் எப்பேற்பட்ட யானையையும் கட்டுப்பாட்டில் வச்சுப்பானாம்! பீத்தல். மின்னாடி இருந்த யானையை இவன் பாத்துக்கலை இவன் அப்பன் பெரீய சேட்டனாம். அது கிடக்கட்டும். இவன் ஏது செய்யூ? என் காதுல அங்குசத்தை மாட்டி தொங்க விட்டூட்டு பீடி குடிப்பான். நாத்தம் சகிக்காது. காதாலயே அங்குசத்தை கடாசிடலாம். என்னமோ வச்சிருக்கான் பத்திரமா இருக்கட்டும்னு வச்சுப்பேன். வெளில அழைச்சிண்டு போனா அதை நான் நிக்கரப்போ காலுல சாய்ச்சு வச்சுடுவான். கால அசைச்சா கீழே விழுந்துடும். எடுத்து ரெண்டா உடெச்சு அவன் கையுல கொடுக்கலாம்னு தோணும். பாவம் ஒண்ணுதான் இருக்கு அவனண்டை. கோவில் கொட்டாயுல விட்டப்பரம் பெரீசா சங்கிலியால என் பின்னங்காலை கட்டி தரேல அடிச்சிருக்கும் கொக்கில மாட்டிட்டு வீட்டுக்குப் போவான். என்னமோ அதை அறுத்துப் போட்டூட்டு எனக்கு டாடா போக முடியாதுங்கிராப்போல். செய்யரதில்லை. செஞ்சா செய்யமுடியும்னு தெரிஞ்சிடும்.

எல்லாரும் யானைக்கு தன் பலம் தெரியாதுன்னும் செறிய அங்குசத்துக்கு கட்டுப்பட்டு தேமேன்னு இருக்கேனும். சமயம் கிட்டித்துன்னா என் பலம் என்னன்னு இந்த லூசுப் பசங்களுக்கு கொஞ்சமாவது காட்டணம். ட்ரெயிலர்தான். முழுப்படம் எப்ப வேணும்னாலும். அதுக்கு அவகாசம் கிடெச்சதுன்னு வச்சுக்கலாம்.

அன்னைக்கு கோவிலில் ப்ரதோஷம். சாயரக்ஷை நிறையபேர் வருவா. என்னையும் குளிப்பாட்டி விபூதி அழகா இட்டுவிட்டு முதுகில் அம்பாரி ஏத்திடப் போராப்போல தயாரா அங்கவஸ்த்ரம் மாதிரி ஒண்ணை சாத்திட்டான். அதுக்கே அவனுக்கு மூச்சு வாங்கித்து உக்காரச் சொல்லி இப்படியும் அப்படியுமா வந்து 30 நிமிஷமா போராடி ஒருவழியா 2 பக்கமும் சமமா போட்டுவிட. பழைய கொட்டாய் போடராப்போல லைனிங் வச்சு தெய்ச்ச லினன் துணி. உள்பக்கம் கரடுமுரடா வெளீல ஸ்முத்தா. மாத்தி வச்சு தெய்க்க மாட்டானுவளோ? அதான் சொன்னேனெ லூசுப் பசங்கன்னு. மணி 3 இருக்கும் ஊர்வலமா கடைத் தெருவில் வந்துட்டு பிரதோஷக்காலம் ஆரம்பிக்கரத்துக்கு மின்னாடி கோவிலுக்குத் திரும்பிடலாம்னு பிளான். அவன் இந்தமாசம் கொஞ்சம் கல்லா கட்டினா தேவலையோன்னு.

மஹாத்மாகாந்தி ஸ்குயர் கிட்டக்க இடதுபக்கம் திரும்பரம். லானா டயமண்ட் அண்ட் ஜுவெல்லர்ஸ். நிறுத்தச் சொல்லி உள்ளேந்து தேங்காய் புஷ்பம் கோண்டுவந்து தீபம் காமிச்சா. எனக்கு சீப்பு வாழப்பழம் தரா. அதை அவன் வாங்கி வச்சுக்கரான். கொடுத்தா யானைக்கு பித்தமாம். சின்ன யானைன்னா நீ சொல்ரது சரி. 45 வயசில் என்னடா பித்தம்? பெரீய சீப்பாப் பட்டது. கோண்டுவந்த பையுல வச்சுண்டான். இவனுக்கு காசு தரத்துக்காக கேஷியர் உள்ளேந்து வரத்துக்குள்ள அந்த சம்பவம் நடந்தது.

எங்கேந்தோ ஆட்டோக்காரன் ஒருத்தன் திருப்பத்துல யானையைப் பாக்காம வேகமா. பட்டுண்னு யானயோட பின்பக்கம் எதுக்காப்போல மலைபாதிரி பாத்துட்டு பயத்துல அந்தண்டை திரும்பி இந்தண்டை ஒடிச்சு நிறுத்தாம போயிடலாம்னு நினைக்க அவன் வண்டி லேசாத்தான் என் காலுல இடிக்க திரும்பரேன் என் தும்பிக்கைல அவன் ஆட்டோ முட்டி நின்னது. சவாரி யாருமில்லை. நான் என்ன செஞ்சேன்? தும்பிக்கையை மொள்ள சாஃப்டாத்தான் ஆட்டோமேல வச்சு இப்படியும் அப்படியுமா பெண்டுலம் மாதிரி ஆட்டரேன். ஆடோக்குள்ளேந்து அவன் ஓலம் “ஐயோ-ஐயோ”ன்னு. குட்டன் என்ன செஞ்சான்? “பலராமா நில்லு!” கையுல வச்சிருந்த அங்குசத்தால குத்தரான். இவனுக்கும் ஒரு பாடம் இன்னைக்கே புகட்டினாத்தான் சரிவரும்னு மனசிலாயி.

அவன் கையிலேந்து அங்குசத்தை பிடிங்கிண்டுட்டேன். ரோட்டுல வச்சு முன்னங்காலுக்கு அடீல சவுட்டிண்டாச்சு. இப்பொ எடுத்துக்கோடா பாப்பம்! அவன் ஏன் எடுக்கரான்! சான்ஸே இல்லைன்னு நகைக்கடைக்குள் போய் நின்னுண்டுட்டான்.  எதாவதுன்னா உள்ளே ஓடிக்கலாம்னு பிளானா இருக்கும். போனை எடுத்து யாருக்கோ. போலீஸுக்கா இருக்கும். வருவானுவ ஜீப்புல. மயக்கமருந்து புல்லட்டால அடிப்பாய்ங்களோ? பிரதோக்ஷமும் அதுவுமா அதையும் பாத்துடுவம். எல்லாத்தையும் என்னப்பன் மஹாதேவன் பாத்தூண்டேதானே இருக்கான். என் உதவிக்கு வராமலா. இப்போ மயக்கம் போட்டேன்னா அப்படியே கடைவாசல்ல படுத்துக்க வேண்டியதுதான். ட்ரேஃபிக் நின்னுடும். நானா எழுந்துண்டாத்தான் உண்டு. அட்லீஸ்ட் 6 மணிநேரம் ஆகும். அதெல்லாம் யொசிச்சானுவள்னா சுடமாட்டாய்ங்க. மதம் பிடிச்சிட்டாப்போலல்லாம் நடந்துக்கலை. அங்குசத்தை பிடிங்கிண்டாச்சு ஆட்டோவ உலுக்கிண்டே கீழே பாக்கரேன் ஆட்டோக்காரனை காணலை. ஓடிட்டான். புத்திசாலி.

சரிபோட்டம். ஆட்டோவ விட்டூட்டு நானா திரும்பி இந்தண்டை எதிர்பக்கமா நடக்கரேன். இங்கே இன்னொரு நேந்திரங்காய் சிப்ஸ் கடை. வாசல்ல நிறைய நேந்திரங்காய் தார். அதுல 2 பழுத்தது ஒரு தாரை எடுத்து சாப்டுக்கரேன். கடைக்காரன் எண்ணைக் கொப்பரைக்கு அந்தண்டைலேந்து பிராந்து பிடிச்சாப்போல முழிச்சிண்டு. எதுவும் செய்ய முடியாது, “எல்லாத்தையும் எடுத்து சாப்டுக்கோ!”. கோவில் யானை. நஷ்ட ஈடெல்லாம் கேட்டா மஹா பாவம்னும். ப்வ்யமா தேங்காய் போளிக்காக வச்சிருந்த தேங்காயுல ரெண்டை எடுத்து நீட்ரான். லஞ்சம் தரான். சாப்பிட்டு வைப்பம்னு வாங்கிக்கரேன்.

யோசிக்கரேன்.  நம்ம மேல எண்ணை பட்டுடாம கடாய தள்ளீ விடலாமா? கடைக்குள்ளே தும்பிக்கைய விட்டு சிப்ஸ் டப்பாவையெல்லாம் களேபரம் செய்யலாமா? இந்தண்டை ஜோஸ்கோ ஜுவெல்லர்ஸ். உள்ளே பூந்து பிடிச்சதா எடுத்து கழுத்துல மாட்டிக்கலாமா? பலராமனுக்கு எதுக்கு ஆபரணங்கள்? அதானே!

அப்பத்தான் 3 வயசிருக்கும் பையன் ஒருத்தன் “ஐயா! யானை!” சொல்லீண்டே என் முன்னாடி வந்து நிக்கரான். குனிஞ்சு பாக்கவேண்டியிருக்கு. அவன் கையுல உரிச்ச வாழைப்பழம். தான் சாபிடலாம்னு வச்சிருந்ததை எனக்கு நீட்டி “இந்தா!” சொல்லித்து அந்த குழந்தை. அதை எப்படி பிடுங்கி திங்க? தப்பாச்சே! பயப்படாம கிட்டக்க வந்து தும்பிக்கைல பழத்தால தட்டி “இந்தா இந்தா!”னு சொன்ன குழந்தை அப்படியே கட்டிண்டு கன்னத்தை தும்பிக்கையில வச்சுண்டு என்னமோ சின்னதா பாட்டுப்பாடி அதோட அம்மா இவனைத் தூங்கப் பண்ணராப்போல எனக்கு செஞ்சு. பாடிண்டே அவனே தூங்கிட்ட அதிசயம் நடந்தது. 

தும்பிக்கைய அசைச்சா குழந்தைக்கு தூக்கம் கலைஞ்சுடும், இல்லை கீழே விழலாம். தூக்கி ரோட்டோரமா வைக்கலாமா?. வேண்டாம் அப்படியே ஆடாம நிப்பம், பொடியன் தூங்கிக்கட்டும்னு அசையாம நின்னுட்டேன்.

யானைக்கு தன் பலம் தெரிஞ்சும் அந்த பலத்தை பிரயோகம் செய்யாம இப்படி இருப்பதுலேயே! எங்களோட மனவுறுதியே எங்க உடல் பலத்துக்கு அஸ்திவாரம். இதை எல்லா சனங்களும் புரிஞ்சிக்கட்டும் இன்னைக்குன்னு தோணியது. கோபம்னு வந்தா அதக் காட்டக் கிளம்பினா வேற சமாச்சாரமா போயிடும் ஆமாம்.

சித்தே போனதும் குட்டன் ஒடிவரான். வந்தவன் குழந்தையை எங்கிட்டேந்து வாங்கி தூரக்க அலறிண்டே ஒடிவந்த அதன் தாயாரிடம் ஒப்புவிச்சுட்டு என் தும்பிக்கையைப் பிடிச்சிண்டு “வா”ன்னு கோவில் பக்கமா அழைச்சிண்டு பொரான். பரம சாதுவா அவன்கூடப் பொரேன்.

வெங்காய வடை

 வெங்காய வடை

Viji

*தே பொருட்கள்*

வெங்காயம்.   : 3(நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கவும்)
கடலைமாவு.   : 2 கப்
அரிசி மாவு.     : 1 கப்
மிளகாய்த்தூள்.  : 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்.    : 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை.  : சிறிது
எண்ணெய்.    : தேவையான அளவு

செய்முறை.  

1. அகலமான பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொண்டு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

2. ஐந்து நிமிடம் கழித்து எண்ணெயில் சிறிய சிறிய வடையாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

3. தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

Wednesday, March 29, 2023

மூன்று தலைமுறை -12

 மூன்று தலைமுறை -12

விசுவிற்கு 12 மாதம் முடிந்து 13 ம்மாதம் ஜன்ம நக்ஷத்ரத்தில் ஆயுஷோமம்(ஆயுஷ் ஹோமம்)செய்ய ஏற்பாடானது.

(இந்து மத தர்மப்படி குழைந்தைக்கு ஹோமத்துடன் செய்யப்படும் மிகவும்  முக்கிய வாய்ந்த விசேஷம் இது.எனவே இதைப்பற்றி கொஞ்சம் விஸ்தாரமாக விவரிக்க போகிறேன்.விவரிக்க போகிறேன் என்றால் எனக்கு இது எல்லாமே தெரியும் என்று அர்த்தமல்ல.கொஞ்சம் தெரிந்தது. ரொம்ப கடன் வாங்கியது.கடன் கொடுத்து கை கொடுத்தது வேறு யார். கூகுள்தான்.எந்தக் குழந்தைக்காக இந்த ஹோமத்தைச் செய்கிறோமோ அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி, ‘‘வேதங்கள் கூறும் வழியில் இந்தக் குழந்தையின் ஆயுள் மேன்மை அடைவதற்கும், அபமிருத்யு தோஷ பரிகாரத்துக்காகவும், இந்தக் குழந்தைக்கு இருக்கும் எல்லா துக்கங்களும் நீங்குவதற்காகவும், இதன் மனதில் தோன்றும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதற்காகவும், இந்தக் குழந்தையின் முதல் ஆண்டு நிறைவில் - இரண்டாம் ஆண்டு ஆரம்பத்தில் - பிறந்த மாதத்திலும், ஜென்ம நட்சத்திரத்திலும் என்னென்ன தோஷங்கள் ஏற்பட்டதோ அவற்றுக்குப் பரிகாரம் செய்யவும், ஆயுள் தேவதையின் அருள் ஸித்திப்பதற்காகவும், அந்த அருளால் நீண்ட ஆயுள் கிடைக்கவும், ஆயுஷ்ய ஹோமம் என்ற இந்த கர்மாவைச் செய்கிறேன்’’ என மந்திரங்களால் சங்கல்பம் செய்ய வேண்டும்.

ஹோமத்துக்காக வழக்கம் போல சதுரமான அக்னி குண்டம் உருவாக்கி அதில் அக்னியை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அக்னிக்கு வடக்கில் தரையில் நெல்லைப் பரப்பி, அதன்மேல் நுனி வாழையிலையில் அரிசியைச் சதுரமாகப் பரப்பி, எட்டு இதழ் பத்ம கோலம் போட்டு அதன் மேல் கும்பத்தை வைக்க வேண்டும்.

