Thursday, December 8, 2022

திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள்

 *புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்கள்*

*தென்திருப்பதி என்று அழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள்* _ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர்_

*மூலவர்* : ஸ்ரீநிவாசப்பெருமாள்
  
*கோலம்*: நின்ற திருக்கோலம்
*தீர்த்தம்* : கோனேரிதீர்த்தம்
  
*பழமை* : 500-1000 வருடங்களுக்கு முன்
  
*புராண பெயர்* : திருமலை
  
*ஊர்* : திருவண்ணாமலை
  
*மாவட்டம்* : விருதுநகர்

*திருவிழா*: புரட்டாசி மாதம் சனிக்கிழமை, மாதாந்திர சனி உற்சவம், திருவாடிப்பூரம் கருடசேவை

*திறக்கும் நேரம்*: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.    

*முகவரி*: அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை- விருதுநகர் மாவட்டம

*பொது தகவல்:* மலை மீது அமைந்துள்ள கோயிலின் அழகு தோற்றம் காண்போரை வியக்க வைக்கும் அழகுடையது. கோயிலுக்‌கு முன்பாக உள்ள தடாகம் அற்புதமாக உள்ளது.

*பிரார்த்தனை*  

  திருமணகாரியம், குழந்தை பாக்கியம், வியாபார விருத்தி, விவசாய செழி்ப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். இவை தவிர உத்தியோக உயர்வு வேண்டுவோர் இத்தலத்தில் வேண்டிக்‌கொண்டால் கண்டிப்பாக நடப்பதாக கூறுகிறார்கள்.    

 *நேர்த்திக்கடன்:*     

  முடி இறக்குதல், கால்நடைகள் தானம் தருதல் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏராளமான மக்கள் கூடுகிறார்கள். காணிக்கையாக ஆடு, மாடுகளும் பொன்னாலும், ‌வெள்ளியாலும் செய்யப்பட்ட பலகார உருப்படிகள், பாத்திரங்கள், பரிவட்டங்கள், பணம் முதலியன செலுத்தப்படுகின்றன.     

  *தலபெருமை:* 

  திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம்    

*தல வரலாறு*: 

  இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களை ரட்சிக்க வேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம் கூறுகின்றது. மிகவும் வரப்பிரஸாதியாய்க் கருதப்படுகிறார். ஆதிசேஷனே ஒரு பர்வத வடிவமாகத் தோற்றமளிக்கிறார். அதில் பக்தர்களை காக்கும் பொருட்டு திருவேங்கடமுடயனாகத் தானே தோன்றி நிற்கிறார். சகல ஜனங்களுக்கு அவரவர் விரும்பும் பலன்களைக் கொடுத்துக் கொடுத்து எழுந்தருள உள்ளார். அம்மலையின் அடிவாரத்தில் தாமரை முதலிய மலர்கள் நிறைந்த பம்பை என்கிற புண்ணிய தீர்த்தமும் உள்ளது. அது சகல பாவத்தையும் போக்கி சகல விருப்பத்தையும் கொடுக்க வல்ல மகிமையுடையது. அதை கோனேரி தீர்த்தம் என்றும் அழைப்பார்கள்.  

*வழித்தடம்*

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடமேற்கில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் திருவண்ணாமலை என்னும் ஊரில் திருத்தலம் அமைந்துள்ளது. 

*தலசிறப்புகள்*

திருவேங்கடமுடையானைப் போலவே, இத்திருவண்ணாமலையிலும் ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கைகளை திருவடியைக் காட்டியவாறு உள்ளார். அவரின் திருவடியை சரணடைந்த பக்தர்கள் தங்கள் துன்பத்தை முழங்கால் அளவு வெள்ளத்தைக் கடப்பது போல எளிதாக கடந்து விடுவார்கள் என்பதை உணர்த்த மற்றொரு கரத்தை திருத்தொடையில் பொருத்தியும், இரு கரங்களிலும் சக்கரமும், சங்கும் ஏந்தியும், திருமார்பில் மகாலெட்சுமியுடனும் உள்ளார். மேலும் உயர்ந்த கிரீடம் தரித்து, கருணை பொங்கும் கண்களுடனும், அழகிய புன்முறுவலுடனும், இடையில் வாளுடன் எட்டடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இம்மலையில் ஏறுவதற்கு வசதியாக 240 படிக்கட்டுகள் உள்ளன. திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இவருக்கு செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுவதால், தென்திருப்பதி என்று இத்தலம் போற்றப்படுகிறது.

இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் 5 சனிக்கிழமைகளிலும் உற்வசம் நடைபெறும். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்றாம் சனி உற்சவத்தையொட்டி, சுவாமிகளுக்கு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெறும்.

அரசு போக்குவரத்துக் கழகம் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

ஆண்டவனை 'அண்ணா! அண்ணா!' என்றழைத்த திருமங்கையாழ்வாரின் மொழியில் பார்த்தோமேயானால் இத்தலத்தின் பெயரை 'திருவண்ணாமலை ' என்றழைத்தது பொருத்தம் தானே!

No comments:

Post a Comment