இதில் ‘இமம் மே வருண’ என்ற மந்திரத்தின் மூலம் சகல தீர்த்தங்களின் அதிபதியான வருணனை முதலில் தியானித்து ஆவாகனம் செய்ய வேண்டும். இதன் பிறகு இந்த ஹோமத்துக்கு முக்கிய தேவதையான ஆயுள் தேவதையை தியானித்து ‘ஆயுஷ்டே’, ‘ஆயுர்தா அக்னே’ என்ற மந்திரங்களைச் சொல்லி கும்பத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும்.

குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அந்த நட்சத்திரத்துக்கான தேவதை ஆகியோரை தியானித்து ஆவாகனம் செய்ய வேண்டும்.

ஆயுஷ்ய ஹோமத்துக்குத் திரவியம் அன்னம்தான். அன்னத்தை வேக வைக்கும்போது தண்ணீரோடு கொஞ்சம் பால் சேர்த்து வேக வைக்கவேண்டும். கண்டிப்பாக இதை வடிக்கக் கூடாது. அப்படியே கஞ்சி சுற்றிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டும். இந்த அன்னத்தில் ஒரு பகுதியை  காகத்துக்கு உணவிடுவதற்காக வைக்க வேண்டும். இன்னொரு பகுதியை ஹோமத்துக்காகவும் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

‘ஆயுஷ்டே’, ‘ஆயுர்தா’ ஆகிய மந்திரங்களால் அன்ன ஹோமமும், நெய் ஹோமமும் செய்ய வேண்டும். (சிலர் அரச மர சமித்துகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள்!) மந்திரங்களைச் சொல்லி ஹோம குண்டத்தில் அன்னத்தை இடும்போதே அதில் கொஞ்சத்தை ஓர் இலையில் தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஹோமத் தீயில் நெய் விடும்போது அதில் ஒவ்வொரு தடவையும் மிஞ்சுவதை இந்த அன்னத்தில் கொட்டிவிட வேண்டும். இந்த நெய் கலந்த அன்னத்தில் கடைசியில் கொஞ்சம் வெல்லம் கலந்து குழந்தைக்கு ஊட்டிவிட வேண்டும். ஹோமத்தின் முடிவில் கும்பத்தில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து குழந்தை மீது தெளிக்க வேண்டும்.

கடைசியில், ‘‘இந்த நட்சத்திரத்தில், இந்த ராசியில் பிறந்த இந்தக் குழந்தை ஆயுள் விருத்தி பெறட்டும்... கஷ்டங்கள் தீரட்டும். இந்த வரங்களை அளிக்கும் வல்லமை கொண்ட அக்னி தேவனே... வாயுவே... சூரியனே... பிரஜாபதியே... அருளுங்கள்!’’ என மந்திரங்களைச் சொல்லி ஹோமத்தை முடிக்க வேண்டும். வழக்கமான மந்திரங்கள் தவிர, ஆயுஷ்ய சூக்தம் எனப்படும் எட்டு மந்திரங்கள் அடங்கிய தொகுப்பைச் சொல்லியும் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டும். 

சகலமும் அறிந்து,பின்பு அதை எனக்கு அளித்த  கூகுளுக்கு மனமார்ந்த நன்றி) அதிகாலையில் எழுந்து பஞ்சுவும், விசாலியும் மங்கள ஸ்னானம் செய்தார்கள். பின் பஞ்சு புது வேஷ்டியை பஞ்சகச்சமாக அணிந்து,விபூதி தரித்து காலை சந்தியாவந்தனத்தை முடித்தார். விசாலி புதுப்புடவையை மடிசார் கட்டுக்கொண்டாள்.

நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு, கூந்தலில் வீட்டிலேயே பூத்த ஜாதி மல்லி பூவை அணிந்தாள்.பிறகு இருவரும் ஆத்து வாத்யாரிடமிருந்து தேங்காய்களை வாங்கி பூஜை அறையில் ஸ்வாமி முன்பு  தேங்காய்களை வைத்து நமஸ்காரம் செய்தார்கள். ராஜ கோபாலன்,மங்களம் மற்றும் சுந்தரேசன்,ஜானகி தம்பதிகளிடம் தேங்காய்களை கொடுத்து நமஸ்காரம் செய்தார்கள்.பின்னர் வைதிகாளுக்கும் சபைக்கும் நமஸ்காரம் செய்து மணையில் அமர்ந்தார்கள்.விசுவுக்கும் தைலம் தடவி ஸ்னானம் செய்யப்பட்டு புது உடுப்பு அணிவிக்கப்பட்டது.

வைதீக கார்யம் நடந்து கொண்டிருக்கும் போதே உள்ளூர் தட்டான் வந்து விசுவின் காதுகளிள் துளையிட்டு சிறிய தங்க தோடுகள் மாட்டினார்.காது குத்தும் போது அவன் அழுத அழுகை சொல்லி மாளாது. வழக்கம் போல விசாலிக்கு தாங்க முடியவில்லை. தட்டானுக்கு சன்மானம் தந்தார்கள்.ஆத்து வாத்யார் வைதீக கார்யங்களில் ஒரு குறையுமில்லாமல் பிரமாதமாக நடத்திக்கொடுத்தார். அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக  ராஜ கோபாலன் அவருக்கு

சம்பாவனை செய்தார். நவக்கிரஹ ஹோமத்திற்கும்,இதர கார்யங்களுக்கும் வந்திருந்த வைதீகர்களுக்கு மடி சமையல் பறிமாறப்பட்டடது.

கடைசி பந்தியில் பெண்கள் சாப்பிட்டு முடிக்க பகல் ஒரு மணி ஆகிவிட்டது. முன்பாக சுந்தரேசன், ஜானகி வாங்கி வந்திருந்த வெள்ளி கிண்ணத்திலிருந்து விசாலி, விசுவுக்கு  பருப்புஞ்சாதம் ஊட்டினாள்.அதற்கு முன் நெய் கலந்த அன்னத்தில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து விசுவுக்கு விசாலி ஊட்டினாள். சுந்தரேசனும் ஜானகியும் பேரனுடன் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு சென்றார்கள்.விசாலி மங்களத்துக்கு கூடமாட ஒத்தாசைகள் செய்து வந்தாள்.

பஞ்சு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கும்போணம் சென்று ஆனந்த விகடன், கல்கி,கலைமகள்,அமுத சுரபி முதலியவற்றை வாங்கிவந்தார்.விசாலிக்கு சாதாரண நாட்களில் அதையெல்லாம் படிக்க நேரமே கிடைப்பதில்லை.

இதற்காகவே கடவுள் பெண்களுக்கு மாதத்தில் சில நாட்கள் கொடுத்திருந்தான். அது போன்ற நாட்களில் விசாலி எல்லா புத்தகங்களையும் படித்து விடுவாள்

மூன்று தலைமுறை -11

 மூன்று தலைமுறை -11

விசுவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு சில நாட்கள் முன்பு பஞ்சு குடும்பத்தினர் குல தெய்வமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றார்கள்.வண்டி கட்டிக்கொண்டு, முதல்நாள் சாயங்காலம் கிளம்பி ராத்திரி போய் சேர்ந்தார்கள்.நல்லூரியிலிருந்து  ஜானகியும்,சுந்தரேசனும் மறுநாள் காலை வந்து சேர்ந்தார்கள்.

(வைத்தீஸ்வரன் கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலின் மூர்த்தி  வைத்தியநாதர். அம்பாள் தையல் நாயகி. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்று ஒரு பெயரும் உண்டு.புள் என்ற சடாயு பறவையும், இருக்கு. (ரிக்)  வேதமும், வேள் என்கிற முருகப்பெருமானும், ஊர் என்கிற சூரியன் ஆகிய நால்வரும் இத்தலத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இப்பெயர் பெற்றது. இக்கோவிலின் குளம் சித்தாமிர்த குளம் என அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் இந்த குளக் கரையில் சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது ஒரு பாம்பு தவளையை முழுங்க முயலும் போது அவற்றை சபித்தார் சதானந்த முனிவர். இதன் காரணாமாக இன்றும் இக்குளத்தில் தவளை, பாம்பு போன்றவை காணப்படுவதில்லை

என்கிறார்கள்.

மற்ற கோவில்களில் எல்லாம் நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருக்கும். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்கள் அனைத்தும் இக்கோவிலின் மூலவரான வைத்தியநாதரின் சந்நிதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்கு பணிந்து பக்தர்களின் நோய்களையும், தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம்.

புற்று மண், அபிஷேக தீர்த்தம், அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி,

வேப்பிலை ஆகியவற்றை கலந்து “திருச்சாந்து” உருண்டை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை உண்பவர்கள் எல்லாவிதமான நோய்களும் நீங்கி முழு குணம் அடைவர் என்று நம்பப்படுகிறது.

இந்த ஸ்தலம் சீதா தேவியை இராவணன் கவர்ந்து சென்றபொழுது,கழுகு மன்னான ஜடாயு இடைமறித்து தடுத்ததால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட ஜடாயுவின் சடலத்தை இராமபிரான் மற்றும் லக்ஷ்மணன் இருவரும் இணைந்து இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து ஜடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளம் சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இதே போல திருவள்ளூரில் வைத்ய வீரராகவ பெருமாள் அருள்பாலிக்கிறார்.

ஸ்மார்த்தர்கள் இரு ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடுவது உண்டு)

குந்தையின் மாமா அல்லது தாத்தா (அப்பாவின் அப்பா) மடியில் உட்காரவைத்து மொட்டை போட வேண்டும் என்ற முறை இருப்பதால் ராஜகோபால ஐயர் மடியில் உட்கார வைத்து விசுவுக்கு மொட்டை அடிக்கப்பட்டது.(விசாலிக்கு சொந்த சகோதரனோ ஒண்ணுவிட்ட சகோதரனோ கிடையாது)

மொட்டை அடிக்கும்போது விசு அழுது, ஆகாத்யம் செய்து ஊரை கூட்டிவிட்டான். ராஜகோபாலனால் அவனை வைத்துக் கொள்ளவே முடியவில்லை. கையிலிருந்து  திமிறினான். கஷ்டப்பட்டு தான் அவனை பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

மங்களமும்,பஞ்சுவும் ராஜகோபாலனுக்கு இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொண்டு  விசுவை பிடித்துக்கொண்டார்கள்.விசுவோ விசாலியிடம் போக வேண்டுமென்று அடம் பிடித்தான். இப்படியாவது குழந்தையை அழ வைத்து மொட்டை போட வேண்டுமா என்று விசாலிக்கு மனதில் தோன்றியது. அப்படி தோன்றிய உடனே மீண்டும் அவள்  'அபசாரம்.  அபசாரம்.  தெரியாமல் ஏதேதோ நினைத்துவிட்டேன்.

தெய்வ குத்தம் இல்லாமல் இருக்கணம்' என்று வேண்டிக்கொண்டாள்.மொட்டை அடித்ததும், 

விசுவை குளிப்பாட்டி தலையில்  சந்தனம் தடவினார்கள். சுவாமிக்கு உச்சிகாலத்தில் விசுவின் பெயரில் அர்ச்சனை பண்ணப்பட்டது.  கொஞ்ச நேரம் ஆனதும், களைப்பில் குழந்தை உறங்க ஆரம்பித்தான். சுந்தரேசன், ஜானகி கொண்டு வந்திருந்த சாப்பாட்டை அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள். மாலை மீண்டும் தையல்நாயகி சமேத  வைத்யநாதனையும்,

முத்துக்குமரனையும் வழிபட்ட பின்னர் கிளம்பி இரவு வீடு வந்து சேர்ந்தார்கள் .

மூன்று தலைமுறை - 10

 மூன்று தலைமுறை - 10

விசுவுக்கு ஐந்தாவது  மாதம் நடந்து கொண்டிருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி இருக்கும். விசாலி கத்தினாள். 'அம்மா.இங்கே வா.வா. சீக்கிரம் வா' என்றாள். கொதித்துக் கொண்டிருந்த ரசத்தை அப்படியே அடுப்பில் விட்டுவிட்டு ஜானகி, என்னவோ ஏதோ என்ற பயத்தில். விசாலியின் ரூமுக்கு ஓடிச்சென்று பார்த்தபோது விசாலி சந்தோஷத்தில் குதித்துக்கொண்டிருந்தாள். விசு முதல் முறையாக குப்புறப் படுத்துக்கொண்டு இருந்தான். 'விசு குப்புற படுத்து விட்டான் அம்மா'என்று கத்தினாள்.அவளுக்கு விசு சந்திரமண்டலத்துக்கே போன மாதிரி இருந்தது. ஜானகி குழந்தைக்கு சாயங்காலம் திருஷ்டி சுத்தி போட வேண்டுமென்றாள்.அதற்கப்புறம் அடுத்த சில நாட்களில் இரண்டு மூன்று முறை குப்புற படுத்துக்கொண்டு விட்டான். ஆறாம் மாதம் ஒரு நல்ல நாளில் விசுவையும் விசாலியையும் பஞ்சு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள். தான் புதிய இடத்தில் வந்திருக்கிறோம் என்று புரியக் கூடிய வயதில்லை விசுவுக்கு. பஞ்சுவும் மங்களமும் விசுவை மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்கள். ராஜகோபாலனுக்கு குழந்தைகளை எடுத்து அதிக பழக்கம் இல்லை. அதனால் எப்போதாவது ஒருமுறை பேரனை எடுத்து கொஞ்சுவார்.

விசுவுக்கு எட்டாவது மாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அடிக்கடி அழ ஆரம்பித்தான். அருகில் கிடைப்பதையெல்லாம் வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித்தான். பின்பு வயிற்றாலை (பேதி.புரிகிற மாதிரி தமிழில் சொன்னால் லூஸ் மோஷன்!) ஆரம்பித்தது. விசாலி மிகவும் பயந்து போனாள்.

பஞ்சுவிடம் கும்பகோணம் சென்று டாக்டரிடம் காண்பித்து கொண்டு வரலாமா என்று கேட்டாள். அதற்குள் மங்களம் 'அவசரப்படாதே.பல் முளைக்கப் போறதுன்னு நினைக்கறேன். எதற்கும் காமு பாட்டியை கேட்டூ டலாம்' என்றாள். காமு பாட்டி வந்தாள். விஷயத்தை  கேள்விப்பட்டவுடன் தன் கையை நன்றாக அலம்பி துடைத்துக்கொண்டு விசுவின் வாயிலில் விரலை வைத்து தடவினாள். பின்னர் விசாலியிடம் 'ஒண்ணுமில்லை விசாலி. உன் குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பிச்சூட்த்து. ஈறு கொழுத்துண்ருக்கு. இதனால் தான் எதை வேண்டுமானாலும் வாயில் போட்டுகணம்னு நெனைக்கிறான். இந்த சமயத்தில் வயிற்றாலை மிகவும் சகஜம். உடம்புல தண்ணீர் குறஞ்சூடும். கொஞ்சம் முடிஞ்சவரைக்கும் தண்ணீரை சுட வைச்சு நாட்டு சக்கரை போட்டு கொஞ்சம் கொஞ்சமா கொடு.முதல்ல ரெண்டு பால் பல் முளைக்கும்.அப்றம்  சரியாகிவிடும்' என்று கூறினாள். நீர்சத்து குறைவதை De- Hydration என்று காமு பாட்டிக்கு தெரியாது.ஆனால் நீர் சத்து குறைந்தால் என்ன ஆகும்,அதற்கு மாற்று என்ன செய்ய வேண்டும் என்பது காமு பாட்டிக்கு அத்துபடி.

இதுக்குதான் வீட்டில் வயதானவர்கள் இருக்க வேண்டும் என்றார்கள்.இலவச பாட்டி வைத்தியம் கிடைக்குமல்லவா.

விசாலி நிம்மதி பெருமூச்சுவிட்டாள். பாட்டி சொன்ன மாதிரியே கொஞ்ச நாட்களில் விசுவின்  கீழ் தாடையில் வெள்ளி மாதிரி இரண்டு பால் பற்கள்  தோன்ற ஆரம்பித்திருந்தன.

கிட்டத்தட்ட விசுவுக்கு 11 மாதம் நடக்கும் போது பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். இரண்டடி நடப்பான். பின்பு கீழே விழுவான்.  அழுவான். விசாலிக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். என்ன செய்வது? எல்லா தாய்மார்களுக்கும் இந்த அனுபவம் நேர்ந்திருக்கும்.

Tuesday, March 28, 2023

மூன்று தலைமுறை - 9

 மூன்று தலைமுறை-9

பஞ்சு ஒரு நாள் கும்மோணம் சென்று குருராஜ் ஜோசியரை பார்த்து விசு பிறந்த தேதி, நேரம் மற்றும் நட்சத்திரம் முதலியவற்றைக் கொடுத்து ஜாதகம் குறிக்கச் சொன்னார். ஜாதகத்தை குறித்த ஜோதிடரும் ஜாதக பலன்களை கூற ஆரம்பித்தார்.விசுவுக்கு பூரண ஆயுளும்,நல்ல ஆரோக்கியமும் இருக்கும் என்று கூறினார்.படிப்பில் அதிக புத்திசாலியாக விளங்குவான் என்றும் கூறினார். இதை கேட்ட பஞ்சுவுக்கு  பரம ஆனந்தமாக இருந்தது. அதுக்கப்புறம் ஜோசியர் இன்னும் இரண்டு விஷயங்களை கூறினார்.இந்த இரண்டு விஷயங்களும்  ஜோசியர்,பஞ்சு மற்றும் எனக்கு மட்டும்தான் தெரியும்.இதை தெரியப்படுத்தும் வேளை வரும்போது நானே தெரியப்படுத்துவேன். முதல் விஷயம் பஞ்சு வுக்கு மிகவும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. இரண்டாவது விஷயம் அவனுக்கு கொஞ்சம் வருத்தத்தை அளித்தது. இரண்டாம் விஷயத்தை தன்னிடம் சொல்லியிருக்க வேண்டாமோ என்று நினைத்துக்கொண்டான். அடுத்து அவன் நல்லூர் சென்று விசாலியையும் குழந்தையும் பார்க்கும்போது விசாலியிடம் ஜோதிடரை பார்த்து வந்து விஷயத்தைக் கூறினார். குழந்தை அதிபுத்திசாலியாக விளங்குவான் என்று கேட்ட விசாலம் 'எனக்கு இது முன்பே தெரியும் அவர் என் குழந்தை அல்லவா'என்றாள்.

இதை கேட்டு பஞ்சு சிரித்தார்

' நீ E.S.L.C வரைக்கும்தான் படித்திருக்கிறாய். இந்த லக்ஷணத்தில்அவன்  உன்னை மாதிரி புத்திசாலியாக இருப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்' என்று சொல்லி சிரித்தார்.இதை கேட்ட விசாலி'சரி.சரி.விடுங்கள.படிப்பு எப்படியோ போகட்டும்.நல்ல ஆரோக்கியமாக, தீர்க்காயுளாக இருப்பான் என்று கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது'என்றாள்

பிறந்த 45 நாளில்  விசு தலையை தூக்க முயற்சித்தான்.

சிலசமயம் தலை தரையில் தட்டியதும் அழுவான்.

விசாலிஅவனை தூக்கி கொண்டு 'வேண்டாண்டா என் செல்லமே.பட்டே' என்றெல்லாம் கொஞ்சுவாள்.

அவனது எடையும் உயரமும் இரண்டு மாதத்தில் கூடின மாதிரி விசாலிக்குபட்டது. 3 மாத முடிவில் விசுவின் பார்வை தெளிவாக பொருட்களின் மேல் திரும்பியது.முக்கியமாக கலர் ஆடைகள் அவன் கவனத்தை கவர்ந்தது.

நான்கு மாதம் நடந்து கொண்டிருந்த போது பேச முடியாவிட்டாலும் பேச முயற்சிக்க உதட்டை கூட்டுவான்.சத்தம் கேட்டால் திரும்பி பார்ப்பான்.

விசுவுக்கு புரிகிறதோ இல்லையோ விசாலி தன் சன்னமான குரலில் பாட்டு பாடுவாள். அவனிடம் பேச்சுகொடுப்பாள்.சிலசமயம் அவன் அவள் பேச்சை கூர்ந்து கேட்கிற மாதிரி நினைத்து கொள்வாள். இரவில் தாலாட்டு பாடுவாள்.தினமும் அவள் பாடல் இதுதான்.

" ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூ செண்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு".

இதே பாடலை தினந்தோறும் கேட்டாலும் சலிக்காது விசுவிற்கு!

4 மாத குழைந்தைக்கு பாட்டு புரியுமா? திரும்ப  திரும்ப கேட்பதால் சலிப்புதட்டுமா என ஆராய்ச்சி வேண்டாம்.விசாலிக்கு பிடிக்கிறது பாடுகிறாள். எனக்கு பிடிக்கிறது எழுதுகிறேன்.அவ்வளவே.

விசாலி மட்டுமா இப்பாடலை பாடினாள்.எனது அன்னை லக்ஷ்மி கூட இதே பாட்டை பாடித்தானே என்னை சிறுவயதில் உறங்க வைத்திருக்கிறாள். மறக்க முடியுமா இப்பாடலை?

மூன்று தலைமுறை - 8

 மூன்று தலைமுறை  - 8

புண்யாக வாசனம் முடிந்த அடுத்த நாள் பஞ்சு குடும்பம் ஊருக்கு கிளம்பியது.போகும்போது மங்களம் ஜானகியிடம் 'என் பேரனையும் விசாலியையும் எப்போது அனுப்புவதாக உத்தேசம்'என்று கேட்டாள்.

ஜானகி பதிலுக்கு 'விசாலிக்கு கொஞ்சம் உடம்பு தேறட்டும்.நல்ல நாள் பார்த்து கொண்டு விடறோம்' என்றாள்.

பஞ்சுவிற்கு விசாலியையும்,விசுவையும் விட்டு பிரியவே மனமில்லை. குழந்தைக்கு முத்தம் கொடுத்த பின் விசாலியைப் பார்த்து "வேளா வேளைக்கு சாப்பிடு. குழந்தை பத்திரம்' என சொல்லிவிட்டு கிளம்பினான்.

பின்பு சுந்தரேசனும், ஜானகியும் அஷ்டபுஜ காளி அம்மனுக்கு அபிஷேகம் செய்து விட்டு வந்தார்கள். பிள்ளை பெற்ற மூன்றாம் நாளிலிருந்தே விசாலிக்கு பத்திய சாப்பாடு போடப்பட்டது.( விசாலிக்கு பத்திய சாப்பாடு பிடித்து போயிற்று.

காரணம் என்னவென்றால் அந்த உணவு அவ்வளவு சுவையாக இருந்தது. வாய்க்கும்,வயிற்றுக்கும் எந்தக் கேடும் செய்யாத உணவு அது.குழந்தைக்கு  வேண்டிய பால் தாய்க்கு சுரக்கும்படியாக இச்சமயலை செய்வார்கள். தாய் உண்ணும் இந்த பத்திய உணவுகளால் பாலருந்தும் சிசுவுக்கு எவ்வித வயிற்றுக் கோளாறுகளும் ஏற்படாது.

பத்திய சமையல்களில் பொதுவாக பாசிப் பருப்புதான் சேர்க்கப்படும். சிலவற்றிற்கு தாளிப்பு இருக்கும். சிலவற்றிற்குத் தாளிப்பு தேவைப்படாது. மிளகு சீரகம், சித்தரத்தை, திப்பிலி, இதெல்லாம் இதில் உபயோகிக்கப்படும்). விசு சமர்த்தாக இருந்தான்.விசாலி கண்ணயரும்போது சில சமயம் அழுவான்.

ஜானகி விசாலியிடம் குழந்தையை எடுத்து விடச்சொல்லுவாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் பால் குடித்த மயக்கத்தில் விசு தூங்கி விடுவான்.விசு உறங்குவதையும்,அசைவதையும், கை கால் நீட்டி மடக்கி பூ மாதிரி கிடப்பதையும், மலங்க மலங்க விழித்துப் பார்ப்பதையும் காணக்காண விசாலிக்கு பரமானந்தமாக இருக்கும். விசுவின் முகத்தில் திடீரென  சிரிப்பு மலரும்.

(பெரியவர்கள்,கடவுள் குழந்தைக்கு காட்சி அளிப்பதே குழந்தை முழித்திருக்கும் போதோ தூங்கும் போதோ சிரிப்பதின் காரணம் என சொல்வார்கள்) இதழ் பிதுங்க வரும் அழுகை இவற்றையெல்லாம் காணக் காண விசாலிக்கு ஜென்மமே சாபல்யம் அடைந்துவிட்டதாக தோன்றும்.பாரதியின் ' சின்னஞ்சிறு கிளியே'வில் வரும் 'செல்வ களஞ்சியமாகவே' விசு விசாலிக்கு தென்பட்டான்.

ஒரு பெண் தான் கருவுற்றிருக்கும் காலத்தில் உடலால் பல துன்பங்களை அடைகின்றாள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தை மழலை முகம் பார்த்து தன் துன்பத்தை மறந்துவிடுகின்றாள். இதனை,

"வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு "
என்ற. நாலடியார் பாடல் வரிகள் உணர்த்துகினறன அல்லவா.

தூளியில் விசு ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 15 மணி நேரம் தூங்கினான்.

நடுவில் பஞ்சுவும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வந்து விசாலியையும், விசுவையும் பார்த்து விட்டு செல்வான்.

மூன்று தலைமுறை -7

 மூன்று தலைமுறை-7

குழந்தை பிறந்த பதினோராம் நாள் புண்யாகவாசனம் நடத்தப்பட்டது.

முதல் நாள் சாயங்காலமே ராஜகோபாலன் தம்பதிகள் பஞ்சு சகிதம் வந்திருந்தார்கள்.

காலையில் பஞ்சு, விசாலி மங்கள ஸ்னானம் முடித்து,சுந்தேரசன், ஜானகி வைத்து கொடுத்த புது வேஷ்டி, புடவை கட்டிக்கொண்டு  மணையில் அமர்ந்தார்கள்.

ஆத்து வாத்யார் நாகராஜ கனபாடிகள் வைதீக கார்யத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார்.

பருப்பு தேங்காய்,பழங்கள்,கற்கண்டு (சாக்லேட் என்றும் குறிப்பிட இருந்தேன். ஆனால் பதிவை படிக்கும் சில நண்பர்கள் 1941 களில் சாக்லேட் இருந்ததா என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லாததால் சாக்லேட்டை குறிப்பிடவில்லை) இத்யாதி ஐயிட்டங்கள் தாம்பாளத்தில் சீர் வரிசையாக வைத்து இருந்தது.

இன்னுமொரு தாம்பாளத்தில் குழந்தைக்கு புது டிரஸ்,காலுக்கு வேப்பிலை காப்பு,தங்க காப்பு,கைக்கு தங்க வளையல் வைக்கப்பட்டிருந்தது. குழந்தைக்கு இரு கன்னத்திலும் திருஷ்டி பொட்டு இட்டார்கள்.

கலசத்திலிருந்து ஜலத்தை புதுக்குழந்தையின் பெற்றோர்கள், குழந்தையின் மேலும் மற்ற அனைவரின் மேலும் தெளிக்கப்பட்டது.

கனபாடிகளின் சிஷ்யன் வீடு முழுவதும்  நீரால் ப்ரோக்ஷணம் செய்தார்.மங்களம் குழைந்தைக்காக செய்த தங்க காப்பு,அரை

ஞாண் கொடி, தங்க சங்கிலி, புது டிரஸ் அணிவித்தாள்.எல்லாம் முடிந்ததும் உணவு பறிமாறப்பட்டது.

சாயங்காலம் 4 மணி அளவில் குழந்தையை ஆகி வந்த தொட்டலில் போட்டார்கள்.சுமார் 25 வருடங்களுக்குமுன் விசாலியும் படுத்திருந்த குடும்ப தொட்டில்தான் அது.பெயர் சூட்டும் வைபவம் ஆரம்பமாயிற்று.

குழந்தைக்கு முதல் பெயராக தாத்தாக்கள் ராஜகோபாலன் மற்றும் சுந்தரேசன் பெயர்களை இணைத்து வருகிற மாதிரி சுந்தர்ராஜன் என்று தீர்மானித்து குழந்தையின் காதில் சுந்தர் ராஜன் என்று கூறப்பட்டது.

ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் அந்த நட்சத்திரத்திற்கு உரியவரும் கோமல் என்னும் ஊரில் அருள் பாலிக்கும் கிருபா கூபாரேச்வரரை நினைவு கூர்ந்து இரண்டாம் பெயராக குழந்தைக்கு கிருபாபுரி என்ற பெயர் இடப்பெட்டது.(சைவசமய குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரை தடுத்தாட்கொண்டவரும் திருவெண்ணை நல்லூரில்  அமர்ந்து அருள் பாலிக்கும் ஈசனின் பெயரும் கிருபாபுரீச்வரர் ஆகும்).மூன்றாவது பெயரை வைப்பதற்கு முன் விசாலி பஞ்சுவின் காதில் எதோ முணுமுணுத்தாள்.

அதைகேட்ட பஞ்சு  மூன்றாவது பெயராக கார்த்திகேயன் என்ற பெயர் வைக்கப்பட வேண்டும் எனக்கூற எல்லோரும் ஆமோதித்தார்கள். மூன்றாம் பெயராக கார்த்திகேயன் சூட்டப்பட்டது.

பழனி முருகன் அருளால் பிறந்த குழந்தை ஆதலால் முருகனின் பெயரான கார்த்திகேயன் பெயரை சூட்டுவது(ஆண் குழைந்தையாக பிறந்தால்) என்று முன்பே பஞ்சு, விசாலி தம்பதிகள் தீர்மானித்திருந்தார்கள். குழந்தையை வீட்டில் கூப்பிட ஒரு சுருக்கமான பெயரை தீர்மானம்  செய்யலாமா என்று கேட்டாள் விசாலத்தின் சித்தி. ரெண்டு தாத்தாக்களின் பெயரை சொல்லி குழந்தையை கூப்பிட முடியாது.  கார்த்திகேயன் என்ற பெயர் நீளமாக இருக்கிறது.எனவே சுருக்கமான பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள்.

விசாலியின் சித்தி இதைப் பற்றி முன்பே யோசித்து வைத்திருந்தாள். அப்பொழுது அவள் 'விசாலியின் பெயரில் முதல் எழுத்தையும், மாப்பிள்ளையின் வீட்டில் சுருக்கமாக கூப்பிடும் பெயரின் கடைசி எழுத்தையும் சேர்த்து 'விசு' என்று கூப்பிட்டால் என்ன' என்றாள்.இது எல்லோருக்கும் பிடித்துவிட்டது.

எனவே கார்த்திகேயன் வீட்டில் 'விசு' என்று அழைக்கலாம் என்று தீர்மானித்தார்கள். இந்த குழந்தை எந்த பெயரால் பிற்காலத்தில் அழைக்கப்பட போகிறானோ?

பின்பு யாராவது பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. விசாலியின் அத்தைக்கு நல்ல காத்ரமான குரல். எல்லோரும் அவளைப் பாடச் சொன்னார்கள்.  தன்யாசி ராகத்தில் அமைந்த 'பாலகிருஷ்ணன் பாத மலர்' என்ற போலகம் ராமையாவின் கீர்த்தனையை அவள் சிறப்பாக பாடினாள்.இந்த போலகம் ராமையா வேறு யாருமில்லை. பிற்காலத்தில் தமிழ் தியாகைய்யா என்று புகழப்பட்ட பாபநாசம் சிவன்தான் அவர்.(பாபநாசம் சிவன் அவர்கள் 1940-41 களில் இந்த பாடலை எழுதி இருக்கிறாரா என்று அடுத்த சர்ச்சையை கிளப்ப வேண்டாம். சில கெடுதல் அளிக்காத பொய்களும், வாழ்க்கையில் நடக்கும் சிலவற்றை மிகைப்படுத்திக்  காண்பித்தலும் கவிதைக்கும், கதைக்கும் இலக்கணமாகும். இப்படி இருப்பதால் தான் கதையோ கவிதையோ பரிமளிக்கிறது. எனவே தான் பாபநாசம் சிவன் அன்றே இப்பாடலை பாடி இருக்கிறாரா என்ற வீண் சர்ச்சை வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்)

கடைசியாக ஜானகியும், மங்களமும் ஆரத்தி எடுத்தபின் குழந்தையின் நெற்றியில் பொட்டு வைத்தார்கள்.

இப்பதிவில் வரும் பாலக்ருஷ்ணன் பாதமலர்

பாடல்  எனக்கு மிகவும் பிடித்தது.எனவே அதை ஒருவழியாக கதையில் புகுத்திவிட்டேன். அருமையான வரிகள் அமைந்த இத் தமிழ் பாடல் முழுவதும்கீழே கொடுத்துள்ளேன்.பாடலை ரசிக்க கர்னாட சங்கீத ஞானம் தேவையில்லை.

தமிழை ரசிக்க முடிந்தால் பாடலை ரசிக்கலாம்.

"பாலக்ருஷ்ணன் பாதமலர் பணிவோர்க்கு இடரிலை வர குண  
பாலக்ருஷ்ணன் பாதமலர்  
நீல முகில் போல் அழகன் நிறைமதி வதனம் 
அதனில் இள நகை நிலவ அருளொளி தவழும் 
பாலக்ருஷ்ணன் பாதமலர்

கோகுலம் ப்ருந்தாவனம் யமுனா விஹாரீ கோபாலன் 
கோபீ ஜன மன மோஹன முரளீ கான விலோலன்
வ்யாகுலம்   தவிர்த்தன்பர் மனதில் வாழ் கருணால வாலன்
பாலக்ருஷ்ணன் பாதமலர்"

மூன்று தலைமுறை -6

 மூன்று தலைமுறை -6

நல்லூரில் பஞ்சு நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார். பஞ்சுவிற்கு திரும்பி வரவே மனமில்லை.அந்த காலத்தில் இப்படி எல்லாம் மனைவியுடன் தொடர்ந்து இருப்பது வழக்கமில்லை. கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் கழிந்த பின்பு ஜானகிக்கு விசாலிக்கு பிரசவ வேளை நெருங்கிவிட்டது என்று சந்தேகம் வந்தது. இதை சுந்தரேசனிடம்  கூற சுந்தரேசன் கும்போணத்திற்கு சென்று பெரிய மருத்துவச்சியை(Midwife) பார்த்து தான் செய்தி சொன்னவுடன் வந்து  சேருமாறு ஏற்பாடு செய்துவிட்டு நல்லூர் திரும்பினார்.

நாலு நாட்கள் கழித்து விசாலிக்கு வலி ஆரம்பமான மாதிரி இருந்தது. காலையிலிருந்தே கொஞ்சம் சுகவீனம் ஆக இருந்த விசாலி நேரம் செல்லச் செல்ல வலி அதிகமாவதை ஜானகியிடம் கூறினாள். உடனே சுந்தரேசன் வண்டியை அனுப்பி மருத்துவச்சியை அழைத்து வரும்படி  சொன்னார்.மருத்துவச்சி வரும் போது இரவு பத்து மணி ஆகி விட்டிருந்தது. விசாலிக்கு காலையில் விட்டு விட்டு வந்த வலி இப்போது தொடர்ந்து இருந்து வந்தது. மருத்துவச்சி  விசாலி இருந்த அறைக்குள்  எல்லா ஏற்பாடும் செய்து முடித்தாள்.இரவு முழுவதும் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் விசாலி. மறுநாள்

காலை 5:30 மணி, விடியும் நேரத்தில் 'வீல்' என்று அமைதியை கிழித்துக்கொண்டு சத்தமிட்டது குழந்தையின் குரல்.

1940,செப்டம்பர் 4, புதன்கிழமை, ஹஸ்த நட்சத்திரத்தில் பஞ்சு விசாலி தம்பதிகளின் *சீமந்த புத்ரன்* சுப ஜனனம். ஜானகிக்கும் சுந்தரேசனுக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்த  பதினைந்து நிமிடத்தில்  மருத்துவச்சி வந்து குழந்தையை காண்பித்தாள். மீதி வேலைகளை முடித்துக்கொண்டு மருத்துவச்சி கும்போணம் திரும்பிச் செல்ல தயாரானாள்.

ஒரு தாம்பாளத்தில் புது புடவையும் ரவிக்கை, வெற்றிலை,பாக்கு வைத்து அதன் மேல் 50 ரூபாயும் மருத்துவச்சிக்கு வைத்து கொடுத்தார்கள். அதை வாங்கிக்கொண்ட மருத்துவச்சி மிகவும் சந்தோஷமாக

'நான் போய்ட்டு வரங்கே'என்று கூறினாள். சுந்தரேசன் அவளை வண்டியில் கொண்டு விட ஏற்பாடு செய்தார். போகும்போது மருத்துவச்சி 'அம்மா.உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.உங்கள் பெண்ணையும்,குழந்தையையும் நல்லா பாத்துகோங்க.பச்ச உடம்பு. கொஞ்சம் இளப்பா இருக்கா'  என்று கூறிவிட்டு சென்றாள். குழந்தை பிறந்த விஷயம் ராஜகோபாலனுக்கு தெரிவிக்கப்பட்டது. அன்று மாலையே ராஜகோபாலன்,மங்களம் மற்றும் பஞ்சு வண்டியில் வந்து இறங்கினார்கள். நேரே விசாலி இருந்த அறைக்கு சென்றார்கள். விசாலி அப்போதுதான் கண்ணயர்ந்து இருந்தாள்.யாரோ வரும் சத்தம் கேட்டு முழித்துக்கொண்டாள். 'வாங்கப்பா. வாங்கம்மா'என்று மாமனார் மாமியாரை ஈனஸ்வரத்தில் வரவேற்றாள். மங்களம்  குழந்தையை  கையில் எடுத்துக் கொண்டு  சிட்டிகை சர்க்கரையை குழந்தை வாயில் போட்டாள் .'ஏன்னா.பேரனைப்பாத்தேளா. அப்படியே  குழந்தையில் பஞ்சு இருந்த மாதிரியே இல்லை?' என்று மங்களம் ராஜகோபாலனைப் பார்த்து வினவினாள். நெற்றியும், முகவாய்க்கட்டையும் பஞ்சு மாதிரி இருந்தது. மூக்கும், கண்ணும் விசாலி மாதிரி இருந்தது. மொத்தத்தில் மிகவும் லட்சணமாக இருந்தான் குழந்தை. 

குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சினாள் மங்களம். அன்றிரவு அவர்கள் அங்கு தங்கிவிட்டு மறுநாள் ஊருக்குத் திரும்பினார்கள். சுந்தரேசன் 'புண்யாக வாசனத்துக்கு சொல்லி அனுப்புகிறேன். அவசியம் வந்து நடத்திக் கொடுக்க வேண்டும்' என்றார் 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லி கிளம்பினார்கள். ஜானகி விசாலிக்கு உதவுவதற்காக  ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்தாள். அந்தப் பெண் சதா சர்வகாலமும் விசாலிக்கு வேண்டிய தேவைகளை கவனித்துக் கொண்டாள். அதிகம் தொந்தரவு செய்யாமல் சமர்த்தாக இருந்தான் குழந்தை.இரண்டாம் தலைமுறை பிறந்துவிட்டது.இனி அதன் கதையும் சேர்த்தே பார்க்கவேண்டி உள்ளது.எனக்கும் வேலை கூடிவிட்டது.

Wednesday, March 22, 2023

மினி அதிரசம்

 மினி அதிரசம் 

தேவையான பொருட்கள்

3 கப் அரிசி மாவு
2 கப் கருப்பட்டி
1 கப் தண்ணீர்
4 கப் எண்ணெய்
2 ஏலக்காய்

செய்யும் முறை

1. முதலில், ஒரு பானையில் கருப்பட்டி, ஏலக்காய் மற்றும் தண்ணீரை ஒன்றாக சேர்த்து காய்ச்சவும்.

2. காய்ச்சிய கருப்பட்டியை சுட சுட அரிசி மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

3. நன்றாக பிசைந்து 2 நாட்கள் மூடி வைக்கவும்.

4. 2 நாட்கள் கழித்து தேவைபட்டால் இன்னும் கொஞ்சம் சுடு தண்ணீர் சேர்த்து மறுபடியும் பிசைந்து கொள்ளவும்.

5. ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் தாளில் கொஞ்சம் அரிசி மாவு தடவி பிசைந்த மாவை அதில் வைத்து கால் அங்குல அளவிற்கு தேய்க்கவும்.

6. அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு தோய்த்த மாவை மெது வடைக்கு பாேல் நடுவில் ஓட்டை பாேட்டு பொரித்து எடுக்கவும்

சமைக்கும் நேரம்:

1. மாவு தயார் செய்ய – 2 நாட்கள்

2. சமைக்கும் நேரம் – 30 நிமிடம்

பரிமாறும் அளவு : 30 சிறிய அதிரசம் கிடைக்கும்

மூன்று தலை முறை-5

 மூன்று தலை முறை-5

இரண்டாம் மாதத்தில் இருந்து தொடங்கிய மசக்கை விசாலியை படித்தி எடுத்து விட்டது. 

மங்களம் 'தலைச்சன் குழந்தைனா அப்படித்தான் இருக்கும்.பஞ்சு வயித்திலிருக்கும் போது நான் படாத கஷ்டமா' என்றாள். மங்களம் அடிக்கடி விசாலிக்கு ஏதாவது  பக்ஷணம் செய்து கொடுத்துகொண்டிருந்தாள். வீட்டு பசுந்தயிரும்,பசு நெய்யும் மூன்று வேளையும்  சாப்பாட்டில் அதிகமாக சேர்க்கப்பட்டது. அவற்றையெல்லாம் விட விசாலிக்கு மாங்காயும்,சாம்பலுமே சாப்பிட பிடித்திருந்தன. நான்காம் மாதம் தொடங்கிய உடன் விசாலம் ஆசைபட்டபடி பின்புறத்தில் உள்ள மாமரத்திலிருந்து மாங்காய்களை பறித்து கொண்டு வந்தான் பஞ்சு. யாருக்கும் தெரியாமல் சாம்பலையும் சாப்பிட்டாள் விசாலி.

(வயிற்றில் வளரும் குழந்தை தாயின் ரத்தத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதால், அம்மாவின் உடலில் ரத்தம் குறையும். இதனால், பித்தம் குறையும். பித்தம் குறைவதால், புளிப்புச் சுவையயுள்ள நெல்லிக்காய், மாங்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள். சிலர் புளி, புளியங்காய், சாம்பல் ஆகியவற்றை விரும்பித் தின்பார்களாம்)

ஐந்தாம் மாதம் பிறந்ததும் நல்ல நாளில் வளைகாப்பு செய்யப்பட்டது.விசாலி ரொம்ப வருடங்கள் கழித்து கர்ப்பம் தரித்து இருப்பதால் அனாவசியமாக அலைச்சல் கூடாது என்ற காரணத்தினால் வளைகாப்பு பஞ்சு வீட்டிலேயே கொண்டாடப்பட்டது.

(நமது தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த “வர்மக்கலை” தத்துவப்படி பெண்களின் இரண்டு கைகளின் அணிவிக்கப்படும் வளையல்களால்  வயிறு மற்றும் கருப்பையை இயக்கும் வர்ம புள்ளிகள் தூண்டப்பெற்று பெண்ணுக்கும், பிறக்க போகின்ற குழந்தைக்கும் உடல்நலம் மேம்படுகிறது. மேலும் 5, 7 அல்லது 9 மாதத்தில் கருவில் இருக்கும் குழந்தை தாய் அணிந்திருக்கும் வளையல் சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் அக்குழந்தையின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது என்கிற நமது முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மையை நவீன மேலை நாட்டு அறிவியல் ஆய்வாளர்களும் உண்மை என்பதை தங்களின் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.இந்த உண்மை மேலை நாட்டாரால் அங்கீகரிக்கப்படுவதால் அப்பாவி தமிழன் போனால் போகிறது என்று ஏற்றுக்கொள்கிறான்).

அதையடுத்து ஏழாவது மாதம் சீமந்தம் நடந்தது. விசாலிக்கு மாலை அணிவித்து, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, இரு கைகளிலும், கன்னங்களிலும் சந்தனத்தை நலங்கு பூசினார்கள். பின்பு இரு கைகளிலும் வளையல் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி படைத்து விசாலியையும், கருவிலிருக்கும் குழந்தையையும் வாழ்த்தினார்கள்.

சீமந்தத்தின் போது விசாலத்தைப்பார்த்த காமு பாட்டி அவள் முகத்தின் பூரிப்பையும், வயிற்றையும் பார்த்து 'நோக்கு நிச்சயம் பெண் தான் பொறக்கப் போறா' என்றாள். மங்களம் 'ஆணோ, பெண்ணோ, நல்லபடியாக பெத்து பிழச்சா சரி' என்றாள்.

விசாலியின் அழகு பல மடங்கு கூடி இருந்தது. முகம் பள பள வென பூர்ண சந்திரன் போல ஜொலித்தது.இரண்டு எட்டு நடப்பதற்குள் மூச்சு முட்டியது.

அடிக்கடி வயிற்றில் குழந்தை எட்டி உதைத்தது. சீமந்தம்  முடிந்த அடுத்த நாள் வண்டி கட்டிக்கொண்டு விசாலி நல்லூர் செல்ல ஏற்பாடானது. விசாலி, ஜானகி, சுந்தரேசன் ஆகிய மூவரும் வண்டியில் ஏறிக் கொண்டனர். வாசலில் வழியனுப்ப  ராஜகோபலன் ன்,மங்களம் மற்றும் பஞ்சு நின்றுகொண்டிருந்தார்கள். பஞ்சு ஒரு மாதிரி நிலை கொள்ளாமல் பரபரப்பாக இருந்தார். அதை பார்த்த ராஜகோபாலன் 'ஏண்டா பஞ்சு நின்று கொண்டிருக்கிறாய்.

நீயும் அவர்களுடன் போய் ரெண்டு நாள் இருந்துட்டு வா'என்றார்.  இதற்காகவே காத்திருந்த பஞ்சு, உள்ளே போய் சட்டையை போட்டுக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தான்.  வண்டி ஓட்டுபவனை பார்த்து ராஜகோபாலன்  'பார்த்து ஓட்டப்பா. மேடு பள்ளங்களில் நிதானமாக ஓட்டு. அதிர்ச்சி கூடாது' என்றார். 'சரிங்க எஜமான்' என்றான் வண்டி ஓட்டுபவன். வண்டி நல்லூரை நோக்கி சென்றது.நமது அடுத்த பதிவில்  விசாலிக்கு பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது தெரிந்து விடும்.அந்த குழந்தைதான் இரண்டாம் தலைமுறையின் கதாநாயகி அல்லது கதாநாயகன்.அது சரி.உங்களில்யாராவது விசாலிக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்று ஆருடம் கூறமுடியுமா?

மூன்று தலைமுறை-4

 மூன்று தலைமுறை-4

இப்படி பரக்கப்பரக்க வேலை செய்யும் விசாலம் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்ததால் பஞ்சு ஏன் விஜாரப்படமாட்டார்?

'என்ன விசாலி உடம்புக்கு சரியில்லையா' என்றார். 'அதல்லாம் ஒன்றுமில்லை.தலை சுற்றுகிறது' என்றாள் விசாலி.

பஞ்சுவிற்கு பயமாகிவிட்டது.ஒரு நாள் விசாலி வேலைகளை கவனிக்காமல் விட்டு விட்டால் வீடே கந்தர கோளமாகிவிடும் என்பதை பஞ்சு அறிவார்.விசாலியின் தலையை அனுசரணையாக தடவி கொடுத்தவர் 

'நான் போய் இஞ்சி சொரசம் போட்டுண்டு வறேன்' என்றார்.அதற்கு விசாலம் வெட்கத்துடன் 'இல்லேன்னா. இஞ்சி சொரசத்தில் தீர்ற தலை சுற்றல் மாதிரி இது நேக்கு தெரியல.நீங்க போய் மூணாவது ஆத்து

காமு பாட்டியை கூட்டிண்டு வாங்கோ' என்றாள்.பஞ்சுவிற்கு தலை சுற்றலுக்கும், காமு பாட்டிக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை.

பட படப்புடன் பஞ்சு பாட்டியை கூப்பிட போகலானார்.

அவரது படபடப்பை பார்த்து விசாலத்திற்கு சிரிப்பு வந்தது.

புத்திசாலி பிராமணனுக்கும் சில சமயம் மூளை  மழுங்கி விடுகிறது என நினைத்துக் கொண்டாள். என்னதான் உசந்த படிப்பு(FA) படிச்சிருந்தாலும் சூசகமாக விஷயத்தை சொன்னால் அதை பஞ்சு க்ரஹித்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் விசாலிக்கு.பஞ்சு காமு பாட்டியை கூட்டி வந்தார். விசாலியை பார்த்து 'என்னடியம்மா உடம்புக்கு  என்ன செய்யறது' என்றாள் காமு பாட்டி. "காலையிலிருந்து தலை சுத்தறது. கொஞ்சம் கை நாடி பிடித்து  பார்க்கிறீர்களா" என்றாள் விசாலி.காமு பாட்டி "ஓ.அப்படியா விஷயம்' என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள்.பஞ்சுவிற்கு பாட்டி மேல் கொஞ்சம் கோபம் வந்தது.விசாலி தலை சுற்றர்து என்கிறாள்,இந்த கிழம் பாட்டுக்கு சிரிக்கிறதே என்று. விசாலியின் கையை பிடித்து நாடியை பார்த்தாள் பாட்டி.சில நொடிகள் கழிந்தன.பின் பஞ்சுவைப் பார்த்து 'நல்ல சமாச்சாரம் தாண்டா பஞ்சு. உன் வம்சம் விருத்தியாக போறது' என்றாள். பஞ்சுவுக்கு இதைக் கேட்டவுடன் 'அடடா.இதை புரிந்து கொள்ளாமல் இருந்தூட்டமே' என்று நினைத்தார். அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நிறைய சந்தோஷமும் ஓரளவிற்கு வெட்கமும் வந்தது. விசாலி 'இப்போதாவது புரிந்ததே' என திருப்தி அடைந்தாள். வெட்கப்பட்டு கண்ணை மூடிக்

கொண்டாள்.காமு  பாட்டி 'ஏண்டா மரமாட்டம் நிக்கற. மங்களத்தை கூப்பிடடா,பஞ்சு' என்றாள். அப்போதுதான் எழுந்து வந்த விசாலியின் மாமியார் மங்களம் காமு பாட்டியை பார்த்து'என்ன பாட்டி. இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கேங்க.என்ன சமாஜாரம்?'என்றாள். 'எல்லாம் நல்ல சமாஜாரந்தான்டி மங்களம். உன் மாட்டுப்பெண் உண்டாகி இருக்கா' என்றாள். அவ்வளவுதான் மங்களத்திற்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

நேராக சென்று விசாலியின் இரு கைகளைப் பிடித்துக்கொண்டு 'இனிமேல்தான் நீ ஜாக்கிரதையாக இருக்கணம்.எல்லா வீட்டு வேலையும் எடுத்து போட்டு நீயே செய்ய வேண்டாம். நான் செஞ்சுக்கிறேன்.முடியாட்டா  ஆட்களை போட்டுகலாம்' என்றாள். பஞ்சுவைப் பார்த்து'ஏண்டா பஞ்சு. பிரமை பிடித்த மாதிரி மசமசன்னு நிக்கற.  அப்பாகிட்ட போய் இந்த சந்தோஷ சமாஜாரத்தை  சொல்லு' என்றாள்.

ஸ்வாமி அறைக்குபோய் நமஸ்காராம் செய்து விட்டு'அப்பா முருகா. இந்த கொழந்தைக்கு இப்போதாவது கொழந்தை பாக்யத்தை கொடுத்தியே.அவ நல்லபடியா கொழந்தயை பெத்தெடுக்க நீதான் கருணை காட்டணம்' என்று மனமுருகி வேண்டி கொண்டாள் மங்களம். அடுத்த பத்து நிமிடத்தில் வீடு அல்லோலகல்லோலப் பட்டது. வருவோர் போவோருக்கெல்லாம் சர்க்கரை வழங்கப்பட்டது. .

சுந்தரேசனுக்கு செய்தி சொல்லி அனுப்பப்பட்டது. இருவரும் அஷ்டபுஜ காளி அம்மன் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து குங்கும பிரசாதம் பெற்று கொண்டார்கள்.

ஜானகி,விசாலி உடம்பு தேறி நல்லபடியா பிரசவிக்க குல தெய்வமான காளியிடம் வேண்டிக்கொண்டள். பின்பு வண்டி கட்டிக்கொண்டு வந்தார்கள்.

ஜானகி கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய'விசாலி.அந்த பழனி முருகன் நீ வேண்டிண்டிய படி உனக்கு புத்ர பாக்யத்தை கொடுத்துட்டார்' எனறு கூறியபடியே அவள் நெற்றியில் காளி அம்மன் குங்கும பிரசாதத்தை இட்டாள்.பின்பு மங்களத்திடம் தான் கொண்டு வந்திருந்த திரட்டி பால்(பால் கோவா) தூக்கை கொடுத்தாள்.

அன்றிலிருந்து  மங்களம் எல்லா வீட்டு  வேலைகளும் கவனித்துக் கொண்டாள்.

விசாலியும் தன்னால் முடிந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.வீட்டின் அருகேஉள்ள கோவிலுக்கு போவதற்கு கூட விசாலி கூச்சப்பட்டாள்

Monday, March 20, 2023

சமையலறை 1

8 இளந்தோசை

தேவையானவை: இட்லி மாவு – ஒரு கப், தண்ணீர் – சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, தோசை மாவை விட்டு, மெல்லிய தோசையாக வார்க்கவும். பிறகு, மூடியால் மூடி வைத்து ஒரு நிமிடம் வேக விட்டு எடுக்கவும். இதேபோல், ஒவ்வொரு தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

இந்த தோசைகள், வெள்ளை நிறம் மாறாமல் மிக மெல்லியதாக இருக்கும்.

 9 பொடி இட்லி

தேவையானவை: இட்லி மாவு – 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி – 3 டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவில், மினி இட்லிகளை தயார் செய்து கொள்ளவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து, கடுகு போட்டு பொரிக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும். இட்லி மிளகாய்ப் பொடியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு… தண்ணீர் விட்டுக் குழைத்து, மினி இட்லிகளைப் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். பொரித்த கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

 10 தயிர் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, புளிக்காத தயிர் – ஒரு கப், வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1, புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன், சாட் மசாலா, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும். பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸலைஸால் மூடவும். இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும். தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.

 11 மல்டி வெஜிடபிள் குழம்பு

தேவையானவை: நறுக்கிய பரங்கிக்காய், கத்திரிக்காய், அவரை, காராமணி, மொச்சை, வாழை, முருங்கைக்காய் கலவை – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு – கால் கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 8 பல், புளி – 50 கிராம், தக்காளி – 4, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன், வெந்த யம் – அரை டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயம், பூண்டை தோலுரித்து, நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டவும். பிறகு புளிக் கரைசலை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்த தும், தோல் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, நறுக்கிய காய்கறி கலவையைச் சேர்த் துக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து… காய் வேகும் வரை கொதிக்க விடவும்.

வெறும் கடாயில் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து வறுத்து, குழம்பில் சேர்க்கவும். வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

 *12 வெஜ் சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும், பொடியாக நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்க்கவும். காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து இறக்கி… சூடாகப் பரிமாறவும்.

 *13 மசாலா சென்னா* 

தேவையானவை: வெள்ளை சென்னா – ஒரு கப், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, சாட் மசாலா – ஒரு டீஸ்பூன், மாங்காய்த்தூள் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சென்னாவை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சென்னாவுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மூடியைத் திறந்து, தண்ணீரை வடிக்கவும். கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலக்க… மசாலா சென்னா தயார்!

 *14 செட்டிநாட்டு பருப்புத் துவையல்* 

தேவையானவை: துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – கால் கப், காய்ந்த மிளகாய் – 2, புளி – கொட்டைப்பாக்களவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில், பருப்பை பொன்நிறமாக வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், புளி, தேங்காய் துருவல். உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாகவும், கரகரப்பாகவும் அரைக்கவும். கடைசி யாக, பூண்டு சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்க… செட்டிநாட்டு பருப்புத் துவையல் ரெடி!

 15 பருப்பு சாதம்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 8 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும், கழுவிய துவரம்பருப்பு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு, அரிசி, தோலுரித்து நசுக்கிய பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து குழைய வேக வைத்து இறக்கவும்.

இதற்கு மோர்க்குழம்பு, பொடிமாஸ் சிறந்த சைட் டிஷ்.

நீலவண்ணப் பெருமாள் திருக்கோயில், நன்மங்கலம்

 *அருள்மிகு நீலவண்ணப் பெருமாள் திருக்கோயில், நன்மங்கலம், சென்னை*

திருவிழா

பிரம்மோற்சவம், புரட்டாசி மாதம், வருடத்தின் முக்கிய விஷேசங்கள் நடைபெறும்.

தல சிறப்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலய அபிமானத் தலமாகவும் இது விளங்குகிறது.

பொது தகவல்

கோயில் பிரகாரத்தில் லக்ஷ்மி ஹயக்ரீவர், நரசிம்மர், சடகோபர், சுதர்சனர் அருள்பாலிக்கிறார்கள். சென்னையில் கோயில்கள் நிறைந்த நங்கநல்லூர் பகுதியும் இப்பகுதியும் அருகிலேயே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழ்க்கட்டளையில் சில புராதனக் கோயில்களும் மேடவாக்கத்தில் புகழ்பெற்ற தேனுபுரீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது சிறப்பு.

பிரார்த்தனை

நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

*நேர்த்திக்கடன்* சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் மற்றும் துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை

காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோயிலுக்கருகில் பச்சைவண்ணர்-பவளவண்ணர் திருக்கோயில்கள் அமைந்திருப்பதைப் போல, இங்கும் காமாட்சியம்மை சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கருகில் நீலவண்ணப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது சிறப்பாகும்.

கண்ணன் குழலினை நண்ணும் மனமுடையவரான நம்மாழ்வாருக்கு இத்திருக்கோயிலில் மூலவர் மற்றும் அர்ச்சா விக்ரகம் அமைந்துள்ளதும்;

108 திவ்ய தேசங்களில் தொண்டைநாட்டுத் தலங்களில் புகழ்பெற்ற திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலின் ஓர் அங்கமாக இத்திருக்கோயில் விளங்குவதும் இத்தலத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களாகும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலய அபிமானத் தலமாகவும் இது விளங்குகிறது.

2010 ல் சத்யநாராயணஸ்வாமி, சக்கரத்தாழ்வார், வேதவல்லித் தாயார் சன்னிதிகள் அமைக்கப்பட்டன. தற்போது 2013 ஜூலை பக்த ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு சம்ப்ரோஷணம் நடந்தேறியது கேட்பாரற்றுக் கிடந்த கோயிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதற்குக் காரணம் நீலவண்ணப் பெருமாள்தான் என்றால் மிகையாகாது.

*தல வரலாறு*

இவ்வாலயம் சுமார் 800 வருடங்கள் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. கோயிலின் தளத்தில் மீன் வடிவங்கள் அமைந்துள்ளதிலிருந்து இதை உணரலாம். சில கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

வைணவ சமுதாயத்தின் ஒரு பிரிவினரான அரசானி பாலையைச் சார்ந்த தாத்தாச்சாரியர் பரம்பரையினர் சிலர் இக்கோயிலுக்கருகில் சிறிது காலத்துக்குமுன் வசித்துவந்தார்கள் என்றும்;

இத்திருக்கோயிலுக்குக் கைங்கர்யம் செய்தார்கள் என்றும் அரசாங்கக் குறிப்பேடுகளில் நன்மங்கலம் நீர்வணப் பெருமாள் என்று இந்தப் பெருமாள் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ரெண்டாம் தாரம்

 பழக்கப்பட்ட குரலாக கேட்கவே, வெளியே வந்து பார்த்த விஸ்வமூர்த்தியின் கண்களும், முகமும் பிரகாசமானது. “ அடடே! வாப்பா வேம்பு “  ஏது ரொம்ப தூரம். வா வா, உள்ள வா, எவ்வளவு நாளாச்சுப்பா உன்னை பார்த்து, ஊர்ல எல்லாரும் சௌக்கியமோன்னோ?


எல்லாரும் சௌக்கியமா இருக்காப்பா விஸ்வா..


வாங்கண்ணா! என்றபடியே அங்கு வந்தாள் விஸ்வமூர்த்தியின் மனைவி பங்கஜம்.


“ வேம்பு” என்ன பங்கஜம் சௌக்கியமா இருக்கியாம்மா?


“ பங்கஜம் “ ஏதோ இருக்கோம் அண்ணா என்றவளின் குரலில் ஒரு விரக்தி தெரிந்தது.


பங்கஜம்,  வேம்பவுக்கு காபி கொண்டு வா, என்று பேச்சை மாற்றினார் விஸ்வமூர்த்தி


“ வேம்பு “ விஸ்வா “ எங்க உன் பையன் வசந்த், பேத்தி அபிராமி? ரெண்டு பேரையும் காணோம்.


அதுவா, அவனுடைய மச்சினியாத்துல ஏதோ விசேஷமாம் அதனால அபிராமியை கூட்டிண்டு அங்க போயிருக்கான். சாயங்காலம் வந்துடுவான் என்றார் விஸ்வமூர்த்தி..


பங்கஜம், உன் கையால சாப்டு எவ்வளவு நாளாச்சும்மா, அருமையான சமையல் என்றபடி இலையை விட்டு எழுந்தார் வேம்பு.


வேம்பு, வெத்தலை பாக்கு போடுவியா, என்றபடியே வெத்திதலை பாக்கு தட்டுடன் வந்தார் விஸ்வமூர்த்தி.


‘ வேம்பு ' , விஸ்வா நான் கார்த்தாலயே கவனிச்சேன், பங்கஜத்தோட குரல்ல ஒரு விரக்தி தெரிஞ்சது, என்னாச்சு என்றார் வாஞ்சையோடு.


‘ விஸ்வமூர்த்தி ', அதெல்லாம் ஒண்ணுமில்ல வேம்பு, “ அவளுக்கு ஏதோ குறை, எல்லாம் போகப் போக சரியாயிடும் “ நீ வெத்தலைய போடப்பா “ என்றார்.


இத பாரு விஸ்வா, “ நீ என்னதான் மறைச்சாலும் உன்னோட குரல்ல கூட ஒரு சோகம் தெரியறது”. மனசுல இருக்கறத வெளியில சொன்னாதான் பாரம் குறையும். எதுவா இருந்தாலும் சொலலுப்பா என்றார் வேம்பு ஆதங்கத்தோடு.


கொஞ்ச நேரம் வேம்புவயே பார்த்த விஸ்வமூர்த்தி, என்னத்தை சொல்றது வேம்பு, என் பையன் வசந்த்தை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு  சொன்னா மாட்டேங்கிறான். ஏன்னு கேட்டா? வரப்போற என் பொண்டாட்டி என் குழந்தையை சௌம்யா மாதிரி பார்த்துப்பான்னு என்ன நிச்சியம்னு? என்னை கேள்வி கேக்கறான் என்றார்.


‘ பங்கஜம் ', அதுமட்டும் இல்லேண்ணா, “ அப்படியே கல்யாணம் பண்ணிண்டாலும் வர்றவ குழந்தை பெத்துக்கணும்னு ஆசை படக்கூடாதுன்னு “ கண்டிஷன் வேற போடறான் என்றாள்.


‘ விஸ்வம்’, ஆனா என் பேத்தி அபிராமியோ, அவ அம்மா சௌம்யாவை நினைச்சு அழற போது, எங்களால தாங்கமுடியலை வேம்பு. எங்க நிம்மதியே போச்சு. மொத்ததுல யாருக்குமே நிம்மதியில்லாம போச்சுப்பா என்றார்.


‘ வேம்பு ', கவலைப்படாதே விஸ்வம், காலநேரம் வந்தா எல்லாம் கூடி வரும்! என்றார்.


‘ விஸ்வம் ', அது எப்ப வரும்? எங்களுக்கு எப்ப நிம்மதி கிடைக்கிறது வேம்பு?


நேரம் வந்தாச்சுப்பான்னு சொன்ன வேம்புவை கேள்விக்குறியோடு பார்த்தார் விஸ்வமூர்த்தி.


‘ வேம்பு ', ஆமாம் விஸ்வா, உன் பையனோட கல்யாண விஷயமாகத்தான்  உன்னை பார்க்க வந்திருக்கேன். “ கும்பகோணத்துல நம்மாத்துக்கு நாலு தெருவு தள்ளி ஒருத்தர் வீடு வாங்கிண்டு வந்திருக்கார். .ரிடையர்டு ஸ்கூல் டீச்சர்.  அவருக்கு மூணு பொண்ணு. பெரியவளுக்கு 24 வயசாறது. இன்னும் கல்யாணம் ஆகலை. எங்கிட்ட பேசிண்டிருந்தப்ப சொன்னார். ரெண்டாம் தாரமா கூட குடுக்கறேன்னு சொன்னார்.


‘ விஸ்வமூர்த்தி ', ஏம்ப்பா வேம்பு, ஒரு குழந்தையும் இருக்குன்னு சொன்னியா என்றார்


‘’வேம்பு ', சொல்லிட்டேன் விஸ்வா, அவாத்துல எல்லாரும் சரின்னு சொல்லிட்டா. ஏன், கல்யாணம் பெண்ணே சம்மதம்னு சொல்லிட்டா. அதுதான் உன்னை பார்த்து பேசிட்டு போகலாம்னு  வந்தேன். நான் பெண்ணோட போட்டோவையும் ஜாதகத்தையும் வாங்கிண்டு வந்திருக்கேன். அந்தப் பெண்ணுக்கும் செவ்வாதோஷம். ஜாதகம் நன்னா பொருந்தியிருக்கு. நம்ம வசந்துக்கும் செவ்வாதோஷம். இதுல இன்னொரு பொருத்தமும் இருக்கு விஸ்வா.அந்த பொண்ணு பேரு கூட சௌம்யாதான். நல்லா பாடுவா. நல்ல அழகு. இந்தா பாரு என்று பெண்ணின் போட்டோவை அவரிடம் குடுத்தார்.


எல்லாம் சரிப்பா வேம்பு, இதுக்கு வசந்த் ஒத்துக்கணுமே என்றார்


‘ வேம்பு ',  விஸ்வம், வசந்த் வரட்டும் நானே அவங்ககிட்ட பேசறேன்


ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்ததாலோ என்னமோ, விஸ்வமூர்த்தி நேரம் போனதே தெரியாமல் வேம்புவிடம் பேசிக் கொண்டிருந்தார்.


மணி ஐந்தடித்தது!


பங்கஜம் இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள். 


அப்போது வசந்த் மட்டும் உள்ளே நுழைந்தான்.


‘ பங்கஜம் ', ஏண்டா வசந்த் அபிராமியை அழைச்சிண்டு வரலையா?


‘ வசந்த் ', “ அம்மா இன்னிக்கு ஒரு நாள் அபிராமி இங்க இருக்கட்டும், நாளைக்கு கொண்டு வந்து விடறோம்னு, என் மாமியார் சொன்னா” அதான் அவளை ஆங்கயே விட்டுட்டு வந்தேன் என்றான்.


‘ வேம்பு ', என்னப்பா வசந்த் சௌக்கியமா இருக்கியா?


‘’வசந்த் ', நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்ப வந்தேள்?


‘ வேம்பு ', கார்த்தாலதான் வந்தேன். உனக்காகத்தான் வெயிட்டிங். உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.


‘ வசந்த்’, சொல்லுங்க மாமா..


‘ வேம்பு’, இத பாருப்பா வசந்த் உனக்காக ஒரு வரன் பார்த்ததுண்டு வந்திருக்கேன். நல்ல குடும்பம். பொண்ணு S.SL.C..வரை படிச்சிருக்கா. நல்லா பாடுவா. அவா பொண்ணை ரெண்டாம் தாரமா குடுக்க சம்ம்தம்னு சொல்லிட்டா.  பொண்ணுக்கும் சம்மதம். அந்த பொண்ணு பேர் கூட சௌம்யாதான். உங்கப்பா, அம்மாவுக்கும் சம்தம்தான்.நீ என்ன சொல்றே.?

‘ வசந்த் ', மா….மா..என்று இழுத்தான்.


‘வேம்பு ', வசந்த் நீ என்ன சொல்லப்போறேன்னு எனக்குத் தெரியும். உன் குழந்தையோட எதிர்காலம் நல்லபடியா அமையணும்னு ஆசைப்பட்டா நீ மறுகல்யாணம் பண்ணிண்டுதான் ஆகணும் என்றார்.


‘ வசந்த் ', பேச்சில் கொஞ்சம் வேகத்தோடு, மாமா நீங்க ஆயிரம்தான் சொன்னாலும் என்னோட குழந்தை, அவளோட குழந்தையாயிடாது. ரெண்டாம் தாரமா வர்றவ, இன்னொருத்தியோட குழந்தையை, தன் குழந்தையை போல அன்பா, ஆசையா எப்படி பார்த்துக்க முடியும். என்னதான் பொண்டாட்டியா வந்தாலும் ரெண்டாவது, ரெண்டாவதுதான். அதனால என்னோட கண்டிஷனுக்கு சம்மதம்னு சொன்னா அந்தப் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க தயார் என்றான்.


‘ வேம்பு ', இதபாருப்பா வசந்த், நீயோ பொண்டாட்டியை இழந்தவன். அதுவும் ஒரு குழந்தைக்கு தகப்பன்னும் தெரிஞ்சும், அந்த பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணிக்க பெருந்தன்மையோடு சம்மதம் சொல்லியிருக்கா. அதுக்கே நீ அவளை தலை வணங்கி மனைவியா ஏத்துக்கணும். அது விட்டுட்டு ரெண்டாம் தாரமா வர்றவ  “ உன் குழந்தையை சவனிச்சிக்க மாட்டாள்னு சொல்றதெல்லாம் முட்டாள் தனமான கற்பனை. அதுவும் இல்லாம, அறிமுகமே இல்லாத, இது வரை நீ பாக்காத ஒரு பெண்ணோட குணாதிசயங்களை பத்தி நீ சந்தேகப்படறது எனக்கு சரியா படலை. அப்படி நீ சந்தேகப்படறது, நியாயமும் இல்லை, மனுஷத்தன்மையும் இல்லை. வீணா அபவாதமா பேசி ஒரு பொண்ணோட பாவத்தை சேர்த்துக்காதே” என்றார் சாந்தமாக.


கோபத்துடன் எழுந்த வசந்த், “ மாமா எனக்கு மனுஷத்தன்மை இருக்கா, இல்லையான்னு நான் உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களோட புத்திமதியும் எனக்கு தேவையில்லை. இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க. தயவு செய்து வெளியே போங்க. இனிமே இங்கே வராதீங்கன்னு கத்தினான்.


அடுத் நொடி, “ உட்கார்ந்திருந்த பங்கஜம் கோபத்துடன் எழுந்து வசந்த்தின் கன்னத்தில் படபடவென்று நாலு அறை அறைந்து விட்டாள்.


இதை சற்றும் எதிர்பார்க்காத வசந்த், அதிர்ச்சியினால் நிலைகுலைந்து போய்விட்டான். விஸ்வமூர்த்தியும், வேம்புவும் கூட திகைத்துப் போய்விட்டனர்.


‘ பங்கஜம்’ ,கோபத்துடன், “ ஏண்டா யாரைப் பார்த்து வெளியே போங்கன்னு சொன்னே. அவரை இங்க வரதேன்னு சொல்ல நீ யாருடா? அவர் உங்கப்பாவோட பால்ய சிநேகிதர்டா. பாவம்டா அவர். சந்தோஷமா வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய  வயசுல பொண்டாட்டியை சாகக்குடுத்துட்டு, தாயில்லாத ஒரு குழந்தையை வெச்சிண்டு, தனிமரமா நிக்கறையேன்னு, ஒரு அனுதாபத்துடன், உன் மேல இருக்கிற அன்பினால உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்கணும்னு நினைச்சு, ஒரு நல்லது பண்ண வந்தவரை, வயசானவர்னு கூட பார்க்காம, கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம வெளியே போங்கன்னு சொல்றியே, நீயெல்லாம் ஒரு  மனுஷனாடா? டேய் உனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லேன்னா முடியாதுன்னு சொல்லியிருக்கலாம். அது விட்டுட்டு வாய்க்கு வந்தபடி பேசறயே” என்றாள்.


‘ வேம்பு’, “அம்மா பங்கஜம் என்னம்மா இது? அவன் சின்னப்பையன், ஏதோ அறியாம பேசிட்டான். அது பெரிசு பண்ணாதேம்மா என்றார்.


‘ பங்கஜம்’, அண்ணா நீங்க கொஞ்சம் சும்மா இருங்க என்றாள்.


‘ விஸ்வமூர்த்தி’ , பங்கஜம்……….விடும்மா…..


‘ பங்கஜம் ', கோபத்துடன், இத பாருங்கோ, இது எனக்கும் அவனுக்கும் நடக்கிற விவகாரம். நீங்க இதுல தலையிடாதீங்க. டேய் வசந்த் “ நான் தெரியாமத்த்தான் கேக்கறேன், ரெண்டாம் தாரம்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா . இப்ப சொல்றேன்  நல்லா கேட்டுக்கோடா “  உனக்கு நான் அம்மாவும் இல்லை, எனக்கு நீ  பிள்ளையும் இல்லை. நீ ஒன்றரை வயசு குழந்தையா இருக்கும் போதே உங்கம்மா உன்னை உங்கப்பாகிட்ட விட்டுட்டு போய் சேர்ந்துட்டா. நிலை குலைஞ்சி போன உங்கப்பாவுக்கு ஆறுதல் சொல்லி,  உங்கம்மாவோட எல்லா கார்யங்களையும் கிட்ட இருந்து நல்ல படியா முடிச்சு குடுத்து,  தாயில்லாம ஏங்கித் தவிக்கிற உன்னைப்பார்த்து கலங்கிப்போய், எங்கப்பாகிட்ட வந்து பேசி, என்னையும் சம்மதிக்க வெச்சி, உங்கப்பாவுக்கு ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி வெச்சது, இந்த நல்ல ஆத்மா வேம்பு அண்ணாதான் என்றாள் அழுதபடியே.


இன்னும் சொல்றேன் கேளுடா  “  இந்த வீட்டுக்கு வந்த நாள்லேர்ந்து உன்னை ஆசையோடும், பாசத்தோடும், சீராட்டி, பாராட்டி, கண்ணுக்குள்ள வெச்சி காப்பாத்தி, வளர்த்து, படிக்கவெச்சி, ஆளாக்கி, உனக்கொரு கல்யாணத்தையும் பண்ணிவெச்சி அழகு பார்த்ததவ இந்த ரெண்டாம் தாரமா வந்தவதாண்டா.”

“ உன் பொண்டாட்டி சௌம்யா, உன்னை விட்டு போனதும், அவளுக்காக அழுது துடிச்சதும், இந்த ரெண்டாம் தாரமா வந்தவதாண்டா.”

“ வாழவேண்டிய இந்த சின்ன வயசுல, பொண்டாட்டியை எமனுக்கு வாரி   குடுத்துட்டு, பட்டமரமாட்டும் நிக்கறையேன்னு தினமும் உன்னை பார்த்து மனசுக்குள்ளயே அழுது வேதனைகளை அனுபவிச்சிண்டிருக்கிறதும் இந்த ரெண்டாம் தாரமா வந்தவதாண்டா.”

“ தாயில்லாத உன்னோட குழந்தை அபிராமி, தாய்பாசத்துக்காகவும், அவளோட ஸ்பரிசத்துக்காகவும், ஏங்கித் அழுது தவிக்கிறதை பார்த்து, தாங்கமுடியாத வேதனைகளோடு பகவானுக்கு முன்னால் நின்னு கதறி கதறி அழறதும், இந்த ரெண்டாம் தாரமா வந்தவதாண்டா.”

சீக்கிரமே உனக்கொரு கல்யாணம் நடக்கணும், உன் குழந்தைக்கு ஒரு அம்மா கிடைக்கணும்னு, தினமும் பகவான்கிட்ட மனமுருகி பிரார்த்தனை பண்றதும் இந்த ரெண்டாம் தாரமா வந்தவதாண்டா.

அதே கோபத்தோடு, டேய் வசந்த்  “ ரெண்டாம் தாரமா வர்ற பெண்ணைப்பத்தி பேச உனக்கு என்னடா யோக்யதை இருக்கு. தன் குடும்பத்தோட சூழ்நிலைகளையும், பெத்தவங்களோட கஷ்டத்தையும் புரிஞ்சிண்டு, அவங்களோட கௌரவத்தை காப்பாத்த, தன்னோட,  பருவகால கனவுகளையெல்லாம் மனசுக்குள்ளயே போட்டு புதைச்சி வெச்சிட்டு, “ தனக்கு இதுதான் பிராப்தம்னு” தன்னைத்தானே சமாதானப்படுத்திண்டு, தாரத்தை இழந்த ஒருத்தருக்கு, நான் இருக்கேன்  உனக்கு ஆதாரமான்னு   சொல்லி கழுத்தை நீட்டி ரெண்டாம் தாரமா வாக்கப்படறாளே ஒரு பொண்ணு, அவளுடைய தியாகத்துக்கு ஈடு இணையே கிடையாதுடா “. நீ நினைக்கிற மாதிரி “ அல்பமான தாம்பத்ய சுகம் “ மட்டும்தான் வாழ்க்கையில்லடா. அதையும் மீறின ஒரு மனைவியோட அதீத அன்பும் பாசமும்தாண்டா ஒருத்தரோட வாழ்க்கையில உண்மையான சந்தோஷத்தையும் நிறைஞ்ச நிம்மதியையும் குடுக்கும் “ இதெல்லாம் உனக்கெங்கடா புரியப்போறது.

கண்களைத் துடைத்துக்கொண்ட பங்கஜம், டேய், “ இனிமே உனக்கு இந்த ரெண்டாம் தாரமா வந்த அம்மா தேவையில்லை.” நானும், உங்கப்பாவும் கிளம்பறோம். நீயாச்சு, உன் குழந்தையாச்சு. வாங்க போகலாம், வாங்கண்ணா போகலாம் என்றாள் பங்கஜம் கலங்கிப்போய் உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்து.

கோபத்தில் அம்மாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை கேட்டு வசந்த் கதிகலங்கி போய்விட்டான். அம்மாவிடமிருந்து அப்படி ஒரு கோபத்தை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தான் அப்படி பேசியது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்ந்து கொண்டான். கண்கள் கலங்கியபடி மெல்ல அம்மாவின் அருகில் வந்து அவளுடைய கைகளை பிடித்துக் கொண்டு.        “ அம்மா நீ பொய் தானே சொல்றே? நீ தானே என்னோட அம்மா? நான் உன்னோட பிள்ளைதானே? நீதானே என்னோட அம்மா? இல்லேன்னு மட்டும் சொல்லிடாதேம்மா “என்று கதறி விட்டான். அப்பாவும், நீயும் என்னை விட்டு போகக்கூடாதும்மா. நான் பேசினது தப்புதாம்மா. இனிமே அப்படி பேசமாட்டேம்மா. என்னை மன்னிச்சிடும்மா, என்றபடியே அம்மாவின் கைகளை எடுத்து தன் இரு கன்னத்திலும் அறைந்து கொண்டவன், அழுதபடியே அம்மாவின் கால்களில் விழுந்தான்.

நடந்தவைகளை அதிர்ச்சியோடும், கவலையோடும் பார்த்துக் கொண்டிருந்த விஸ்வ மூர்த்தியும், வேம்புவும் மெள்ள எழுந்து வசந்தின் அருகில் வந்தனர். விஸ்வமூர்த்தி மெதுவாக அவன் தோள்களை தொட்டு எழுப்பி, அவனை அணைத்துக் கொண்டு “ அப்பா வசந்த் எங்க வாழ்க்கையில எந்த ரகசியம் உனக்கு தெரியக்கூடாதுன்னு நினச்சு, நாங்க பயந்து, பயந்து வாழந்திண்டிருந்தோமோ, அந்த ரகசியத்தை இன்னிக்கு அவ வாயாலையே  சொல்ல வெச்சுட்டியடா நீ. பாவம்டா உங்கம்மா  வசந்த் “ அவ எனக்கு ரெண்டா தாரமா வந்தவதான், ஆனா உனக்கு அவ முதல் தரமான அம்மாவா இருந்தவாடா. “ என்ற விஸ்வமூர்த்தி மேலும் தொடர்ந்தார்.

“ விஸ்வமூர்த்தி”, வசந்த் சில விஷயங்களை பேசும் போது ரொம்ப ஜாக்ரதையா பேசணும். அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டக்கூடாது. “ உனக்கு ரெண்டாம் தாரமா வர்ற பொண்ணு குழந்தை பெத்துக்க ஆசைப்படக்கூடாதுன்னு நீ கண்டிஷன் போட்டே. ஆனா எனக்கு ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டு நம்ம வீட்டுக்கு வந்த உங்கம்மாகிட்ட, ரெண்டு வயசு குழந்தையா இருந்த உன்னை எடுத்து அவளோட கையில குடுத்து, “பங்கஜம் இனிமே இவன்தான் உன்னோட குழந்தை. இவனை வளர்த்து ஆளாக்க வேண்டியது உன் கைலதாம்மா இருக்குன்னு சொன்னேன். அதே சமயம் நீ உன்னோட மழலை பேச்சுல அவளை  “ அம்மான்னு “ கூப்பிட்டே. அந்த வார்த்தையை கேட்ட உங்கம்மாவுக்கு ஏற்ப்பட்ட சந்தோஷத்துல கண்கள்ல ஜலமே வந்துடுத்து. “ (தன் கண்களை துடைத்துக் கொண்ட விஸ்வமூர்த்தி தொடர்ந்தார்”) உடனே அவ சொன்ன வார்த்தை என்ன தெரியுமாடா? “ என்னங்க நமக்கு வசந்த் ஒரு குழந்தையே போதும். இன்னொரு குழந்தை நமக்கு வேண்டாம். அதுக்கு நானும் விருப்பப்படலைன்னு சொல்லி, அன்னிலேர்ந்து இந்த நிமிஷம் வரை உன்னை தான் பெத்த பிள்ளையா  நினைச்சுண்டு வாழ்ந்திண்டிருக்காடா. பெத்தாதான் அம்மாவா? நானும் அவனுக்கு அம்மாதான்னு சொன்னவடா அவ. அவளுடைய அன்புக்கும் தியாகத்துக்கும் ஈடே கிடையாதுடா. ஆனா நீயோ ரெண்டாம் தாரமா வர்றவளுக்கு அன்பு, பாசம், எதுவுமே இருக்காதுன்னு சொல்லி மொத்தமா பெண் வர்கத்தையே கேவலமா பேசி, உங்கம்மாவோட மனசையும் வேதனைப்படுத்தி, அவளுடைய தியாகத்தையும் கொச்சைபடுத்திட்டியடா என்றார். அவர் சொன்னதை கேட்ட வசந்தின் கண்கள் குளமாகியது.

அம்மா என்று அழுதுகொண்டே,  திரும்பிய வசந்த்தை ஆறுதலாக அணைத்துக். கொண்டாள் பங்கஜம். அம்மாவின் அந்த ஸ்பரிச அணைப்பில் தன்னை மறந்தான்.

‘ வசந்த்’, “ அம்மா, உன்னோட அன்பையும், பாசத்தையும் இத்தனை வருஷம் கழிச்சிதான் நான் தெரிஞ்சிக்க முடிஞ்சுது., அம்மா, “ நான் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கேன்ம்மா , இல்லேன்னா ஒரு தெய்வம் எனக்கு அம்மாவா கிடைச்சிருக்குமா. ஆமாம்மா! என்னோட அபிராமிக்கும், உன்னை மாதிரி ஒரு தெய்வம் அம்மாவா வருவாம்மா. நான் நம்பறேம்மா என்றான் சந்தோஷத்துடன். 

‘பங்கஜம்’, வேம்புவை பார்த்து “ அண்ணா, நீங்க இவனுக்காக பார்த்திருக்கிற பெண்ணையே, அவா கிட்ட பேசி முடிச்சிடுங்க. கல்யாணத்தை சீக்கிரம் நடத்தணும். கல்யாண செலவு பூராவும் நாங்க பாத்துக்கிறோம்னு சொல்லிடுங்க என்றவள், வசந்த்திடம், என்னடா நான் சொன்னது சரிதானே என்றாள் சிரித்துக்கொண்டே.

‘வசந்த்’, அம்மா, “ உன்னோட விருப்பம்தான் என்னோட சம்மதம், இனிமே நீ சொல்றதுதான் எனக்கு வேதவாக்கு “ என்றான் சிரித்தபடி. விஸ்வ மூர்த்தியும், வேம்புவும் அவனின் சிரிப்போடு கலந்து கொண்டனர்.

எங்கிருந்தோ நாதஸ்வரத்தின் ஓசை காற்றிலே மிதந்து வந்தது


                            / நிறைவு                   

By S. Ramanan 

9444157930

நாவலை படிக்கும் அன்பர்கள் தவறாமல் தங்கள் கருத்துக்களை பதிவிடவும் என்று கேட்டுக்கொள்கிறேன்

நாங்குநேரி

 நாங்குநேரி

===========

விடியற் காலையிலே திருநெல்வேலிக்கு வந்து விட்டது எங்களது ரயில்.

ஜங்ஷன் அருகிலேயே தங்குவதற்கு ஹோட்டலை முன்பதிவு செய்து இருந்தேன்.

காலையில் உள்ளே நுழைந்ததும், உற்சாகமா வரவேற்பு. லிஃப்ட்டில் நுழையும் போது, மங்கல இசை ஒலித்துக் கொண்டு இருந்தது. அயோத்தி ஹால் என்று ஹோட்டலின் விளம்பரம். ஹோட்டலின் பெயரே ஜானகி ராம். என்ன ஒரு பொருத்தம்...

அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் நாளிதழுடன் நெல்லையின் புகழ் பெற்ற அல்வாவை கையில் கொடுத்து வரவேற்றார் பணியாளர்.

காலை உணவு இலவசம். அற்புதமான சிற்றுண்டி. 

வாடகைக் கார் வந்து விட்டது. நாங்கள் முதலில் செல்ல இருந்த திருத்தலம் நாங்குநேரி. அருமையான சாலை. 

108 திவ்ய தேசங்களில் ஒன்று நாங்குநேரி. பார்க்காமல் விடுபட்ட திவ்ய தேசம். 

சிறிய ஊர். கோவில் அருகே இருந்த வீதி அழகாக இருந்தது. முதலில் இருந்த வீட்டை பார்த்ததும் அருகே சென்று புகைப்படம் எடுத்தேன்.

கோவிலின் உள்ளே நுழைந்தோம்.

ஸ்வயம் வியக்த ஷேத்திரங்கள் எட்டு. அவற்றில் நாங்குநேரியும் ஒன்று. திருச்சிரீவர மங்கை, வானமாமலை என்றும் அழைக்கப்படுகிறது.

பெருமாள் ஸ்ரீ வான மாமலை ராஜ தர்பாருடன் வைகுந்தத்தில் இருப்பதைப் போல காட்சி அளிக்கிறார்.

ஆதி சேஷன் குடை ஏந்த, ஊர்வசியும், திலோத்தமை இருவரும் சாமரம் வீச, பிருகு முனிவர், மார்கண்டேய முனிவரும் அருகே நிற்க, அவர்களது புதல்வியார் ஸ்ரீ தேவி, பூதேவி அருகில் இருக்க, சூரிய சந்திரர்கள் வாழ்த்த (வெளியே இருந்து தரிசனம் செய்யும் நமக்கு இவர்கள் இருவரையும் பார்க்க இயலாது), வலது கால் தொங்கவிட்டு, இடது கால் மடித்து, தோத்தாத்திரி நாதன் நமக்கு அமர்ந்த கோலத்தில் அளுள் பாலிக்கிறார்.

தினமும் பெருமாளுக்கு எண்ணெய் காப்பு தான். அதை தனியாக கிணற்றில் சேமித்து வைத்து உள்ளனர்.

தினமும் எண்ணெய் குளியல் என்பதால் தளிகையில் மிளகாய் கிடையாது. மிளகு மட்டுமே..

ஈசன் கோவில்களில் உள்ள விநாயகப் பெருமான் போல, வைணவத் திருத்தலங்களில் விஷ்வக்சேனர். இங்கு தனி சன்னதியில். கருடாழ்வார் வித்தியாசமாக, இறக்கைகள் இல்லாமல் காட்சி தருகிறார்.

இங்கு சடாரியில் நம்மாழ்வார் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 

இங்கு 1450 வருடங்கள் பழமையான வானமாமலை ஜீயரின் திரு மடம் உள்ளது. முதல் ஜீயர் பொன்னடிக்கா ஜீயர் சுவாமிகள் ஒரு முறை திருமலைக்கு எழுந்தருளினார். அங்குள்ளவர்களின் கனவிலே தாயார் தோன்றி, உற்சவர் நாங்குநேரி நாச்சியார் என்றும், வந்துள்ள ஜீயர் சுவாமிகளுடன் அனுப்பி வைக்க கூறினார். அவ்வாறே, ஸ்ரீ வரமங்கை நாச்சியார் நாங்குநேரிக்கு வந்து சேர்ந்தார்.

நந்தவனத்திலே அழகான மரங்களும், பூக்களும் நம்மை மகிழ்விக்கின்றன. பலா மரத்தில் இருக்கும் பலாப் பழம் நமக்கு உற்சாகத்தை தருகிறது.

தல விருட்சம் மாமரம். வைகானஸ ஆகமம். இங்கு உள்ள தீர்த்தம் சேற்றுத் தாமரை தீர்த்தம். 

தரிசனம் முடிந்து திருக்குறுங்குடி விரைந்தோம்.

நான்கு நாட்கள் நெல்லையை சுற்றி உள்ள அழகு கோவில்கள் தரிசனம்.

அன்று வெள்ளிக்கிழமை. தங்கி இருந்த ஜானகி ராம் ஹோட்டலின் உணவகத்தில் மதிய உணவு..

சார்... இந்தாங்க சொதி சாப்பிடுங்க... என்று பரிமாறிய போது, அதன் சுவையில் சொக்கிப் போனேன். கடையில் வைத்திருந்த தேங்காய் பால் கலந்து செய்த முறுக்கில் மயங்கிப் போனேன்.

சங்கர்

சென்னை

கோடக நல்லூர் பெருமாள் கோயில்

 மத்யமர் குழும உறவுகளுக்கு வணக்கம்🙏🙏

ஒருமுறை நானும் எனது சகோதரி அவர்களும் கோடக நல்லூர் சென்று விட்டு வந்து நடுக்கல்லூரில் பேருந்துக்காக ஒரு தேங்காய்க் கடை முன்பு நின்று கொண்டிருந்தோம்.

 கடைக்காரர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார். என் சகோதரி வா வேறு இடம் போய் நின்று கொள்வோம் என்றார்.

அவர் சொன்னது கோடக நல்லூரில் ஒரு பெருமாள் கோவில் மிகவும் விசேடமானக் கோவில் என்று..

   பெருமாள் என்றதும் ஆர்வத்தில் சொல்லுங்கள் ஐயா என்றேன்.

 கார்கோடகன் என்ற நாகம் ஒரு சமயம் தீக்குள் மாட்டிக் கொண்டது .நளன் அதனைக் காப்பாற்றினார். பின்பு சாபத்தால் அவர் தமயந்தி மற்றும் பிற  எல்லாவற்றையும் மறந்து விட்டார். 

  தனக்கு உதவிய அவருக்கு கார்கோடகன் தீண்டிடவே சாபம் நீங்கியே பழைய நினைவு திரும்பினார் நளமகராசன்

    ஆனால் நளனைத் தீண்டிய கார்கோடகன் பாவம் நீங்க பெருமாளிடம் மோட்சமும் முக்தியும்  வேண்டிக் கேட்டிடவே. . 

பெருமாளும் தாமிரபரணிக் கரையிலே தவம் இயற்று  தாமிரபரணி கிழக்கு முகமாக ஓடி தெற்கில் திரும்பி மறுபடியும் கிழக்காகத் திரும்பும் அந்த இடம்தான் உனக்கு தவமியற்றிட  ஏதுவானது .என்றும் பின்பு உனக்கு அகத்தியர் வந்து முக்தி அளிப்பார் என்றும் உரைத்தாராம்.

    அதன்படியே. 

கார்கோடகனும் தாமிரபரணி நதியில் ஒரு பாறை மீது அமர்ந்து தவம் செய்யத் தொடங்கியதாம். மனம் ஒருமிக்காததால் ஆற்றின் சேற்றையும் மண்ணையும் வைத்து பெருமாளைப்  பிரதிஷ்டை செய்து தவம் செய்ததாம் .

தவம் முடிவடையும் காலம்  பெருமாள் அதன் மூன்றே தோன்றி நீ மோட்சம் பெறுவாய் என்று திருவாய் மலர்ந்தாராம்.

   பொதிகைமலைக்கு வந்த அகத்தியரும் கார்கோடகனுக்கு முக்தி அருளினாராம்.

  கதையைக் கேட்டதும்  கோவில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆவி துடித்தது.

   நானும் என் தோழியை அழைத்துக் கொண்டு  கோவில் சென்றேன்..

அர்ச்சகர் வந்து அவரும் இதே கதையை விவரித்தார். கோவிலுக்குப் பின்புறம் உள்ள பாறையில் தான் தவம் இயற்றியதையும்.. நாகத்தின் மூச்சுக் காற்றால் பெருமாள் முகம் நீல நிறமாகவும் இருக்கிறது என்று தீபாராதனைத் தட்டை உயர்த்திப் பிடித்துக் காண்பித்தார்..

அபிஷேகம் கிடையாது. உற்சவருக்குதான் அபிஷேகம் என்றார் 

கார்கோடகனே செய்த பெருமாள் இவர் என்றார் 

எங்களுக்கு வைகுண்டம் சென்று வந்த சிலிர்ப்பு.

   தீபாராதனைத் தட்டில் என்னோட தோழி மா ஐம்பது ரூபாய் போட்டார்.

 அடுத்து அவர் சொன்னதுதான் என்னவோ போலாகி விட்டது..

   பெருமாள் யாரும் வந்து பூ பழங்கள் பத்தி குங்குமம் துளசி கற்கண்டு இப்படி ஏதாச்சும் கொண்டு வந்து சேவிக்க மாட்டார்களா அவர்களுக்கு நாம் அருள் பாவிக்க மாட்டோமாட்டோமான்னு வனாந்திரத்துல இருக்கிறாப்போல காத்து இருக்கிறார். இப்படி வெறுங்கையோடு சேவிக்கலாமோ.. அடுத்து வரும் போது அவைகளில் ஏதாச்சும் கொண்டு வாருங்கள் சேமமாயிருங்கள்னு சொன்னார்.. 

நாகம் முக்தியடைந்த ஸ்தலம் என்பதால் பித்ருக்கள் திதி செய்யவும் நாக தோசம் நிவர்த்தி கல்யாணமாகாதவர்கள் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கும் பரிகாரம் செய்கின்றனர்..காரிய அனுகூலமும் வெற்றியும் அடைகின்றனர்.

  தாமிரபரணி புஷ்கரணியின் போது எனது முகநூல் தோழியுடன் அந்த இடத்தில் நீராடினோம். வேன் டிரைவர் ஒரு புது விஷயம் சொன்னான்.வெற்றிலையில் சூடன் ஏற்றி தண்ணீரில் விட்டால் முதலில் தெற்கு நோக்கிப் பயணமாகி பின்பு கிழக்கில் திரும்பும் என்று. உடனே நாங்களும் செய்தோம் .தெற்கு முகம் சென்று கிழக்காக சென்றது.

  மிகவும் பிரசித்திப் பெற்ற இந்தக் கோவில் வரலாறும் எனது அனுபவமும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

திருநெல்வேலியிலிருந்து 7கி மீ தூரத்தில் உள்ளது. நடுக்கல்லூர் என்னும் ஊரில் இறங்கி 1கிமீ ல் கோடகநல்லூர் அடையலாம்.இயன்றவர்கள் சென்று பலனடையுங்கள்.

செல்லும் பாதை இருபுறங்களும் வயல்களும் நீர் நிலைகளும் மிக ரம்மியமாகக் காட்சியளிக்கும்.

இத்தலத்தில் நிறைய நாகங்கள் உண்டு ஆனால் யாரையும் எதுவும் செய்வதில்லை.

எம்பெருமான் திருவடிகளே சரணம்.

மூன்று தலைமுறை-3

 மூன்று தலை முறை -3

By N Krishnamurthy 

பழனியிலிருந்து திரும்பிய இரண்டாம் மாதம்.காலையிலிருந்தே விசாலிக்கு மயக்கமாக இருந்தது.காலை அனுஷ்டானத்தை முடித்து விட்டு காபி குடிக்க சமையல் கட்டுக்கு சென்ற பஞ்சு அங்கு விசாலம் இல்லாததை பார்த்து பால் கறக்கிறாளோ என்று கொல்லைக்கு சென்று பார்த்தார்.

விசாலி அங்குமில்லை. படுக்கை அறையில் எட்டிப்பார்த்தவர், அவள் கண் விழித்து படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பதை பார்த்து பதறிப்போய்விட்டார்.

பஞ்சு விசாலத்தை பார்த்து இப்படி பதறுவ தற்கு காரணம் இருக்கிறது.விசாலியின் தினப்படி ரொடீன் தெரிந்தால் தான் காரணம் புரியும். விசாலி அதிகாலையில் எழுந்து விடுவாள்.

தாலிக்கொடியை கண்ணில் ஒத்திக்கொண்டு இரண்டு உள்ளங்கைகளையும் பார்ப்பாள். உள்ளங்கைகளில் லக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம்.

பல் துலக்கி, காலைக் கடனை முடித்துவிட்டு, குளித்துவிட்டு வந்து விடுவாள்.கூந்தலை நன்றாக துண்டால் துடைத்து, கூந்தலை துண்டாலேயே மடித்துக் கட்டிக் கொண்டு, வாசல் பக்கம் சென்று தண்ணீர் தெளித்து கோலமிட்டு பின்பு பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைப்பாள். நெய்விளக்கு ஏற்றி ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்வாள்.பில்டரில் காபி பொடியை போட்டு பில்டரை கையால் பிடித்து கொண்டு பில்டரின் அடிப்பாகாத்தை நாலு தட்டு  தட்டுவாள்.இப்படி செய்தால் டிகாக்ஷன் கெட்டியாக இறங்குமாம்.பின்னர் தண்ணீர் கொதிக்க வைத்து நன்றாக சூடு பறக்கும் போது பில்டரில் உள்ள காபிபொடி மேல் சீராக ஊற்றுவாள். டிகாக்ஷன் அதன் பாட்டிற்கு இறங்கி கொண்டிருக்கும். இப்படி செய்து கொண்டே இருக்கும்போது லட்சுமி 'ம்மா' என்று கத்துவாள். அவர்களிடம்  இருந்த மூன்று கறவை பசுக்களில் லக்ஷ்மி தான் விசாலத்திற்கு Pet. லக்ஷ்மியைதன் சொந்த குழந்தையைப் போல விசாலம்  பார்த்துக்கொண்டாள்.

சமயல் கட்டிலிருந்த படியே  'இருடி. வறேன்' என்று குரல்  கொடுப்பாள்.

லட்சுமிக்கு இது கேட்குமா, கேட்காதா,கேட்டாலும் புரியுமா என்று தெரியாது.விசாலிக்கு அப்படி ஒரு பதில் சொல்வதில் பரம திருப்தி. நடுநடுவே வாய் ஏதாவது ஒரு ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.

பின்பு பின்புறம் சென்று லட்சுமியின் முகத்தையும் பின்புறத்தையும் நீரால் துடைத்து விடுவாள்.  

முகத்திற்கும் பின் புறத்திற்கும் சந்தனப் பொட்டு, குங்குமம் வைத்து விட்டு லட்சுமியை நமஸ்கரிப்பாள்.

லட்சுமியின் மடியை நீரால் கழுவி, பித்தளை பாத்திரத்தை லட்சுமியின் மடியின் அடியில்  வைத்துக்கொண்டு பாலைக் கறக்க ஆரம்பித்து விடுவாள்.இது முடிந்தவுடன் கன்றுகுட்டியை அவிழ்த்து விடுவாள். கன்று லட்சுமியின் மடியில் பால் குடிக்க ஓடும். கன்று பால் குடிக்கும் போது அந்த காட்சியை அயராமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.தவறாமல் பெருமூச்சும் விடுவாள் விசாலி.மற்ற இரண்டு மாடுகளின் பாலை வேலைக்காரி சுப்பம்மா லேட்டாகவந்து கறப்பாள். விசாலி பின்னர் பாலை ஸ்வமிக்கு நைவேத்யம் (நிவேதனம்) பண்ணி விட்டு, சூடு பண்ணுவாள்.எல்லாவற்றிற்கும் குமிட்டி அடுப்புதான்.  

இதற்குள் பஞ்சாபகேசன் எழுந்து காலைக்கடன் முடித்து, குளித்து காலையில் செய்ய வேண்டிய சந்தியாவந்தனத்தை முடித்துக்கொண்டு சமையல் அறைக்கு வருவார்.அவர் வந்ததும் விசாலம் சுடச் சுட  பொன்னிறத்தில் நுரையுடன் கூடிய காப்பியை கொடுப்பாள். அதை வாங்கி பஞ்சு குடித்தால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அவருக்கு பசி எடுக்காது. இதற்கு காரணம் காப்பி பவுடரின்   ருசியா அல்லது விசாலியின் கை பக்குவமா என்று தெரியாது.பஞ்சு மாதம் ஒரு முறை கும்போணத்திலிருந்து (கும்பகோணத்துகாரர்கள் கும்பகோணத்தை அழைப்பது இப்படித்தான்) காபி கொட்டை வாங்கி வந்து விடுவார்.ஒரு வாரத்திற்கு உண்டான காபி கொட்டையை  வாணலியில் வறுத்து பின்பு அதை கையால் அறைக்கும் மெஷினில் போட்டு அறைத்து விடுவாள் விசாலி. வாரத்திற்கு ஒரு முறை அறைப்பதால் தான் பவுடர் மிகவும் மணமாக இருந்தது. இத்துடன் வீட்டில் கறந்த பசும் பாலும் சேர்ந்துகொள்ளும். இப்படிப்பட்ட காபி குடிக்க அதிக சுவையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. நம்மில் பலர் இது போன்ற காபியை குடித்து இருப்போமா என்று தெரியவில்லை.